Tuesday, December 29, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

ஆசிரியர்: நிலாரசிகன்
வெளியீடு: திரிசக்தி
விலை: ரூ.70

நிலாரசிகனைப் பற்றி தமிழில் பதிவெழுதும் நண்பர்களுக்கும், தமிழ் இணையப் பயனாளர்களுக்கும் அறிமுகம் தேவையில்லை. 2004ல் இருந்து தனது கற்பனைகளுக்கு கவிதை வடிவில் வலைப்பூக்களில் வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவையாவும் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்து அவருக்கான கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை.

கல்லூரி நாட்களில் வெளிவந்தது இவருடைய முதல்
கவிதைத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சிறுகதை என்று வரும்பொழுது 17 சிறுகதைகள் கொண்ட "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" தான் இவரது முதல் தொகுதி.

இதிலுள்ள கதைகள் யாவும் கடந்த இரண்டாண்டுகளில் எழுதப்பட்டு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் கண்டவை. இவரது சிறுகதைகள் யாவும் குழந்தைகளின் வெகுளித் தனமான உலகத்தையும், வெள்ளந்தியான கிராம மக்களையும், பெண்களின் அக எண்ணங்களையும் அதனால் உண்டாகும் புறச்சிக்கல்களையும் சித்தரிப்பவையாக இருக்கின்றன.

கீழுள்ள கதைகள் யாவும் அதற்கு உதாரணம்...

1. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
2.
வேட்கையின் நிறங்கள்
3.
அப்பா சொன்ன நரிக்கதை
4. வால் பாண்டி சரித்திரம்

புத்தகத்திலுள்ள மேலும் சில கதைகளைப் படிக்க அவருடைய இணையைப் பக்கங்களுக்குச் செல்லவும்: www.nilaraseeganonline.com

கதையைக் கச்சிதமாக ஆரம்பித்து கச்சிதமாக முடிக்கிறார். இடையில் வர்ணிப்பிலும், கொண்டு செல்லும் விதத்திலும் தான் சில கதைகளில் தொய்வு காணப்படுகிறது. வார்த்தைப் பிரயோகத்திலும், வர்ணிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி கதைகளைக் கொண்டு சென்றால் இன்னும் நல்ல படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் தீவிரமாக இயங்கி வரும் இளம் படைப்பாளியான இவர் தனது பக்குவமான உழைப்பின் மூலம் அவருக்கான இடத்தை படைப்பிலக்கியத்தில் எட்டிப்பிடிப்பார் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு:
1. புத்தகத்தில் இவர் எழுதிய
என்னுரையில் அவருடைய சகோதரிக்கும், கதைகளை பிரசுரித்த ஒவ்வொரு இதழின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். புத்தகத்தில் அவைகள் விடுபட்டு இருக்கின்றன. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார்.
2.
பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார். அந்த வகையில் இவர் பரவலான கவனத்தைப் பெறுவது மகிழ்ச்சியே.

Thursday, December 17, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்

ஆசிரியர்: பாரதி மணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூபாய் 100
/-

மேடை நடிகராகவும், திரைப்
படக் கலைஞராகவும் நமக்கு நன்கு அறிமுகமான பாரதி மணி, நட்சத்திரப் பிரமுகர்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி உயிர்மை, அமுதசுரபி, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது இலக்கிய நண்பர்கள் அறிந்ததே.

பல இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை மணியிடமே பரிசாக வாங்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் அவருடைய கட்டுரைகளில் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை 'நிகம்போத் காட்' பற்றியது. நான் இதுவரை வாசித்த அனுபவக் கட்டுரைகளில் என்னை மிகவும் வசீகரித்தக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

'செம்மீனும் தேசீய விருதுகளும்!' - இந்திய அரசால் வழங்கப்படும் சினிமாவிற்கான தேசிய விருது மலையாளப் படமான செம்மீனுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை. நீண்ட நாட்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குனர் TV சந்திரனின் நேர்முகத்தை குமுதம் தீராநதியில் படிக்க நேர்ந்தது. அதில் "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டில், சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத நடுவர்களால், சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..." என்று குறிப்பிட்டிருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது. (கட்டுரையின் முடிவில் அதற்க்கான தொடுப்பை படிப்பதற்குக் கொடுத்திருக்கிறேன்.)

