முள்ளும் மலரும்: உமா சந்திரன்
விலை: 180 ருபாய்
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்
1960 -களின் பிற்பகுதியில் கல்கி வார இதழின் வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட நாவல் போட்டியில் நடுவர்களால் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு முதற் பரிசினை பெற்றுச் சென்ற பெருமை இந்த நாவலுக்கு உண்டு. இதனை எழுதிய 'உமா சந்திரன்' பரவலான வாசக ஈர்ப்புத் தன்மை கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர். இந்நாவலின் முதற் பதிப்பு 1967 -ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது. நீண்ட காலத்திற்குப் பிறகு அம்ருதா பதிப்பகம் இந்த நாவலை வெளியிட்டுள்ளார்கள். அவர்களுடைய சீரிய பணி பாராட்டுக்குரியது.
இளமையிலேயே தாய் -தந்தையரை இழந்த காளி `வின்ச் ஆப்பரேட்டராக' வேலை செய்கிறான். அவனுடைய ஒரே தங்கையின் மேல் உயிரையே வைத்துக்கொண்டு இருக்கிறான். இயல்பிலேயே முரடனான காளிக்கு வாழ்கையின் பிடிப்பே தங்கை வள்ளி தான். சிறு வயதிலேயே பெற்றவர்களை இழந்ததால் அஞ்சலை அத்தையிடம் வளர்கிறார்கள்.
வேறு ஊரிலிருந்து பிழைப்பு தேடி வரும் மங்காவும், அவளுடைய அம்மா வெள்ளாத்தாலும் வள்ளியின் குடுப்பத்திற்கு அறிமுகமாகிறார்கள். மங்காவின் அம்மாவிற்கு காளியே ஒரு வேலையும் வாங்கிக் கொடுத்து தங்குவதற்கும் ஏற்பாடு செய்கிறான். நாளடைவில் வாயாடியான மங்காவின் மீது காளிக்கு காதல் பிறக்கிறது.
இந்நிலையில் புதிதாக வேலைக்கு வரும் என்ஜினீயர் குமரன் மீது காளிக்கு அகாரணமான வெறுப்பு உண்டாகிறது. காளியின் வேளையில் குறையைக் கண்டுபிடித்து அதிகாரி என்ற முறையில் அவனுக்கு கடிதம் அனுப்பியது காளியின் கோவத்தை மேலும் அதிகப்படுத்தியது. என்ஜீனியர் குமரன் பண்போடு நடக்க முற்பட்டாலும் காளிக்கு அவரின் மேல் வெறுப்புதான் உண்டாகிறது.
வேலை இல்லாத நாட்களில் காளிக்கு மீன் பிடிப்பதும், விடிய விடிய நடக்கும் காட்டுவாசிகளின் நாடகங்களைப் பார்ப்பதும் தான் பொழுது போக்கு. அந்நாடகத்தைப் பார்க்கச் சென்ற இடத்தில் எதிர்பாராத விதமாக மங்காவை துறத்திக் கொண்டு வந்த சிறுத்தைப் புலி காளியின் தோள்பட்டையைத் தாக்குகிறது. சரியான மருத்துவம் பார்க்காததால் அவனுடைய ஒரு கையை எடுக்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறான். அதற்குத் தேவையான உதவிகளை என்ஜீனியர் குமரன் தான் செய்கிறார்.
என்ஜீனியருக்கு காளியின் தங்கை வள்ளியின் மீது காதல் உண்டாகிறது. வள்ளியிடமே அவன் சொல்லிவிடுகிறான். நாளடைவில் இதனைக் கேள்விப்பட்டு கோவம் கொள்கிறான் காளி. அதுமட்டுமில்லாமல் பெட்டிக்கடை முனியாண்டியை வள்ளிக்கு மணமுடிக்க சம்மந்தம் பேசுகிறான். காளியை எதிர்த்துப் பேச முடியாத வள்ளி அதற்கு சம்மதம் தெரிவிக்கிறாள். வள்ளியின் நிலையைப் புரிந்து கொண்டு அந்த சூழ்நிலையில் குமரன் விலகிச் செல்கிறான்
இந்த மன வருத்தத்தைத் தாங்க முடியாமல் அரசு வேலையை உதறிவிட்டு ராணுவத்தில் சேர முடிவு செய்கின்றான் குமரன். அதன்படியே வட இந்தியாவிற்கு எல்லைப் பாதுகாப்பிற்குச் சென்றுவிடுகிறான். ராணுவத்தில் பயிற்சிப் பெற்று பின் கேப்டனாக பதவி உயர்வு பெறுகின்றான். போரில் அவனுக்கு காயம் ஏற்படுகிறது. அப்பொழுது அவனுக்கு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. அப்பொழுது மருத்துவர் அகிலாவின் நட்பு கிடைக்கிறது. அகிலா ஒரு தலையாக குமரனைக் காதலிக்கிறாள். ஆனால் வள்ளியைத் தவிர வேறு ஒரு பெண்ணை தன்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாது என்று மறுத்துவிடுகிறான்.
