Tuesday, January 11, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - ஏழாம் நாள்

எதிரில் வந்த அறிமுகமில்லாத நபர் வழிமறித்துக் கைகுலுக்கினார்.

"மன்னிக்க வேண்டும் நண்பரே. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லையே?" என்றேன்.

உங்களை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் 'கடவு' முதல் பிரதியை வாங்கியவர் நீங்கள் தான். நான் க்ரியாவில் இருக்கிறேன். பெயர் ஆசைத்தம்பி என்றார். இவரிடம் நேரடி பரிட்சயம் இல்லை. ஆனால் இவரைப் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். அதை இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

இவர் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யின் ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து வேலை செய்பவர். அகராதியில் அறிவியல் தொடர்புடைய சொற்களுக்கும், பறவைகள் விலங்குகள் தொடர்பான சொற்களுக்கும் பொருள் எழுதும் பொறுப்பு இவருடையது. ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக‌ வ‌ந்திருக்கின்றன. வளர்ந்து வரும் கவிஞரும் கூட. இந்த வருடம் 'ஓமர் கய்யாம் ருபாயியத்' என்ற இவருடைய மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவரை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். அப்பொழுது விரிவாகப் பேசலாம். இப்பொழுது கிழக்கு நோக்கிச் செல்வோம்.

பாஸ்கர் சக்தியின் கல்லூரித் தோழரான பாலு சத்யாவிடம் நீண்ட நாட்களாக பேச வேண்டும் என்றிருந்தேன். பா ராகவன் மூலம் கல்கியில் பணியைத் தொடங்கியவர். தற்பொழுது கிழக்கில் பணிபுரிகிறார். இவர் பாலு மகேந்திராவிடம் அசோசியேட் டைரக்டராக "ஜூலி கணபதி" என்ற படத்தில் பணியாற்றியவர். பாஸ்கர் சக்தியின் 'தக்ளி' சிறுகதையை இவர் தான் இந்தியா டுடேவிற்கு அனுப்பியவர். அந்த வருடத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தக்ளியின் மூலம் "விகடன், TV மெகா சீரியல், திரைப்படம்" என்று பாஸ்கர் சக்தி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனை பாஸ்கர் சக்தி பல முறை, பல மேடைகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நான் பேசச் சென்றதின் விஷயம் இதுவல்ல. அவருடைய "கண்பூக்கும் தெரு(வம்சி பதிப்பகம்)" என்ற சிறுகதை தொகுப்பைப் பற்றி பேசுவதற்காகத் தேடிக் கொண்டிருந்தேன். மடக்கிப் பிடித்து பேசியபோது அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளான "காலம் வரைந்த முகம் (அம்ருதா), பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா)" பற்றிக் குறிப்பிட்டார். மொத்தக் கதைகளையும் படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று விடைபெற்று உயிர்மை சென்றேன்.

எஸ்ரா வந்திருப்பதாக தனசேகர் தெரிவித்தார். ஆனால் ஆளைக் காணவில்லை. நானும் ஒரு சுற்றுசுற்ற வெளியில் கிளம்பினேன். பூம்புகார் பதிப்பகத்தில் எஸ்ரா காணக் கிடைத்தார். நெருங்கிச் சென்று "வணக்கம் எஸ்ரா. நான் கிருஷ்ண பிரபு. உங்களுடன் பேசிக்கொண்டு வருவதில் பிரச்சனை இல்லையே?" என்றேன்.

"ஞாபகம் இருக்கிறது... துயில் புத்தக வெளியீட்டில் பார்த்தோமே. தாராளமா வாங்க" என்று சிரித்தார். அவர் பயன்படுத்தியிருந்த வாசனைத் திரவியம் காற்றைப் புணர்ந்து பரவிக்கொண்டிருந்தது. அவருக்கான சில கேள்விகள் என்னிடமிருந்தன. எனினும் எஸ்ரா புத்தகம் தேடும்பொழுது பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

1. இந்த வருடம் எந்த மாதிரி புத்தகங்கள் படிக்க இருக்கிறீர்கள்?

எஸ்ரா: அதிகம் பிரபலமாகாத முக்கியமான ஆளுமைகளின் சுயசரிதம் படிக்க இருக்கிறேன். அதுவும் ஆங்கிலப் புத்தகங்கள்.

2. எந்த மாதிரியான ஆளுமைகள்?

எஸ்ரா: பல துறைகளில் பங்களிப்பு செய்தவர்கள். உதாரணத்திற்கு ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்தார்.

