Friday, April 23, 2010

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை

ஏப்ரல் 23 - ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். புத்தகத்தின் மீதான தீராதக் காதலால் இந்த தினத்தின் மீதும், சரஸ்வதி பூஜையின் மீதும் எப்பொழுதுமே எனக்கு ஒரு மயக்கம் உண்டு.

யோசித்துப் பார்க்கையில், நான் (அரசுப்) பள்ளி வாழ்க்கையை முடித்து வெளியில் வரும் வரை பாட புத்தகத்தைத் தவிர்த்த வேறு எதையும் படித்ததில்லை. பாடப் புத்தகத்தைக் கூட முழுவதும் படித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, ஆசிரியர்களோ என்னை புத்தக வாசிப்பிற்கு ஊக்கப்படுத்தியதும் இல்லை. கல்லூரி வந்ததும் தான் ஒரு சில இதழ்களையும், புத்தகங்களையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கைசெலவிற்காக என்னுடைய அண்ணன் தரும் பணத்தைப் பிடித்தம் செய்து சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அருகில் வேலை கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சொந்த நூலகத்திலுள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியவைதான்.
புத்தகம் வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதால் நான் எதிர்கொண்ட சங்கடமான சில கேள்விகள் தான் புத்தக தினத்தில் எனக்கு ஞாபகம் வரும்.

நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பொழுது "எதுக்குடா இப்படி வீண் செலவு செய்யற?... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா?!... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்?(இது என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு படித்தவர் கேட்டது. அப்பொழுது கூட புத்தகத்தை இரவலாகக் கேட்கவில்லை)." இது போன்ற கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய பதில் இதுவரை புன்னகையாகத் தான் இருக்கிறது.

மேலுள்ளவற்றில் "ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடப் போரடா?!..." இந்தக் கேள்விதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தக் கேள்வி. என்மேல் இருக்கும் அக்கறையினால் தான் இந்தக் கேள்வி எழுந்தது என்றாலும் பொதுவான புத்தகம் படிப்பவர்களின் மீதான அவர்களுடைய பிம்பம் என்னை நிலைகுலைய வைத்தது. இந்த மாதிரியான மன பிம்பங்கள் கொண்ட குறுகிய மனப்பான்மை புத்தக வாசிப்பை மட்டுப்படுத்துவது குறைவுதான் என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை (பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பது), கணினி, செல் ஃபோன் போன்ற அறிவியல் வளர்ச்சி, சேட்டிலைட் சானல்களின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான பெரிய காரணங்களாக எனக்குப் படுகிறது. வாசிப்பு என்பது ஒரு சிலரால் கேலியாகவும், ஒரு சிலரால் பயங்கரமாகவும், ஒரு சிலரால் வீண் வேலையாகவும் பார்க்கப்படுவதை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய பிறப்பிடம் கிராமம் என்பதால், படிக்காத முந்தையத் தலைமுறையினர் வளரும் தலைமுறையினரைப் படிக்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட சமந்தப்பட்ட புத்தகங்களுக்கு ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்கின்றனர். கேபிள் இணைப்பிற்காக மாதம் தோறும் குறைந்தது 100 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பொது அறிவையோ, சுய அறிவையோ பெருக்கிக் கொள்வதற்காக ஒரு பைசாவைக் கூட அவர்கள் செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை.

