Saturday, March 5, 2011

அவன்-அது=அவள் - பாலபாரதி

"நான் யார்?" - இந்தக் கேள்விக்கான பதில் அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்தது. ஒரே இடத்தில் உண்டு கழித்து ஊரை ஏமாற்றும் போலிகளுக்கோ, உச்சத்தைத் தொட்டு உலகப்புகழ் பெற்று தனிமை தேடும் வேஷதாரிகளுக்கோ மட்டும் இந்தப் புதிர்கேள்வி நிம்மதியைக் கெடுக்கவில்லை. தன்னை ஆணாகவும் சொல்லிக்கொள்ள முடியாமல், பெண்ணாகவும் சொல்லிக் கொள்ள முடியாமல் அல்லல்படும் அர்த்தநாரிகளைத் தான் பெரிதும் அலைக்கழிக்கிறது.

ஆணின் உடலில் பெண்ணின் உணர்வுகளை சுமப்பவர்கள் பூவுலகின் துருதுஷ்டசாலிகள். அவர்களின் உளவியல் சார்ந்த அகவலி சொல்லில் கடக்க முடியாத ஒன்று. இதிகாசத்திலிருந்தே அரவாணிகளின் இருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீஷ்மரை பழிவாங்கும் பொருட்டு பேடியாக சிகண்டி அவதரிக்கிறான், தேவ கன்னிகையின் காம உணர்வை நிராகரித்த காரணத்தினால் ஆண்மை நிரம்பிய அர்ஜுனன் ஒரு வருட காலம் நபும்சகனாக வாழ்கிறான், பஞ்சபாண்டவர்களைக் காக்கும்பொருட்டு மோகினியாக கிருஷ்ணன் மாறுகிறான், ஆயிரத்தொரு இரவுகளிலும் திருநங்கைகள் வருகிறார்கள், இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பொம்மைகளாக ஆட்டி வைத்த அலிகளைப் பற்றியும், மாலிக் கபூர் என்ற அலி அரசாண்டதைப் பற்றியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களுடைய வலி, சமூகச் சிக்கல், உளவியல் ரீதியான போராட்டத்தைத் தொட்ட படைப்பாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் - திருமூலர். (மேலும் படிக்க...)

வலியார் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை
அலியாகி ஆடியுண்பார் - நாலடியார்.

"அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது" என்றாள் ஓளவை.

திருநங்கைகள் வாழ்ந்து அல்லல் பட்டதற்கு இதுபோன்ற சங்க வரிகளே சாட்சி. திருமூலர் சொல்லவரும் விஷயத்தில் எதிர்மறை கருத்துக்கள் தோன்ற வழி இருந்தாலும், நாலடியாரின் வரிகள் ஆதிகாலத்திலிருந்தே அலிகள் வாழ நேர்ந்த அவல வாழ்க்கையை உணர்த்தும்படி உள்ளது. அதனைப் பளிங்குக் கண்ணாடிபோல தெளிவுபடுத்துகிறது ஓளவையின் வரிகள்.

கல்லூரி முதலாமாண்டு என்று நினைக்கிறேன். நா.காமராசன் அவர்களின் "காகிதப் பூக்கள்" பாடத் திட்டத்தில் இருந்தது. அலிகளின் அவல நிலையை எடுத்துரைத்த உருவகக் கவிதையின் சில வரிகள்...

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

ஊமை ஒரு பாடல் பாட, கையில்லாத ஒருவன் அதை எழுதிவைக்க, முழுக்குருடர் வாசிக்க நீங்கள் கேட்டதுண்டா. நாங்கள் ஊமையின் பாட்டானோம். முடவர்களால் எழுதப்பட்டு முழு குருடர்கள் வாசிக்கின்றனர் என்று செல்லக் கூடிய கவிதையின் இறுதிப் பகுதி கொடுக்கக்கூடிய படிமமும், அர்த்தமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.

