Wednesday, June 18, 2014

அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ

“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? 

அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன?

மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம்.

இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!”

வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?”

“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள்.

“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள்.

“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள்.

“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள்.

“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள்.

அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார்.

“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள்.

கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா?

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும்.

புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’.

“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன்.

“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார்.

“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார்.

உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள்.

ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான்.

சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள்.

ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள்.

ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள்.

“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது.

ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான்.

கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை.

(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135)

சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன.

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன்.

Thursday, May 22, 2014

என் பெயர் சிவப்பு – ஓரான் பாமுக்


“நான் இப்போது ஒரு பிரேதம் மட்டும்தான். கிணற்றின் ஆழத்தில் கிடக்கும் ஓர் உடல். என் கடைசி மூச்சை வெகு நேரத்திற்கு முன்பே நான் விட்டிருந்தாலும் என் இதயம் துடிப்பதை நிருத்திவிட்டிருந்தாலும் எனக்கு நிகழ்ந்திருப்பது என்னவென்று அந்தக் கொலைகார இழிஞனைத் தவிர வேறு யாருக்குமே தெரியாது.” – இப்படித் தான் ஆரம்பிக்கிறது ‘என் பெயர் சிவப்பு’. (தமிழில்: ஜி குப்புசாமி, பக்கம்: 9) 

“இந்த நாவல நீ அவசியம் வாசிக்கனும்டா” என்று நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகனுக்குப் பரிந்துரை செய்திருந்தேன். முதல் அத்தியாயத்தின் (மேலுள்ள) ஆரம்ப வர்ணனைகளைப் படித்தவன், புத்தகத்தை மூடி வைத்துவிட்டு உடனே என்னைத் தொடர்பு கொண்டு பேசினான். நான்கூட “என்னவோ? ஏதோ?” என்றுதான் எடுத்துப் பேசினேன்.

“மாமா... நீங்க காக்க-காக்க – சூர்யா நடிச்ச – கெளதம் வாசுதேவ் மேனனுடைய படத்தைப் பார்த்திருக்குறீங்களா?” என்றான்.

“எதுக்குக் கேக்குற?” என்றேன்.

“இல்ல... என் பெயர் சிகப்பு படிச்சிட்டு இருக்குறேன்... அதான் கேக்குறேன்...” என்றான்.

“மொழங்காலுக்கும் மூக்கு நுனிக்கும் எதுக்குடா முடிச்சுப் போடுற?” என்றேன்.

“இல்ல மாமா... அதுல சூர்யாவ பிஸ்டல்ல சூட் பண்ணி ஆத்தோரத்துல தூக்கிப் போட்டுடுவாங்க. ஒரு பொனம் பேசுறா மாதிரிதான் அந்தப் படம் ஆரம்பிக்கும். கெளதம் வாசுதேவ்மேனன் – என் பெயர் செகப்பு நாவல்ல இருந்து அந்த மொதல் காட்சிய மட்டும் சுட்டு இருப்பாரா?” என்றான். உண்மையிலேயே எனக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. படத்தின் முதல் சீனைக் கண்டுகளித்து, நாவலின் ஆரம்ப அத்தியாயத்தையும் வாசித்த நண்பர்கள் தான் இதற்கான பதிலைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். (மற்றபடி படத்தின் கதைக்கும், இந்த நாவலுக்கும் துளிக் கூட சமந்தமில்லை.)

இந்நாவல் ஒருவனது கொலைக்கான பின்னணியைத் துப்பறியும் கதைதானென்றாலும், அரசு, அரசியல் என்ற இணைத் தண்டவாளங்களின் மீது பயணிக்கும் ஓட்டமான் சாம்ராஜ்ஜிய அரசவை நுண்ணோவியர்களின் வாழ்வானது தடம்புரளும் ஒரு நுட்பமான புள்ளியை - மரபான தொன்மக் கலாச்சாரத்தின் போக்கில், மேற்கத்திய நவீன பரீச்சார்த்த முயற்சிகள் உட்புகும்போது பழைமைவாதிகளுக்கு உண்டாகும் மனச்சஞ்சலங்களை – யதார்த்த மனிதர்களுடன் சாயலுடன் நாவலை நகர்த்திச் செல்கிறார் ஓரான் பாமுக்.

துருக்கிய மொழியில் “Benim Adim Kirmizhi” 1998 ஆம் ஆண்டு வெளிவந்த இந்நாவல் - 2001-ஆம் ஆண்டு Erdag M. Goknar என்பவரால் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. பாமுக்கின் இதர படைப்புகள் முன்னமே ஆங்கிலத்தில் வெளி வந்திருந்தாலும், “My Name Is Red” தான் 2006-ல் அவருக்கான நோபல் பரிசு கிடைப்பதற்குக் காரணமாக அமைந்திருக்கிறது. இத்தனைக்கும் “மை நேம் இஸ் ரெட்” பாமுக்கின் மற்ற படைபுகளிலிருந்து ஒருபடி கீழே வைத்துத்தான் கறாரான இலக்கியவாதிகள் பார்க்கப்படுகிறது என்கிறார்கள். (இதிலிருந்தே இது சாமானிய வாசகர்களின் பிரதி என்பதைச் சொல்லித் தெரியவேண்டியதில்லையே.!)

இஸ்தான்புல்லைத் தலைநகரமாகக் கொண்ட ஓட்டமான் சாம்ராஜ்ஜியத்தை, சுல்தான் மூன்றாவது மூர்த் 1574 முதல் 1595 ஆண்டு வரை ஆண்டுவருகிறார். நுண்ணோவியங்களிலும் ஓவியச்சுவடிகளிலும் பெரும் ஆர்வம் கொண்டிருந்த ஓட்டமான் அரசர் இவரே என்கிறார்கள். “கைவண்ண மலர், திருவிழா மலர், வெற்றி மலர்” ஆகிய ஓவியச் சுவடிகள் என பல முயற்சிகளும் இஸ்தான்புல்லில் இவரது ஆசையின் பேரில் தான் உருவாகின. இந்நாவல் இவரது ஆட்சிக் காலத்தில் தான் நிகழ்கிறது.

என் பெயர் சிவப்பு - ஹிஜிரா ஆயிரமாவது ஆண்டைச் சிறப்பிக்கும் பொருட்டு நுண்ணோவிய மலர் ஒன்றை வெளியிடும் பொறுப்பை குருநாதர் ஒஸ்மானிடம் - மூன்றாவது மூர்த் ஒப்படைகிறார். வெனிஸ் மன்னருக்கு அந்த ஓலைச்சுவடியை இரகசியமாகப் பரிசளித்து நட்பினை ஏற்படுத்திக்கொள்ள விரும்புகிறார் மூர்த் |||. ஆகவே, வெனிஸ் ஓவிய பாணியும் நுண்ணோவிய மலரில் வெளிப்படுமாறு கேட்டுக்கொள்கிறார். சுல்தானின் விருப்பப்படி ஒஸ்மானும் - எனிஷ்டே எஃபெண்டியிடம் பொறுப்பினை ஒப்படைத்து, “வசீகரன் எஃபெண்டி, வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ்” ஆகிய ரகசிய உறுப்பினர்களைக் கொண்டு சுவடி வேலையைத் துரிதப்படுதுகிறார். ஓவிய வேலைகள் நடந்துகொண்டிருக்கும் பொழுது, மெருகோவியனான வசீகரன் எஃபெண்டியை – இதே குழுவில் வேலை செய்யும் மூன்று பேர்களில் ஒருவன் கொலை செய்து, பாழுங்கிணற்றில் பிரேதத்தை வீசி எறிகிறான். இந்தப் பாழுங்கிணற்றிலிருந்து தான் பிரேதம் பேசத் துவங்க நாவல் ஆரம்பிக்கிறது. கொலை நடக்கும் அதே நாளில் எனிஷ்டே எஃபெண்டியின் மருமகன் (கருப்பு எஃபெண்டி) – பனிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஊர் திரும்புகிறான். ஆகவே, கொலைப் பழி அவன் மீது சந்தேகத்துடன் திரும்புகிறது.

எனிஷ்டே எஃபெண்டியின் ஒரே மகளான ஹெகுரேவை – இளம் வயதில் கருப்பு காதலித்து, அவளை அடைய முடியாத விரக்தியில் தூரதேசம் செல்கிறான். ஹெகுரேவை குதிரை வீரன் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கிறார் அவளது தந்தை. போருக்குச் சென்ற ஹெகுரேவின் கணவன் – வீடு வந்து சேராததால், இரண்டு பிள்ளைகளுடன் (ஷெவ்கெத், ஓரான்) தந்தையின் வீட்டிற்கு வந்துவிடுகிறாள். ஹெகுரேவின் கணவன் இறந்துவிட்டதாக எல்லோரையும் நம்பச் செய்து, ஹெகுரேவை அடையத் துடிக்கிறான் அவளுடைய கொழுந்தன் ஹசன். அதற்காக எஸ்தர் என்ற சலவைத் தொழிலாளியைத் தூதனுப்புகிறான். கருப்பும் – கணவனை இழந்து நிற்கும் ஹெகுரேவிடம் தனது காதலைப் புதுப்பித்து, அவளுடன் சேர்ந்து வாழ விரும்புவதை எஸ்தர் மூலம் சொல்லி அனுப்புகிறான்.

கொலைக்கான பின்னணி ஒருபுறம் சென்று கொண்டிருக்க, ‘ஹெகுரே – கருப்பு – எஸ்தர் – ஹசன்’ என முக்கோண காதல் இடையோடுகிறது. ஹிஜிரா ஆயிரமாவது நுண்ணோவிய மலர் வெளியிடவேண்டிய தேதி நெருங்குவதால் சுவடியை முடிக்க வேண்டிய நெருக்குதல் குருநாதர் ஒஸ்மான், எனிஷ்டே எஃபெண்டி மற்றும் பிற நுண்ணோவியர்களுக்கு ஏற்படுகிறது. இந்த நேரத்தில் தான் எனிஷ்டே எஃபெண்டி கொலை செய்யப்பட்டு ஹெகுரே தனது இரண்டு ஆண் பிள்ளைகளுடன் தனிமரம் ஆகிறாள். எனவே, சிறுவயதில் காதலித்த கருப்பு எஃபெண்டியை மணந்துகொள்ள உள்ளுக்குள் விரும்புகிறாள் ஹெகுரே. நுண்ணோவியத்தை முடிக்க வேண்டிய பொறுப்பும், கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டிய பொறுப்பும் கருப்பின் தலையில் விழுகிறது. (கருப்பு வந்து சேர்ந்த அன்றுதான் கொலை நடந்துள்ளது.)

“கொலை – காதல் – துப்புத் துலக்குதல்” என்ற அளவோடு படைப்பானது இருக்குமாயின் சாதாரண ஜனரஞ்சக நாவலாகத் தான் இருந்திருக்கும். “துருக்கிய பின்புலத்து நுண்ணோவியர்களின் பின்புலம், அது சார்ந்த முன் தயாரிப்புகள், ஓவிய கலாச்சார மரபுகளுடன் – இஸ்லாமிய மதம் கொண்டுள்ள தாக்கம் – பழைமைவாதிகளுக்கும் மிதவாதிகளுக்குமான முரண்பாடு” என ஏராளமானவற்றை அள்ளித் தெளித்து படைப்பை வேறு தளத்திற்கு நகர்த்தியிருக்கிறார் பாமுக். அதுவே வாசக மனநிலையின் மேலான தன்மைக்கு இட்டுச் செல்கிறது.

பிரேதம் (வசீகரன் எஃபெண்டி), கருப்பு, கொலைகாரன், ஹெகுரே, குருநாதர் ஒஸ்மான், மாமா (எனிஷ்டே எஃபெண்டி), எஸ்தர், சிவப்பு, நாய், நாணயம், மரணம், குதிரை, ஓரான் (ஷேகுரேவின் இளைய மகன்), வண்ணத்துப்பூச்சி, நாரை, ஆலிவ், ஓவியங்களிலுள்ள உருவங்கள் என உயிருள்ள மனிதர்களும், உயிரற்ற பொருட்களும் கதாப்பாத்திரங்களாக தத்தமது நிலையைச் சொல்லிக்கொண்டு செல்லச் செல்ல நாவல் முழுப் பரிமாணம் கொள்கிறது. நவீனத்தை நோக்கி நகரும் மனிதர்களின் வேட்கையையும், அதற்கு முட்டுக்கட்டையாக விளங்கும் மனிதர்களின் ஞாய வாதங்களையும் ஒருசேர இதில் முன்வைக்கிறார். மதத்தைக் கட்டுடைக்கும் “மேற்கத்திய நவீன கலாச்சாரம், ஹெகுரேவின் மறுமணம்” என பல விஷயங்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

ஹதீஸ் (இறைவன் தனக்குச் சொல்லியதை நபிகள் நாயகம் உலகிற்குச் சொன்னது) மனித மேன்மைக்கான விஷயங்களைத் தான் சொல்கிறது. தண்ணீர் குடிப்பது முதல் சிறுநீர் கழிப்பது வரை பல விஷயங்கள் அதில் சொல்லப்பட்டுள்ளது. உருவ வழிபாடு கூடாது என்பதால், அதன் பொருட்டு ஓவியங்களும் இஸ்லாமிய மரபில் தடை செய்யப்பட்டது.