என் தெருவில் உள்ள ஒரு குழந்தையாவது
ராஜா-ராணி
க் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மாயாஜாலக் கதைகள், இராமாயண மகாபாரதத்திலுள்ள சிறுவர் கதைகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர்களின் கதை உலகம் காக்கா-நரிக் கதையோடும், பாட்டி வடை சுட்டக் கதையோடும் நின்று விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினாலும், குடும்பச் சிதறல்களினாலும் தாத்தா பாட்டி கதைகளும் குழந்தைகளைச் சென்று சேர்வதில்லை. சிறுவர்களுக்கு கதைகள் சொல்வதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அவர்களுடைய கவன சக்தி பெருகும். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கம் வரும். நிறைய சொற்கள் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதினால் நம் மீதான அன்பு வளரும். ஒரு வயதிற்கு மேல் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்கள் மறைமுகமாக அவர்களுக்குத் தெரியவரும். "புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும். பிள்ளைகளின் அடுத்தகட்ட பருவத்திற்கு தயார் செய்யும் வேலையை பெரியவர்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளில் முக்கியமான ஒன்று "புத்தகம்". எனவே அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வாசிக்க ஊக்கப் படுத்துங்கள். தமிழில் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு புத்தகங்கள் வெளிவருவது குறைவுதான். கிழக்கின் ப்ரோஜிடி குழு அதனை சிறப்பாகவும், தரமாகவும் செய்கிறார்கள்.

என்னுடைய தோழிகளுக்கும், நண்பர்களின் தங்கைகளுக்கும், மனைவிகளுக்கும் "தயவு செய்து குழந்தைகளுக்கான கதைகளைப் படிங்க, உங்க குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்க" என்று எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். "போங்கண்ணா இதுங்களைக் கட்டி மேய்க்கவே முடியலை. அதான் டிவியிலயும், ஸ்கூல்-லயும் கத்துக்கராங்களே, அது போதாதா?" என்று பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
இன்று காலையில் கூட என்னுடைய நண்பர்களுக்கு "Today is the world book and copyright day. Buy anyone book written by your favorite author and discover the pleasure of reading. It’s my request. But don’t buy Vikatan, Kumudam, Kungumam, Rani magazines etc…. :-) Thanks & Love – Krishna Prabhu" என்று SMS அனுப்பியிருந்தேன். ஒரு சிலர் நல்ல SMS என்று பதில் அனுப்பியிருந்தார்கள். அதில் ஒளியவன் (சென்னை பல்கலையின் தமிழ் எழுத்துருவிற்கான ஆராய்ச்சி மாணவன்) அனுப்பியிருந்த பதில் சிரிப்பையும் வெறுமையையும் ஒருசேர வரவழைத்தது.

படித்தவன் பாடம் நடத்துவான்...
படிக்காதவன் பள்ளிக் கூடம் நடத்துவான்...!


இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.


13 comments:

Romeoboy said...

\\கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?//

இந்த கொடுமைய நானும் அனுபவிச்சேன் பாஸ் .

http://romeowrites.blogspot.com/

நேசமித்ரன். said...

நல்ல பதிவு ..

உங்களிடம் இருந்து வருவது பொருத்தமும் அழுத்தமும்

கிருஷ்ண மூர்த்தி S said...

யுனெஸ்கோ சொல்வது, ஐநா சபை பதினைந்தாண்டுகளாகக் கொண்டாடுகிற இந்தச் சடங்கெல்லாம் கிடக்கட்டும்!

அவர்கள் இன்டலெக்சுவல் ப்ராபர்டி என்று எல்லாவற்றையும், இங்கே இந்த மண்ணுக்கே சொந்தமான வேம்பு, துளசி, கோமயம் உட்பட அத்தனை விஷயங்கள் மீதும் உரிமை கொண்டாடுகிற இந்தச் சடங்கைக் குறிப்பிடாமலேயே, நீங்கள் சொல்ல வந்த அடிப்படையான வாசிக்கும் பழக்கத்தை உற்சாகப் படுத்துதல் குறித்து எழுதியிருக்க முடியும்!

வாசிக்கும் பழக்கம் பரவலாவதற்கு வாசிக்க வைக்கும் எழுத்துக்களுமே அவசியம் இல்லையா?

அப்படித் தேடிப்பிடித்துப் படிக்க வைக்கிற எழுத்தாளர்களுக்குத் தான் பஞ்சமே தவிர, வாசகர்கள் எண்ணிக்கையில் அல்ல!

