Monday, December 6, 2010

ஒரு புளியமரத்தின் கதை - சுரா

வயோதிகப் பெண்மணியிடம் ஒரு முறை கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு காலை நீட்டியும், மறு காலால் அரிவாள்மனையை அழுத்தி பிடித்துக் கொண்டும் புளிக் கொட்டைகளை நீக்கியவாறு என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். அறிந்து போட்ட புளியம்பழம் குன்று போலவும், கொட்டை நீக்கப்பட வேண்டிய புளி மலைபோலவும் அருகில் இருந்தன. புளியங்கொட்டையையும், காம்பையும் அறியும் பொழுதே தனித் தனியாக பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

"எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்? காசு கொடுத்து தேவையான பொழுது கடையில் வாங்கிக் கொள்ளலாம் இல்லையா? இந்த வயதில் உங்களுக்கு இது தேவைதானா?" என்று கேட்டேன்.

"நீ ஏங்கண்ணு பேசமாட்ட... நாங்க அங்கபுடி இங்கபுடின்னு சேத்து வச்சதாலதான. ராசாவாட்டம் சுத்தி வரீங்க" என்றாள் பாட்டி.

"சும்மா படம் ஓட்டாதீங்க!" என்றேன்.

நான் முருகன் டாக்கீசு ஒனருல்ல... அதன் படம் ஓட்டுறேன். நீ வேற ஏன்யா!... நல்ல மரமா பாத்து, ஏலத்த எடுக்கறதே கஷ்டமா போச்சு. சரி... சரி... கேட்டுட்ட இல்ல முழுசா தெரிஞ்சுக்கோ.

பழத்தை பிரிக்க சொல்ல கெடைக்கிற மேல் ஓட்டையும், மேல் காம்பையும் மாட்டு சாணத்துல கலந்து உருண்டையா புடிச்சி காய வைப்போம். தண்ணி காயவக்க உதவுமுள்ள. நரம்பு மாதிரி இருக்கற திப்பியையும், பாதி சொத்தையா போன பழத்தையும் பித்தல சாமான் தேக்க வச்சிக்குவோம். சைக்கிள்ள வரவன்கிட்ட புளியங்கொட்டையை போட்டு காசு பண்ணிடுவோம். நல்ல சதையா இருக்குற புளிய சமையலுக்கு வச்சிக்குவோம். அதுல கூட பழைய புளி, புது புளின்னு கொழம்புக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்குவோம்.

"ஓடு, காம்பு, திப்பி, பழம், கொட்டை" -ன்னு ஒவ்வொன்னையும் வீணாபோகாம பாத்துக்கிறோம். அந்த மாதிரி சேத்து வச்சித்தான் உங்களைக் காப்பாத்தனோம். இன்னும் ஒன்னை மறந்துட்டேனே. புளியந்துளிரை பருப்புக்கூட சேத்து சமச்சா நல்லா இருக்கும். உங்க வீட்டுல சமச்சா "நீ கூட வழிச்சி வழிச்சி சாப்பிடுவே" -ன்னு உங்க அம்மா சொல்லி இருக்கா!.

பாட்டி பேசி முடித்த இடத்தில் என்னுடைய ஆச்சர்யம் தொடங்கியது. அவள் சொல்லியிருந்த எல்லாம் எனக்கு முன்பே தெரிந்த விஷயங்கள் தான். கழிவு மேலாண்மையைக் (Wastage Management) குறைபட்டுக் கொள்ளும் இன்றைய சமூகம், முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்க வேண்டியதின் அவசியத்தை இதுபோன்ற தருணங்கள் தான் உணர்த்துகிறது. இயற்கைக்கு பங்கம் விளைவிக்காத முன்னோர்களுடைய வாழ்க்கை முறைதான் எத்தனை அழகு நிறைந்தது.

ஒரு மரம் காற்றையும், சூரிய ஒளியையும், தண்ணீரையும், மண்-சத்தையும் உறிஞ்சி அதனுடைய தன்மைக்கு ஏற்றவாறு காய்கனிகளைத் தந்து ஆகாயத்தை நோக்கி உயர்கிறது. அவற்றைப் பயன்படுத்தித்தான் உயிர்கள் எல்லாம் ஜீவிக்கிறது. சில நேரங்களில் மரம் கடவுளாகவும், கிராமவாசிகள் சந்திக்கும் மைய இடமாகவும் மாறி விடுவதுண்டு. உலகுக்கே ஞானத்தை போதித்த சம்பா சம்புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போதி மரத்தின் அடியில் தானே!. அந்த வகையில் இந்த நாவலும் ஒரு மரத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஒரு புளியமரத்தின் கதை - சுதந்திர இந்தியாவின் முன்னரும் பின்னரும் மரத்தைச் சுற்றி நகரும் கதை. மரத்தின் தொன்மம் தாமோதர ஆசானின் மூலம் கற்பனை கலந்து முதல் பாதியில் விவரிக்கப்படுகிறது. செல்லத்தாய் உச்சிக் கிளையில் சுருக்கிட்டு இறந்து போவதையும், மன்னரின் விஜயத்தைப் பொருட்டு மரத்தின் அருகிலிருந்த குளம் மூடப்பட்டு சமதளம் ஆவதையும், வெட்ட வரும் மரத்தை கெப்ளாநிடமிருந்து சாதூர்யமாக காப்பாற்றும் விதத்தையை ஆசான் விவரிப்பதும் மரத்தின் ஜோடனைகளை வெளிப்படுத்தும் ஆரம்ப அமர்க்களம். மரநிழல் எப்படி மக்கள் புழங்கும் இடமாக மாறுகிறது என்பதை சுரா அவருடைய நடையில் சொல்லிச் செல்கிறார்.