குர் ஆன் ஓவியர்களை விலக்கி வைத்திருந்ததினால் அவர்களை யாரும் மதித்ததில்லை. (பக்கம்: 526)

இறைவனின் படைப்புக்கு மாறான மேம்படுத்தப்பட்ட ஓவியமாகச் சுவடியை உருவாக்கினால் இறைவனின் தீர்ப்பு நாளில் பதில் சொல்லவேண்டி இருக்கும் என்பதுதான் பிரதிமையில் நவீனத்தை உட்புகுத்தும் நுண்ணோவியர்கள் மீது பழைமைவாத ஓவியர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டு. ஹதீஸை மீறி வாழக் கூடாது என்பதல்ல, அப்படி வாழ்ந்தால் கேடு மனிதர்களுக்குத் தான் என்கிறார் நபி. பெண்களின் மறுமணம் கூடாது என்று இறைதூதர் அருளிய ஹதீஸில் சொல்லப்படவில்லை. பெண்கள் தனியாக இருந்தால் அது கேடுகளுக்கு வழிவகுக்கும், ஆகவே ஓர் ஆண் – ஊனமுற்ற பெண்ணையும், ஆதரவற்ற பெண்ணையும், போரில் கணவனை இழந்த பெண்ணையும் தான் இரண்டாவதாக அல்லது அதற்கு மேலும் திருமணம் செய்யலாம் என்கிறார் நபி.

ஹதீஸிலிருந்து வழுவாமல் இருந்து, ஓவிய மரபைக் காக்கும் பொருட்டுத்தான் மெருகாளன் வசீகரன் எஃபிண்டி கொல்லப்படுகிறான். கொலைகாரனே அதனைப் பதிவும் செய்கிறான். மரபை மீறுவது குருநாதர் ஒஸ்மானுக்கும் ஏற்புடையதாக இருக்கவில்லை. ஓவியத்தின் பொருட்டு மரபைக் காக்க நினைக்கும் குருவும் சிஷ்யனும், ஆழ்மன காம எண்ணத்தில் மரபை மீறி யோசிக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சியின் விவரணையில் அவனது வன்புணர்ச்சி செய்ய நினைக்கும் ஓரினக் காம வேட்கை விருப்பங்கள் வெளிப்படுகிறது. குருநாதர் ஓஸ்மானும் ஓவியப் பட்டறையின் பதின்பருவத்து மாணவர்களைப் பார்த்து காம வேட்கை கொள்ளும் விவரணைகளும் ஆழ்மன எண்ணங்களாகப் பதிவாகி இருக்கிறது.

கொலைகாரன்: குருநாதர் ஒஸ்மானுக்கு செல்லம் ஒருவன் இருந்தான். எப்போதுமே அவன் கூடச்செல்வானென்றால் ஓவியக்கூடத்தில் வதந்திகளும் ரசக்குறைவான நகைச்சுவை வம்புகளும் பரவுமென்பதால் வாரத்தில் ஒவ்வொரு நாளுக்கும் ஒருவனென்று குருநாதர் குறிப்பிட்டு வைத்துவிட்டார். (பக்கம்: 159)

குருநாதர் ஒஸ்மான்: காலை நேரங்களில் என் வீட்டு வாசலில் அவன் வந்து நிற்கும்போது, வண்ணத்துப்பூச்சியைப் பார்த்தவுடன் என் உள்ளத்தில் எழுகின்ற கிளர்சியைப் போல இவனைப் பார்த்தல் உண்டாவதில்லை என்பதை சொல்லவேண்டி இருக்கிறது. (பக்கம்: 420)

வண்ணத்துப்பூச்சி: நான் பலாத்காரம் செய்யப்போகும் ஓர் அழகிய சிறுவனின் பிருஷ்டத்தை உள்ளங்கையால் ஏந்துவதைப் போல, நான் வரைந்ததையும் பற்ற வேண்டும் போல இருந்தது. (பக்கம்: 442)

குருநாதர் ஒஸ்மான்: அந்தக் காதலன் சின்னஞ்சிறு பாதங்களும் சருகு போன்று மெல்லிய சருமமும் பெண்ணைப் போன்ற சாயலும் கொண்டிருந்த ஒரு பலவீனமான இளைஞன். அவனது மெல்லிய முழங்கையைப் பார்கையில் அதனை முத்தமிட்டுவிட்டு உடனே செத்துப்போய் விடலாமா என்று தோன்றவைக்கிறது. (பக்கம்: 504)

கொலைகாரன்: சிறார்களோடு பாலுறவு கொள்கிற, கஞ்சா புகைக்கிற, நாடோடியாய் அலைகிற, எல்லாவித நெறிபிறழ்ந்த நடத்தைகளிலும் ஈடுபடுகின்ற ஒரு துறவியர் மரபின் கடைசிச் சீடன் நான் என்பதை வசீகரன் தெரிந்துகொண்டால், என் மீது அவனுக்கு பயம் வரும். (பக்கம்: 626)


நுண்ணோவியம் சார்ந்து மரபிலிருந்து வழுவாமல் நிற்க நினைக்கும் ‘கொலைகாரனும், மதகுருவும்’, காம இச்சை சார்ந்த எண்ணங்களில் மனச் சிதறல் கொள்கிறார்கள். ஒருபால் வேட்கை மட்டுமல்ல கருப்பின் இயற்கைக்கு முரணான காம வேட்கைக்கு முதலில் தயங்கும் ஹெகுரே – படுத்த படுக்கையாக ஊனப்பட்டிருக்கும் கருப்பின் வேட்கையைத் தீர்ந்து வைக்கிறாள்.

ஹெகுரே: பாரசீகக் கவிஞர்கள் இத்தனை நூற்றாண்டுகளாக எந்த காரணத்திற்காக இந்த ஆணின் சாதனத்தை ஓர் எழுதுகோலுக்கும் பெண்களான எங்கள் வாய்களை மைக்கூடுகளுக்கும் ஒப்பிட்டு வந்திருக்கின்றனர் என்பதை முற்றிலுமாகப் புரிந்துகொண்டேனா என்று சொல்ல முடியவில்லை. (பக்கம்: 648)

ஹெகுரே: மரண வாடை அடித்துக் கொண்டிருந்த அந்த அறையில் இருந்த என்னை அப்போது பரவசப்படுத்திக் கொண்டிருந்தது என் வாயிலிருந்த அந்தப் பொருள் அல்ல. (பக்கம்: 648)


உயிர்ப் பெருக்கத்தைத் தவிர்த்த இதர முறையிலான உடலுரவுகள் ஏற்புடையது அல்ல என்கிறார் இறைதூதர். நபிகளின் வாழ்வியல் மேன்மைக்கான கட்டளைகளாகட்டும், இதர அறிவார்த்த ஒழுக்க விதிமுறைகளாகட்டும் - மனித உணர்வுகளுக்கு முன் இவையெல்லாம் வெற்று வார்த்தைகள் என்பதையே காலக் கண்ணாடி, மனிதர்களின் வாழ்வு மூலம் பிரதிபலிக்கிறது. புற ஒழுக்கங்களை மரபின் அளவீட்டில் நூல்பிடித்துப் பின்பற்ற நினைக்கும் சமூகம், தனிமனித ஒழுக்கத்தில் கட்டற்று அலைகிறது. அதைத்தான் பாமுக் இந்நாவலில் வரலாற்றின் துணைகொண்டு ஆராய முற்படுகிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.

ஒரு மொழிபெயர்ப்பு நாவலை வாசிக்கிறோம் என்ற எண்ணமே இல்லாமல், தமிழுக்கு பாமுக்கைக் கொண்டு வந்ததில் ஜி. குப்பிசாமியின் கடினப் பிரயாசை இருக்கிறது. “மூலத்தை விட ஆங்கில மொழிபெயர்ப்பு சிறப்பாக வந்திருக்கிறது” என்று ஒரு மேடைப் பேச்சில் பகிர்ந்துகொண்டாராம் ஓரான் பாமுக். ஆங்கிலத்திலும், தமிழிலும் வாசித்துவிட்டு “ஆங்கிலத்தைக் காட்டிலும் தமிழாக்கத்தில் இந்நாவல் இன்னும் செறிவாக வந்திருக்கிறது” என்கிறார் தீவிர வாசகரும், மூத்த எழுத்தாளருமான அ. முத்துலிங்கம். மேலும், “ஓரான் பாமுக் தமிழ் மொழிபெயர்ப்பை வாசித்துப் பார்க்க வாய்ப்பில்லை. அப்படி வாசிக்க நேர்ந்தால், ஆங்கில மொழிபெயர்ப்பைக் காட்டிலும், தமிழில் சிறப்பாக வந்திருக்கிறது” என்று சொல்லியிருப்பார் என்கிறார் முத்துலிங்கம்.

ஜி குப்புசாமியுடனான உரையாடலில் இதுசார்ந்த பேச்சு வந்தபோது, “அதெல்லாம் வாய்ப்பே இல்லிங்க. மூலத்துல இருக்கறதுல 80% விஷயங்கல மொழியாக்கத்துல கொண்டுவந்தாலே பெரிய விஷயம் தான். இதெல்லாம் பாமுக் மற்றும் முத்துலிங்கத்தின் பெருந்தன்மை” என்று பகிர்ந்துகொண்டார்.

“இத அ.முத்துலிங்கம் மட்டும் சொன்னா பரவாயில்லையே. சுகுமாரன், நாகரத்தினம் கிருஷ்ணா, ஜெயமோகன், எஸ்ரா”ன்னு எல்லாருமே சொல்றாங்களே என்றால், “பாருங்க மொழி பெயர்ப்பாளன் கண்ணாடி மாதிரி. அதில் விழும் பிம்பம் தான் மூல நாவல்னு முத்துலிங்கம் சொல்றாரு. ஆனா... என்னைப் பொருத்தவரை ‘என் பெயர் சிவப்பு’ என்ற பிம்பம் நல்லா வந்திருக்குதுன்னா..! அந்த பிம்பம் விழும் கண்ணாடி குப்புசாமி என்கிற மொழிபெயர்ப்பாளனாகிய நானில்ல. உண்மையில் கண்ணாடியானது தமிழ் மொழி. அது மொழியின் சிறப்பு” என்கிறார் ஜி குப்புசாமி.

இப்படிச் சொல்வது மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமியின் பெருந்தன்மை. காலச்சுவடு பதிப்பகத்தின் மூலம் முறையான அனுமதி பெற்று - ஏறக்குறைய 18 மாதங்கள் தினந்தோறும் உழைத்து இந்நாவலை மொழியாக்கம் செய்ததாகத் தனது நேர்முகத்தில் குப்புசாமி பதிவு செய்திருக்கிறார். இந்த உழைப்பும், அர்ப்பணிப்பும், தன்னை முன்னிருத்திக் கொள்ளாத கவர்ச்சியும் மெச்சத் தகுந்த விஷயங்கள்.

இலக்கிய ரசனையின் முக்கிய அம்சமே மொழி தான் என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். அந்த வகையில் மொழியானது கண்ணாடியாக இருக்கலாம். அ. முத்துலிங்கம் தவறாகச் சொல்லிவிட்டார். மொழி பெயர்ப்பாளர்கள் கண்ணாடியல்ல. அதன் பின்னால் பூசப்பட்டுள்ள மெல்லிய ரசக் கலவை. கண்ணாடி எத்தனை கனமானதாக இருந்தாலும், மெல்லிய ரசக்கலவை பூசப்படவில்லையேல், தெளிவான பிம்பத்தைக் காண்பது இயலாத காரியம். ரசம் உதிர்ந்த கண்ணாடிகளும் இருக்கத் தானே செய்கிறது. எனினும் அது கண்ணாடிகளின் பிரச்சனை இல்லையே!. ஜி குப்புசாமி போன்ற ரசக்கலவைகள் - தாம் சார்ந்த மொழிக்கு வலு சேர்கிறார்கள். அந்த வகையில் மகிழ்ச்சியே.

குறிப்பு: பாமுக்கின் முதல் தமிழ் மொழிபெயர்ப்பு ‘என் பெயர் சிவப்பு’. சென்ற ஆண்டு பாமுக்கின் கடைசி அரசியல் நாவலான ‘பனி’ வெளிவந்தது. ஓரான் பாமுக்கின் மொத்தப் படைப்புகளையும் அடுத்தடுத்து மொழியாக்கம் செய்யும் பணியில் ஜி. குப்புசாமி வேலை செய்துகொண்டிருக்கிறார். அடுத்தடுத்த மொழிபெயர்ப்பு நூல்களையும் காலச்சுவடு பதிப்பகமே வெளியிடும் உரிமையைப் பெற்றிருக்கிறார்கள்.

என் பெயர் சிவப்பு
மூலம்: ஓரான் பாமுக் (துருக்கி)
தமிழில்: ஜி குப்புசாமி
காலச்சுவடு பதிப்பகம்.
விலை: 350

புத்தகம் சார்ந்த பிற பதிவுகள்:

கண்ணாடியைப் பார்ப்போம் - அ. முத்துலிங்கம்
மரணத்தின் நிறம் சிவப்பு – கவிஞர் சுகுமாரன்
ஒரு நுண்ணோவியத்தின் கதை – நாகரத்தினம் கிருஷ்ணா
ஜெயமோகன் வாசகர் கடிதம்
என் பெயர் சிவப்பு: க. சீ சிவக்குமார்
நாவலின் சில பகுதிகள்: அபுதீன்
என் பெயர் சிவப்பு: ஆதவா

Wednesday, April 9, 2014

IBM - யானைக்கும் அடிசரக்கும்

“பசியோடு இருங்கள். முட்டாளாக இருங்கள்” – என்பது ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ்-ன் பிரசித்தி பெற்ற வார்த்தைகள். ஏப்ரல் 01-ஐ முட்டாள்களின் தினமாக உலகெல்லாம் கொண்டாடுகிறார்கள். அதனால் தானோ என்னவோ “Apple Company” -யை 1976, ஏப்ரல் 01 ஆம் தேதி தமது நண்பர்களுடன் தொடங்கி இருகிறார். இதனை யோசித்துச் செய்திருப்பாரா என்றும் உறுதியாகக் கூறுவதற்கில்லை. இயல்பாக சில விஷயங்கள் இப்படி நடந்துவிடுவதுண்டு. Steve Jobs பற்றி உலகறியும். ஆப்பிள் ப்ராடக்ஸ் பற்றி சொல்லவே வேண்டாம். மனிதர்கள் தவம் கிடக்கிறார்கள்.
போலவே 1993 ஆம் ஆண்டு ஏப்ரல் 01-ம் தேதி, ஐபிஎம் வரலாற்றின் பொன் ஏடுகளில் வைரக்கோலால் செதுக்கி வைக்கதிருக்க வேண்டிய தினம். அன்று தான் ஐபிஎம் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியாக, அதிகாரப் பூர்வமாகத் தலைவராக பணியை ஏற்கிறார் லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர். யாரிந்த லூயிஸ் வி ஜெர்ஸ்ட்னெர் (அல்லது) ஜஸ்ட்னர் (அல்லது) ஜெஸ்ட்னெர்?

அமெரிக்காவில் பால் டிரெக் வண்டி ஓட்டும் ஒருவருக்கு மகனாகப் பிறந்து, உலகின் தலைசிறந்த பிசினஸ் நிர்வாகிகளுள் ஒருவராகத் திகழ்ந்தவர் என்று அடுக்கிக் கொண்டே சென்றாலும், “விழுந்த கம்பெனியை எழுந்து நிற்கச் செய்தவர்” என்று அறிமுகம் செய்வதுதான் சரியாக இருக்கும். அதற்கு IBM Company –ன் வரலாற்றைக் கொஞ்சம் போல அசை போட்டாலே ஜெர்ஸ்ட்னெர் என்பவர் யாரென்பது கைப்புண் கன்னாடிபோலத் தெரிந்துவிடும்.

ஐபிஎம் – அமெரிக்காவின் கௌரவங்களுள் ஒன்று. அமெரிக்காவின் நீண்ட கால அடையாளங்களுள் ஒன்று என்பதாகவும் சொல்லலாம். கத்தரிக்கோல், சீஸ் வெட்டும் கருவி முதல் தட்டச்சுக் கருவி, செயற்கைக்கோள் பாகங்கள் வரை IBM கால் பாதிக்காத துறைகளே இல்லை. அந்த அளவிற்கு இயந்திரங்கள் சார்ந்து உலகளவில் ஆதிக்கம் செலுத்திய கம்பெனி. ஆகவே இவர்கள் கம்ப்யூட்டர்கள், லேப்டாப், மென் பொருட்கள் ஆகிய துறைகளிலும் இறங்கியதில் வியப்பில்லை. மைக்ரோ சாஃப்ட், இன்டெல் போன்ற அடையாளமற்ற கம்பெனிகள் இவர்களுக்குப் போட்டியாக வளர்வார்கள் என்று கனவிலும் நினைத்திருக்க மாட்டார்கள். ஆனால் நடந்தது அதுதான். புதிதாகத் துவங்கி அசுரகதியில் வளர்ந்த மென்பொருள் நிறுவனகள் IBM-ன் அஸ்திவாரத்தையே அசைத்துவிட்டன.

அதன் விளைவு 1987-ல் 43 டாலராக இருந்த பங்குச் சந்தை பத்திர மதிப்பு, 1993-ல் 13 டாலர் என்ற நிலைக்கும் கீழிறங்கி பாதாளத்தில் விழுந்து தத்தளிக்கிறது. போட்டி நிறுவனங்களின் சந்தைக்கு ஈடுகொடுக்க முடியாமல் ஒவ்வொரு நாளும் அதன் பத்திர மதிப்பு பாதாளம் நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. போதிய சேமிப்புகள் கைவசம் இல்லை. உலகெல்லாம் கிளைகள் கொண்டு பறந்து விரிந்த பன்னாட்டு நிறுவனம். எனினும் பல பில்லியன் டாலர்கள் வியாபார நஷ்டம். 1985 -லிருந்து பார்த்தால் ஏறக்குறைய 1, 75, 000 நபர்கள் வேலை இழந்திருக்கிறார்கள். உலகின் பல நாட்டு ஊழியர்கள் இதில் அடக்கம்.

இந்நிலையில் தான் 1993 ஆம் ஆண்டு, ஜனவரி 26ம் தேதி, தனது தலைமை நிர்வாகி ஜான் ரக்கர்ஸ் பணி ஓய்வு பெறப்போவதாக IBM அறிவிக்கிறது. ஐபிஎம்-ன் அடுத்த தலைமை நிர்வாகியைக் கண்டெடுக்க “ஜான் ஆக்கர்ஸ், ஜிம் பர்க்” போன்றவர்களைக் கொண்ட தேடல் குழு அமைக்கப்படுகிறது. உலகத்திலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தலைமை நிர்வாகிகளில் சிறந்த ஒருவரை IBM நிறுவனம் சல்லடை போட்டுத் தேடிக் கொண்டிருக்கிறது. என்றாலும் ஆரம்பத்திலிருந்தே ஜான்சன் & ஜான்சன் கம்பெனியின் தலைமை நிர்வாகி ஜிம் பர்க்கின் சாய்ஸ் LOUIS V. GERSTNER, Jr மட்டுமே. 

ஜெர்ஸ்ட்னெர் அதற்கு முன்பு பதவி வகித்த “மெக்கின்சே, ஆர். ஜெ. ஆர் நபிஸ்கோ, அமெரிக்கன் எக்ஸ்பிரஸ்” போன்ற கம்பெனிகள் தொழில்நுட்பம் சார்ந்த கம்பெனிகள் அல்ல. ஒன்று சில்லறை வர்த்தகத்துடன் தொடர்புடையது. அல்லது வங்கிச் செயல்பாடுகள் சார்ந்த நிறுவனங்கள். இவற்றிலிருந்து முற்றிலும் மாறுபட்ட கலாச்சாரம் மற்றும் வியாபார நோக்கு கொண்டது ஐபிஎம்.

தலைமை நிர்வாகியாகப் பொறுப்பேற்ற குறுகிய காலத்தில் லூயி வி ஜெர்ஸ்ட்னர், தன்னுடைய பங்கிற்கு சுமார் 30, 000 ஊழியர்களை பணி நீக்கம் செய்கிறார். எல்லா திசையிலிருந்தும் IBM பிரச்சனைகளைச் சந்திக்கிறது. “ஐ.பி.எம் நிறுவனத்திற்கு அறிமுகம் எதற்கு?” என்றிருந்த நிலைமை மாறி, “பாதாளத்தில் சரிந்து கொண்டிருக்கும் ஐபிஎம் – இனி எழ முடியுமா?” என்ற இக்கட்டான சூழ்நிலை. பிரச்சனைகளை அதன் நெளிவு சுளிவுடன் சந்திக்கிறார் ஜெர்ஸ்ட்னர். ஏறக்குறைய 9 ஆண்டுகாலம் பல்வேறு உத்திகளைக் கையாண்டு பழைய வளமான நிலைக்கு நிறுவனத்தை மீட்டெடுக்கிறார். கம்பெனி ஸ்திரத் தன்மையை அடைந்து, தொலைநோக்குடன் வீறுநடை போடும் சமயம் நிறுவனத்திலிருந்து விருப்ப ஓய்வு பெற்று வெளியேறுகிறார்.

ஜெர்ஸ்ட்னெர் IBMல் தனக்குக் கிடைத்த அனுபவங்களை “Who Says Elephants Can’t Dance?” என்ற புத்தகமாக ஆங்கிலத்தில் எழுதியிருக்கிறார். அதன் சாரத்தை சுயமுனேற்ற தன்மையில் ராணிமைந்தன் தமிழ்ப் படுத்தியிருக்கிறார்.

ஒரு பிரபலமான நிறுவனம் தன்னுடைய அஜாக்கிரதையால் மண்ணைக் கவ்வுவதும், தடம் தெரியாமல் போவதும் நடப்பதுண்டு. இதற்கு சின்னதும் பெரியதுமாக நிறைய கம்பெனிகளைச் சொல்லலாம். சில கம்பெனிகள் மீண்டு எழுவதும் உண்டு. இதற்கு “ஆப்பிள், ஐபிஎம்” போன்ற நிறுவனங்களை உதாரணம் காட்டலாம். இந்தப் புத்தகம் ஐபிஎம் கம்பெனிக்கு ஆக்சிஜன் கொடுத்த சுவாரஸ்யமான கதையைப் பற்றி சுருக்கமாகப் பேசுகிறது. கம்ப்யூட்டர் துறை சார்ந்த ஆர்வம் உள்ளவர்களுக்கு சுவாரஸ்யமான புத்தகம்.

முயற்சி செய்து பாருங்கள். விழுந்த கம்பெனியையே தூக்கி நிறுத்துகிறார்கள். ஒரு புத்தகத்தைப் படிப்பதா கடினம்...!

கலைஞன் பதிப்பகம்,
தமிழில்: ராணிமைந்தன்
விலை 55 ரூபாய்

Friday, March 21, 2014

நீறுபூத்த நெருப்பு - சாதியும் நானும்

ஒருமுறை என்னுடைய பெரிய அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரவர் நட்பு வட்டத்தைப் பற்றிய பேச்சு வந்தது. “இங்க பாரு ஹேமா... எனக்கு தலித் பிரெண்ட்ஸ் தான் அதிகம்” என்றேன். “உன்ன எல்லாம் சுட்டுக் கொல்லனும்டா...” என்றவாறு ஹேமா கோவத்தை வெளிப்படுத்தினாள்.

“ஏன் அப்படி சொல்ற ஹேமா? எதுக்குக் கோவப்படுற...?” என்றேன்.

“எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம்னு சொல்லு... ஃப்ரண்ட்ஸ் பத்தி பேசும் பொழுது அதென்ன தலித் பிரண்ட்ஸ்...” என்றாள்.

அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. சாதியை பல இடங்களில் விமர்சித்தாலும், நீர்பூத்த நெருப்பாக சாதியானது உள்ளுக்குள் இருந்திருக்கிறது. இந்த மனோபாவத்திற்கு நான் வளர்ந்த சூழலும் ஒரு காரணம் என்பதுதான் உண்மை.

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்ச பாண்டவர்களுக்காக அகதீஸ்வர முனிவர் யாகம் நடத்தியதாக வாய்மொழிக் கதையில் கூறப்படும் பஞ்ஜேஷ்டி தான் எனது பூர்வீகம். பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து இந்த ஊர் தான் எங்களது பூர்வீகம். பஞ்ஜெட்டி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஆனந்தவள்ளியும், அகதீஸ்வரனும் தம்பதியார்களாகக் காட்சியளிக்கும் சிவ தளம் அமைந்த ஊர். இப்போதும் கூட மொத்தத்தில் இரண்டு தெருக்கள் தான் உள்ளது. தலித்துகள் வசிக்கும் காலனி கொஞ்சம் பெரியது. அப்பொழுதெல்லாம் ஒரு தெருவில் மேல்சாதியினரும், மற்றொரு தெருவில் நாயுடுகளும், ரெட்டியார்களும், நாயக்கர்களும் வசிப்பார்கள். தலித்துகள் வசிக்கும் காலனி ஊரிலிருந்து சற்றே விலகி அமைந்திருக்கும். கோவிலின் பக்கத்தில் ஒரேயொரு ஐயர் வீடு. 

சிறுவனாக இருந்தபோது மேல்சாதியினர் வசித்தத் தெருவில் 20 வீடுகள் இருந்தால் அதிகம். பெரும்பாலும் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் (நாட்டு ஓடு & சீமை ஓடு) தான் இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் கூட இருக்கும். இரண்டு வீடுகள் மட்டுமே “மெத்தை வீடு” என்றழைக்கப்பட்ட மாடியுடன் கூடிய வீடுகள். ஒருவீடு அப்பாவின் முன்னோர்களுடையது. இன்னொன்று அம்மாவின் முன்னோர்களுடையது. இரண்டுமே எட்டுக்கட்டு வீடுகள். நான் வளர்ந்துகொண்டே வர, இரண்டு வீடுகளும் சிதிலமடைந்து தரைமட்டமாகின. பின்னர் குடிசை வீட்டில் வாழத் துவங்கினோம். எனினும் வீட்டு வேலைகளைச் செய்ய பக்கத்துத் தெருவிலிருந்து பெண்கள் வருவார்கள். தோட்ட வேலைகளைச் செய்ய காலனியிலிருந்து தலித் ஆண்கள் வருவார்கள். பெரும்பாலும் இவர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள். தண்ணீரும், நீர்மோரும் வீட்டார் புழங்கும் டம்பளர்களில் கொடுத்தாலும், சாப்பாட்டினைப் பின்புறத் திண்ணையில் உட்கார வைத்து இலையில் தான் பெரும்பாலும் பரிமாறுவார்கள்.

“நான் வாழ வந்த போது பற பசங்க ஊருக்குள்ள வந்தா துண்ட எடுத்து மடியில கட்டிப்பாங்க. அப்பல்லாம் ஏது செருப்பு?. பின்னாடி செருப்பு வந்தது. ஊருக்குள்ள வரும்போது செருப்பைக் கையில எடுத்துக்குனு நடந்தது கூட நேத்து நடந்த மாதிரி தான் இருக்குது. இப்ப என்னடான்னா பறப் பசங்க கால்ல போட்டுட்டு இருக்குற செருப்ப எடுத்து மொகத்துக்கு நேரா காமிப்பாங்க போல. நம்மளையே கேள்வி கேக்குறாங்க. எல்லாம் கலி காலம்...” என்று காலஞ்சென்ற சின்னப் பாட்டி ஞானாம்பாள் எப்பொழுதாவது சொல்லுவதுண்டு.

ஒருமுறை பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கழுவுவதற்காகத் தொட்டிக்குச் சென்றேன். சூரப்பேட்டா கிழவி குடிசையின் பின் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் சில்வர் கிண்ணத்திலேயே கிழவிக்குச் சாதம் கொடுத்திருந்தாள் அம்மா. எதோ பொறியலைக் கிண்ணத்தில் வைக்க வந்த சமயம் “ஏம்மா கொழம்பு வெக்கிற கிண்ணதுளையே அதுக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்கற. வேற எதாச்சும் எலயில போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...” என்றேன்.

“இந்தக் கதைக்கெல்லாம் நீ வராத... எட்டி இடுப்பு மேலயே ஒதைப்பேன். ஒருத்தருக்கு எதிர்ல எப்படி பேசுறதுன்னு தெரிய வேணாம்... புத்தி கெட்ட நாய...” என்று அம்மா கோபமாகத் திட்டியது பசுமை மாறாமல் நினைவில் இருக்கிறது. அம்மாவிற்குச் சாதிப் பெருமை இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இன்று வரையிலும் சாப்பாடு பரிமாறுவதில் மட்டும் யாருக்குமே குறை வைக்கமாட்டாள். வீட்டிற்குள் தான் விட மாட்டார்களே ஒழிய, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில்தான், அதே கிண்ணத்தில் தான் அவர்களுக்கும் உணவளிப்பாள். கிராம வீட்டில் வசித்தபோது, சில நாட்களில் மீன் விற்பனை செய்ய வரும் பெண்களும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுண்டு. பொன்னேரிக்குக் குடி பெயர்ந்ததிலிருந்து வீட்டிற்கு யார் வந்தாலும், “உள்ள வாங்க... உட்காருங்க... எதாச்சும் சாப்பிடுங்க...” என்கிறாள். அன்றைய தினம், “மோலியார திட்டாதம்மா பாவம்...” என்று சூரப்பேட்டா கிழவி தான் அம்மாவைச் சமாதானப் படுத்தினாள்.

சாதிய நுட்பத்துடனும், தீண்டாமை நோக்குடனும் பிரித்தறிந்து சிறுவயதில் நடந்துகொண்டதில்லை என்றாலும், வழக்கத்தில் சாதியின் பெயரே “முதலியார்” என்பதால், “நம்ம மொதலாளிங்க, அவங்க வேலை செய்யிறவங்க” என்ற லாஜிக் தான் அப்படிப் பேசியதற்குக் காரணம். எனினும், சாதியத்தின் வீரியம் ஒரு கிரகணத்தின் நிழல் போல பள்ளிச் சிறுவனின் மனதில், அவனது வாழ்வியல் சூழல் நஞ்சினைப் போல ஏற்றியதாகத் தான் மேற்கூறிய சம்பவத்தை நினைவுகூர்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்க்கை மகாமகா தரித்திரத்தில் கழிந்தது. எனினும் சாதியாது பழமொழி வடிவில் தான் முதன் முதலில் எனக்கு அறிமுகமானது.

கிரிகெட் விளையாட நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சிறுவயதில் செல்வதுண்டு. அவரது குடும்பத்தார் ரெட்டியார் (MBC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் கூட, சமையல் பணியாளராக பால்வாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ - விடிந்ததும் நண்பரது வீட்டு வாசலில் தான் சிறுவர் பட்டாளம் நிற்கும். எப்பொழுதாவது நண்பரின் தாயார் சாப்பிடுவதற்குச் சத்துணவு மாவு கொடுப்பார்கள். சில நேரங்களில் நீரில் கரைத்து தோசையாகவும் வார்த்துக் கொடுப்பார்கள். பிடிக்காத திண்பண்டமாக இருந்து சாப்பிடுவதற்கு மறுத்தால் “மோலியார் ஜம்பம் வெளக்கெண்ணெய்குக் கேடு...” என்று நக்கலடிப்பார்கள். இதெல்லாம் பன்னிரண்டு, பதிமூன்று வயதில் நடந்த கதை. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி முழுவதும் - பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே இருந்த அரசுப் பள்ளியில் படித்ததால் சாதியானது சான்றிதழ் வடிவில் அறிமுகமாகி இருக்கவில்லை. அரசுப் பள்ளியில் இதர சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெருவாரியாக படித்த காலமது.

“தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் சாதியைச் சேர்ந்த பிள்ளைகள்” என எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் கலந்திருப்பார்கள். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், உடன் படித்த நண்பர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் எங்களது முன்னோர்கள் விற்றுத் தீர்த்த நிலத்தில் வேலை செய்தவர்களாகத் தான் இருப்பார்கள். போலவே என்னுடைய பெற்றோர்களும், அவர்களது பெற்றோர்களும் கூட உடன் படித்த நண்பர்களாகத் தான் இருப்பார்கள். சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நண்பர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தான் சிறுவயதில் படித்த பள்ளி இருந்தது. உடன் படித்த நண்பர்கள் ஒருநாளும் வீட்டிற்கு வந்ததில்லை. நானும் அழைத்ததில்லை. பள்ளிவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையிலும் தலித் மாணவர்கள் ஒருவரும் எங்கள் தெரு வழியாகக் கடந்து சென்றதில்லை.

உயர்நிலை வகுப்பிற்காக சோழவரம் சென்றபோதும் இதே நிலைதான். எனினும் வெளியூர் என்பதால் தலித்துகள், இதர சாதியினர் என்ற பேதமின்றி எல்லோருடனும் சமமாகப் பழக முடிந்தது. மதிய உணவைக் கூட பரிமாறிக் கொண்டதுண்டு. ஓரளவிற்கு பெற்றோர்களின் மறைமுகமான திரைமறைவு பொம்மலாட்ட சாதியக் கட்டுமானதிலிருந்தும், அதன் இருக்கதிலிருந்தும் வெளியில் வரமுடிந்தது. பின்னர் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி படித்தபோதும் நண்பர்களுக்குள் ஒரு பேதமும் இருக்காது. காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பயின்றபோது என்னுடைய அரைத் தோழனாக இருந்த பாக்கியராஜ் கிருத்துவ தலித். மற்றொருவர் வன்னார். இன்னொருவர் நத்தம் முதலியார். குடும்பத்தின் கட்டுப்பாடுகள் இன்றி மகிழ்வுடன் சுற்றித் திறந்த காலமது. போலவே, பள்ளி முதல் கல்லூரி வரையிலும் அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் பயின்றதால் பெரும்பாலும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் பலரும் ஒடுக்கப்பட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடும்பத்துப் பெரியவர்களுடன் ஏதேனும் விதண்டாவாதம் செய்ய நேர்ந்தால் “பாட சுத்தன பறையா... உனக்கு பற சகவாசம் தானே அதிகம்...” என்று குறிப்பிட்டுத் திட்டுவார்கள். “ஜாதி கெட்ட நாய மூட்றா வாய...!” என்ற வசைச் சொற்களையும் சில நேரங்களில் கேட்டதுண்டு.

அக்கா ஜெயாவிற்கு அனைன்யா பிறந்திருந்த சமயமது. வீட்டு வாசலில் “அக்கா... அக்கா...” என்று யாரோ குரலெழுப்பி அழைக்கும் சப்தம். அம்மா ஏதோ வேலையாக இருந்ததால் வெளியில் சென்று பார்த்தேன். சிறுவயதில் உடன் படித்த செந்தில் நின்று கொண்டிருந்தான். எனது கிராமத்து காலனியைச் சேர்ந்த தலித் நண்பன்.

“எங்கடா இவ்வளவு தொலைவு... வா வா... உள்ள வந்து உட்காரு...” என்றேன்.

“உங்க அம்மா இல்லையா கிருஷ்ணா...?” என்று வினவினான். அதற்குள் அம்மாவே வாசலில் வந்து நின்றுகொண்டார்கள். “காசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேங்கா...” என்றான். அம்மாவும் உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்துக்கொடுக்க, செந்தில் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான். அனைன்யா பாப்பாவிற்குத் தொட்டில் செய்து கொடுத்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக பிறகு அம்மா கூறினாள்.

“உள்ள வாடா... காஃபி சாப்பிட்றா...” என்று கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பும் வரை அசௌகரியமாகவே உணர்ந்தான். அடடா, வந்தவனை சங்கடப் படுத்திவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.

சிறுவயதில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் சிரமமான விஷயமாக எனக்கிருந்தது. மிகவும் கூச்சப்படுவேன். இப்பொழுதெல்லாம் வாயைத் திறந்தாள் மூடுவதில்லை. நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது சில புதிய நண்பர்கள் நாசூக்காக என்னிடம் கேட்பதுண்டு: “நீங்க பிராமின் தானே...!”

“ஏங்க... நாய்பீ கணக்கா கன்னங்கறேல்னு இருக்கேன்... என்னப் போயி பிராமினான்னு கேக்குறீங்களே...!” என்பேன். “இலிங்க... நீங்க ஆந்திரா பார்டர்ல இருக்கிங்களா... தெலுங்கு பிராமின்ஸ் நெறைய பேரு கருப்பா தான் இருப்பாங்க...!” என்பார்கள். “அதென்னமோங்க... எனக்குத் தெரியல... ஆனா, நான் தர லோக்கல்...” என்பேன்.

“என்னமோங்க பிரபு... உங்க பேச்சு, நடை, பாவனை”-ன்னு எல்லாம் பிராமின்ஸ் மாதிரி தான் இருக்குது என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுடன் வட இந்திய, நேபாளச் சுற்றுளா சென்றிருந்தேன். சுற்றுலாவின் முடிவில் பல வயோதிக நண்பர்களும் “நீங்க ப்ராமினா?” என்று தான் வினவினார்கள். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் சமயங்களில் என்னுடைய பதில் எப்பொழுதுமே “அதெல்லாம் இல்லைங்க... நான் தர லோக்கல்...” என்பதாகத் தான் இருக்கும்.

“சாதி இல்லை, சாதி இல்லை” என்கிறோம். எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை. சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பஞ்செட்டி கிராமம் இருக்கிறது. சென்னையுடன் போதிய தொடர்புகளும், இளம் தலைமுறை மக்களுக்கான தெளிவும் உள்ள முன்னேறிய கிராமம். எனினும் ஜாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. மேல்சாதியினருக்கும், தலித்துகளுக்குமான தொடர்பும் கூட நுட்பமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகத் தான் இருக்கிறது. தனக்குக் கீழ் நிலையிலுள்ள சாதியை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் தான் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.

சமீபத்தில் ஒருநாள் மடிக் கணினியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த ஒருவருடன் பேசியவாறு அம்மா பாத்திரங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். “ச்சே... காலனியில இருக்கறவங்க வீடு கூட கொஞ்சம் சுத்தமா இருக்கும் போல... இந்த வீடு ஏன் இப்பிடி காலனியார் வீடு மாதிரி கப்படிக்குதுன்னு தெரியல...” என்பதை உரையாடிக் கொண்டிருந்தவரிடம் மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டிருந்தாள்.