தலைமீது பூவைப்போம்
தரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

நாற்றம் மிகுந்த பூக்களை தலையில் சூடினாலும் உயிரற்ற பிணத்திற்கு சமமானவர்கள் நாங்கள். கல்லறைக்கு மலர் தூவி வணங்குவதும் முறைதானே? நாங்களெல்லாம் உயிர் சுமக்கும் கல்லறைகள். தாய்மை மனம் வீசுவதால் முலைப் பால் கொடுப்பவர்கள் முல்லைப்பூ போன்றவர்கள். குழந்தையில்லா ஏக்கத்தில் வாழும் பெண்கள் கூட தாழம்பூ போன்றவர்கள். அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கும். வார்த்தை ஜாலம் செய்யக் கூடிய நாங்களோ வாசனையில்லாத காகிதப் பூக்களைப் போன்றவர்கள் என்று கவிதை முடியும்.

பள்ளியில் படிக்கும்பொழுது சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியுடன் சேர்த்து "மஞ்சள், வெள்ளை, ரோஸ்" என்று பல நிறங்களில் காகிதப் பூக்களை சேர்த்துக் கட்டி கொடியேற்றிய ஞாபகம் இருக்கிறது. சேர்த்துக் கட்டிய கொடியானது உச்சத்தைத் தொட்டு, சுருக்கம் தளர்ந்து பறக்கும் பொழுது, காகித மலர்களும் காற்றின் திசையில் பறக்கும். விழாக்கால வண்ண மலர்கள் போல இந்தியத் திருநங்கைகளும் குடும்ப அமைப்பில் கட்டுண்டு தான் கிடக்கிறார்கள். நீரின் அடியில் அழுத்தி பிடிக்கப்பட்ட ரப்பர் பந்து போல எவ்வளவு நாட்கள் தான் இறுக்கத்துடன் வாழ்வது. பிடி தளர்ந்து மேல்பரப்பை அடைவது போல சிலரால் மட்டுமே சுதந்திரமாக வெளிவர முடிகிறது.

வீட்டை விட்டு வெளியேறி, ஆண் என்பதற்கு அடையாளமாக உள்ள உறுப்பை அறுத்தெறிந்துவிட்டு முழுப்பெண்ணாக மாறுகிறார்கள். சுதந்திரப் பறவைகளாக வாழ நினைக்கும் திருநங்கைகள் வாழும் இடம் எப்படிப்பட்டது? அவர்களுடைய உறவுமுறையாக யாரெல்லாம் அமைகிறார்கள்? அபாயகரமான அறுவைச் சிகிச்சையின் வழிமுறை என்ன? அவர்களுடைய கலாச்சாரம் என்ன? என்பது போன்ற நுண்ணிய சித்தரிப்புகளைக் கொண்டு தமிழில் வெளிவந்த நாவல்கள் இரண்டு. ஆனந்த விகடனில் சு சமுத்திரம் எழுதி தொடராக வெளிவந்த வாடாமல்லி மற்றும் நண்பர் பாலபாரதி எழுதி வெளிவந்த அவன்-அது=அவள். திருநங்கைகளின் யதார்த்த சிக்கல்களை அவர்களுடைய துயரங்களை ஆவணமாக்கிய விதத்தில் இரண்டுமே முக்கியமான நாவல்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயவரலாறும் இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான புனைவல்லாத முயற்சி.

வாடாமல்லியின் 'சுயம்பு' மேகலையாக மாறும்வரை பிரம்மிப்பு அகலாது. இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருக்கும். திடீர் பணக்காரி, இரண்டு போலீஸ் சண்டை, ஒரு புரட்சி, அரவாணிகள் எழுச்சி, அதைத் தொடர்ந்த போராட்டம் என்று மேகலையை தலைவியாக்கி முடித்திருப்பார். "யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?" என்று யோசிக்கும்படி இருக்கும். அவன்-அது=அவள் - கோபி, கோமதியாக மாறி எந்த புரட்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் அரவாணிகளின் யதார்த்தக் குறியீடாக நாவல் முழுவதும் வளர்ந்து வருவாள். கூவாகத்தில் வன்கலவி செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் கோபியை தனம் தத்தெடுப்பது முதல், மும்பைக்கு சென்று பிச்சை கேட்டு வாழ்வது, சேலாவாக தத்தெடுக்கப்பட்டு நிர்வாணம்(உறுப்பு நீக்கம்) செய்வது, பத்திரிகையாளரின் மீது காதல் ஏற்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதுவரை இலகுவான மொழியியில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் தன்மை வெளிப்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து வெளியில் வந்தவர்கள், குடும்பமாக வாழ ஆசைப்படுவதும், ஆண் துணைக்காக ஏங்குவதும், உண்மையான கணவன் அமைவது திருநங்கைகளுக்கு சாத்தியமில்லை என்பதையும் நுட்பமாக சொல்லியிருக்கிறார்.

