Tuesday, February 24, 2009

Mullai periyar dam - Anayaa... Neruppaa?

முல்லை பெரியாறு - அணையா? நெருப்பா?: ஊரோடி வீரகுமார் (Rs:70)
பதிப்பகம்: கிழக்கு

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Mullai Periyaru

நீர் மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகமும், உயர்த்தக் கூடாது என கேரளமும் பிடிவாதம் பிடிக்கும் முல்லை பெரியாறு அணை உண்மையில் தமிழகத்திற்கு சொந்தமானது என புத்தகத்தில் படிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.

பிறகு எப்படி கேரளாவின் கட்டுப்பாட்டில் சென்றது? உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கேரளா ஏன் பணிய மறுக்கிறது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக பிரச்சனை ஆராய்ந்து முன்வைக்கப் பட்டுள்ளது.

18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் அணையைக் கட்ட முடிவெடுத்த ஆங்கில அரசாங்கம் திருவாங்கூர் மகாராஜாவிற்கு தேவையில்லாமல் ஒரு கடிதத்தை அனுப்பி இருக்கிறது. இது போல் உங்கள் சமஸ்தானத்திற்கு பக்கத்தில் ஒரு அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளோம். அதுவும் 999 வருடங்களுக்கான குத்தகைக்கு ஆங்கில அரசு அணையை எடுத்துக் கொண்டு பராமரிப்பதாகவும் வருடத்திற்கு இவ்வளவு தொகை என திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு தருவதாகவும் மேலும் மீன் பிடித்துக் கொள்ளவும் அவர்களுக்கே அனுமதி தருவதாகவும் இங்கிலாந்து ராணியிடமிருந்து நேரடியாக கடிதம் வந்திருக்கிறது.

நமக்கு சம்மந்தமில்லாத விசயத்திற்கு நம்மிடம் எதற்கு அனுமதி என பல முறை யோசித்த மகாராஜா தேடி வரும் லட்சுமியை உதைப்பானேன் என்று சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

உடனே அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் எடுத்துள்ளது. பல பேர் முயன்று கடைசியில் பென்னி குக்கால் அணை நிறைவு பெற்றுள்ளது.

ஆங்கிலேயரான பென்னி குக் ஓரளவிற்கு மேல் அணையைக் கட்ட பணம் இல்லாததால் தனது சொத்துக்களை விற்று சொந்த பணத்தைப் போட்டு அணையை கட்டி முடித்துள்ளார். எனவே அவரது பெயரை இன்று வரை கிராம மக்கள் தனது குழந்தைகளுக்கு பெயராக வைத்து நன்றியை தெரிவிக்கிறார்களாம்.

ஏழை விவசாயிகள் நன்மை பெற வேண்டுமென்று கட்டப்பட்ட இந்த அணை அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதால் மாநிலங்களுக்கு இடையிலான சச்சரவாக மாறியுள்ளது. இந்த புத்தகத்தைப் படித்தால் முல்லை பெரியாரின் வரலாறுடன் அதன் பிரச்சனைகளையும் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

No comments: