மூலக்கதை: சா.கந்தசாமி
திரைக்கதை: இயக்குநர் வஸந்த்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: Rs.30.00
சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.
என்னுடைய மருமகங்களுக்கு [நிஸ்து & முத்து] சினிமா ஆசை அதிகம். அவர்களுக்கு ஒரு நல்ல கதையையும், அதனுடைய குறும்படத்தையும் கொடுப்பதற்காக வேண்டி அலசிப்பார்த்ததில் இயக்குநர் வஸந்த் - தூர்தர்ஷனுக்காக இயக்கிய சா.கந்தசாமியின் பிரசித்தி பெற்ற சிறுகதையான "தக்கையின் மீது நான்கு கண்கள்" திரைக்கதைப் புத்தகம் மற்றும் குறும்படத்தைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.
அதன்படி தேடு...தேடு... என்று தேடுபொறியில் தேடி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்களிடம் இருந்த கடைசி புத்தகம் அதுதான் என்று சொன்னார்கள். ஆனால் குறும்படத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிவர் வண்ணத்துப் பூச்சியாரிடம் [சூர்யா] தொடர்புகொண்டு கேட்டதில் Thamizhstudio.com -ல் கேட்டுப்பாருங்கள் என்று கூறினார்.
Thamizhstudio.com [அருண் & குணா] - இருவரும் கணினித் துறையில் இருந்தாலும் குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக இயக்குனர் வஸந்திடம் பேசி குறும்படத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். அதன்படியே வாங்கியும் கொடுத்தார்கள். அவர்களுடைய 11 வது குறும்பட ஆர்வலர்கள் சந்திப்பில் அதை ஒளிபரப்பபும் செய்தார்கள். எஸ் ரா அவருடைய இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்த 2008 விருப்பப் பட்டியலில் [S. Ra] இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மூலக்கதை:
இந்தக் கதை மீன் பிடிப்பவரான தாத்தாவுக்கும் [மாணிக்கம்] அவரது தாயில்லாப் பிள்ளையான பேரனுக்குமான [ராமு] உறவை சித்தரிப்பது. கழிமுகங்களிலுள்ள நீர்பரப்புகளில் மீன் பிடிப்பதில் கிழவர் மேதை. அவருக்கு வெற்றிலை இடித்துத் தருவதிலிருந்து மீன்பிடிக்க உதவி செய்வது வரையுள்ள எல்லா வேலைகளுக்கும் பேரன் உற்ற துணையாக இருக்கிறான்.
தாத்தா தனக்குப் பிடித்த ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த இடம்தான் தனக்கு அதிர்ஷ்டமான இடம் என்று நினைப்பவர். பேரனோ அவருக்கு நேர்மாறான முரணான குணம் கொண்டவன். மீன் பிடிக்கும் இடங்களை மாற்றிக் கொண்டே இருப்பான்.
இடமாற்றம் செய்யும் பழக்கம் பேரனுக்குச் சாதகமாக அமைகிறது. தாத்தாவை விட நல்ல மீன்கள் அவனுக்குக் கிடைக்கிறது. அவனுடைய பாட்டியும் பேரன் பிடிக்கும் மீனுக்குத் தனி ருசி இருக்கிறதென்று பாராட்டுகிறாள்.
அதுமட்டுமில்லாமல் குலத்திற்கு இனப்பெருக்கம் செய்ய வரும் பெரிய [புதிய] மீன் முதியவருக்குச் சவாலாக அமைகிறது. அதனை எப்படியும் பிடித்து விடுவேன் என்று சவால் விடுகிறார். மீன் பிடிப்பதில் வல்லவரான அவரால் அந்த மீனைப் பிடிக்க முடியவில்லை. இதற்கு மாறாக பேரன் அந்த மீனைப் பிடித்துவிடுகிறான். பேரன் வளர்ந்து தன்னை மிஞ்சுவதைக் கண்டு தாத்தா எரிச்சலைடைகிறார். தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவில் நுண்ணிய விரிசல் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு பேரனிடம் செல்லும் போது அவன் விலகிச்செல்கிறான்.
எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கேணி சந்திப்பில் அவசியம் வாசிக்க வேண்டிய நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையையும் பரிந்துரை செய்துள்ளார்.
கதையில் இல்லாத ஒரு விஷயத்தைக் குறும்படத்தில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது தாயத்து Sentiment. நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தாத்தாவாக முதல் மரியாதை வீராசாமியும் [அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..!..], பேரனாக புதுமுக குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், கேமரா என அனைத்தும் அருமை. சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் வசந்த் மற்றும் குழுவினர் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.
