Monday, March 21, 2011

அன்பின் வழி - க நா சு

"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர். வாலியை மறைந்து நின்று தாக்கும் காட்சியை அவர்போல் வேறொருவர் சொல்லக் கேட்டதில்லை. ராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் சண்டையின் நடுவில் மகாபாரதக் கர்ணன் வருவான். அவனிடம் யாசகம் கேட்க வந்தவர்கள் பற்றியெல்லாம் சொல்லுவார். யுத்தக் களத்தில் உயிருக்குப் போராடி வாடிவதங்கும் அவனிடம், செய்த புண்ணியங்களின் பலன்களை யாசகம் கேட்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தும் பொழுது ஐயாவின் குரல் நடுங்கும். வாலியும் கர்ணனும் புண்ணியம் செய்தவர்கள் என்பதை விளக்கும்பொழுது அவருடைய கண்களில் கண்ணாடிபோல நீர்த்துளிகள் பளபளக்கும்.

"ஓடியோடி சம்பாதிக்கறத கோயில்ல கொண்டுட்டு போயி கொட்டுறோம். முனிவர்கள் எல்லாம் வாயக்கட்டி வயித்தக்கட்டி தவமா தவம் இருக்காங்க. இதெல்லாம் என்னத்துக்காக? இந்த ஒரு பிறவி போதும்டா ஆண்டவா. எங்களோட உயிரை எமன்கிட்டயிருந்து நீ வாங்கிக்கோ... உன்பாதத்துல சேர்த்துக்கோன்னு செக்குமாடு மாதிரி கோயிலையும், கொளத்தையும், மரத்தையும், மலையையும் சுத்தி சுத்தி வரோம். சீண்டறாரா நம்மள. ஆனால் கடவுளே விருப்பப்பட்டு உசுர வாங்கினது வாலிக்கிட்டையும், கர்ணன்கிட்டயும் தான். அவர்களைத் தவிர வேற யார் அதிர்ஷ்டசாலிகள்." என்பார். ஐயாவின் கருத்துடன் பள்ளி வயதில் நான் முரன்பட்டதில்லை. புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.

தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்களான இராமனும் கிருஷ்ணனும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எதிரிகளைக் கொன்று குவிக்கிறார்கள். இதில் நயவஞ்சகம் வேறு பிரதானம். சிவபெருமான் உலகப் பிறவி எடுக்காதவர் என்பார்கள், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவி எடுக்காதவர் என்பார்கள், தேவையேற்பட்டால் மாயமாக வந்து அழிக்கும் தொழிலை தவறாமல் செய்துவிட்டுப் போவார். துதிபாடுபவர்களைத் தவிர தூற்றுபவர்களுக்கு இதுதான் நிலைமை. முகபது நபிகள் கூட வலியப்போய் சண்டை போட்டதில்லையே தவிர, எதிர்த்து வந்தவர்களுடன் மல்லுக்கட்டி கற்களை வீசி சண்டையிட்டதாகப் படித்த ஞாபகம். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஏசு கிறிஸ்து. "உன் எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு உன்னுடைய மறுகன்னத்தையும் காட்டு" என்று போதித்தவர். உலக மக்களைக் காக்கும் பொருட்டு துன்பத்தை ஏற்று சிறுவயதிலேயே இறந்தவர். அவரின் கதையைத் தழுவிய புனைவுதான் 'அன்பின் வழி'.

ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் என்பவன் கரடுமுரடான குற்றவாளி. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவன். ரோம அரசின் அளவுகோலின்படி சிலுவையில் அறையப்பட முற்றிலும் தகுதியானவன். அதிர்ஷ்ட்ட வசமாக விருந்து நாளில் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் வேறொருவனை சிலுவையில் அறைய ஏற்பாடாகிறது. அப்படிக் கொண்டுவரப்படும் அடிமைக் கைதி வேறுயாருமல்ல 'ஏசு கிறிஸ்து'. சிலுவையில் அறையப்படும் கிறிஸ்துவை கொல்கோதா மலையின் சரிவில் நின்று இமைகொட்டாமல் பார்க்கிறான் பாரபாஸ். சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியவனுள் மெல்லத் துளிர்க்கிறது குற்ற உணர்ச்சி. சந்தித்துப் பேசும் மனிதர்கள் எல்லாம் கிறிஸ்துவை புகழ்கிறார்கள். அவனுக்காக துக்கிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உளவியல் ரீதியாக மனதளவில் சிறைபட ஆரம்பிக்கிறான். மனக் கிலேசங்கள் அலைமோதுகின்றன. அதிலிருந்து விடுபட உதடுகள் பிளந்த அழகு குறைந்த பெண்ணை அரவணைத்துக் கொண்டு சல்லாபிக்க ஆரம்பிக்கிறான். காம இச்சைகளும், சிற்றின்பங்களும் அவனுடைய உறுத்தலைக் குறைக்கவில்லை. நாட்கள் செல்கின்றன.