'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற கட்டுரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான தொடர்புகளையும் அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்தும் விதத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறியிருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது.

'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' - கட்டுரையில் நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் பற்றி எழுதிய ரசமான தகவல்கள் எங்கும் படிக்கக் கிடைக்காதது.

'சுப்புடு சில நினைவுகள்' - இசைவிமர்சகராக மட்டுமே பரிச்சயமான சுப்புடுவை அரசாங்க குமாஸ்தாவாக, ஓய்வுபெற்ற பிறகு மணியின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்கடத்தில் ஆழ்த்தியது, அவரது வேலைகளில் நாணயமற்று நடந்து கொண்டது என சுப்புடுவின் வேறுபட்ட முகங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கர்னாடக சங்கீத கச்சேரிக்கு சென்னை வரும் போது சுப்புடுவுடன் ஒரே அறையை பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பகிந்துகொள்கிறார்.

'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்ற கட்டுரையில் பிரதமர் நேருவுடனான நிகழ்வுகளையும், 'அன்னை தெரஸா' - கட்டுரையில் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அன்னை தெரசாவுடன் பயணம் செய்ததையும் அவரிடமிருந்து பைபிள் புத்தகம் மற்றும் ஜெபமாலையை அன்புப் பரிசாகப் பெற்றதை இன்று வரை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதை எழுதியிருப்பார்.

()

நீல. பத்மநாபன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், வாஸந்தி, ஜெய மோகன், அம்ஷன் குமார், லால்குடி G ஜெயராமன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், டெல்லி கணேஷ், தியோடார் பாஸ்கர், சுகா போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியதும் புத்தகத்தில் இருக்கிறது.

அவருடன் நேரில் உரையாடியபோது நண்பர்கள் எல்லோரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும், தனக்கு வந்த இரங்கல் கடிதங்களை உயிருடன் இருக்கும் போதே படித்து மகிழ்வது போல இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.

அவற்றையெல்லாம் சொன்னால் டெல்லியில் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடமான திகார் ஜெயிலில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அதனால் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று கேட்கும் அவருடைய வாசகர்களில் நானும் ஒருவன்.

மணியின் தில்லி வாழ்க்கை, அதில் கிடைத்த பரந்துபட்ட அனுபவங்கள் என கட்டுரைகள் யாவும் தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் வரலாறையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களையும ஞாபகப்படுத்துவதே நூலின் சிறப்பாகப்படுகிறது.

புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கின்றது. அவற்றில் சில உயிர்மையில் படிக்கக் கிடைக்கிறது.

1. பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
2. அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
3. செம்மீனும் தேசீய விருதுகளும்!
4. காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனயர்களும்
5. ஒரு நீண்ட பயணம்
6. சிங் இஸ் கிங்

எல்லாவற்றிற்கும் மேல் பழகுவதற்கு இனிமையான நண்பர். எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர். அவருடைய கட்டுரைகள் பிடித்திருந்தால் 94440 03332- என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுவார். அவருடனான எனது நேரடி அனுபவத்தை திட்டிவாசலில் (மணியுடன் சில மணித்துளிகள்) எழுதியிருக்கிறேன்.

அவருடைய புத்தக வாசிப்பு எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திருந்தாலும், அவருடனான உரையாடல் மேலும் பல ரசமான அனுபவங்களைத் தந்தது. நீங்கள் நெருங்கினால் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Thursday, November 26, 2009

கரைந்த நிழல்கள்

ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
விலை: 60 ரூபாய்

இரவு நேரத்தில் எரியக் கூடிய நல்லெண்ணெய் விளக்குகளும், மண்ணெண்ணெய் விளக்குகளும் எங்களுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த காலமது. மாலை ஆரம்பித்தால் பெரியவர்களிடம் கதை கேட்பது, கண்ணா மூச்சு, ராஜா-ராணி ஆட்டம் விளையாடுவது என்று நாட்கள் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருக்கும். ரொம்ப சிறிய வட்டத்தில் எங்களுடைய வாழ்க்கை அழகாக, ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் 'ச்சே' இப்படி ஆயிடுச்சே என்று ஒருமுறையாவது சொல்லி சலித்திருப்போமா என்று தெரியவில்லை.