“அம்மா... நீ பேசுறது சரியில்ல... அதென்ன காலனி ஆளுங்கன்னு கம்பேர் பண்றது? தம்பிங்க யாராச்சும் வீட்டுக்கு வரும்போது இப்பிடி பேசுன உன் வாய ஒடச்சி கையில கொடுத்துடுவேன்...” என்றேன்.

“இப்ப இன்னா பேசிட்டேன்... உனக்கு அனுபவம் அதிகமா? எனக்கு அனுபவம் அதிகமா? உனக்கு இன்னா தெரியும் மொதல்ல... அதுவரைக்கும் வாய மூடு...” என்றார்கள் கோவத்துடன்.

“அப்படி பேசாதன்னா... பேசாத... அவ்வளோதான்...” என்றேன் நானும் உக்கிரத்துடன்.

“சரிடாப்பா... நான் எதுவும் பேசல நீயும் பேசாத...!” என்று வாதத்தை முடித்து வைத்தார்கள். அம்மா ஒன்றும் மோசமில்லை. தான் மேல்சாதியில் பிறந்தவள் என்று பெருமைபட்டுக் கொண்டாலும், சில நேரங்களில் இதுபோல ஒப்பிட்டுப் பேசினாலும் – சக மனிதர்களை வேண்டுமென்றே சங்கடப்படுத்தக் கூடியவள் அல்ல. ஒருவகையில் என்னுடைய தாயாரும் குடும்பத்து ஆண்களின் ஒடுக்குமுறைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவள் தான். ஆகவே அம்மாவும் ஒடுக்கப்பட்டவள் தான். எனினும் சாதிப் பெருமிதம் அவளது மனதில் ஆழப் பதிந்துள்ளது. என்னுடைய அம்மா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள். அவளது காலம் முடிந்துவிட்டது. அம்மாவை உருட்டி மிரட்டி என்ன ஆகப்போகிறது?

நீறுபூத்த நெருப்பாக நம் போன்ற படித்த, முற்போக்கான சமூகத்திடமே சாதியத்தின் கனல் கனன்று கொண்டிருக்கும்போது, சென்ற தலைமுறையின் பிற்போக்கானவர்களை குற்றம் சொல்லி என்ன ஆகிவிடப் போகிறது? 

Thursday, February 14, 2013

உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்

நீல வானின் திட்டுத் திட்டான வெண்மேகங்கள் அங்குமிங்கும் கொட்டிக் கிடப்பதைப் போலவே, நகரம் சார்ந்த மனித உறவுகள் தேவைக்கதிகமான இடைவெளியில் உருக்கொண்ட தனித் தீவுகள் போல் சிதறிக் கிடக்கின்றன. எவ்வளவிற்கு எவ்வளவு இருப்பிடங்கள் குறுகியதாகவும் நெருக்கமானதாகவும் இருக்கின்றனவோ, அவ்வளவுக்கு நேரெதிர் முரணாக சகமனித இடைவெளி என்பது சமுத்திரம் போல் நீள்கிறது. அருகில் இருந்தும் அன்னியர்களே என்ற மன நிலையை நகரங்கள் சுலபமாக ஏற்படுத்தி விடுகின்றன. ஆகவேதான் நகர மனிதர்கள் தம்மை நிலை நிறுத்திக்கொள்ள மனிதம் கடந்த எல்லைக்குச் செல்வதற்குக் கூட தயங்குவதே இல்லை. என்றாலும் வாழ்வின் கோரத்தை வெளிப்படுத்தும் அதே அயோக்கிய முகங்கள்தான் அன்பின் ஊற்றையும் சுரக்கின்றன. போலித்தனங்களால்தான் சமூக இருப்பானது நிலைக்கும் என்று வரும்பொழுது எமாற்றுக்காரர்களையும், ஜேப்படித் திருடர்களையும், போக்கிரிகளையும், ஊழல்வாதிகளையும், குண்டர்களையும், சமூக விரோதிகளையும் உலகமானது சந்தித்தே ஆக வேண்டும். எனினும் அவர்களும் சமூகத்தின் அங்கமாகத்தானே வாழ்ந்தாக வேண்டும்.


தமிழ் புனைவுலகில் சிறுநகர மற்றும் மாநகர வாழ்வு சார்ந்த அறியப்படாத முகங்களின் பதிவுகள் மிகக் குறைவு என்ற வாதம் பரவலாக இருக்கிறது. அதிலும் அடித்தட்டு, நடுத்தர மற்றும் மேல்தட்டு மக்கள் என்ற பண்புக் கூறுகளை முன் வைத்து ஆராய வேண்டிய அவசியம் இருக்கிறது. சென்னை வாழ் நடுத்தர மக்களின் இருப்பு சார்ந்த பிரச்சனைகளையும், உளவியல் சிக்கல்களையும் ஆழமாக அலசி முன்வைக்கப்பட்ட ஏராளமான படைப்புகள் நம்மிடம் இருக்கின்றன. என்றாலும், அடித்தட்டு மக்களின் அகச்சிக்கல் மற்றும் அறியாமை சார்ந்து பொலிவிழந்த முகங்களை முன்வைத்த பதிவுகள் மிகக் குறைவுதான். அந்த வகையில் “உப்பு நாய்கள்” நாவலானது மனதாலும், உடலாலும், இருப்பாலும் வாழ்வின் சுழலில் வதைபடும் எளிய மனிதர்களைப் பற்றி நிறையவே பேசுகிறது. விதியின் சாட்டை எப்படி சக மனிதர்களை பம்பரமாகச் சுழற்றிவிட்டு வேடிக்கைப் பார்க்கிறது என்பதை இந்நாவல் துல்லியமாக விவரிக்கின்றது.

கதையும், கதைப்பின்னலும் ஒரே பொருள்பட இருப்பதைப் போல் தோன்றினாலும் உண்மையில் நுட்பமான வேறுபாடுகளைக் கொண்டுள்ளது. எது இந்த நாவலை செதுக்கி இருக்கிறது என்று சொல்வதும் சற்றே சிரமமான வேலைதான். விரசம், யதார்த்தம், மரபு மீறல் என்று எல்லா வகையிலும் இதனை உட்படுத்திப் பார்க்க முடியும். நாவலில் கதையானது ஒரே சீராக வளர்ந்து நேர்க்கோட்டில் செல்லவில்லை. மாறாக துண்டிக்கப்பட்ட பல நிகழ்வுகளுக்குள் முன்பாதியில் பயணித்து, இரண்டாம் பாதியில் முக்கிய காரணங்கள் ஏதுமின்றி அதே போன்ற நிகழ்வுகளால் தொடர்ந்து பின்னப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்பவனான சம்பத் மற்றும் அவனுடைய சக கூட்டாளிகள் எல்லோரும் சென்னையில் வளர்ந்தவர்கள். செல்வி மற்றும் தவுடு ஆகியோரின் குடும்பம் ஜேப்படித் திருட்டில் மாட்டிய நிர்பந்தத்தின் காரணமாக தென் தமிழகத்திலிருந்து சென்னைக்குக் குடிபெயர்ந்தவர்கள். ஆர்மீனியன் தேவாலய பாதிரிகளும், கன்னியாஸ்திரிகளும் இறைதேடலின் பொருட்டு பல்வேறு இடங்களிலிருந்து நகரத்திற்கு வந்து சேர்கிறார்கள். எல்லோரையும் நகரம் (சென்னை) என்ற புள்ளிதான் ஒன்றாக இணைக்கிறது.

மனித ஆசை எந்த நிலையிலும் தீர்வதேயில்லை என்பதுதான் நிஜம். மீசை அரும்பும் வயதில் சம்பத்திற்கு என்ன தேவைப்பட்டதோ அதே இச்சைதான் அவனுடைய அம்மாவிற்கும் தேவைப்படுகிறது. அதற்காக தன்னுடைய மகனின் நண்பனையே (மணி) சல்லாபிக்கத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறாள். பாதிரியாருக்கும் துறவறம் மேற்கொண்ட இளம் கன்னியாஸ்திரிகள் இச்சையை தீர்த்துக்கொள்ள தேவைப்படுகிறார்கள். திருடிவிட்டு சிறைக்குச் சென்றபோது அறிமுகமாகும் முத்துலட்சுமி செல்வியை ஓரினச் சேர்க்கையில் புணரத் துடிக்கிறாள். சுய இன்பம் அனுபவிக்கும் கன்னியாஸ்திரி, பிச்சைக்காரிகளை மோகித்துத் திரியும் பாஸ்கர் என நாவலின் முதல் பாதியில் கட்டுப்பாடற்ற காமமும், சமூகக் குற்றங்களும் மைய நீரோட்டமாக பெருக்கெடுத்து ஓடுகின்றன. வாதையெனும் மூலத்திலிருந்துதான் அவையும் ஊற்றெடுக்கின்றன.

இரண்டாம் பாதியில் சென்னைக்கு பிழைப்பு தேடி வரும் ஆதம்மாவின் குடும்பம் மூலம் கட்டுமானத் தொழிலில் ஈடுபடும் இன்றைய கடைநிலைத் தொழிலாளர்களின் இடர்பாடுகளை நாவல் பிரதானமாக முன்வைக்கிறது. குழந்தை தொழிலாளர்களுக்கான உபாதையை எதிர்கொள்ளும் ஆதம்மா - ஏதும் அறியா விடலையாகச் சுற்றிவருகிறாள். கிராமத்தின் கண்களைக் கொண்டு நகரத்தை அளக்க விழைகிறாள். அவளுடைய குறும்பாலும், அதன் மூலம் கிடைக்கும் உறவாலும் வாழ்வை சுவைக்கத் துவங்குகிறாள். கணவனுக்கு நிகராக உழைத்தாலும் ஆணாதிக்க மனோபாவத்தால் அவளுடைய அம்மா ஒடுக்கப்படுகிறாள். இவர்களுடைய பார்வையில்தான் நாவலும் நகர்கிறது. என்றாலும் இந்த குடும்பத்திற்கு அறிமுகமாகும் ஆர்த்தி கதாபாத்திரம் படைப்பின் இயல்பை மீறி ரொமாண்டிச வகைக்கு படைப்பைக் கொண்டு சென்றுவிடுகிறது. அத்தருணங்களில் ‘யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?’ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

ஆட்டிறைச்சிக்கு பதில் நாயின் மாமிசத்தை விற்பனை செய்யும் கோபால் கதாபாத்திரம் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய ஒன்று. ஆரம்பத்தில் சம்பத்துடன் குருவியாகச் சென்று கஞ்சா கடத்தினாலும், ‘அது நமக்கு சரிப்பட்டு வராத பெரிய வேலப்பா’ என்ற மனநிலையில் நாய்களை வேட்டையாடும் தொழிலை கையிலெடுக்கிறான். உணவு விடுதிகளுக்கு நாயின் இறைச்சியை கள்ளச் சந்தையில் விற்பனை செய்வதை அவனுடைய மனம் எந்த சந்தேகங்களும் இன்றி ஏற்றுக்கொள்கின்றது. அதுபோலவே காவல் நிலையத்தின் விசாரணையின்போது செல்விக்கு அறிமுகமாகும் பாபு என்ற கதாபாத்திரமும் சிறு பகுதியாக வந்து சென்றாலும் நாவலின் சிறப்பான வளர்ச்சிக்கு உதவுகிறது.

மகேஷ் – ஷிவானி உறவு மிகுந்த கவனத்திற்கு உட்படுத்த வேண்டிய ஒன்று. முதல் சந்திப்பிலேயே, ஒரு பொது இடத்தில் இருவரும் உடலளவில் காம இச்சையுடன் உந்தப்படுகிறார்கள். அந்த நொடி முதல் கணவன் தரமுடியாத உடல் சுகத்தை மகேஷ் மூலம் ஷிவானி கண்டடைகிறாள். பெண்களைக் காம வேட்டையாடும் மகேஷ், அதன் பிறகான சந்திப்புகளில் ஷிவானியுடனான பாலியல் வேட்கைகளை செல்பேசியில் அசையும் படங்களாக எடுத்துவிடுகிறான். ஷிவானியைப் போலவே பலரையும் தனது இச்சைக்கு பயன்படுத்திக் கொள்கிறான். இது சம்பத்திற்கு தற்செயலாக தெரியவருகிறது. எனவே இக்கட்டிலிருந்து ஷிவானியைக் காப்பாற்ற விரும்புகிறான். இந்தச் சம்பவத்திற்குப் பிறகுதான் சம்பத் – ஷிவானி உறவு பலப்படுகிறது.