எலியாஹூவின் கூட்டத்திலிருந்த நாட்களை நினைத்துக் கொள்கிறான். அது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று பிழைக்கக் கூடிய கூட்டம். எலியாஹூ தந்தையின் முறையிலிருந்து பாரபாஸை வளர்க்கிறான். என்றாலும் அவன் மீது உள்ளூர வெறுப்பு. ஏனெனில் இந்தக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட மோவபைட் ஸ்திரீக்கு பிறந்தவன் தான் பாரபாஸ். அந்தக் கூட்டத்திலுள்ள எல்லா ஆண்களுக்கும் வைப்பாட்டியாக இருந்தவள் அவள். பாரபாஸ் யாருக்குப் பிறந்தான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். இருந்தாலும் எலியாஹூ தந்தையாக இருந்து வளர்த்தான். ஒருமுறை நடந்த சண்டையில் பாறையின் இடுக்கில் தள்ளி எலியாஹூவைக் கொன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறான். வளர்த்த தந்தையைக் கொலை செய்தபோது கூட அவன் வருந்தவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாக அமைய நேர்ந்தது அவன் மனதை இம்சித்தது.

பிறிதொரு நாளில் அவன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டு அடிமையாகிறான். சிறைக்கூட்டத்தில் உள்ள கூட்டாளிகளில் ஒருவனுடன் இவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பிணைக்கப்பட்ட கூட்டாளியின் பெயர் ஸஹாக். அவனோ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவன். அடிமை ஒட்டிகளுக்குத் தெரியாமல் ஏசுவை நினைத்து ஜெபம் செய்பவன். தனக்குப் பதிலாகத்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பழகுகிறான் பாரபாஸ். ஸஹாக்கின் தன்மையான நடத்தை அவனைக் கவர்கிறது. ஊமைக்காயம் போல கிறிஸ்துவின் மரணம் அவனை வதைக்கிறது. ஸஹாக்கின் ஜப வழிபாடு அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. இருவரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார்கள்.

"ஏசு கிறிஸ்து - யார் அது?" என்று கேட்கிறார் ரோமாபுரியின் கவர்னர்.

"அவர் எங்களின் கடவுள். அவருடைய அடிமைகள் நாங்கள்" என்கிறான் ஸஹாக்.

"நீங்கள் ரோமாபுரிச் சக்ரவர்த்தி சீசரின் அடிமைகள் இல்லையா?" என்று கவர்னர் கேட்கிறார்.

"இல்லை... என் பிரபுவின் அடிமை. அவர் தான் எங்களின் கடவுள்" என்கிறான் ஸஹாக்.

"இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் கவர்னர். மௌனித்து தலை கவிழ்க்கிறான் ஸஹாக். "உன் கடவுளும் அவர்தானா?" என்று பாரபாஸைப் பார்க்கிறார்.

"இல்லை..." என்று தலையாட்டுகிறான். ஸஹாக் அதிர்ச்சியுடன் பாரபாஸைப் பார்க்கிறான். தன்னுடைய நண்பனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு சிலுவையில் அறைகிறார்கள். சித்ரவதை மூலம் ஸஹாக் கொல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்கிறான். யாருக்காகவும் கலங்காதவனின் கண்களில் ஈரம் கசிகிறது. துரோகம் செய்துவிட்டோமோ என்று யோசிக்கிறான். நாட்கள் உருண்டோடி கவர்னரின் பனிக்காலம் முடிகிறது. மாளிகை வாங்கிக்கொண்டு தலை நகரமான ரோமாபுரி செல்லும்போது பிடித்த அடிமைகளில் ஒருவனாக பரபாஸையும் அழைத்துச் செல்கிறார். தலைநகரில் மீண்டும் குற்றம் செய்து கைதியாகிறான். விசாரணைக்குப் பின் சிலுவையில் ஏற்றப்படுகிறான். ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டு விடுதலை ஆனது முதல், குற்றம் சுமத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுவது வரை பாரபாஸின் மனப்போராட்டத்தை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சொல்கிறார் பேர் லாகர் குவிஸ்ட். 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் நாவலான இதை மொழி பெயர்த்தவர் க நா சு. மொழிபெயர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தீவிர வாசகர்களால் கொண்டாடக் கூடிய படைப்பு.