கதையின் பின்பாதி தாமு-காதர் ஆகியோரின் வியாபாரப் போட்டியாகவும் அரசியல் போட்டியாகவும் மாறி நகர்கிறது. ஒருவரின் வெற்றியைப் பறிக்க அடுத்தவர் மறைமுகமாக செயல்படுகின்றனர். அதற்காக மனிதத்தின் எல்லை வரை செல்கின்றனர். மரத்தின் நிழல்தான் தாமுவின் வியாபாரத்திற்கு ஆதாரம் என்பதால் 'திருவிதாங்கூர் நேசன்' பத்திரிக்கை நிருபர் இசக்கி, முனிசிபாலிட்டி மூலமாக மரத்தினை அடியோடு சாய்க்க ஆட்களை சேர்க்கிறான். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மரத்தை வெட்ட வரும் நேரத்தில், தாமு ஆட்களை சேர்த்துக் கொண்டு மரத்தினை தெய்வமாக்கி விடுகிறான். இந்த இடத்தில் ஒரு நெருடல் இருந்தது. வேப்ப மரத்தை முனீஸ்வரனாக, காட்டேரியாக வழிபடும் குடும்பம் எங்களுடையது. எனக்குத் தெரிந்து புளிய மரத்தை இது போல யாரும் பூஜை செய்து நான் கேட்டதில்லை.

காட்டை நம்பி வாழும் வனவாசிகள், ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன், அந்த மரத்தின் காதில் "என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள உன்னை அழிக்கிறேன். மன்னித்துக்கொள்" என்று முறையிட்டு வேண்டிக் கொண்டுதான் மரத்தை வெட்டுவானாம். எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். வீடு கட்டுவதற்காகவும் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும் எவ்வளவு மரங்களை வெட்டுகிறோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோமா? அதற்கும் உயிர் இருக்கிறது. ஒரு கதை இருக்கிறதென்று?. "அசோகர் சாலை ஓரங்களில் மரம் வளர்த்தார்" என்று சிறுவயதில் வரலாறு பாடத்தில் படித்திருக்கிறேன். அடுத்தடுத்த தலை முறையினருக்கு இந்த வரி ஒரு பகடியாகத்தான் இருக்கும் போல. ரோட்டோரங்களில் மரம் இருந்ததற்கான ஆதாரத்தை ஆவணங்களில் தான் தேடவேண்டி இருக்கும் போல.

முனிசிபாலிட்டி செய்வதறியாது முழிக்கிறது. தாமுவின் முன் தோற்கக் கூடாது என்ற கோணத்தில் காதர் யோசிக்கிறான். அந்த நேரத்தில் கூலி ஐயப்பன் காதருக்கு உதவ முன்வருகிறான். விஷம் கலந்த மருந்தை மரத்தில் பள்ளம் தோண்டி வைத்து சாணியிட்டு நிரப்பிவிட்டு கீழிறங்கும் பொழுது தாமுவின் ஆட்கள் பார்த்து விடுகிறார்கள். அங்கு நடந்த கைகலப்பில் கூலி ஐயப்பன் கொல்லப்படுகிறான். அதற்கடுத்த ஒரு வாரத்தில் மரம் செத்துவிடுகிறது. கடலை தாத்தாவின் அமோக வெற்றியால் தேர்தலில் தோற்ற தாமுவும், காதரும் வேறு ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள். மரம் முழுவதம் அகற்றப்பட்ட பின்னும் அந்த இடம் 'புளியமர ஜங்க்ஷன்' என்றே அழைக்கப்படுகிறது. அதன்பின்னும் சந்தை தனது இயல்பில் செயல்படுகிறது.

இந்த நாவல் இஸ்ரேலியர்கள் பேசும் புராதன ஹீப்ரூ மொழியில் Sipuro shel Ets Hatamarhindi என்று Dr. Ronit Ricci என்பவரால் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வேறு எந்த தமிழ் நாவலுக்கும் இல்லாத சிறப்பாக இதனை சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு இருக்கிறார். பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நாவல் இது. வெளியான நாளிலிருந்து இதுவரை 12 பதிப்புகள் கண்டுள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் தரமான அச்சில் கிடைக்கிறது

தொடர்புடைய இதர பதிவுகள்:

1. ஒரு புளிய மரத்தின் கதை - ஒரு காலங்கடந்த பார்வை
2. இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

7 comments:

Prasanna Rajan said...