கதையின் முதல் அத்தியாயத்தில் சக நண்பனிடம் தின இதழை சம்பத் பிடுங்குவது போல ஓர் இழை வருகிறது. அதைத் தவிர்த்து வேறெங்கும் அவனுடைய அறிவுப் பெருக்கம் சார்ந்த தகவல்கள் இல்லை. பதினேழு வயதில் கஞ்சா விற்கத் துவங்குகிறான். அதற்கு முன்னர் சில காலம் வட இந்தியரிடம் வேலை செய்கிறான். அங்குதான் ஷிவானியையும் சந்திக்கிறான். செல்பேசியில் பாடல்களை சேமிக்கக் கூட அடுத்தவர் உதவியை நாடுபவன், கணினியில் இருக்கும் ஆபாச வீடியோவை திடீரென எப்படி அழிக்கிறான் என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை. அதேபோல செல்வியின் உறவுப் பெண் ‘தவுடு’, முத்துலக்ஷ்மியின் வீட்டை எரித்துவிட்டு அறுபது பவுன் நகைகளைத் திருடிக்கொண்டு போன பிறகான முத்துலட்சுமியின் உளவியல் தன்மைகள் நாவலில் சரியாகக் கையாளப்படவில்லை. போலி மருத்துவரான முத்துலக்ஷ்மி விபச்சாரத் தரகராக திடீரென மாறுவதும் நாடகத் தன்மையை ஏற்படுத்துகிறது. அவசர நோக்கில் புத்தகத்தைக் கொண்டு வராமல், அதற்கான நேரம் கொடுத்து படைப்பைக் கொணரும்போது இதுபோன்ற சங்கடங்களைத் தவிர்க்கலாம். (நாவலாசிரியரின் முன்னுரையிலிருந்து இதனை உணர முடிகிறது.)

படைப்பாளிக்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே நுட்பமாக காலத்தை உணர்த்துவதில்தான் இருக்கிறது. பல ஆண்டுகள் தொடரும் கால நகர்த்தலை, கதைக் களத்தின் உண்மையான தகவல்களைக் கொண்டு மறைமுகமான புரிதலை வாசகனுக்கு அவன் உணர்த்தியாக வேண்டும். ஆகவே சம்பவம் நடக்கும் இடங்களை சரியாகவும், நுட்பமாகவும் பயன்படுத்த வேண்டும். பழைய சிறைச்சாலை இடிக்கப்படுவதற்கு முன்பாகவும், ஸ்கைவாக் வர்த்தக வளாகம் திறக்கப்பட்ட பின்னரும் நடக்கும் கதை இது. ஆகவே இடைப்பட்ட காலகட்டத்தை மனதில் இருத்தித்தான் நாவலை அணுகவேண்டி இருக்கிறது. அடித்தட்டு மக்களின் செல்பேசி பயன்பாடும் காலத்தினை ஊர்ஜிதம் செய்கிறது. செயின்ட் ஜார்ஜ் கோட்டை என்ற வார்த்தை படைப்பின் முதல் அத்தியாயத்திலேயே தவறுதலாக இரண்டு இடங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. அதனைத் தவிர்த்திருக்கலாம். குறிப்பிட்டுச் சொல்லும்படியான சிறுசிறு குறைகள் இருந்தாலும் மொழியின் செழுமையான ஆளுகையானது நாவலை வேறு தளத்திற்கு நகர்த்துகிறது. இந்நாவலுக்காக லக்ஷ்மி சரவணகுமாருக்கு சென்ற ஆண்டின் சுஜாதா நினைவு விருது கிடைத்துள்ளது.

நன்றி: சொல்வனம் (இணைய இதழ் 81 | 28-01-2013)

Monday, September 24, 2012

இனி நான் உறங்கட்டும்

பாரதப்போரின் நாசத்தால், உயிரிழந்த பங்காளிகளுக்கு பிண்டம் வைக்க யுதிஷ்டிரன் தலைமையில் விதவைகள் உட்பட எல்லோரும் கங்கை நதிக்குச் செல்கின்றனர். ஓடும் நதியில் ஈரத்துடன் நின்றிருக்கும் தர்மனிடம் குந்தி நெருங்கிச் சென்று பின்வருமாறு சொல்கிறாள்: “மகனே, முதலில் கர்ணனை நினைத்துக்கொள். அவனே எனக்கு மூத்த மகன்.”. நதியினும் வேகமாக, காற்றினும் வேகமாகப் பயணம் செய்யும் மனம் ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்கிறது. பாண்டவர்கள் எல்லோரும் உறைகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, யுதிஷ்டிரன் மன அழுத்தம் கொண்டு – நாட்டைத் துறந்து கானகம் செல்ல முடிவெடுக்கிறான். பீஷ்மர், துரோணர், துருபதன், திரௌபதியின் ஐந்து குமாரர்கள், அபிமன்யு போன்றோர் அடுத்தடுத்து பாரதப் போரில் மடிந்த போது வனம் செல்லத் துணியாதவன். ‘கர்ணன் தனக்கு மூத்தவன்’ என்று தெரிந்ததும் ‘வனம் செல்லத் துனிகிறாரே!’ என்ற திரௌபதியின் மனவோட்டத்தின் பின்னல்களால் ஆன நாவல். அதனுடைய ஓர்அத்தியாயம் உங்களுக்காக...

பதினொன்றாம் அத்தியாயம் – பகுதி 1




தனது துயரக்கதைகள் அத்தனையையும் கண்ணீர் மல்க உரைத்த திரௌபதியின் ஆற்றாமையைக் கேட்ட கிருஷ்ணனின், அழகிய முகத்தில் – புன்னகையின் வெண்மலறொன்று பூத்தது... ஆனால், அந்த புன்னகையின் வெண்மை படர்ந்த முகத்தில் – புருவங்கள் துடித்து மேலேறி நெற்றியில் சுளிவுகள் கோடிட்டு, கடினமான உள்ளுணர்வுகளின் சுருள்களை நிமிர்த்தன. விசித்ரமேயான மனோலயத்தின் இனிமை – ஒரே நேரத்தில் அவளை மகிழச் செய்வதாகவும் – வேதனை கொள்ள வைப்பதாகவும் தோன்றியது. ஆதரவற்ற பரிதாப நிலையில் – அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள், திரௌபதி. அத்தனை வேதனைகளையும் கொட்டித் தீர்த்து விட்ட மனதுடன் – வலுவிழந்த உடலாலும் துவண்டுபோன நரம்புகளுமாகிய அந்த நிலையில் – அவளது கண்கள், புலப்படாத ஏதோ ஒரு பற்றுக்கோட்டைத் தேடி அலைவதுபோல் இருந்தன. அவளது கண்களில் தெளிந்த ஏதோவொரு மாபெரும் வியப்பின் நுட்ப நிலையை கண்டறிந்தவன் போல – மீண்டும் ஒரு புன்முறுவலுடன் கிருஷ்ணன் பேசலானான்: 

“திரௌபதி, இப்பரந்த பிரபஞ்சத்தின், அகண்டாகரமான தன்மையும் அதன் சாய்ந்தாட்ட இயக்கத்தின் தத்துவமும் புலப்படாத ஒன்று. அந்த புலப்படா தன்மையிடம் நீ பிகு கொண்டிருக்கிறாய் என்பது ஸ்பஷ்டமான உண்மை. இன்று உன்னை அலைக்கழிக்கும் பாராமுக பீதி – யுதிஷ்டிர பீமார்ச்சுனர்களிடமுள்ள பாராமுகமும் – என நீ தவறாக அர்த்தம் செய்கிறாய். பெற்ற தாயைக் காட்டிலும் உன்னிடம் அன்பு கொண்ட குந்தியிடம் கூட பாராமுகம் இருப்பதாக நீ தவறாக அர்த்தம் கொள்கிறாய். கர்ணனைப் பற்றிய துயர நினைவுகள் முன்னாள் நீ அன்னியையாக ஒதுக்கப்படுவதாக – வியாகூலப் படுகிறாய். அவர்களது இதயப்பாதையில் – உனது எண்ணவோட்டங்கள் ஒத்துவராத நிலையில் – வாழ்க்கையில் அனைத்திலும் நீ தனியாக்கப் படுவதாகவும், அனைவரிடமிருந்தும் நீ விலக்கி வைக்கப்படுவதாகவும் எண்ணி வியாகூலம் கொள்கிறாய்... ஆனால் மானிட வாழ்க்கையில் – மானிட ஜீவியின் இதய இயக்கங்களில், முற்றிலும் சூன்யமான, முற்றிலும் சகிக்க வொண்ணாத – ஒரு தனிப்பகுதி உண்டென்பதை நீ உணர்ந்திட வேண்டும். ஒரு நபர், சில நேரங்களில் அவனிடமிருந்தே தனியாக்கப்படுகிறான்! தன்னிடமே அந்நபருக்கு வேற்றுமை மனோபாவம் தோன்றுகிறது. அந்த நிலை, முற்றிலும் சகிக்க வொண்ணாத சூன்யமே ஆகும்! நபர் ஒருபோதும் சுயதரிசனம் காணமுடியாத அந்த அவஸ்தை – தான் அன்பு கொண்டவர் பாலுள்ள பாராமுகம் என அவன் தப்புக் கணக்குப் போடுகிறான். அன்பு கொண்ட சோதரியே – உன்பால் எனக்குத் தோன்றும் அனுதாபத்தின் பயன் இன்மையை நினைத்து என்னிடமே நான் பரிதாப்பப்படுகிறேன். கடலோரத்தின் சிப்பிச் சிதறல்கள் சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்கின்றன. நித்தியமாகிய – எதிர்ப்புணர்வில் அவை தவிக்கின்றன! அந்த எதிர்ப்பிற்கும், அந்த பரிதாப உணர்விற்கும் காரியகாரண பந்தம் என்ன இருக்கிறது? என்ன பலன் இருக்கிறது? அந்த அளவு அர்த்தமற்றது – செயல்திறன் அற்ற நபர்களாகும் சிப்பிச் சிதறல்கள் - சமுத்திரத்திடம் பரிதாபம் கொள்வது!” 

உரத்த குரலில் – ஆத்மவிசாரணை செய்வதுபோல – நினைவுகள் தாமாகவே குரல் எழுப்புவதுபோல கிருஷ்ணன் தொடர்ந்து பேசலானான்: 

“கர்ம பாசத்தால் சிக்கிக்கொண்ட மானிடன், கர்மத்தின் வேதனையிலும், போதையிலும் மயங்கிப்போய் வாழ்கிறான். அதற்கே உரிய சலனங்களும் தன்மைகளும், சுய இச்சையால் செய்யும் கர்மாக்கள் எனவும் பிரம்மித்துப்போய் மானிடன் ஆவேசத்தோடு வாழ்கிறான். ஆனால், பரமாத்ம தத்துவமறிந்த மேன்மக்களுக்கு ஒரு நிமிஷமல்ல, எல்லா நிமிஷங்களிலும் இந்த கர்மபாச பிணைப்பு துக்கமேயாகும்! மூடமனங்கள் – அதனை, சுகமென்றும் சாபல்யமெனவும் தப்பர்த்தம் கொள்கின்றன. தனித்தன்மைகள் கொண்ட மகாத்மாக்கள் கூட – பிரம்மம் கலந்த மன ஈடுபாட்டால் சில நேரங்களில் அதில் சுகம் கண்டு மகிழ்ச்சி கொள்ளவும் – துக்கம் கண்டு அழுதரற்றவும் செய்கின்றனர்!” 

கடினமான தத்துவ உரைகளின் அந்த புகைமண்டலத்தைப் பார்த்து சலனமற்று அமர்ந்திருந்த திரௌபதியை நோக்கி, மீண்டும் புன்முறுவல் செய்தான் கிருஷ்ணன். அப்பொழுதுதான் பிரக்ஞை உலகிற்கு மீண்டு வந்தவள் போல – கிருஷ்ணன் அமர்வதற்கென பீடம் ஒன்றினை நகர்த்தியிட்டு உபசரணை செய்தால் திரௌபதி. பீடத்திலமர்ந்தவன் – மீண்டும் புன்முறுவல் மாறாமலே தொடர்ந்தான்:

“திரௌபதி! ஆயுளை முடித்துக் கொண்ட கர்ணனுக்கும் உயிரோடிருக்கும் யுதிஷ்டிரனுக்கும் மட்டுமின்றி – நாம் அத்தனை பேருக்குமே கர்மபந்தத்தின் சலனமிக்க கண்ணிகள் அற்றுப்போய் விட்டது என்பதை நீ அறியவில்லை. இனி, நம்மிடம் மிஞ்சி நிற்பது அனுஷ்டானங்கள் மட்டுமே! கர்மாக்கள் ஒதுக்கி, பலனளவில் வாழ்வு நிச்சலம் கண்டாயிற்று! ஆனால் வாழ்க்கை அனுஷ்டானங்களாகிய மற்றொரு பகுதியிலிருந்து தப்பித்துக் கொள்ள அம்மாதிரி நபர்களுக்கு மார்க்கம் இல்லவே இல்லை! கர்ம வாழ்க்கையின் பொலிவு மிக்க பார்வையால் – அனுஷ்டானங்கள் நிறைந்த – வாழ்வுப் போராட்டத்தைக் காண நீ வீணாக முயற்ச்சி கொள்கிறாய். அன்பு கொண்டவர் மத்தியிலிருந்து உன்னை தனியாக ஒதுக்கி வைத்திருப்பதாக நீ – தப்பாக எண்ணிக் கொள்கிறாய். உண்மையில் – நீ ஒதுக்கப்பட்டவளாக இருப்பது – உனக்குள்ளாக மட்டுமே என்பதை நீ அறியவில்லை. 