பூங்குழல் பதிப்பகத்தில் 'அன்பின் வழி' என்ற பெயரிலும், மருதா பபதிப்பகத்தில் 'பாரபாஸ்' என்ற பெயரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். 'அன்பின் வழி'யில் ஏகப்பட்ட பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருக்கிறது. பதிப்பிற்கு முன் செம்மைபடுத்தி இருக்கலாம். அவன், அவள், அவர்கள் போன்ற வார்த்தைகளை வாரியிறைத்து வாசக அனுபவத்தை சோதிக்கிறார்கள். மருதாவில் நான் வாசித்ததில்லை. எனவே அதைப் பற்றிய கருத்தை சொல்வதற்கில்லை.

தொடர்புடைய பதிவுகள்:

1. அன்பின் வழி - கார்த்திக் சரண்
2. பாரபாஸ் - புத்தகம் கிடைக்கிறது

பேர் லாகர் குவிஸ்ட் 1891 - 1974

ஸ்வீடன் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நாடகாசிரியருள் "Par Lagerkvist" முக்கியமானவர். இவர் 1891-ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த "வாக்ஸ் ஜோ" என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புரட்சி மனப்பான்மையுடன் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், சிறுகதைகள் இயற்றித் தமது இலக்கியப் பணியைத் தொடங்கினார். கடுமையான நேரம் (1918), சொர்கத்தின் ரகசியம் (1919), மீண்டும் வாழ்ந்தவன் (1928), தூக்குக்க்கரன் (1934), ஆன்மா அற்ற மனிதன் (1938) போன்றவை இவருடைய முக்கியமான படைப்புகள். நாடக ஆசிரியராக மட்டுமல்லாமல் சிறந்த நாடகாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் விளங்கினார். 'அன்பு வழி' என்ற நாவல் அவருக்கான உலகப் புகழையும் பெற்றுத் தந்தது.


12 comments:

Story Teller said...

thank you very much for your blog. Thanks to google search which lead me to your site. I am looking for some good tamil novels (as I got intersted recently) and your views, gives me what I am looking for. I would be going back to your blog and read your posts one by one. Thanks again

Unknown said...

I am so happy to see your comments. Thanks a lot for a support that u given to me friend…

Pranavam Ravikumar said...

A good post. You written pretty well. My wishes.

Unknown said...

Thank you pranavam...

Anonymous said...

\\புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.//
சரி,தவறு,நன்மை,தீமை என்று எதுவும் இல்லை.விளிம்பு இல்லை எனும்போது மையமும் இல்லை.முன்னோர்கள் மாய வெளியை வுருவாக்கவில்லை.ஏற்கனவே இருப்பதை வுணர முற்பட்டார்கள்.அவர்கள் தேடியதை ,நீங்கள் தேட வுதவுகிறார்கள்.
கிருஷ்ணா ,சோ,வுங்கள் பாதை சரிதான்.

இராஜராஜேஸ்வரி said...

பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர்.//

அருமையான ஆசிரியர்.

Prabu Krishna said...

படிக்கவைக்க தூண்டும் எழுத்து தங்களுடையது.

சாய்ராம் கோபாலன் said...

//"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர்//

நான் மயிலை பி.எஸ். ஹை ஸ்கூல் படிக்கும்போது திரு ஸ்ரீனிவாச ராகவன் என்ற ஐயங்கார் வாத்தியார் ஒருவர் இதே காட்சியை எங்களுக்கு விளக்கி சொன்னதை நினைவு படுத்தியது உங்கள் இடுகை.

அவர் தமிழ் / சமஸ்கிரதம் என்று இரண்டிலும் புலமை பெற்ற வித்தகர். வாலியின் மனைவி அவன் இறந்தபின் ராமரை கிழிக்கும் காட்சியை அவர் எடுப்பது சுகமோ சுகம்.

பாடத்தை ஒன்றி எடுப்பதில் சிலர் கைதேர்ந்தவர்கள்.

Unknown said...

/-- பாடத்தை ஒன்றி எடுப்பதில் சிலர் கைதேர்ந்தவர்கள்.--/

சிலர் மட்டுமே கைதேர்ந்தக்வர்கள் சாய்...

:-)

திருநெல்வேலி வெங்கட்ராமன் said...

thanks for ur comment nice sharing pls continue ur views about books

சொறியார் said...

அய்யா உங்கள் தளம் மிக மிக அருமை!புத்தக் உலகில் ஒரு கடவு சீட்டு போல இது உள்ளது!ஆனால் இப்போதெல்லாம் பதிவு ஏன் எழுதுவதில்லை?

Unknown said...

வேறு விதமான பணிகள் கொஞ்சம் நெருக்குகிறது. கூடவே நீண்ட பயணங்களும் ஒரு சேர அமைந்துவிட்டது. மீண்டும் எழுத வேண்டும்.

தொடர்பிற்கு நன்றி...