நா பார்த்தசாரதி, அகிலன் மாதிரி சமுதாயத்தின் மீது அக்கறையும் செயலாற்ற தன்மை ஊழலின் மீது தார்மீகக் கோபமும், சத்திய ஆவேசமும் கொண்டு எழுதியவர்கள், அவர்களைப் படித்தவர்களிடம் அதே உணர்வை, ஆவேசத்தை விதைத்த நாட்களை நினைத்துப் பார்க்கிறேன்!

butterfly Surya said...

பதிவு போடவில்லையா என்று SMS அனுப்பினேன். சொன்னபடியே அழகாகவும் அருமையாகவும் பகிர்ந்து விட்டீர்கள்.

நன்றி. வாழ்த்துகள்.

padmanabhan said...

வபடிப்பதை நேசிக்கும் எல்லோருக்கும் ஏற்படும் அனுபவம் தங்களுக்கும் நேர்ந்துள்ளது
புத்தகம் இரவல் கேட்க யாரும் அஞ்சுவதே இல்லை.(பேருந்தில் முகம் தெரியாதவரிடம் கூட)
அதேபோல் புத்தகங்களை வாங்கிப் படிப்பவர்கள் ஊதாரி என்று நினைப்பவர்களும் மலிந்துள்ளனர்
இதனால் வேலை ஏதும் கிடைக்குமா? என்று கூட கேட்கின்றனர்
தங்களைப் போன்றவர்களின் படிப்பதைப் பகிர்வது கூட வாசிக்கும் பழக்கத்தை மீட்டெடுக்கும். வாழ்த்துகள்.

Bee'morgan said...

நல்லதொரு பதிவு கிருஷ்ணபிரபு.. பொருத்தமான நாளில் பொருத்தமான பதிவு..

விக்னேஷ்வரி said...

நல்ல பதிவு கிருஷ்ணா.

ஜீவி said...

//"புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும்.//

ஒரு இளைஞரிடமிருந்தான இப்படிப்பட்ட
பதிவைப் படிக்க மிகவும் பெருமிதமாக இருந்தது.
வாழ்த்துக்கள், கிருஷ்ணா!

பிரபாகரன் said...

Some days ago, I was highly impressed by one of the Jeyamohan's article. Then I sent that article to my school friends (in our class 50 student have scored above 400 in 10th public exam). Then I had some mails and phone calls from my friends. All of them behaved very bad and given advise to me how to reject these type of reading behavior. In 12th we were all studying any time, but school did not teach us out of the syllabus.

Krishna, for me book reading is a great passion like you.

In the recent days i had read two books, "koballa graamam and chitthira Bharathi." Both were excellent

பாரதி மணி said...

ஒரு நல்ல பதிவு, கிருஷ்ணா. இதை எனக்கான ஒரு உந்துதலாக எடுத்துக்கொண்டேன். இப்போதெல்லாம் நான் படிப்பது மிகவும் குறைந்துவிட்டது.

பாரதி மணி

priyamudanprabu said...

இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.
...///////


yes

priyamudanprabu said...

எனக்கும் இவது போன்ற அனுபவம் உண்டு
படிப்பது எல்லோராலும் முடியாது
அதற்க்கு என மனதுக்குள் ஒரு உந்து சக்தி இருக்கணும் , ஆர்வம் வேண்டும்

bogan said...

என்னையும் இதேபோல 'அறிவுரைகள்' சொல்லி புத்தகங்கள் படிக்கும் 'கெட்ட' பழக்கத்தில் இருந்து திருத்த முயற்சி செய்திருக்கிறார்கள்.இன்னமும் செய்கிறார்கள்.இன்னமும் நான் செய்யும் கிறுக்குத் தனங்களுக்கு நான் 'கண்ட'புத்தகத்தையும் படிப்பதுதான் காரணமாகச் சொல்லப் படுகிறது.உண்மையாக இருக்குமோ?