மெல்ல மின்சாரம் எங்கள் ஊருக்குள் தலை காட்டியது. பிறகு 'ரேடியோ, டேப் ரெக்காடர், டிவி' என்று பொழுது போக்கு அம்சங்கள் எங்களுடைய வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்டது. ஆரம்ப நாட்களில் வெள்ளிக் கிழமை தோறும் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' நிழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். 'மகா பாரதம், தெனாலிராமன் கதைகள், ஜுனூன், கானூன்' போன்ற மெகா தொடர்களுக்காக ஆளாய்ப் பறப்போம். ஒருசில நாட்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கரண்ட் கட்டாகிவிடும். அப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து 'ச்சே இப்படி ஆயிடுச்சேன்னு' ஆயாசப்படுவோம்.

அந்த நாட்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் டிவியில் சினிமா போடுவார்கள். அதுவும் பழைய படமாக இருக்கும். எனவே ஊரின் அருகிலுள்ள சினிமா அரங்குகளுக்கு (டென்ட் கொட்டா) புதுப்படம் வந்தால் தவறாமல் சென்று பார்ப்பது வாடிக்கை. அப்படிப் பார்த்த படங்களில் 'அதிசயப் பிறவி', 'என்றும் அன்புடன்' போன்ற படங்கள் எங்கோ ஞாபகத்தில் வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'புளி சாதம்' கட்டிக் கொண்டு போய் ஒரே நாளில் இரண்டு சினிமாக்கள் கூட பார்த்திருக்கிறோம். என்னோட சித்தப்பா மகள் (அக்கா) 'சர்மிளா' தான் எங்களுக்கு வழிகாட்டி.

இவ்வளவு மெனக்கெட்டு வெறித்தனமாக சினிமாவைப் பார்த்தாலும் அதில் என்னென்ன முன்வேலைகள் பின்வேலைகள் இருக்கிறதென்று ஒரு நாளும் யோசித்ததில்லை. கிசு கிசுவைத் தவிர்த்த சினிமா சார்ந்த ஏகப்பட்ட விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது அல்லது தெரிந்து கொள்ளாமலே விட்டு விடுகிறோம். அவுட்டோர், இண்டோர் ஷூட்டிங் நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள், படத் தயாரிப்பாளரின் மன அழுத்தம், ஸ்டுடியோ நிர்வாகம், விநியோகம், விளம்பரம், இன்னபிற சினிமா விஷயங்களும் அதற்கான தீர்வு காண போராடும் மனிதர்களின் உழைப்பும் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. இந்த முகம் தெரியாத, ஆனால் சினிமாவின் முக்கிய நபர்கள் வாழும் நாவல் தான் கரைந்த நிழல்கள்.

சினிமா என்னும் அதிசய ஊடகத்தின் மாய வலையினுள் உருக்குலைந்து போன மனிதர்களின் ஏமாற்றம், இழப்பு, வலி, இயலாமை, தோல்வி என்று நம்மால் சிறிதும் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையையும், பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல். படத் தயாரிப்பாளர் , புரொடக்ஷன் மானேஜர், டைரக்டர், காமிராமேன், நடிகைகள், துணை நடிகைகள், ஸ்டூடியோ கம்பனிக்கு கார் ஓட்டுபவர்கள் என பலரது வாழ்க்கையையும் ஆசிரியர் தனது இயல்பான நடையில் வாழச்செய்கிறார்.

இந்த நாவலைப் படிக்கும் போது, எனக்குத் தெரிந்த பலரும் நினைவில் வந்து சென்றார்கள். அவர்களில் 'கோட்டி மாமா' முக்கியமானவர். திரைக்குப் பின்னால் உள்ளவர்களின் வலியைத் தெரிந்து கொள்ளும் சந்தர்பமும் அவரின் மூலமாகத் தான் வந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா மகள் 'பார்வதி', என்னுடைய அம்மாவின் பெரியப்பா மகன் 'ருத்ர கோட்டி'யை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டாள். அந்த காலத்தில் எங்களுடைய குடும்பத்தில் சினிமா எடுக்கறேன்னு திரிஞ்ச ஆளு கோட்டி மாமா. அவருக்கு பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிச்சாங்க... "அவரை மனசார காதலிக்கிறேன்... கட்டினா அவரைத் தான் கட்டுவேன்" என்று பிடிவாதமாக இருந்து அவரையே கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.

சாதாரண டூயட் பாடினாலும் அந்த நடிகர் கையில மைக் இருக்கும். அவரை வைத்துப் படம் எடுக்கறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மற்றபடி இயக்குனர் யாரு? இசையமைப்பாளர் யாரு? -ன்னு கேக்குற பக்குவம் எல்லாம் அந்த காலத்தில் எனக்கு இல்லை. படத்தின் பெயர் மட்டும் 'மூன்றாம் மனிதர்கள்' என்று சொல்லியதாக ஞாபகம். சில நேரங்களில் அவர் கையிலுள்ள ஆல்பத்தைக் கண்பித்து இந்த பொண்ணுதான் எங்க படத்தோட நடிகைன்னு சொல்லுவாரு. பார்வதி அத்தையின் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணத்தை சீதனமா கொடுத்தாங்க. அதைக் கூட அவர் சினிமாவுலதான் போட்டாரு. இவரைப் பார்ப்பதற்காக அம்பாசடர் காரில் ஜிப்பா போட்ட ஒருத்தர் வருவாரு. அவரு கூட சேர்ந்துதான் சினிமா எடுக்கறதா பேசிக்கிட்டாங்க.

லோகேஷனுக்காக அந்த ஊருக்குப் போறேன், இந்த ஊருக்குப் போறேன்னு சந்தோஷமா சுத்திட்டு இருந்தாரு. இடையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் படம் நின்னு போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அவருடைய முகத்துல சந்தோசம் வத்தி போயிடுச்சி. கல்யாண வீட்டிற்கு வந்தாலும் எழவு வீட்டிற்கு வருவது போல் தான் வருவார். இப்பஇப்ப கல்யாண வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. ஊரில் கூட யாரிடமும் சகஜமாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த பலரும் இந்த மாதிரி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் "இந்த உம்மத்தனைக் கட்டிக்கிட்டேனே... இன்னும் எவ்வளவு நாள் நான் போராடனமோ? இத்யாதி இத்யாதி..." என்று என்னுடைய அத்தையின் வார்த்தைகள் காற்றில் பறந்து வந்து என்னுடைய செவிப் பறைகளை நனைத்த நாட்கள் ஞாபகம் வருகிறது.

விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ?

Friday, November 20, 2009

தோழர் நாவல்: தனுஷ்கோடி ராமசாமி

ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 130 ரூபாய்

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் நடைபெற்ற சென்னை சிறுகதைப் பட்டறையில் முரளிகுமாரை (அன்பே சிவம்) சந்தித்த போது இந்தப் புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்தான். அவன் மீது அன்பு செலுத்தும் ஒருவர் அவனுக்குக் கொடுத்த புத்தகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்.

அன்னாரின் மறைவிற்குப் பிறகு 'எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி டிரஸ்ட்' என்னும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது. அவரின் மகன் 'டாக்டர் அறம்' நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று சிறந்த சிறுகதை படைப்போருக்கு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ மாணவியருக்கு படைப்பிலக்கியத்தை பயிற்றுவித்தளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நாவலில் பிரதானப் பாத்திரமாக வரும் பழநிமுருகன் ஆசிரியராக நென்மேனிக்கு அருகில் வேலை செய்கிறவன். ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டவன். நேரம் கிடைக்கும் போது எந்த விதத்திலும் முன்னேறாத தனது உறவினர்கள் வாழும் கலிங்கல் மேட்டுப்பட்டிக்கு சென்று வருவது வழக்கம். ஊரின் மீதுள்ள பற்றுதலால் பழநி முருகன் என்ற தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான்.

ஒரு முறை
தனது சொந்த ஊருக்குச் செல்லும் போது பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். மாலை மங்கி இருட்டும் வேளையில் தனது ஊரைச் சுற்றிக் காட்டி பாதுகாப்பாக அவளிடைய இருப்பிடத்தில் சேர்ப்பிக்கிறான். இருவருக்கும் நட்பு மலர்ந்து தொடர்ந்து சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஷபின்னாவின் மூலம் அவளுடைய குழுவினருக்கும் அறிமுகமாகிறான் பழநி முருகன். அவர்களுடன் பிரியமுடன் பழகுகிறான். குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க இவன் பேருதவியாக இருக்கிறான். மேலும் இந்தியாவைப் பற்றியும் அவர்களுடன் கம்யூனிச சித்தாந்தத்தில் விவாதம் செய்கிறான். அவனுடைய நேர்மையான விவாதம் காயப்படுத்தும் படியாக இருந்தாலும் வெளிநாட்டு நண்பர்களைக் கவருகிறது.

எல்லோருக்கும் பழநி முருகனைப் பிடித்திருந்தாலும் ஷபீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துவிடுகிறது. பழநி முருகனுக்கும் பீனாவின் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது. சேவை செய்ய வந்தவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டிய நேரம் வருகிறது. அப்பொழுது பீனாவை இவன் எப்படி வழியனுப்புகிறான் என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

'தோழர்' நாவல் 1980-களில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் முகவுரையில் தமிழ் செல்வன் எழுதியுள்ள முன்னுறையிலிருந்து பார்க்கும் போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்புக் காண எழுத்தாளர் மாதவராஜின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. மாதவராஜ் தனது பதிவில் தனுஷ்கோடி ஐயாவைப் பற்றி எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்.

மதுமிதா அவர்களின் இந்தப் பதிவும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மறைவு பதிவும் ஐயாவைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.

Book Name: Thozhar
Author: Dhanushkodi Ramasamy
Book price: Rs. 130
Publishers: Bharathi Puthakalayam

Friday, October 30, 2009

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்னட்டை வாசகம் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்தப் புத்தகம். ஆனால் தலைப்பில் 'ஓர் உலகம்' என்று தானே இருந்திருக்க வேண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிழையாக இருக்குமோ என்று குழம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுரையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மலையடிவாரத்தின் இயற்கை சூழலில், ஒரு கிராமத்துப் பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு, ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் லாரியின் இயக்கத்தோடு நமக்கு அறிமுகமாகின்றனர்.

பட்டினத்து ஆசாமியான ஹென்றி அருகிலுள்ள சிற்றூரைத் தேடிக்கொண்டு செல்கிறான். இயற்கையின் அழகை அணு அணுவாக ரசித்தவாறே நடந்து செல்கிறான். லாரி வருவதைப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு சாலையோரமாக விலகி நிற்கிறான். ஆனால் 'க்ளீனர் பாண்டு' வண்டியை நிறுத்தச் சொல்லி ஹென்றியை ஏற்றிக்கொள்கிறான். பேச்சினூடே ஹென்றி செல்ல வேண்டிய கிராமம் தேவராஜனின் ஊர் என்பது தெரியவருகிறது. அதிலிருந்தே தேவராஜனுக்கும், ஹென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஹென்றியை அழைத்துச்சென்று தன்னுடைய கிராம வீட்டில் தங்க வைக்கிறான் தேவராஜன். பின்னர் ஹென்றியின் வளர்ப்புத் தந்தையும், தாயும் பற்றிய இறந்த காலத்தில் பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் நோக்கம் நிறைவேறியதா என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த நாவலைப் பற்றிய அவருடைய பார்வையை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் - இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ' தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி - மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்: ஜெயகாந்தனின் நேர்முகம்...

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், போஸ்ட் ஐயர், மண்ணாங்கட்டி, துரைக்கண்ணுவின் குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவி நவநீதம், டீக்கடை ஆசாமி, பைத்தியக்காரி என்று அனைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்களைக் கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் புத்தகமெங்கும் வியாபித்திருப்பது வெகுளியான கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கை. கிராமத்து வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கக் கூடிய கதை. புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

Book Details:
Oru manithan oru veedu oru ulagam,
jayaganthan published by Kalachuvadu Pathipagam.

Wednesday, October 14, 2009

கணிதத்தின் கதை

ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்

சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.

எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.

பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.

அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.

அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!

புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா

தொலைபேசி: (9144) 24332424, 24332924

நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com

குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.

Saturday, October 3, 2009

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

"செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற 'சென்னைச் சிறுகதைப் பட்டறை'யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் "எழுத்து" இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது - 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் "தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

"வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா" போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.

இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை அவருடைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: முன்னோடியின் கண்கள்

Book Details: Tamil sirukathai pirakkirathu, C.S.Chellappa, Rs:125
Book Available @ Kalachuvadu pathipagam, Old no: 130, New no: 257, Triplicane high road, Chennai - 600 005. Ph:- 91-44-2844 1672, 4215 5972