புளியமரத்தின் கதை முதல் வாசிப்பில் பிரமிப்பை தந்தது உண்மை. ஆனால், வாசிப்பு பரப்பு கொஞ்சம் விரிவடைந்த பின் இரண்டாம் வாசிப்பில், கிசு கிசுக்களின் தொகுப்பாக தான் தோன்றியது. இருப்பினும் 'ஜே.ஜே'வை காட்டிலும் சிறந்த நாவல் என்பதை மறுக்க முடியாது.

மற்றபடி அந்த நாவலின் பின்னுரையில் எம்.ஏ. நுமான் கூறியதை போல், நோபெல் பரிசுக்கு தகுதியான நாவல் என்பதெல்லாம், ஒன்னும் சொல்வதற்கில்லை...

அமுதா said...

விமர்சனத்திற்கான முன்னுரையும் அருமை. இந்த ஆண் புத்தக சந்தையில் தான் வாங்கிப் படித்தேன். வாங்கிய பொழுது நீங்கள் என்ன இலக்கியவாதியா என்று வேறு ஒருவர் கேட்டார். இலக்கியம் என்றால்... என்று சற்றே யோசித்துக் கொண்டே தான் படிக்கத் துவங்கினேன். ஆனால் மிகப் பிடித்தது; மிக யதார்த்தமாக இருந்தது. மரம் நீங்கும் பொழுது மனம் அழுதது. மனிதன் தனக்கு மட்டும் துயரை உருவாக்கிக் கொள்வதில்லை சுற்றி உள்ள உயிர்களுக்கும் துயரைத் தான் கொடுக்கிறான். ஆனால் மனிதனைத் தவிர எவையும் தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை.

"உழவன்" "Uzhavan" said...

இந்தப் புத்தகக்கண்காட்சியில் வாங்கிவிடவேண்டியதுதான்.. நிறையப் பேர் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
எனது ஊரில் இருக்கும் புளியமரத்தின் நினைவுகளை சமீபத்தில் எழுதினேன். அது கல்கியில் வெளிவந்தது.
http://tamiluzhavan.blogspot.com/2010/10/blog-post_31.html

Unknown said...

@ பிரசன்ன ராஜன்

60-களில் இது புதுரத்தம் பாய்ச்சக் கூடிய எழுத்தாக இருந்திருக்கும் என்பதில் கொஞ்சமும் சந்தேகப்பட முடியாது.

இந்த புதினத்தை இரண்டாவது முறையாகப் படிக்கிறேன். பல விஷயங்கள் புதிதாக இருந்தன.

"வாசிப்பு என்பது எதையும் பெற்றுக் கொள்வதற்கு அல்ல... அனுபவிப்பதற்கு..." என்ற சுரா-வின் வார்த்தைகளை அவரின் தீவிர விசிறியான பதிவர் பிரபா என்னிடம் அடிக்கடி சொல்லுவான். மீள்வாசிப்பும் நல்ல அனுபவமாகத்தான் இருந்தது. நீங்கள் சொல்லக் கூடிய கருத்தும் ஒரு வகையில் ஒத்துக் கொள்ள வேண்டியதே.

Unknown said...

@அமுதா

/--எவையும் தம் இயல்பிலிருந்து வேறுபடுவது இல்லை.--/

முற்றிலும் உண்மை அமுதா. சுயநலத்தின் மொத்த உருவம் நாகரீக மனிதன். நாகரீக மனிதர்கள் மட்டுமே. இன்றும் வெள்ளந்தியான மனிதர்கள் இயற்கையுடன் இசைந்து வாழ்கிறார்கள்.

Unknown said...

@ உழவனாரே...

/-- எனது ஊரில் இருக்கும் புளியமரத்தின் நினைவுகளை சமீபத்தில் எழுதினேன்.--/

நீர் எழுதியிருந்ததைப் படித்தேன் கவிஞரே... அந்த வகையில் நம்பி சொல்கிறேன். உங்களுக்கான பிடித்த நாவலாக இது இருக்கும். *ஆனால் எதிர்பார்ப்பு இல்லாமல் நாவலின் போக்கில் படியுங்கள்.*

மற்றபடி கேணியிலோ அல்லது நர்சிம்மின் புத்தக வெளியீட்டிலோ நேரில் சந்திக்கலாம்.

thamizhparavai said...

நல்ல பகிர்வு கிபி...நன்றி...
நான் சமீபத்தில்தான் படித்து முடித்தேன். கொஞ்சம் பழையநடை அலுப்புத் தட்டினாலும் கதை எழுதப்பட்ட காலகட்டத்திற்குச் சென்றபின் சுவாரஸ்யமூட்டியது. அருமையான வாசிப்பனுபவம் தந்த நாவல் இது...