அடிவானத்தில் கருநிற மேகப் படலங்களின் முதுகில் குதித்தேறி வரும் காலைச் சூரியன் – நீலிமை படர்ந்த உயர் வானத்தில் தலைதூக்கி – துடிப்போடு சிரித்துக் கொண்டிருந்தான். இரவில் பெய்த மழையில் கழுவி சுத்தம் கொண்ட பட்சிளைகளின் மேல் அவனது சிரிப்பு பிரதிபலிப்பு கொண்டது. அவை, வெள்ளி போல பளபளத்தன. பரிபூர்ண எழில் தேடிக்கொண்டுவிட்ட சூரிய பிம்பத்தை நோக்கி – திடமான தனது வலக்கரத்தை தூக்கியவாறு கிருஷ்ணன் சொல்வான்: 

 “அதோபார் திரௌபதி – வானத்தின் துல்யமான நீலப்பரப்பில் வெள்ளியின் பளபளப்போடு சூரியபிம்பம் சோபிதம்கொள்கிறது. வாழ்க்கையாகும் பசும் தளிர்க் கூட்டத்தில், பச்சை நிறம் போர்த்திய வசந்தத்தில், மந்தகாசத்தின் திளக்கத்தால் அவன் பன்மடங்கு எழில் சேர்க்கிறான். சுகம் மிக்க, வாழ்வோடு இயைந்த அவனது இளம் கதகதப்பில் – இயற்கை சுகித்து – புல்லரிப்புக் கொள்கிறது. இந்நிலை, அந்த தேஜசின் வளரும் சுழற்சியின் ஒரு வீழ்ச்சி மட்டுமே... பிந்துக்களில் ஒரு பிந்து! முகம் கருத்த புலர் வேளையில், அடிவானின் முகத்தை துடிக்க வைத்து, நீரடியிலிருந்து சுவர்ண ஜாஜ்வல்யத்துடன் அவன் உயர்ந்து வந்தான். இனி...? இனியும் சில வினாடிகளுக்குப் பின்னர்...? அந்நேரம் அவன் வானத்தின் உச்சியை நோக்கி குதித்துப் பாய்வான். இயல்பே ஆகிய சொந்த சூட்டில் சுயமாக சுட்டுக் கொண்டு, கோபங்கொண்டு வானமத்தியில் ஏறிவந்து ஜ்வாலிப்பான்! வெளிச்சத்தின் காட்சிகளைக் காட்டும், வெளிச்சத்தின் அதிகோரமான எல்லைக்கோட்டில் – எதிர்கொண்டு உற்றுப் பார்ப்பவரது பார்வையை இகழச்செய்தவாறு – உக்ரமாக அவன் சுட்டுப் பொசுக்குகிறான்! விடியலில் ஆலோலம் பாடி குளிர்வித்த – பசுமையைச் சுட்டெரித்திட அதுபோதில், அவன் துடிப்பு கொள்கிறான். சமுத்திரங்களை வற்றி வறட்சியிலாழ்த்திட முடியாததில் அவன் கோபத்துடன் படபடப்பு கொள்கிறான்... அன்புக்குரிய திரௌபதியே – ஆயுட்காலத்தின் வளர்ச்சியின் நிலைக்கலங்களில் ஒன்றேயான மத்தியானப்பொழுது, அவன் பின்னும் வருத்திக் கொள்கிறான்... கடைசியில் – எரிந்து அடங்கும் சிதாமண்டலம்போல – சாம்பலும் கனல் கட்டைகளுமாக குவிந்த மேற்கு வானச்சரிவில் – பரிதாபம் கொண்ட கம்பீரத்துடன், ரத்தம் ஒழுக அவன் மாண்டு மடிகிறான்... அதுவும் விருத்தியின் ஒருவித வீழ்ச்சிதான்! பல்வேறு வித வீழ்ச்சிப் படலங்களில் – ஒன்று!” 

சிறியதொரு ஓய்விற்குப் பிறகு கிருஷ்ணன் தொடர்ந்தான்: :”கிருஷ்னையே! இயற்கையின் இயல்பு நசீகரங்களை எல்லாமே, நீ – கொடும் மத்தியான உக்ரமாக காணுகிறாய். மாறி மாறியும் மாற்றங்களை வெறும் மாற்றம் மட்டுமே என நீ தப்புக் கணக்கு போடுகிறாய்... அந்திப் பொழுதுகளை பார்த்து பெருமூச்சு உதிர்க்கும் யுதிஷ்டிரனிடம் – மத்தியானப் பொழுதின் உக்ரகற்பனை யிலேயே நின்றவாறு நீ தனிப்பட்டவளாகி விடுகிறாய்! உனது இந்த மனநிலை – அர்த்தமற்றதென நீ அறிந்திடல் வேண்டும்!” கர்ணனை இழக்கப்பட்ட துக்கத்தால் பற்றற்ற நிலையில் கடத்தும் யுதிஷ்டிரானது மன அவசங்களின் தன்மையை கிருஷ்ணன் அவளுக்குச் சொன்னான். யுதிஷ்டிரனின் அண்ணன் பதவிக்கு முற்றிலும் உகந்தவனே கர்ணன். அவனைக் கொன்றது பற்றியுள்ள தாபம் – தர்மாத்ஜனுக்கே இயல்பான கொடும் தாப நிலை என்பதை விளக்கி கிருஷ்ணன் விவரித்தான்: 

“திரௌபதி! வீழ்ச்சியின் கெடுதி நிறைந்த முகூர்த்த வேளை ஒன்றில், ராஜசபையில் – கர்ணனின் முகத்தை நீ காணுகிறாய். நற்பண்புள்ள ஒரு ராஜமகள் சபை நடுவில் – துகில் உரியப்பட்டு அவமானம் கொள்ளும் நேரத்தில் நகைத்து கைதட்டும் நீசன் ஒருவனாக கர்ணனை நீ பார்க்கிறாய். அன்று நீ கண்ட காட்சி – சாத்தியமானது! ஆனால் அது, உண்மையின் ஒரு துளி மட்டுமே என்பதை நீ அறிய வேண்டும். அன்பிற்குரியவளே, உன்னிடம் நானொரு உண்மையைச் சொல்வேன் – ஒரு தத்துவத்தைச் சொல்வேன் - விதியின் தண்டனை நிறைவேற்றுவதற்காக நிறுத்தியிருக்கும் அபாக்யவாங்களின் வினாசம் விதியால் வரையறுக்கப்பட்டதுதான். நாசத்தின் தாறுமாறான சட்டவரம்பை மீறிட கடவுளுக்கு கூட உரிமையில்லை. காரண காரிய பந்த வரையறையுள் நாசத்தின் ஆக்கினைக்கு உட்பட்டு நின்றுதான் விதி தன் கைங்கர்யங்களை நிறைவேற்ற வேண்டும். அதனால் தனது அபூர்வ சிருஷ்டிகளின் நாசத்திற்காக, விதி, அதிகடினமான வரையறைகளை உருவாக்குகிறது. குந்தியின் மூத்த புத்திரனாகிய கர்ணனது நசிவிற்கு ஆக்கம் குறித்திட்ட நாள்தான், உன் நினைவில் என்றுமே மாயாத அதே அந்த நாள்! தர்மியாகிய சூரியபுத்திரனது மாற்றமுடியாத விநாசத்திற்கு – துகிலுரியும் அந்த நாளில் – அவனது சிரிப்பு முத்திரை குத்தியது. 

தனது சிந்தனைகளின் தொடர்ச்சியே போல அவன், தனக்குள் முணுமுணுத்தான்: 

“க்ஷத்திரிய வம்சத்தின் சமூக நாசத்திற்கு முதல்கோடு குறித்திட்ட சபிக்கப்பட்ட துர்தினம்!” 

வாய்மூடிய சிந்தைகளின் மயக்கத்திலிருந்து விழித்துக்கொண்டது போல கிருஷ்ணன் தொடர்ந்தான்: 

“தக்க நேரத்தில் ரகசியத்தை வெளிப்படுத்திடாமல் – க்ஷத்திரிய குலத்தை ஒட்டுமொத்தமாக விநாசத்தின் பாதை நோக்கி ஏன் இழுத்து விட்டாய் என்று நீ கேட்கின்றாய். விதியின் வன்மை மிக்க ஆக்கினைகளை மீறிட உன்னால் முடியாது. யாருக்குமே அது சாத்தியமன்று. இதோ, என்னால் கூட அது முடியாத ஒன்று. ஆனால் கர்ணனிடம் – அவனது நிஜத்தன்மையை ஒருமுறை வெளிப்படுத்தினேன்.” 

வியப்பு மேலிட்ட திரௌபதியிடம் – தான் கர்ணனை சந்தித்ததைப் பற்றி கிருஷ்ணன் விவரிக்கலானான். 

மூலம் : பி. கே. பலகிருஷ்ணன் 
 தமிழாக்கம்: ஆ மாதவன் 
 பதிப்பு: சாகித்ய அகாடமி 
விலை: 100 ரூபாய் 
 பக்கம்: 105 - 109

Wednesday, April 11, 2012

யுகத்தின் கண்ணாடி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது

எழுத்தாளர் அரவிந்தனுடன் உரையாடும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. அவருடைய “குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது”” என்ற காலச்சுவடில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கியமான கதைகள் அடங்கிய தொகுப்பு. எம்.வி. வெங்கட்ராம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான “காதுகள்”” பற்றிய விமர்சனம் படித்ததுண்டு. அதில், முழு நாவலும் வாசித்து முடிக்கும் வரை காதுக்குள் ஓர் உரையாடல் கேட்டுக்கொண்டே இருக்கும் என்றிருந்தது. அதுபோலவே அரவிந்தனின் ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதோ ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மனக்குழப்பத்தின் மௌன எண்ணங்கள் கூட ஒழுங்கற்ற ஒலியுடன் கதைகளில் வெளிப்படும் நுட்பத்தை அழகாகக் கையாண்டிருப்பார். கதைகளை வாசித்து முடித்ததும் அவரைச் சென்று பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்தது. கேணியில் ஒரு முறை சந்தித்தும் அதிகம் பேச முடியாமல் போனது. சமீபத்தின் ஒருநாள் “நம்ம சென்னை” இதழின் அலுவலகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. கால ஓட்டத்தில், படித்த கதைகளின் கருப்பொருள் திட்டுக்களாக பதிந்திருந்தாலும், கோர்வையாக அதைப் பற்றி எதையும் பேச இயலவில்லை. எனவே, பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஆனந்த விகடன் வெளியீட்டில் அவர் எழுதிய “சுட்டி மகாபாரதம்”” வந்திருக்கிறது. அதைப் பற்றிய பேச்சு சுழன்று குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற புத்தகத்தில் வந்து நின்றது. அதனைத் தமிழில் “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என விகடனுக்காக சாருகேசி மொழி பெயர்த்திருப்பதைத் தெரியப்படுத்தினார். உடனே சென்று வாங்கிக்கொண்டேன்.

மகாபாரதத்தின் எத்தனையோ பதிப்புகள் உலகின் பல மொழிகளில் இதுவரை வெளியாகியுள்ளன. மீள் புனைவின் அடிப்படையிலும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் கால இடைவெளியில் சமைக்கப்படுகின்றன. பாரதக் கதையை “நன்மைக்கும் தீமைக்குமான தர்ம யுத்தமாகக் கருதுவது” ஒருவகை. குடும்பச் சண்டையின் நீட்சியாகவும், பங்காளிகளுக்கான குடுமிப்பிடிச் சண்டையின் “பழிக்குப் பழி” காப்பியமாகவும் பார்ப்பது இரண்டாவது வகை. இந்த இரண்டு வித நோக்கிலிருந்தும் சற்றே வித்தியாசப்பட்டு, கதாபாத்திரங்களின் இயல்பான குணாம்சத்தையும் உளவியல் கூறுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆழமாக அலசி, தற்கால மனிதர்களின் வாழ்வியல் அம்சங்களுடன் மிகுந்த நிதானத்துடன் ஒப்பிட்டு, தனக்குக் கிடைத்த சொந்த அனுபங்களையும் இடையிடையே பகிர்ந்துகொண்டு மனிதக் கூறுகளின் சமூக விழுமியத்தை பொதுப்படைத் தன்மையில் இந்நூலில் ஆய்வு செய்கிறார்.

கட்டுரை ஆசிரியரின் விசாரணை கதாபாத்திரங்களின் உளவியல் ஒப்பீட்டையும் தாண்டி “தர்மம்” குறித்த ஆராய்ச்சியில் சில குறிக்கோள்களை முன்வைத்து நகர்கிறது. அவருடைய முதல் குறிக்கோள் “ஆசையை எப்படிக் கையாள்வது?”. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு ஓர் உரிய இடம் இருக்கிறது. இரண்டாவது குறிக்கோள் ‘பொருளாதார வசதி’. “வறுமையான சூழலில் வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?””. மூன்றாவது குறிக்கோள் “தர்மம்” சார்ந்த வாழ்க்கை”. கடைசி குறிக்கோளாக நம்முடைய சிக்கலான வாழ்விலிருந்து விடுதலை.