மேலும் தன்னுடன் ராணுவப் பணியாற்ற உடன்வந்த உயிர் நண்பனான வீரமணி எதிரிகளின் தாக்குதலில் வீரமரணம் அடைகின்றான். நண்பனின் மரணம் அவனை மேலும் துயரடையச் செய்கிறது. இதற்குள் போர் முடியவும் மீண்டும் சென்னைக்கு நிரந்தரமாகத் திரும்புகிறான்.
வீரமணியின் தங்கை 'கனகா'வின் கணவன் கம்பெனியில் குமரனுக்கு வேலை கிடைக்கிறது. அதற்கு முன் வள்ளியின் ஊருக்கு சென்று வர பயணமாகிறான்.
அங்கு உச்சிக்கடவு மற்றும் வேலன்கடவு போன்ற இடங்களைச் சுற்றிக்கொண்டு இருக்கும் போது வள்ளியையும், மங்கவையும் எதிபாராத விதமாக காண்கிறான். மங்காவின் மூலமாக வள்ளி இன்னும் மணமாகாமல் இருக்கிறாள் என்பதைத் தெரிந்து கொள்கிறான். அவளுக்காக தானும் கத்துக்கொண்டிருப்பதைத் தெரியப்படுத்துகிறான்.
காளியின் சம்மதம் இல்லாமல் இருவரும் கோவிலில் கல்யாணம் செய்து கொள்கிறார்கள். சரியாக காளியும் வந்து சேர்கிறான். வஞ்சத்துடன் அவர்களை அழைத்துக் கொண்டு செல்கிறான். நேரம் பார்த்து அவர்களைத் தீர்த்துக்கட்ட முடிவு செய்து வள்ளியும் குமரனும் 'வின்ச் மெஷினில்' கீழிறங்கும் போது இயந்திரத்தில் கோளாறு செய்கிறான்.
வள்ளியைக் காப்பாற்ற தறிகெட்டு ஓடும் இயந்திரத்தில் மங்கா பாய்கிறாள். மங்காவைக் காப்பாற்ற காளியும் இயந்திரத்தில் பாய்கிறான். அந்த நேரத்தில் அங்கு வரும் கனகாவும், அவளுடைய கணவன் சபேசும் இயந்திரத்தை நிறுத்துகிறார்கள். இறுதியில் மங்காவும், காளியும் இறந்து விடுகிறார்கள்.
உமா சந்திரனின் இந்நாவல் 'இயக்குனர் மகேந்திரன்' அவர்களால் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. திரைப்பட சூத்திரத்திற்கு ஏற்றவாறு மகேந்திரன் கதையை மாற்றி இருப்பார். அந்த மாற்றமே படம் வெற்றியடைய வழிவகுத்தது என்றே கூற வேண்டும்.
இந்தப் படத்தில் நடித்த நடிகர்கள் ரஜினி மற்றும் ஷோபாவையும், இயக்குனராக மகேந்திரனையும், ஒளிப்பதிவாளராக பாலு மகேந்திராவையும் நட்சத்திரங்களாக ஒளிரச் செய்த படம். இசைஞானி இளையராஜாவின் இசை இப்படத்திற்குப் பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும். பாடல்களிலும், பின்னணி இசையிலும் பிண்ணி எடுத்திருப்பார்.
ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவும் இசையும் தான் உயிர் என்பார்கள். அதன்படி பாலுமகேந்திராவும், இசைஞானியும் படத்திற்கு ஆன்மா போல் செயல் பட்டிருப்பார்கள். எத்தனை முறைப் பார்த்தாலும் சலிக்காத படம். இந்நாவலைப் படித்து முடித்தவுடன் மீண்டும் இப்படத்தைப் பார்க்கவேண்டும் என்ற ஆவல் தோன்றியதைக் கட்டுப்படுத்த முடியவில்லை.
4 comments:
நான் படம் தான் பார்த்து இருக்கிறேன் நண்பா அருமையான படம்..
அருமையான நாவல் வினோத். கிடைத்தால் வாங்கி படியுங்கள்.
பல வருடங்களுக்கு முன் பார்த்த திரைப்படம்.
உங்கள் பதிவை வாசித்த போது மீண்டும் படம் பார்த்தது போல் ஆகி விட்டது.
பகிர்விற்கு நன்றி.
Ithai ezhuthiya Umachandran Poornam viswanathanin Annan.
Post a Comment