அழுத்தமான சமூகப் பிரச்சனையின் துவக்க முயற்சி எனும் வகையில் நாவலில் சில குறைகள் இல்லாமல் இல்லை. பாலபாரதி முன்னுரையில் சொல்லியது போல, இந்தப் படைப்புகள் அரவாணிகள் குறித்த மரியாதையை இலக்கியச் சூழலிலும், சினிமா சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தினால் அதைவிட பெரிய சந்தோசம் படைப்பாளிகளான இவர்களுக்கு இருக்கப்போவதில்லை. மாறாக இலக்கியத்தின் உச்சப் படைப்பாக இவைகள் கொண்டாடப்படுவதால் பாலபாரதி போன்ற படைப்பாளிகள் உச்சிக் குளிரப் போவதில்லை. திருநங்கைகள் குறித்த சரியான அர்த்தத்தை தெரிந்தவர்களாக நாம் எப்போதும் இருந்ததில்லை. கூவாகத் திருவிழாவைக் கூட செக்ஸ் திருவிழாவாகத்தானே பார்க்கிறோம். மையத்தை உடைக்கும் விதமாக சந்தோஷ் சிவன் இயக்கி தேசிய விருது பெற்ற 'நவரசா' போன்ற திரைப்படம் அரவாணிகள் குறித்த யதார்த்தக் கருத்தை முன்வைக்கின்றன. என்றாலும் தேடித் பார்ப்பவர்கள் இருந்தால் தானே?

திருநங்கைகளான சக்தி பாஸ்கர், நர்த்தகி நடராஜன் ஆகியோரை ஸ்வீகாரம் எடுத்துள்ள நடிகை, பேச்சாளர், எழுத்தாளர் ரேவதி சங்கர் நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம். பிரம்மச்சரியத்தை பேசுபவர் கலவியில் ஈடுபடுவதையோ, யாராவது சாமியார் மாதிரி இமயமலை செல்வதையோ, அவர் எதில் பல் துலக்குகிறார்? அதை எங்கு கொப்பளிக்கிறார்? சாப்பிடுவது என்ன? கக்காவை எங்கே கழிக்கிறார்? எந்த பாறையின் இடுக்கில் தவம் செய்கிறார்? என்பதையும், அரைகுறை ஆடையுடன் பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சீமாட்டி பற்றியோ, விளையாட்டு வீரனின் சாகசத்தைப் பற்றியோ, செய்தியாக வெளியிட்டு முன்பக்கத்தை அலங்கரிக்கும் நாளேடுகளும், இதழ்களும், மீடியாக்களும் ரேவதி சங்கரனின் இது போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"ஒம்போது, பொட்டை, 50-50, உஸ்ஸு, அலி, கொக்கரக்கோ" - போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அடுத்தவர் மனதினைக் காயப்படுத்தும் எனில் அவற்றின் பயன்பாடு தேவையா? என்பதையும் யோசிக்கலாமே.

தொடர்புடைய பதிவுகள்:

1. பாலபாரதியைப் பற்றிய விவரங்கள்...
2. பாலபாரதியின் இணையத்தளம்...
3. அவன் – அது = அவள் :: பாஸ்டன் பாலா பக்கம்

வெளியீடு: தோழமை பதிப்பகம்,
முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,
செல்பேசி: 94443 02967,
விலை: ரூ. 120.

5 comments:

priyamudanprabu said...

நானும் படிச்சிருக்கேன் , அருமை

குணாளன் said...

அருமையான தகவல் ! வாழ்க !

IKrishs said...

Revathi "sanakaran" yendre than peyarai avar kurippiduvathu valakkam.Revathy shankar yengira peyaril innoru nadigai undu!

IKrishs said...

Vaada malli puthagamaaga kidaikkirathaa? Details pls.

Unknown said...

@கிருஷ்குமார்

'வாடமல்லி'யும் தோழமையில் கிடைக்கிறது....

வெளியீடு: தோழமை பதிப்பகம்,
முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,
செல்பேசி: 94443 02967,
விலை: ரூ. 120.

சில வருடங்களுக்கு முன்பு வாங்கினேன். முயற்சி செய்து பாருங்கள்.