எதையும் புறக்கணிக்காமல், எந்த ஒன்றையும் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்ப்பதே நம் தத்துவங்கள் உபதேசிக்கும் உட்பொருள். இதனையே “நிஷ்காம கர்மம்”” என்று கீதையின் சாரங்கள் சொல்கின்றது. “தர்மமும், நேர்மையும் தற்போதைய சூழலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறதா?”” என்பதை யதார்த்த வாழ்வின் உட்சிக்கல்களில் பயணித்துக் கொண்டே, இதிகாச மனிதர்களின் மதிப்பீடுகளை அலசுவதோடு தற்கால மனிதர்களின் குண இயல்புகளுடன் ஒப்பீடும் செய்கிறார் குர்சரண் தாஸ். உதாரணமாக...

அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் துரியோதனன் – பொறாமை, பேராசை, கோவம், வெறுப்பு, சூழ்ச்சி, சிறுபிள்ளைத் தனம் போன்ற எதிர்மறை மனித உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவமாக துரியோதனனின் ஆளுமை பாரதக் கதையில் கட்டியெழுப்பப்படுகிறது. இதனால் உண்டாகும் வாழ்வின் மீதான நிச்சயமற்ற தன்மையே அவனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது. குறுக்கு வழியில், அதிகாரத்தைக் கையிலெடுக்கத் துணியும் ஒவ்வொருவரும் துரியோதனனைப் போலவே எண்ணத் துவங்குகிறார்கள். சமீப காலத்திற்கும் இது மிகவும் பொருந்துகிறது. அதிகார அரசியலே தற்கால சமூகக் கட்டமைப்பை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சபையினர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் திரௌபதி – ஆண்கள் வீற்றிருக்கும் சபையில் திரௌபதியின் முந்தானையைப் பற்றி இழுக்கிறார்கள். அதுவே உக்கிரப் போரின் துவக்கமும் கூட. கட்டிய கணவன்மார் உட்பட ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும், அவர்களுடைய அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறாள் திரௌபதி. கௌரவ சபையில் அவளுக்காகப் பரிந்து பேச யாரும் முன்வரவில்லை. துரியோதனனின் இளைய சகோதரன் விகர்ணன் மட்டுமே கடிந்து கொள்கிறான். அந்த வகையில் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் பெண்ணாக திரௌபதியைக் கருதலாம். தற்காலச் சூழலிலும் பெண்கள் துகிலுரியப்படுகிறார்கள். அவர்கள் மீதான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் பெண்கள் அமைப்பும் குரல் கொடுக்கிறார்கள்.

கீழ்குடியில் வளர்ந்து அடையாளச் சிக்கலால் அல்லல்படும் கர்ணன் – ஒருவனுடைய முக்கியத்துவம் பிறப்பை வைத்தா? அல்லது தான் சார்ந்த சமூகத்தை வைத்தா? என்ற நுட்பமான சமூக விவாதத்தை கர்ணனே துவக்கி வைக்கிறான். அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். வேலைக்காரிக்குப் பிறந்த விதுரனும் இதே சிக்கலை வேறு விதமாக எதிர்கொள்கிறான். நியாயம் பேசுவதற்காக அவனுடைய குரல் உயரும் போதெல்லாம் சத்ரிய அரசர்களால் இகழப்படுகிறான். காட்டில் வளரும் ஏகலைவனையும் இவர்களுடன் ஒப்பிட்டுப் பேசலாம். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய கல்வி மற்றும் திறமைக்கான மரியாதை மறுக்கப்படுகிறது. மூன்று பேருமே வெவ்வேறு சூழலில் சிக்கிக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள். படித்து முன்னேறி நல்ல பதவிக்கு வந்து அதிகாரத்துடன் ஆளுமையாக வளம் வந்தாலும், சாதிய ஒடுக்கு முறையால் வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலித்தையும் கர்ணனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பத்திரிகையாளர் சந்திப்பில் கதறியழும் உயர்நீதிமன்ற நீதிபதியையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். கட்டைவிரலை இழந்த ஏகலைவனைப் போல பலரும் வெளியில் தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும் நிதர்சனமே.

குருவம்சத்தைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் பீஷ்மர், தர்மத்தை நிழலெனத் தொடரும் யுதிஷ்ட்ரன், போர்க்களத்தில் துவண்டு நிற்கும் அர்ஜுனன், விஸ்வரூபம் எடுக்கும் சூழ்ச்சிக்கார கிருஷ்ணன், ஆந்தை போல இரவில் முழித்து துரோகம் இழைக்கும் அஸ்வத்தாமன் என இதிகாசப் பாத்திரங்கள் யுகங்கள் கடந்தும் வாழ்வியல் கோட்பாடுகளை முன்வைக்கின்றன.

வாழ்வு என்பதை ”நம்மைக் காலம் தான் சமைக்கிறது”” என்று யுதிஷ்டிரன் வர்ணிக்கிறான். கர்ணனுடைய வர்ணனை சற்றே வித்தியாசமானது. “நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உலகம் வேகமாகக் கடந்து செல்கிறது” என்கிறான். அஸ்தினாபுர அரியணைதான் வாழ்வின் மீதான துரியோதனனின் ஒரே நம்பிக்கை. காற்றின் அசைவில் நாகமெனப் படமெடுக்கும் கற்றைக் கூந்தலை அள்ளி முடிக்க வேண்டும். எனவே “நீசர்களுடைய இரத்தத்தைத் தடவி, கூந்தலைக் கழுவி அள்ளி முடிப்பேன்” என்கிறாள் திரௌபதி. ஒட்டுமொத்த சத்ரியர்களின் வாழ்வே யுத்தத்தை முன்வைத்து நகர்வது. “வீர மரணம்” சொர்க்கத்தை வசப்படுத்தும்” என்ற நம்பிக்கை உடையவர்கள் மாவீரர்கள். (தற்காலத்தில் மத அடிப்படைவாதிகளின் தற்கொலை தாக்குதலை இதிகாச ‘வீர மரண’-த்துடன் ஓர் இடத்தில் நுட்பமாக ஒப்பிடுகிறார் ஆசிரியர்).

மனித குணம் தீய குணங்களால் வார்க்கப்பட்டது. எனவேதான் யுத்தம் ஆரம்பிக்கிறது. போர் தொடங்கும் முன் பாண்டவர்களுக்கு “நற்செயல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாண்டுவின் புத்திரர்களே, வெற்றியைப் பெற ஏதாவது உபாயத்தை மேற்கொள்ளுங்கள்” என கிருஷ்ணர் உபதேசிக்கிறார். அதன் பிறகு குருக்ஷேத்ரப் போர் “தர்ம யுத்தம்” என்ற பெயரில் நடக்கிறது.

பகடையாட சம்மதித்து சத்ரிய தர்மத்திற்கு உட்படுவதுடன், யக்ஷனின் கேள்விகளுக்கும் தர்மத்துடனே பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். என்றாலும் பல ஆண்டு வனவாசத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போதும் தர்மத்திலிருந்து பிசகவில்லை. தன்னுடைய வாழ்நாளில் அவன் சொன்ன ஒரே பொய், உக்கிரமான போர் சூழலில் “என்னுடைய மகன் இறந்துவிட்டானா?” என்று துரோணர் கேட்கும் கேள்விக்கு மட்டும் தான். அதற்கு தருமபுத்திரர் “அஸ்வத்தாம அதங்குஞ்சித” என்கிறான். “போர் யானை” என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்கிறான். இதனைக் கேட்ட துரோணர் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பாண்டவர்களின் வெற்றிக்கு இந்தப் பொய்யும் உதவி செய்கிறது. கிருஷ்ணனே அவரைப் பொய் சொல்லத் தூண்டுகிறார். இறுதியாக போரில் வென்று பாண்டவர்கள் அரியணை ஏறுகிறார்கள்.

“நான் இந்த உலகையே வென்றுவிட்டேன்... ஆனால் என் உறவினர்கள் எல்லோரையும் அழித்தபின். என்னுடைய பேராசை குறித்து, மனம் வலியால் துடிக்க, எண்ணிப் பார்க்கிறேன்: இந்த வெற்றி எனக்கென்னவோ தோல்விபோல் படுகிறது” என யுதிஷ்டிரன் புலம்புகிறான். மன சஞ்சலத்துடன் சில ஆண்டுகள் அரசாட்சி செய்துவிட்டு, அதன் பிறகு அபிமன்யுவின் மகன் பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு கானகம் செல்லத் தீர்மானிக்கிறான். பின் உபவாசமிருந்து மனித உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அப்பொழுது, அவன் வளர்த்த நாயும் பிரிய மனமில்லாமல் உடன் செல்கிறது. நாயை சொர்க்கலோகத்தின் உள்ளே விட தேவலோகக் காவலர்கள் மறுக்கிறார்கள். மனித உணர்வுகள் அவனை ஆட்கொள்கிறது. எனவே “நாயுடன் மட்டுமே சுவர்க்க லோகம் செல்வேன். இல்லையேல் மேலான வாழ்க்கை கிடைப்பதாயினும் வேண்டாம்”” என்று மறுத்து விடுகிறான் யுதிஷ்டிரன். பாரதக் கதையின் இந்த இடத்தில் தான் தர்மத்தைக் கண்டுணர்ந்ததாக கட்டுரையாசிரியர் சொல்கிறார். விலங்குதானே என்று பாவிக்காமல், தன்னை நம்பி வந்ததால் அதனுடைய நலனையும் தர்மர் யோசிக்கிறார். தன்னைத் தவிர அர்ஜுன, பீமா மற்றும் உடன் வாழ்ந்த அனைவரும்” நரகத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மனத்துயர் அடைகிறான். உடனே சொர்க்கத்தைத் துறந்து நகரத்திற்குச் செல்லத் தீர்மானிக்கிறான். எல்லா ஜீவராசிகளுக்காகவும் இறக்கப்படும் யுதிஷ்ட்ரனின் இந்த செயல் மேன்மையானது. மகிழ்வோருடன் சேர்ந்து மகிழ்வதும், துயரத்தில் இருப்பின் எல்லா ஜீவராசிகளுடனும் சேர்ந்து அழுவதும் தான் உயர்ந்த மனிதப் பண்பு என்பதை நிரூபிக்கிறான். இதையே மகாபாரதமும் சுட்டிக் காட்டுகிறது.

“யாருடைய மனதில் பிறர் நலன் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பதே செயலிலும் சிந்தனையிலும், சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம்” என்றால் என்ன என்று தெரியும்.

நவீன இந்தியாவில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. தன்னலத்தோடு வாழ்வதே புத்திசாலித்தனமாகவும், அறிவாளித்தனமாகவும் கருதப்படும் தற்காலச் சூழலில் சமதர்மம் கேலிக் கூத்தாகக் கருதப்படுகிறது. கலைகளும் விஞ்ஞானமும் விண்ணைத்தொட்டு மேகப் பொதியில் சுற்றப்படுகின்றன. தனிமனித பொருளீட்டும் சக்தியும் உயர்ந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்த அதே அளவிற்கு தீமையும் வளர்ந்து நிற்கிறது. முன்னேற்றமும், சமூகச் சீர்கேடும் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே வளர்கிறது. அவற்றில் பயணிக்கும் நம்முடைய மனசாட்சி மட்டும் ஏன் தர்மம் குறித்து சிந்திப்பதில்லை?. மனிதப் பண்புகளை இடக்காலால் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் வெற்றியை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். யுத்தத்திற்குச் செல்லும் மாவீரனைப் போல. யுகத்தின் கண்ணாடி ரசம் உதிராமல் இருக்கிறது. ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் உடலாமே. நம்முடைய சிரிப்பும், அழுகையும் கண்ணாடி பிம்பமாகத் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு ஓடலாமே!

நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குர்சரண் தாஸ்

“இந்தியா அன்பௌன்ட்” என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தின் நூலாசிரியர். பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம். பிபிசி-யால் படமாகவும் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகங்களான “டைம்ஸ் ஆப் இந்தியா””, “நியூஸ் வீக்””, “நியூயார்க் டைம்ஸ்””, “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்””, “ஃபாரின் அஃபேரஸ்”” போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். “எ ஃபைன் ஃபேமிலி”” என்ற நாவலும், “தி எலிஃபென்ட் பாரடைம்”” என்ற கட்டுரை நூலும், “த்ரீ இங்கிலீஷ் ப்ளேஸ்”” என்ற நூலில் பலருடைய கவிதைகள் மற்றும் கதைகளையும் தொகுத்திருக்கிறார்.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அங்கே வேதாந்தமும், தத்துவமும், சமஸ்கிருதமும் பயின்றவர். “P & G” இந்திய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து, அதன் பின், ஆறு நாடுகளில் வேலை பார்த்து, 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளர் ஆனவர். தற்போது டெல்லியில் வசிக்கிறார்.