3. தீவிர இலக்கியத்தில் ஆர்வமிருந்தும் நீங்கள் ஆரம்பித்து நடத்திய சிற்றிதழை ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

எஸ்ரா: ஊரில் இருந்தபொழுது எழுத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது. சென்னைக்கு வந்ததும் சில காரணங்களால் நின்று போனது. சிற்றிதழை இணையத்தில் கொண்டுவந்தேன். ஆனால் தொடர முடியவில்லை. எனினும் அந்த முயற்சியால் தான் எனக்கான இணையத்தளம் தொடங்க முடிந்தது.

4. நீங்கள் எழுத்தாளரை சந்திக்க நேர்ந்த அனுபவக் கட்டுரைகள் அனைத்தும் மாய யதார்த்தத்தைப் போல இருக்கிறதே? நீங்கள் எழுதிய அனுபவங்களும், உணர்வுகளும் உண்மையிலேயே உங்களுக்குக் கிடைத்ததா?

எஸ்ரா: இப்பொழுது எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. எங்களுடைய காலத்தில் அப்படி இல்லை. அவர்களை சந்திப்பதே கடினம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது சங்கடப்படும்படி வேறு பேசி இருக்கிறோம். அடுத்த முறை சந்திக்கும் பொழுதும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். இருந்தும் வலிய சென்று பேசுவோம்.

5. உங்களுடைய மொழி ஒரே மாதிரி இருக்கிறதே?

எஸ்ரா: எனக்கான மொழியைத்தான் நான் தொடர்ந்து பயன்படுத்துவேன். இதில் என்ன இருக்கிறது. அடுத்தவர்களின் மொழியைப் பயன்படுத்தினால் அது என்னுடையதாக இருக்காதே.

6. நான் சொல்ல வருவது... துணையெழுத்தின் பாதிப்பு உங்களுடைய எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதே? ஒரு கட்டுரையிலோ கதையிலோ கிளி இருந்தால், அடுத்த கட்டுரையில் மரம் இருக்கிறது. அதற்கடுத்தக் கட்டுரையில் செடி இருக்கிறது அல்லது மலை இருக்கிறது. படித்ததையே படித்தது போன்ற உணர்வு எழுகிறதே.

எஸ்ரா: பாதிப்பு என்பதை விட, என்னுடைய மொழியை நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். வேறொருத்தருடைய மொழியை பயன்படுத்தினால் அது என்னுடைய எழுத்தாக இருக்காதே. நீங்கள் துணையெழுத்தை மீண்டும் படித்தால் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம்.

7. நிச்சயமாக இல்லை. ஆனால் அதனுடைய தொனி அடுத்தடுத்த படைப்புகளில் ஏற்படும்பொழுது சலிக்கிறது.

எஸ்ரா: தேசாந்திரி படித்துவிட்டு துணையெழுத்து படிப்பவர்கள், தேசாந்திரிதான் சிறந்த கட்டுரைகள் என்பார்கள். இந்த மொழி என்னுடையது என்றிருப்பததை வெற்றியாகக் கருதுகிறேன்.

8. உங்களுடைய சமீபத்திய படைப்புகளை நான் படிக்கவில்லை. எனவே உப பாண்டவத்தை எடுத்துக் கொள்வோம். உங்களுடைய படைப்பில் மிகவும் பிடித்த நாவல். அதிலுள்ள எல்லா கதாப்பாத்திரங்களின் குரலும் ஒரே மாதிரி இருக்கின்றதே? படகோட்டி முதல் விதுரன் வரை ஒரே மாதிரி உலகத்தைக் காண்கிறார்களே. அவர்களுக்கான மொழியோ, குரலோ தனித்துத் தெரியவில்லையே?

எஸ்ரா: 60 வயலின் கலைஞர்கள் ஒன்றாக இசைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது என்ன பைத்தியக்காரத் தனம் என்று நினைப்போமா? மொத்தக் கலைஞர்களும் வாசிக்கும் பொழுது கிடைக்கும் சேர்ந்திசை வடிவம் கொடுக்கும் சிலிர்ப்பு வித்யாசமானது தானே. சிறு கீற்றாக புல்லாங்குழலின் இசைபோல ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் வேறுபாடு இருக்கும். அதை நான் நுட்பமாக செய்திருப்பேன்.

