Wednesday, December 22, 2010

வெக்கை - பூமணி

ஆசிரியர்: பூமணி
வெளியீடு: பொன்னி பதிப்பகம்
விலை: ரூபாய் 300/-

கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். கரிசல் விவசாயிகளின் வாழ்க்கை - பருவநிலை, மண்ணின் வாகு, கடின உழைப்பு என்று எத்தனையோ காரணிகளை நம்பி இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி கிராமத்து பண்ணையார்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் குறு விவசாயிகளுக்கு இருந்தது. இப்பொழுது கூட தரகர்களிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அவர்கள் சிக்கித் தவிப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தக் கதையும் விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான்.

எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. இந்த சின்ன முடிச்சில் என்ன சொல்லிவிட முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு. வாசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்களை நுணுக்கமாக பூமணி இந்நாவலில் சொல்லி இருக்கிறார்.


செலம்பரத்தின் அப்பா ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தன்னுடைய சந்ததிகளுக்கு வளைத்துப் போட பார்க்கிறார். அப்படியே செலம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் வளைத்துப் போட பார்க்கிறார். அங்குதான் வருகிறது வினையே!. நிலவிவகாரத்தால் உட்புகைச்சல் ஏற்பட்டு செலம்பரத்தின் அண்ணன் கொலையாகிறான். இந்த குடும்பப் பகையை மனதில் வைத்து, இருள் கவிழ்ந்த மாலை நேரத்தில் செலம்பரம் வடகூரானை வெட்டி வீழ்த்துகிறான். தன்னைப் பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசி தப்பிக்கிறான். இதனை அவனுடைய அப்பாவும், மாமாவும் தெரிந்துகொள்கிறார்கள். எனவே விரைவாக செயல்பட்டு செலம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆசையாக வளர்த்த நாயையும், ஆடுகளையும் அத்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு தலைமறைவாக வாழப் புறப்படுகிறான்.

கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதுடன் நாவல் முடிகிறது.

யதார்த்த நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டவாறே முழு நாவலும் நகர்கிறது. இந்த நாவல் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. "கருவேலம் பூக்கள்" என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து "வெக்கை" நாவலும் பூமணியால் திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளேடுகளில் படித்திருக்கிறேன்.


ஜெயமோகன், எஸ்ரா போன்ற எழுத்தாளர்கள் தனக்குப் பிடித்த நாவல்களை பட்டியலிடும் பொழுது பூமணியின் வெக்கை நாவலையும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். தீவிர வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான நாவல். தற்போது பொன்னி பதிப்பகத்தில் பூமணியின் "பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால்கள், வரப்புகள்" ஆகிய ஐந்து நாவல்களும் ஒரே தொகுப்பாகக் கிடைக்கிறது. பூமணியின் சிறுகதைகள் கூட மொத்த தொகுப்பாகக் கிடைக்கிறது. வாங்க நினைப்பவர்கள் வரும் புத்தக சந்தையில் பொன்னி பதிப்பக ஸ்டாலில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

பின்குறிப்பு:
1. இந்த நாவலின் பாதிப்பில் கோணங்கி ஒரு சிறுகதை எழுதி இருப்பதாக ஜெயமோகன் எங்கோ எழுதி இருக்கிறார். அந்த சிறுகதையின் தலைப்பு எனக்கு ஞாபகம் இல்லை.
2. இலக்கிய சிந்தனை விருது, அக்னி விருது, தமிழ்ச் சங்க விருது போன்ற முக்கிய விருதுகளை பூமணி பெற்றிருக்கிறார்.
3. "சினிமாவில் விருப்பமே இல்லாதவர் பூமணி. அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பது வினோதமான உண்மை" என்று ஞாநி பேச கேட்டிருக்கிறேன்.

2 comments:

ராம்ஜி_யாஹூ said...

எதிர் வரும் பதிவுகளில், புத்தக விற்பனை நிலையம், பதிப்பக தொலைபேசி எண்கள், இணையதளங்கள் விபரங்களும் வெளியிட்டால் பல வாசகர்களும் வாங்கி படிக்க உதவும்

Anonymous said...

பூமணியின் வெக்கை வாசிக்கப்படும்போது ,மழையற்ற அந்த பூமியின் வெக்கை நம் மீது அனல் வீசும்.மண்ணை,மனிதர்களை,அவர்தம் வாழ்வை முடிவு செய்வதில் பூமி வாக்கின் பங்கை சொல்லும் நாவல்