2005-ம் ஆண்டின் மிகச் சிறந்த குறும்படமாக தேர்வுசெய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ள இந்தக் குறும்படம் உலகத் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
திரைக்கதைப் புத்தகம் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதே புத்தகத்தில் மூலக்கதையுடன் - வெங்கட் சாமிநாதன், இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களின் குறும்படத்தைப் பற்றிய குறிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.
குறும்படத்தைப் பார்க்க விரும்புவோர் தமிழ்ஸ்டூடியோ.காம் நிறுவனர்களான அருண் மற்றும் குணாவைத் தொடர்புகொண்டால் கிடைப்பது உறுதி. நன்றி...
Details: Thakaiyin Meethu Nangu Kangal - Screen Play & Tamil Short film (Documentary)
11 comments:
அருமையான பதிவு.
மகிழ்ச்சி.
பகிர்வுக்கு நன்றி
பகிர்வுக்கு நன்றி
நல்ல பதிவு கிருஷ்ணா. உங்கள் அறிமுகத்தோடு அருணிடம் பேசி இருக்கிறேன். அடுத்த வாரம் குறுந்தகடு தருவதாகச் சொல்லி இருக்கிறார். மிக்க நன்றி! சிறுகதையையும் வாசித்துப் பார்க்கவேண்டும்.
-ப்ரியமுடன்
சேரல்
சென்ற வாரம் நூலகத்தில் இருந்து அவரது "இன்னொரு மனிதன்" தொகுப்பை எடுத்து வந்தேன். படிக்க ஆரம்பித்துள்ளேன். புத்தக விமர்சன பதிவுகளால் நல்ல நூல்களை அறிய முடிகின்றது. பகிர்வுக்கு நன்றி.
அருமையான குறும்படம். ஏற்கனவே பார்த்திருக்கிறேன், காலச்சுவடா கனையாழியா என்று நினைவில் இல்லை. விமர்சனமும் வந்திருந்தது. உங்கள் பகிர்வுக்கு நன்றி.
@ வண்ணத்துபூச்சியார்
குறும்படம் கிடைக்க காரணமாய் இருந்தவர் நீங்கள் தான். உங்களுக்கு மிக்க நன்றி...
@சாரதா, அமுதா & சேரல்
எப்பொழுதும் போல் உங்களுடைய பின்னூட்டம் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. நன்றி பல...
@ஷிஜூசிதம்பரம் (சுள்ளிக்காடன்)
காலாச்சுவடு, உயிர்மை, தீராநதி இன்னும் பல மிக்கிய சிற்றிதழ்களில் இந்தக் குறும்படம் பற்றிய விமர்சனம் வந்துள்ளது. திரைத் துறையில் உங்களுடைய பெரிய வளர்ச்சியை எதிர்பார்க்கிறேன். வந்து பின்னூட்டம் அளித்தமைக்கு மிக்க நன்றி...
சா.கந்தசாமியின் எழுத்து பற்றிச் சொல்லவேண்டியதில்லை. மிக அருமையான, யதார்த்தமான நடை.
அவரது எழுத்துக்களின் ஒவ்வொரு வரியையும் வாசித்துக் கொண்டுபோகும் போதே மனக் கண்ணில் ஒரு காவியம் துல்லியமாகத் திரையிடப்பட்டுக் கொண்டிருக்கும்.
அவரது சாயாவனத்திலிருந்து இன்னும் மீளவில்லை நான்.
அவரது கதையில் உருவான இக் குறும்படமும் சிறப்பாக இருக்குமென்பதில் ஐயமில்லை. நிச்சயம் தேடிப் பார்க்கிறேன்.
நல்லதொரு பதிவு.
நன்றி நண்பரே !
அது என்னமோ, வரிசையாக நான் படித்து அனுபவித்த கதைகளையும், நாவல்களையும் வரிசையாக எழுதி வருகிறீர்கள். எனக்கு மிகவும் பிடித்த கதை. குறும்படமும் எனக்கு பார்க்க கிடைத்தது. இதைப் பற்றி எனது பதிவிலும் இட்டுள்ளேன். வந்து பாருங்களேன்...
@ எம்.ரிஷான் ஷெரீப்
வருகைக்கும் பகிர்விற்கும் நன்றி ரிஷான்...
@ பிரசன்னா இராசன்
பல நாட்களுக்கு முன்பே நான் உங்களுடைய பதிவைப் படித்துவிட்டு பின்னூட்டமும் அளித்துள்ளேன் பிரசன்னா ராசன். உங்களுடைய சினிமா பதிவுகளும் அருமையாக இருக்கிறது. தொடருங்கள்...
நன்றி...
இந்த கதையை ஏற்க்கனவே படித்துள்ளேன்
ஆனால் எதில் எப்போ என்று தெரியல
Post a Comment