ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 130 ரூபாய்
'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் நடைபெற்ற சென்னை சிறுகதைப் பட்டறையில் முரளிகுமாரை (அன்பே சிவம்) சந்தித்த போது இந்தப் புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்தான். அவன் மீது அன்பு செலுத்தும் ஒருவர் அவனுக்குக் கொடுத்த புத்தகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.
பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்.
அன்னாரின் மறைவிற்குப் பிறகு 'எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி டிரஸ்ட்' என்னும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது. அவரின் மகன் 'டாக்டர் அறம்' நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று சிறந்த சிறுகதை படைப்போருக்கு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ மாணவியருக்கு படைப்பிலக்கியத்தை பயிற்றுவித்தளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த நாவலில் பிரதானப் பாத்திரமாக வரும் பழநிமுருகன் ஆசிரியராக நென்மேனிக்கு அருகில் வேலை செய்கிறவன். ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டவன். நேரம் கிடைக்கும் போது எந்த விதத்திலும் முன்னேறாத தனது உறவினர்கள் வாழும் கலிங்கல் மேட்டுப்பட்டிக்கு சென்று வருவது வழக்கம். ஊரின் மீதுள்ள பற்றுதலால் பழநி முருகன் என்ற தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான்.
ஒரு முறை தனது சொந்த ஊருக்குச் செல்லும் போது பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். மாலை மங்கி இருட்டும் வேளையில் தனது ஊரைச் சுற்றிக் காட்டி பாதுகாப்பாக அவளிடைய இருப்பிடத்தில் சேர்ப்பிக்கிறான். இருவருக்கும் நட்பு மலர்ந்து தொடர்ந்து சந்தித்துக் கொள்கிறார்கள்.
ஷபின்னாவின் மூலம் அவளுடைய குழுவினருக்கும் அறிமுகமாகிறான் பழநி முருகன். அவர்களுடன் பிரியமுடன் பழகுகிறான். குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க இவன் பேருதவியாக இருக்கிறான். மேலும் இந்தியாவைப் பற்றியும் அவர்களுடன் கம்யூனிச சித்தாந்தத்தில் விவாதம் செய்கிறான். அவனுடைய நேர்மையான விவாதம் காயப்படுத்தும் படியாக இருந்தாலும் வெளிநாட்டு நண்பர்களைக் கவருகிறது.
எல்லோருக்கும் பழநி முருகனைப் பிடித்திருந்தாலும் ஷபீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துவிடுகிறது. பழநி முருகனுக்கும் ஷபீனாவின் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது. சேவை செய்ய வந்தவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டிய நேரம் வருகிறது. அப்பொழுது ஷபீனாவை இவன் எப்படி வழியனுப்புகிறான் என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.
'தோழர்' நாவல் 1980-களில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் முகவுரையில் தமிழ் செல்வன் எழுதியுள்ள முன்னுறையிலிருந்து பார்க்கும் போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்புக் காண எழுத்தாளர் மாதவராஜின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. மாதவராஜ் தனது பதிவில் தனுஷ்கோடி ஐயாவைப் பற்றி எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்.
மதுமிதா அவர்களின் இந்தப் பதிவும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மறைவு பதிவும் ஐயாவைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.
Book Name: Thozhar
Author: Dhanushkodi Ramasamy
Book price: Rs. 130
Publishers: Bharathi Puthakalayam
3 comments:
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா ....
வாய்ப்பு கிடைத்தால் வாசிப்போமாக !!
நன்றி கிருஷ்ணா! உங்களுக்கு பிடித்ததா?
நான் எங்கள் "அண்ணா" தனுஷ்கோடி ராமசாமியிடம் மூன்று வருடம் தமிழ் பயின்றவன் என்பதே எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது .....
Post a Comment