ஒரு வாசகனாக நீங்கள் சொல்லும் மொழிசார்ந்த, குரல் சார்ந்த விஷயம் எனக்கும் தெரியும். ஒவ்வொரு முறை மறுபதிப்பு வரும் பொழுதும் படித்துவிட்டுத் தான் வெளியிடுகிறேன். எழுத்தாளனாக சில விஷயங்களைத் தெரிந்தே தான் என்னுடைய படைப்புகளில் அனுமதிக்கிறேன்.

9. பார்க்க வந்த இலை - இந்தக் கட்டுரைக்கு இணையத்தில் எழுந்த சலசலப்பு உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்?

எஸ்ரா: மேகம் எப்பொழுதுமே மேகம் தான். சாதாரணமாகக் காணக் கிடைக்கும். அதை எப்படியெல்லாம் வர்ணிக்கிறோம். அங்கு எழாத கேள்வி இங்குமட்டும் ஏன் எழுகிறது. நான் லத்தின் அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்வதில்லையே. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு விஷயத்தை பல முறை யோசித்துவிட்டுத் தான் பொதுவில் வைக்கிறேன் என்றவாறு சிரித்தார்.

10. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கே மிகவும் பிடித்த படைப்பு என்று எதையாவது சொல்ல முடியுமா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை சில சமயம் எழுத்தில் கொண்டுவர முடியாமல் போனதுண்டு. சுமாரான விஷயம் எதிர்பாராத விதமாக அற்புதமாக வந்த அனுபவங்களும் இருக்கிறது.

11. இளம் படைப்பாளிகள் எப்படி எழுதுகிறார்கள்? அவர்களைப் படிப்பதுண்டா?

எஸ்ரா: கண்டிப்பாக... நன்றாக எழுதுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் எழுத நினைக்கும் விஷயத்தை முழுமையாக எழுத்தில் கொண்டுவர முடியாமல் போகிறது என்பதை எழுத்தாளனாக கண்டுபிடிக்க முடிகிறது என்று சமீபத்தில் படித்ததை பகிர்ந்துகொண்டார்.

இருபது வயதில் எல்லோருக்குள்ளும் ஒரு கழுகு பறக்கும். கழுகு பறக்க பெரிய இடம் வேண்டும். அதுவுமில்லாமல் உயரத்தில் பறக்கக் கூடியது. உயரத்தில் பறந்துவிட்டு களைப்புடன் மரக் கிளையில் அமர்வதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கும். அப்பொழுது மீண்டும் ஒரு கழுகு பறக்கும்.

சிறு வயதிலேயே உச்சத்தை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்குத் தேவையான அனுபவமும், முதிர்ச்சியும் சேரும்பொழுது சிறப்பாக எழுத்தில் வெளிவரும். சிலர் ஆரம்பத்தில் எழுதியது சிறப்பாகவும் போகப் போக சொதப்பியும் இருக்கிறார்கள். சிலர் சொதப்பலாக ஆரம்பித்து போகப்போக கைவரப்பெற்று அசத்தி இருக்கிறார்கள்.

மேலும் பல கேள்விகள் என்னிடம் இருந்தாலும், அவருடைய நேரத்தைத் திருட விரும்பாததால் புறப்பட வேண்டியிருந்தது. விகடன் சென்று ஒரு புத்தகம் வாங்கிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப முடிவு செய்தேன். அங்கு எழுத்தாளர் முகில் அவருடைய நண்பர்களுடன் இருந்தார். எப்பொழுதும் போல "நான் கிருஷ்ண பிரபு. என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை..." என்று ஆரம்பித்தேன்.

"தெரியும் சொல்லுங்க..."

"உங்களுடைய அபுனைவு எதுவும் நான் வாசித்ததில்லை. எங்கிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?".

"எல்லாரையும் போல கவிதையில் இருந்துதான்..."

"கிழக்கு மொட்டை மாடியில் எனக்காகக் கவிதை வாசிக்க முடியுமா?" என்றேன்.

"என்னோட கவிதை இளையராஜாவோட சிம்பொனி மாதிரி. வெளியில் எங்கும் கிடைக்காது. காப்புரிமையில் இருக்கு. நானும் அதை வெளியில் விடக்கூடாது என்றிருக்கிறேன். கிழக்கு வாங்க விரிவா பேசலாம்" என்றார்.

"கவிதை பாடு குயிலே குயிலே இது வசந்தமே..." என்று வரும் கோடையில் முகிலுடன் மொட்டைமாடியில் வசன நடையில் கவிதையைப் பற்றி பேச வேண்டும். அந்த நாள் தூரத்தில் இல்லை...


No comments: