Saturday, February 25, 2012

போதையூட்டும் புத்தக வாசனை

“இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சி நடைபெறுவது சந்தேகமே” என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி விவாதத்திற்கு உள்ளானது. என்றாலும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே முடிவெடுத்தபடி ஜனவரி 5ஆம் தேதி ஆரம்பித்து 17ஆம் தேதிவரை புத்தகங்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 35 ஆண்டு களாக இத்திருவிழா சென்னையில் நடை பெற்றுவருகிறது.

70களின் இறுதியில் 22 கடைகளுடன் ஆரம்பித்து, இத்தனை ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது பப்பாசி என்று அழைக்கப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI). கடந்த சில ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியின் எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

இந்த ஆண்டில் 383 புத்தக உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 500க்கும் அதிக மான கடைகளில் பொதுப் புத்தகங்களும், சிற்றிதழ்களும், பாடப் புத்தகங்களும், ஒலிப் புத்தகங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டு நூல்களும் கிடைக்கும்படி காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒன்பது பெரிய நுழைவாயில்களுடன் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப் பட்டிருந்தது.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களே கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது போன்ற மொழிகளில் குறைந்த புத்தகங்களே காணக் கிடைத்தன. சுயசரிதம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், தத்துவம், பொருளாதாரம், சமையல், ஜோசியம், மருத்துவம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கக் கிடைத்தாலும் கல்வி, இலக்கியம், அரசியல், ஆன்மீகம் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட புத்தகங்களையே மக்கள் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு எங்கு திரும்பினாலும் கண்ணில் பட்டது கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன். இது பல்வேறு பதிப்பகங் களால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புதினத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு மலைப்பை ஏற்படுத்துகிறது. படங்களுடன் வெளிவந்த விகடனின் பொன்னியின் செல்வன் நாவலை அதிக வாசகர்கள் விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிந்தது.

கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் பல படைப்பாளிகளின் கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரைகளின் புத்தக வெளியீடுகள் தொடர்ந்து நடைபெற்றவாறே இருந்தன. மூத்த எழுத்தாளரான திலீப்குமாரின் ‘ரமாவும் உமாவும்’ துவங்கி, இளம் தலைமுறை படைப்பாளியான ச. முத்துவேலின் முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு’வரை பல நூல்கள் இதில் அடக்கம்.

மலையாளம், வங்கம், ஆங்கிலம், சீனம், வெல்ஷ், ரஷ்ய மொழி முதலான பல மொழிகளின் முக்கியமான படைப்புகள் அனுபவம்மிக்க மொழி பெயர்ப்பாளர்களின் தமிழாக்கங்களாக வந்திருக்கின்றன. சொந்த மொழிப் படைப்புகளைக் காட்டிலும் மொழி மாற்றப் படைப்புகள் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருப்பதைக் காண முடிந்தது. கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும், நொறுங்கிய குடியரசு, பஷீரின் படைப்புகள், சோஃபியின் உலகம் போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், மாணவர்கள், குறுந்தட்டுக்கள்

பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை உள்ளடக்கிய குறுந்தட்டுக்கள் நிறையக் கடைகளில் கிடைத்தன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், கணக்குப் பாடங்களும்,

நடுநிலை மற்றும் பிளஸ் 2 மாணவர் களுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட எல்லா பாடங்களும் குறுந்தட்டுக்களாக உள்ளன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு துவங்கி 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து பாடங்களுக்குமான குறுந்தட்டுகளும் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு வினா விடைகளும் குறுந்தட்டுக்களில் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், இலக்கணக் குறுந்தட்டுக்கள் மற்றும் இதர பயிற்சி வீடியோ சி.டி.க்கள் கிடைத்தாலும் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் துவக்க வார்த்தைகள் மற்றும் 1 முதல் 9 வரையான எண்களைப் படங்களுடன் உள்ளடக்கிய மரத் தால் செய்யப்பட்ட கன சதுர விளையாட்டுப் (கீஷீஷீபீமீஸீ சிuதீமீs) பொருள் பலரையும் கவர்ந்தது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது மொழியிலுள்ள வார்த்தைகளை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இது உதவும். ஆங்கிலத்தில் இதுபோல நிறையவே இருக்கின்றன என்றாலும் தமிழுக்குப் புதிய வரவு. விலை ரூபாய் 400ஆக இருந்தாலும் பலரும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

ப்ரெய்லி முறையிலான நூல்கள்

இந்திய மொழிகளில் முதன் முறையாகப் ‘ப்ரெய்லி’ முறையில் படிக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் க்ரியா பதிப்பகம் தயாரித்திருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட தற்கால க்ரியா தமிழ் அகராதியை 57 தொகுதிகளாகப் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்

இதனை கண்காட்சியில் வைக்கிறார் கள். ப்ரெய்லி அகராதியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல் கின்றனர். மேலும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களையும் தொடர்ந்து பிரெய்லி முறையில் கொண்டு வருகிறார்கள். இந்தியப் பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து செய்யும் இந்தப் பணிக்குக் காக்னிசென்ட் நிறுவனம் 11 லட்சம் நிதி கொடுத்து உதவி செய்திருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்காக க்ரியா நிறுவனமும் நான்கு லட்சம் ரூபாயைச் செலவிட்டிருக்கிறது என்று க்ரியாவில் பணிபுரியும் கவிஞர் ஆசைத்தம்பி கூறினார்.

எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு

புத்தகத் திருவிழாவின் ஆகச் சிறந்த விஷயமாக எழுத்தாளர் - வாசகர்கள் பங்குபெற்ற ‘நேருக்கு நேர்’ சந்திப்பைக் குறிப்பிடலாம். முதன்முறையாக பப்பாஸி இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுற்றியெழும் இரைச்சல்களுக்கு மத்தியில், திறந்த வெளி அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. சந்திப்பில் அசோகமித்திரன், சா. கந்தசாமி, பிரபஞ்சன்,பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், இரா. நடராஜன், அழகிய பெரியவன், மனுஷ்யபுத்திரன், பாமா, சாரு நிவேதிதா, இந்திரா பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன்போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பெரிய பொருட்செலவில் கண் காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் நடத்தப்படும் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, பாராட்டுரை போன்றவற்றிலிருந்து முழுவதும் வித்தியாசப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சி. பத்திரிகையாளர் ஞாநி மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் முன்னின்று இந் நிகழ்வை நடத்திக்கொடுத்தார்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப் பான வசதிகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சங்கடங்கள், சிக்கல்கள்

பாதாள ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதால், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரும் புதிருமாக வாகன நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கக் கடந்த ஆறு மாத காலமாக ஊழியர்கள் படாதபாடு படுகிறார்கள். இந்த நிலையில் கண்காட்சிக்கு அப்துல் கலாம் அழைக்கப்பட்டபோது முக்கிய நுழைவாயில்கள் எல்லாவற் றையும் அடைத்துவிட்டார்கள். இதனால் சிறு குழந்தைகளும், வயதானவர்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பின்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் இதனால் நெருக்கடியைச் சந்தித்தனர். உச்சப் பாதுகாப்பு வளையத்தில் இருப் பவர்களைச் சம்பிரதாயத்திற்குக் கூப்பிட்டுப் பொதுமக்களை அவதிப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.

விழாவின் இரண்டு நாட்கள் திடீரென மழை பெய்தது. என்றாலும் புத்தகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வந்தவர்கள் எல்லோரும் குறைபட்டுக்கொண்ட ஒரே விஷயம் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகளின் விலையைப் பற்றித்தான். ஒரு கோப்பை காப்பியின் விலை ரூபாய் 20. எந்தவித உணவாக இருந்தாலும் குறைந்தது ரூபாய் 50 செலவு செய்ய வேண்டியிருந்தது. (நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரின் ஆஸ்தான சமையல் குழுவினர் என்ற துண்டுக் காகிதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் எஸ்.வி. சேகரின் உறவினர்கள் என்று நினைத்துவிட்டார்களோ!). ஏன் ஒரே ஒரு உணவகத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? இரண்டு அல்லது மூன்று உணவகங்கள் இருந்தால் வாசகர்களுக்குத் தேர்வுசெய்ய வழி இருக்கும். தான் வைத்ததே விலை என்று எந்த ஒரு தனி உணவகமும் நினைக்க முடியாது.

கண்காட்சியின் மிக மோச மான விஷயமாகக் கழிவறை ஏற்பாட்டைச் சொல்ல வேண்டும். கழிவறையை நெருங்கும்போதே மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திவிடுகிறது கழிவறைக்குச் செல்லும் பாதை. மோசமான பாதையில் அதைவிட மோசமான நாற்றத்தைச் சகித்தபடி சென்றால் கிடைப்பது மிகக் கொடுமை யான அனுபவம். “கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு ஐந்து மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தேன்” என்று சாரு நிவேதிதா தன் இணைய தளத்தில் எழுதியிருப்பது கழிவறைகளின் தரத்துக்குப் பொருத்தமான ‘சான்றிதழ்’.

இதுபோன்ற குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டுக் கண்காட்சியை எதிர் நோக்குகிறார்கள் புத்தகங்களின் காதலர்கள்.

நன்றி: நம்மChennai இதழ்

Tuesday, January 17, 2012

புத்தகக் கண்காட்சியில் வாங்கியவை

புத்தகக் கண்காட்சி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நண்பர்கள் விசாரிக்கத் தொடங்கிவிட்டார்கள். "என்ன புத்தகம் வாங்கலாம்?", "புதுவரவில் எந்தெந்த புத்தகங்கள் சிறந்தது?" போன்ற பல கேள்விகள். கடந்த ஆறுமாத காலமாக ஓயாத பயணம், அலைச்சல், தொழின்முறை சந்திப்புகள் என்றே கழிந்துவிட்டது. விட்டில் பூச்சி வெளிச்சத்தை நேசிப்பதைப் போலத்தானே சிலபல முயற்சிகளையும் வாழ்க்கையில் துணிந்து எடுக்கவேண்டி இருக்கிறது. அணு உலையால் வம்சமே பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. என்றாலும் துணிந்து அந்தத் தொழில்நுட்பத்தைக் கையில் எடுக்கிறோம். மக்களை மயக்கும் சமாதானங்களையும் கூச்ச நாச்சம் இல்லாமல் முன்வைக்கிறோம். தெரியாத விஷயத்தில் சுய விருப்பம் சார்ந்து நாம் எடுக்கும் முடிவுகளும் அப்படிப்பட்டதே. பரிட்சார்த்த முயற்சிகளும் அணு உலையைப் போன்றதே. கரணம் தப்பினால் வம்சத்தின் மரணம் கண்முன்னே நிகழ்ந்துவிடும். இங்கு "வம்சம்" என்பது என்னை நேசிக்கும், என்மேல் நம்பிக்கை வைக்கும் நண்பர்களாக இருப்பதுதான் வேடிக்கை.

"என்ன வேலை செய்யிருங்க கிருஷ்ணா?" என்று சில மாதங்களுக்கு முன்பு கவிஞர் பத்மஜா கேட்டிருந்தார்.

"சும்மாதாங்கா இருக்கேன். ஆனால் வேலை செய்தபோது உழைத்ததை விட, வெறுமனே இருக்கும்போது கடுமையாக உழைக்க வேண்டி இருக்கிறது" என்று அக்காவிடம் பகிர்ந்து கொண்டேன்.

"உண்மைதான் கிருஷ்ணா. முடிந்த வரை கூடுமான அனுபவங்களை பெற்றுக்கொள்ளுங்கள். இதுபோன்ற வாய்ப்பு எல்லா நேரங்களிலும் கிடைக்காது. உங்களுக்கான அபூர்வ தருணங்கள் காத்துக் கொண்டிருக்கிறது" என்றார். கவித்துவமாக...

அக்கா சொல்லியது போலவே அபூர்வ தருணங்கள் தாமாகவே அமைகிறது. "அனுபங்கள்" சக மனிதர்களைப் போல வீட்டு வாசலின் முன்வந்து நிற்கிறது. அவற்றை குசலம் விசாரித்து அனுப்பிவிட்டு திரும்பிப் பார்ப்பதற்குள் ஆண்டின் சரிபாதி ஓடிவிட்டது. சென்ற ஆண்டு வாங்கிய புத்தகங்களே பக்கங்கள் புரட்டப்படாமல் இருக்க, இந்த ஆண்டும் சில புத்தகங்களை வாங்க நேர்ந்தது. புனைவில் எதையுமே வாங்கக் கூடாது என்ற சுய கட்டுப்பாட்டுடனே புத்தகத் திருவிழாவிற்குச் சென்றிருந்தேன். சுயவிதிகள் பல்லிலிப்பதுதானே வாழ்வின் நுட்பமான நிதர்சனம். இந்த ஆண்டும் காலச்சுவடு புத்தகங்களையே அதிகம் வாங்க நேர்ந்தது. முக்கியமான சில புத்தகங்களை இந்த ஆண்டும் வெளியிட்டிருக்கிறார்கள். விலைதான் சற்று கூடுதல். மூச்சைப் பிடித்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், சத்தம் கேட்கும் நேரத்தை எதிர்பார்த்து, விரைந்து ஓட வேண்டும் என்ற முழுப் பிரக்ஞையுடன். இந்த ஆண்டும் திட்டமிட்ட காரியங்கள் நிறையவே இருக்கிறது. வாசிப்பதற்கான நேரம் நிச்சயமாகக் கிடைக்காது என்று தெரிந்தே சில புத்தகங்களை வாங்கியிருக்கிறேன். அவற்றின் பட்டியல் இதோ...

காலச்சுவடு பதிப்பகம்
1. ஆனைவாரியும் பொன்குருசும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
2. உண்மையும் பொய்யும் - பஷீர் (குளச்சல் மு யூசுப்)
3. சங்கராபரணி - மாலதி மைத்ரி
4. நீலி - மாலதி மைத்ரி
5. உண்மை சார்ந்த உரையாடல் - காலச்சுவடு நேர்முகம்
6. மனக்குகை ஓவியங்கள் - சுந்தர ராமசாமி
7. வன்முறை வாழ்க்கை - கண்ணன்
8. திரும்பிச் சென்ற தருணம் - பி ஏ கிருஷ்ணன்
9. பௌத்த வாழ்க்கை முறையும் சடங்குகளும் - ஓ. ரா. ந. கிருஷ்ணன்
10. நவீன நோக்கில் வள்ளலார் - ப சரவணன்
11. நொறுங்கிய குடியரசு - அருந்ததி ராய் - க. பூரணச்சந்திரன்
12. சென்னைக்கு வந்தேன் - பழ. அதியமான்
13. கனவின் யதார்த்தப் புத்தகம் - அரவிந்தன்
14. திரைவழிப் பயணம் - உமா ஷக்தி
15. கச்சத்தீவும் இந்திய மீனவரும் - வி சூரிய நாராயணன், கே. முரளிதரன்
16. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி - ஜெயந்தி ஷங்கர்
17. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து - அரவிந்தன்
18. உமாவரதராஜன் கதைகள் - உமா வரதராஜன்
19. தமிழ் இதழ்கள் - ரா. அ. பத்மநாபன்
20. சோஃபியின் உலகம் - யோஸ்டைன் கார்டெர் (ஆர். சிவக்குமார்)

க்ரியா பதிப்பகம்
21. மேற்கத்திக் கொம்பு மாடுகள் - ந முத்துசாமி
22. தொலைக்காட்சி ஒரு கண்ணோட்டம் - பியர் பூர்தியு

பாரதி புத்தகாலயம்
23. உணவு நெருக்கடி - ஏ. பாக்கியம்
24. தமிழ்ச்செல்வன் சிறுகதைகள் - ச தமிழ்ச்செல்வன்
25. அரசியல் எனக்குப் பிடிக்கும் - ச தமிழ்ச்செல்வன்
26. நந்தி கிராம் – அருணன்
27. இன்னொரு சென்னை - க மாதவ்

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்
28. நடிப்புக் கலையும் பேசும் படக்காட்சியும் - பம்மல் சமந்த முதலியார்
29. இலக்கிய இதழ்கள் - இ. சுந்தரமூர்த்தி, மா. ரா. அரசு
30. நாவல் கலையியல் - முனைவர் இரா. பாலசுப்பிரமணியன்
31. தமிழ் நாடகம் - நேற்றும் இன்றும் - முனைவர் கு. பகவதி

சாகித்ய அகாடமி பதிப்பகம்
32. மௌனத்தின் குரல் - வாஸந்தி
33. பருவம் - எஸ் எல் பைரப்பா – பாவண்ணன்
34. கயிறு - தகழி சிவசங்கர பிள்ளை - சி ஏ பாலன்

காவ்யா பதிப்பகம்
35. ந.முத்துசாமி கட்டுரைகள் - சி. அண்ணாமலை
36. நாடகம் - பதிவும் பார்வையும் - சி. அண்ணாமலை
37. தீராநதி - இலக்கிய இதழ் ஆய்வு - உ சஞ்சை
38. பழமொழிக் கதைகள் - முனைவர் சு. சண்முகசுந்தரம்

தமிழினி பதிப்பகம்
39. வினைப் பாகுபாட்டில் எச்சங்கள் - முனைவர் ச. சுபாஷ் சந்திர போஸ்
40. பகல் கனவு - எம் எஸ் கல்யாணசுந்தரம்
41. அம்மாவின் அத்தை - கி அ சச்சிதானந்தம்
42. தேவதேவன் கதைகள் - தேவதேவன்
43. மீனுக்குள் கடல் - பாதசாரி
44. புனைவும் வாசிப்பும் - எம் வேதசகாய குமார்
45. அ. முத்துலிங்கம் கதைகள் - முழுத்தொகுப்பு

NCBH

46. சிற்பங்களைச் சிதைக்கலாமா? - வெ. இறையன்பு
47. சங்க இலக்கியத்தில் வேளாண சமுதாயம் - பெ. மாதையன்
48. நவீன தமிழ் இலக்கியம் - சில பார்வைகள் - இரவீந்திரபாரதி

சாளரம் பதிப்பகம்
49. அசோகர் கல்வெட்டுகள் - தினேஷ் சந்திர சர்க்கார்
50. கோடுகளும் வார்த்தைகளும் - டிராஸ்கி மருது

உயிர்மை பதிப்பகம்
51. காளி நாடகம் - உன்னி. ஆர் (சுகுமாரன்)
52. அன்புள்ள கி.ரா.வுக்கு - தொகுப்பு: கி. ராஜநாராயணன்
53. கூடங்குளம் - விழித்தெழும் உண்மைகள் - ஆர் முத்துக்குமார்
54. அன்று பூட்டிய வண்டி - ந முத்துசாமி
55. துயில் – எஸ்ரா
56. நெடுங்குருதி - எஸ்ரா

பொன்னி பதிப்பகம்
57. அம்பாரம் - சிறுகதைகள் - பூமணி
58. காக்கைச் சிறகினிலே - இலக்கிய மாத இதழ்
59. ஜென் கதைகள் - சேஷையா ரவி (அகல்)
60. மஞ்சள் வெயில் யூமா வாசுகி (அகல்)

சந்தியா பதிப்பகம்
61. மரங்கள் (நினைவிலும் புனைவிலும்) - மதுமிதா(சுபா ஆண்டி கொடுத்தது)
62. ராமாவும் உமாவும் - திலீப்குமார்

உயிர் எழுத்து பதிப்பகம்
63. உப்பு நாய்கள் - லக்ஷ்மி சரவணகுமார்
64. மரங்கொத்திச் சிரிப்பு - ச. முத்துவேல்

65. மனுஷி - பாமா (விடியல்)
66. தாயார் சன்னதி - சுகா (சொல்வனம்)
67. தபால்காரன் - க.நா.சு (பானு பதிப்பகம்)
68. சென்னையும் நானும்... (நம்ம சென்னை)
69. ஏன் இந்த உலை வெறி - ஞாநி (ஞானபானு)
70. சூர்ப்பனகை - கே.வி.ஷைலஜா (வம்சி பதிப்பகம்)
71. தொலைந்து போனவர்கள் - சா கந்தசாமி (கவிதா)
72. ஒரு யோகியின் சுயசரிதம் - பரமஹம்ச யோகானந்தர்
73. ஏழு தலைமுறைகள் - அலக்ஸ் ஹேலி (சவுத் விஷன்)
74. சாமியாட்டம் - யெஸ். பாலபாரதி (அன்னை ராஜேஸ்வரி)
75. அன்டன் செகோவ் சிறுகதைகள் - தமிழில்: எம் எஸ் (பாதரசம்)
76. ஒரு ஏழை ஏறி வந்த ஏணி - முக்தா சீனிவாசன் (திருக்குடந்தை)
77. சிக்மண்ட் ஃபிராய்ட் - தி.கு. இரவிச்சந்திரன் (அலைகள் பதிப்பகம்)
78. நாடகப் பனுவல் வாசிப்பு - தொகுப்பு: வீ. அரசு, கோ. பழனி (மாற்று)
79. பரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழு (HRPC - TN)
80. ஞாலம் போற்றும் பாலம் ஐயா - வழக்கறிஞர் சீ. ஜெயராமன் (ஜெயகீதா)
81. பிரமிள் படைப்புகள் - தொகுப்பாசிரியர்: கால. சுப்பிரமணியம் (அடையாளம்)

ஆவணப் படங்கள்

1. பாலம் கலியாணசுந்தரம்
2. அம்மாப்பேட்டை கணேசன் ஆவணப்பதிவு
3. தீக்கொழுந்து (தேயிலை விவசாயிகள்)
4. பச்சை ரத்தம் (புலப்பெயர்வு பற்றிய கள ஆய்வு)
5. அறிஞர் அண்ணா வாழ்க்கை வரலாறு
6. முல்லைப் பெரியாறு ஆணை உண்மைகள்
7. இன்றும் வாழும் சோழ மன்னர்கள் கள ஆய்வு
8. மூழ்கும் நதி

Wednesday, January 4, 2012

புத்தகக் கண்காட்சி 2012

புத்தகத்திற்காக அலைந்த காலங்கள் சுவாரஸ்யம் நிறைந்தது. நீண்ட அலைச்சலுக்குப் பின், பல மணிநேர பணம் செய்து, பதிப்பகத்தின் முகவரி கண்டுபிடித்து புத்தகங்கள் வாங்கிய காலம் கூட உண்டு. “டிஸ்கவரி புக் பேலஸ்” வேடியப்பன் அதற்கெல்லாம் புண்ணியம் கட்டிக் கொண்டார். ஒரு தொலைபேசி உரையாடலில் எல்லாம் முடிந்து விடுகிறது.

இரண்டு வருடங்களாக கண்காட்சியை ஒட்டி ஏராளமான நண்பர்களுடன் சந்திப்பு நிகழ்கிறது. வாசித்து வியந்த எழுத்தாளர்களையும், புத்தக வாசிப்பால் உறவாடும் நண்பர்களையும் நேருக்கு நேர் சந்தித்து மகிழ்ச்சியுடன் பேசும் வாய்ப்பு ஆண்டிற்கு ஒரு முறைதானே கிடைக்கிறது. மேற்கொள்ளும் நீண்ட பயணங்களும், புதுப்புது விஷயங்களைத் தேடித் திரிந்தாலும் கடந்த ஆண்டில் புத்தக வாசிப்பு வெகுவாகக் குறைந்துவிட்டது. எனக்கு மிகவும் பிடித்த கேணி சந்திப்பு சார்ந்தும் எழுத முடியாத சூழல்.

1. சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு),
2. பாலு சத்யா சிறுகதைகள் (வம்சி, அம்ருதா),
3. அவன்-அது=அவள் – பாலபாரதி (தோழமை),
4. அன்பின் வழி - க நா சு
5. லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள்

-ஆகியவற்றைத் தவிர்த்து வேறெதுவும் படிக்க இயலவில்லை. இந்த புத்தகங்களை நண்பர்களுக்கு பரிந்துரை செய்கிறேன். நகர வாழ்வின் சிக்கல்களுக்கு உள்ளாகும் மனித இருப்பின் ரெண்டுங்கெட்டான் தனத்தை பாலுசத்யா தன்னுடைய கதைகளில் பதிவு செய்திருப்பார். திருநங்கைகள் குறித்த பாலபாரதியின் நாவலும் அதன் தன்மையில் முக்கியம் வாய்ந்ததே. நீலாநதி –எனும் லக்ஷ்மி சரவணகுமாரின் சிறுகதைகள் முழுவதும் வாசிக்க இயலவில்லை. படித்த வரை வித்யாசமான வாசிப்பனுபவமாகவே அமைந்தது. இந்தப் புத்தகங்களை அழுத்தமாகவே நண்பர்களுக்குப் பரிந்துரை செய்கிறேன்.

சமீபத்தில் ஏற்பாடாகியிருந்த “அழகர்சாமி குதிரை” திரைப்பட கலந்துரையாடலுக்காக “கனகதுர்கா – வம்சி செளியீடு” தொகுப்பிலுள்ள சில கதைகளை வாசிக்க நேர்ந்தது. மீள் வாசிப்பிலும் சிறுகதைகள் ஃபிரெஷ்ஷாகவே இருந்தது. இணையத்திலும் முன்போல் படிக்க நேரம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் முகநூலில் நண்பர்களுடன் மேற்கொள்ளும் அரட்டையில் நேரம் கழிந்து விடுகிறது.

காலச்சுவடு பதிப்பகத்தில் நல்ல பல புத்தகங்கள் வெளிவர இருக்கிறது. முக்கியமாக மொழிபெயர்ப்புப் புத்தகங்கள். ஏற்கனவே சில புத்தகங்களுக்கு முன்பணம் கூட செலுத்தியிருக்கிறேன். சென்ற வருடமே சாகித்ய அகாடமி அரங்கிற்குச் சென்று ஏராளமான மொழி பெயர்ப்பு புத்தகங்கள் வாங்கப்பட்டும் பக்கங்கள் புரட்டப்படாமல் இருப்பது நெஞ்சைப் பிசைகிறது.

சென்றவருடப் புத்தகப் பரிந்துரை

இந்த ஆண்டிற்கான விழா இதோ துவங்கிவிட்டது. ஆய்வுக் கட்டுரைகளையும், திறனாய்வுக் கட்டுரைகளையும், தத்துவ விசாரணை புத்தகங்களையும் பட்டியலில் வைத்திருக்கிறேன். நண்பர்கள், சிலருடைய படைப்புகளை கூகிள் பஸ்சில் குறிப்பிட்டிருந்தார்கள். கூகுள் நிறுவனம் பஸ்சை நிருத்திவிட்டமையால் நண்பர்கள் இங்கு மீண்டும் பரிந்துரை செய்யவும்.

உங்களுடைய பதிலை ஆவலுடன் எதிர் நோக்கிக் காத்திருக்கிறேன்.

(முற்றும்)

மேலும் சென்னை புத்தகக் காட்சியில் தினசரி படைப்பாளியுடன் நேருக்கு நேர் நிகழ்த்சி “க.நா.சு” நூற்றாண்டு விழாவை ஒட்டி நடைபெற இருக்கிறது. தினமும் மாலை F-35 அரங்கில் நண்பர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பிக்கலாம். பின்வரும் அட்டவணையில் முக்கியமான படைப்பாளிகள் விழாவில் பங்குகொள்ள இருக்கிறார்கள்.

வெ 6- மாலை 6-8 மணி- சா.கந்தசாமி

சனி 7- மதியம் 3-5 மணி- பெருமாள் முருகன்
மாலை 6-8 மணி- கி.ராஜநாராயணன்

ஞா 8- மதியம் 3-5 மணி- கவிஞர் சுகுமாரன்
மாலை 6-8 மணி - எஸ்.ராமகிருஷ்ணன்

தி 9 மாலை 6-8 மணி- கண்மணி குணசேகரன்

செ 10 மாலை 6-8 மணி- அ.மார்க்ஸ்

பு 11- மாலை 6-8 மணி- சு.வெங்கடேசன்

வி 12- மாலை 6-8 மணி- இரா நடராஜன்

வெ 13-மாலை 6-8 மணி- அழகிய பெரியவன்

சனி14-மதியம் 3-5 மணி- மனுஷ்யபுத்திரன்
மாலை 6-8 மணி- பிரபஞ்சன்

ஞா 15- மதியம் 3-5 மணி- பாமா
மாலை 6-8 மணி- அசோகமித்திரன்

தி 16- மதியம் 3-5 மணி- ஆதவன் தீட்சண்யா
மாலை 6-8 மணி- சாரு நிவேதிதா

செ17- மதியம் 3-5 மணி- இந்திரா பார்த்தசாரதி
மாலை 6-8 மணி- தமிழ்ச்செல்வன்

Monday, March 21, 2011

அன்பின் வழி - க நா சு

"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர். வாலியை மறைந்து நின்று தாக்கும் காட்சியை அவர்போல் வேறொருவர் சொல்லக் கேட்டதில்லை. ராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் சண்டையின் நடுவில் மகாபாரதக் கர்ணன் வருவான். அவனிடம் யாசகம் கேட்க வந்தவர்கள் பற்றியெல்லாம் சொல்லுவார். யுத்தக் களத்தில் உயிருக்குப் போராடி வாடிவதங்கும் அவனிடம், செய்த புண்ணியங்களின் பலன்களை யாசகம் கேட்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தும் பொழுது ஐயாவின் குரல் நடுங்கும். வாலியும் கர்ணனும் புண்ணியம் செய்தவர்கள் என்பதை விளக்கும்பொழுது அவருடைய கண்களில் கண்ணாடிபோல நீர்த்துளிகள் பளபளக்கும்.

"ஓடியோடி சம்பாதிக்கறத கோயில்ல கொண்டுட்டு போயி கொட்டுறோம். முனிவர்கள் எல்லாம் வாயக்கட்டி வயித்தக்கட்டி தவமா தவம் இருக்காங்க. இதெல்லாம் என்னத்துக்காக? இந்த ஒரு பிறவி போதும்டா ஆண்டவா. எங்களோட உயிரை எமன்கிட்டயிருந்து நீ வாங்கிக்கோ... உன்பாதத்துல சேர்த்துக்கோன்னு செக்குமாடு மாதிரி கோயிலையும், கொளத்தையும், மரத்தையும், மலையையும் சுத்தி சுத்தி வரோம். சீண்டறாரா நம்மள. ஆனால் கடவுளே விருப்பப்பட்டு உசுர வாங்கினது வாலிக்கிட்டையும், கர்ணன்கிட்டயும் தான். அவர்களைத் தவிர வேற யார் அதிர்ஷ்டசாலிகள்." என்பார். ஐயாவின் கருத்துடன் பள்ளி வயதில் நான் முரன்பட்டதில்லை. புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.

தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்களான இராமனும் கிருஷ்ணனும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எதிரிகளைக் கொன்று குவிக்கிறார்கள். இதில் நயவஞ்சகம் வேறு பிரதானம். சிவபெருமான் உலகப் பிறவி எடுக்காதவர் என்பார்கள், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவி எடுக்காதவர் என்பார்கள், தேவையேற்பட்டால் மாயமாக வந்து அழிக்கும் தொழிலை தவறாமல் செய்துவிட்டுப் போவார். துதிபாடுபவர்களைத் தவிர தூற்றுபவர்களுக்கு இதுதான் நிலைமை. முகபது நபிகள் கூட வலியப்போய் சண்டை போட்டதில்லையே தவிர, எதிர்த்து வந்தவர்களுடன் மல்லுக்கட்டி கற்களை வீசி சண்டையிட்டதாகப் படித்த ஞாபகம். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஏசு கிறிஸ்து. "உன் எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு உன்னுடைய மறுகன்னத்தையும் காட்டு" என்று போதித்தவர். உலக மக்களைக் காக்கும் பொருட்டு துன்பத்தை ஏற்று சிறுவயதிலேயே இறந்தவர். அவரின் கதையைத் தழுவிய புனைவுதான் 'அன்பின் வழி'.

ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் என்பவன் கரடுமுரடான குற்றவாளி. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவன். ரோம அரசின் அளவுகோலின்படி சிலுவையில் அறையப்பட முற்றிலும் தகுதியானவன். அதிர்ஷ்ட்ட வசமாக விருந்து நாளில் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் வேறொருவனை சிலுவையில் அறைய ஏற்பாடாகிறது. அப்படிக் கொண்டுவரப்படும் அடிமைக் கைதி வேறுயாருமல்ல 'ஏசு கிறிஸ்து'. சிலுவையில் அறையப்படும் கிறிஸ்துவை கொல்கோதா மலையின் சரிவில் நின்று இமைகொட்டாமல் பார்க்கிறான் பாரபாஸ். சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியவனுள் மெல்லத் துளிர்க்கிறது குற்ற உணர்ச்சி. சந்தித்துப் பேசும் மனிதர்கள் எல்லாம் கிறிஸ்துவை புகழ்கிறார்கள். அவனுக்காக துக்கிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உளவியல் ரீதியாக மனதளவில் சிறைபட ஆரம்பிக்கிறான். மனக் கிலேசங்கள் அலைமோதுகின்றன. அதிலிருந்து விடுபட உதடுகள் பிளந்த அழகு குறைந்த பெண்ணை அரவணைத்துக் கொண்டு சல்லாபிக்க ஆரம்பிக்கிறான். காம இச்சைகளும், சிற்றின்பங்களும் அவனுடைய உறுத்தலைக் குறைக்கவில்லை. நாட்கள் செல்கின்றன.

எலியாஹூவின் கூட்டத்திலிருந்த நாட்களை நினைத்துக் கொள்கிறான். அது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று பிழைக்கக் கூடிய கூட்டம். எலியாஹூ தந்தையின் முறையிலிருந்து பாரபாஸை வளர்க்கிறான். என்றாலும் அவன் மீது உள்ளூர வெறுப்பு. ஏனெனில் இந்தக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட மோவபைட் ஸ்திரீக்கு பிறந்தவன் தான் பாரபாஸ். அந்தக் கூட்டத்திலுள்ள எல்லா ஆண்களுக்கும் வைப்பாட்டியாக இருந்தவள் அவள். பாரபாஸ் யாருக்குப் பிறந்தான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். இருந்தாலும் எலியாஹூ தந்தையாக இருந்து வளர்த்தான். ஒருமுறை நடந்த சண்டையில் பாறையின் இடுக்கில் தள்ளி எலியாஹூவைக் கொன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறான். வளர்த்த தந்தையைக் கொலை செய்தபோது கூட அவன் வருந்தவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாக அமைய நேர்ந்தது அவன் மனதை இம்சித்தது.

பிறிதொரு நாளில் அவன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டு அடிமையாகிறான். சிறைக்கூட்டத்தில் உள்ள கூட்டாளிகளில் ஒருவனுடன் இவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பிணைக்கப்பட்ட கூட்டாளியின் பெயர் ஸஹாக். அவனோ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவன். அடிமை ஒட்டிகளுக்குத் தெரியாமல் ஏசுவை நினைத்து ஜெபம் செய்பவன். தனக்குப் பதிலாகத்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பழகுகிறான் பாரபாஸ். ஸஹாக்கின் தன்மையான நடத்தை அவனைக் கவர்கிறது. ஊமைக்காயம் போல கிறிஸ்துவின் மரணம் அவனை வதைக்கிறது. ஸஹாக்கின் ஜப வழிபாடு அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. இருவரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார்கள்.

"ஏசு கிறிஸ்து - யார் அது?" என்று கேட்கிறார் ரோமாபுரியின் கவர்னர்.

"அவர் எங்களின் கடவுள். அவருடைய அடிமைகள் நாங்கள்" என்கிறான் ஸஹாக்.

"நீங்கள் ரோமாபுரிச் சக்ரவர்த்தி சீசரின் அடிமைகள் இல்லையா?" என்று கவர்னர் கேட்கிறார்.

"இல்லை... என் பிரபுவின் அடிமை. அவர் தான் எங்களின் கடவுள்" என்கிறான் ஸஹாக்.

"இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் கவர்னர். மௌனித்து தலை கவிழ்க்கிறான் ஸஹாக். "உன் கடவுளும் அவர்தானா?" என்று பாரபாஸைப் பார்க்கிறார்.

"இல்லை..." என்று தலையாட்டுகிறான். ஸஹாக் அதிர்ச்சியுடன் பாரபாஸைப் பார்க்கிறான். தன்னுடைய நண்பனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு சிலுவையில் அறைகிறார்கள். சித்ரவதை மூலம் ஸஹாக் கொல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்கிறான். யாருக்காகவும் கலங்காதவனின் கண்களில் ஈரம் கசிகிறது. துரோகம் செய்துவிட்டோமோ என்று யோசிக்கிறான். நாட்கள் உருண்டோடி கவர்னரின் பனிக்காலம் முடிகிறது. மாளிகை வாங்கிக்கொண்டு தலை நகரமான ரோமாபுரி செல்லும்போது பிடித்த அடிமைகளில் ஒருவனாக பரபாஸையும் அழைத்துச் செல்கிறார். தலைநகரில் மீண்டும் குற்றம் செய்து கைதியாகிறான். விசாரணைக்குப் பின் சிலுவையில் ஏற்றப்படுகிறான். ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டு விடுதலை ஆனது முதல், குற்றம் சுமத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுவது வரை பாரபாஸின் மனப்போராட்டத்தை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சொல்கிறார் பேர் லாகர் குவிஸ்ட். 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் நாவலான இதை மொழி பெயர்த்தவர் க நா சு. மொழிபெயர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தீவிர வாசகர்களால் கொண்டாடக் கூடிய படைப்பு.

பூங்குழல் பதிப்பகத்தில் 'அன்பின் வழி' என்ற பெயரிலும், மருதா பபதிப்பகத்தில் 'பாரபாஸ்' என்ற பெயரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். 'அன்பின் வழி'யில் ஏகப்பட்ட பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருக்கிறது. பதிப்பிற்கு முன் செம்மைபடுத்தி இருக்கலாம். அவன், அவள், அவர்கள் போன்ற வார்த்தைகளை வாரியிறைத்து வாசக அனுபவத்தை சோதிக்கிறார்கள். மருதாவில் நான் வாசித்ததில்லை. எனவே அதைப் பற்றிய கருத்தை சொல்வதற்கில்லை.

தொடர்புடைய பதிவுகள்:

1. அன்பின் வழி - கார்த்திக் சரண்
2. பாரபாஸ் - புத்தகம் கிடைக்கிறது

பேர் லாகர் குவிஸ்ட் 1891 - 1974

ஸ்வீடன் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நாடகாசிரியருள் "Par Lagerkvist" முக்கியமானவர். இவர் 1891-ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த "வாக்ஸ் ஜோ" என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புரட்சி மனப்பான்மையுடன் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், சிறுகதைகள் இயற்றித் தமது இலக்கியப் பணியைத் தொடங்கினார். கடுமையான நேரம் (1918), சொர்கத்தின் ரகசியம் (1919), மீண்டும் வாழ்ந்தவன் (1928), தூக்குக்க்கரன் (1934), ஆன்மா அற்ற மனிதன் (1938) போன்றவை இவருடைய முக்கியமான படைப்புகள். நாடக ஆசிரியராக மட்டுமல்லாமல் சிறந்த நாடகாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் விளங்கினார். 'அன்பு வழி' என்ற நாவல் அவருக்கான உலகப் புகழையும் பெற்றுத் தந்தது.


Saturday, March 5, 2011

அவன்-அது=அவள் - பாலபாரதி

"நான் யார்?" - இந்தக் கேள்விக்கான பதில் அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்தது. ஒரே இடத்தில் உண்டு கழித்து ஊரை ஏமாற்றும் போலிகளுக்கோ, உச்சத்தைத் தொட்டு உலகப்புகழ் பெற்று தனிமை தேடும் வேஷதாரிகளுக்கோ மட்டும் இந்தப் புதிர்கேள்வி நிம்மதியைக் கெடுக்கவில்லை. தன்னை ஆணாகவும் சொல்லிக்கொள்ள முடியாமல், பெண்ணாகவும் சொல்லிக் கொள்ள முடியாமல் அல்லல்படும் அர்த்தநாரிகளைத் தான் பெரிதும் அலைக்கழிக்கிறது.

ஆணின் உடலில் பெண்ணின் உணர்வுகளை சுமப்பவர்கள் பூவுலகின் துருதுஷ்டசாலிகள். அவர்களின் உளவியல் சார்ந்த அகவலி சொல்லில் கடக்க முடியாத ஒன்று. இதிகாசத்திலிருந்தே அரவாணிகளின் இருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீஷ்மரை பழிவாங்கும் பொருட்டு பேடியாக சிகண்டி அவதரிக்கிறான், தேவ கன்னிகையின் காம உணர்வை நிராகரித்த காரணத்தினால் ஆண்மை நிரம்பிய அர்ஜுனன் ஒரு வருட காலம் நபும்சகனாக வாழ்கிறான், பஞ்சபாண்டவர்களைக் காக்கும்பொருட்டு மோகினியாக கிருஷ்ணன் மாறுகிறான், ஆயிரத்தொரு இரவுகளிலும் திருநங்கைகள் வருகிறார்கள், இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பொம்மைகளாக ஆட்டி வைத்த அலிகளைப் பற்றியும், மாலிக் கபூர் என்ற அலி அரசாண்டதைப் பற்றியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களுடைய வலி, சமூகச் சிக்கல், உளவியல் ரீதியான போராட்டத்தைத் தொட்ட படைப்பாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் - திருமூலர். (மேலும் படிக்க...)

வலியார் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை
அலியாகி ஆடியுண்பார் - நாலடியார்.

"அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது" என்றாள் ஓளவை.

திருநங்கைகள் வாழ்ந்து அல்லல் பட்டதற்கு இதுபோன்ற சங்க வரிகளே சாட்சி. திருமூலர் சொல்லவரும் விஷயத்தில் எதிர்மறை கருத்துக்கள் தோன்ற வழி இருந்தாலும், நாலடியாரின் வரிகள் ஆதிகாலத்திலிருந்தே அலிகள் வாழ நேர்ந்த அவல வாழ்க்கையை உணர்த்தும்படி உள்ளது. அதனைப் பளிங்குக் கண்ணாடிபோல தெளிவுபடுத்துகிறது ஓளவையின் வரிகள்.

கல்லூரி முதலாமாண்டு என்று நினைக்கிறேன். நா.காமராசன் அவர்களின் "காகிதப் பூக்கள்" பாடத் திட்டத்தில் இருந்தது. அலிகளின் அவல நிலையை எடுத்துரைத்த உருவகக் கவிதையின் சில வரிகள்...

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

ஊமை ஒரு பாடல் பாட, கையில்லாத ஒருவன் அதை எழுதிவைக்க, முழுக்குருடர் வாசிக்க நீங்கள் கேட்டதுண்டா. நாங்கள் ஊமையின் பாட்டானோம். முடவர்களால் எழுதப்பட்டு முழு குருடர்கள் வாசிக்கின்றனர் என்று செல்லக் கூடிய கவிதையின் இறுதிப் பகுதி கொடுக்கக்கூடிய படிமமும், அர்த்தமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.

தலைமீது பூவைப்போம்
தரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

நாற்றம் மிகுந்த பூக்களை தலையில் சூடினாலும் உயிரற்ற பிணத்திற்கு சமமானவர்கள் நாங்கள். கல்லறைக்கு மலர் தூவி வணங்குவதும் முறைதானே? நாங்களெல்லாம் உயிர் சுமக்கும் கல்லறைகள். தாய்மை மனம் வீசுவதால் முலைப் பால் கொடுப்பவர்கள் முல்லைப்பூ போன்றவர்கள். குழந்தையில்லா ஏக்கத்தில் வாழும் பெண்கள் கூட தாழம்பூ போன்றவர்கள். அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கும். வார்த்தை ஜாலம் செய்யக் கூடிய நாங்களோ வாசனையில்லாத காகிதப் பூக்களைப் போன்றவர்கள் என்று கவிதை முடியும்.

பள்ளியில் படிக்கும்பொழுது சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியுடன் சேர்த்து "மஞ்சள், வெள்ளை, ரோஸ்" என்று பல நிறங்களில் காகிதப் பூக்களை சேர்த்துக் கட்டி கொடியேற்றிய ஞாபகம் இருக்கிறது. சேர்த்துக் கட்டிய கொடியானது உச்சத்தைத் தொட்டு, சுருக்கம் தளர்ந்து பறக்கும் பொழுது, காகித மலர்களும் காற்றின் திசையில் பறக்கும். விழாக்கால வண்ண மலர்கள் போல இந்தியத் திருநங்கைகளும் குடும்ப அமைப்பில் கட்டுண்டு தான் கிடக்கிறார்கள். நீரின் அடியில் அழுத்தி பிடிக்கப்பட்ட ரப்பர் பந்து போல எவ்வளவு நாட்கள் தான் இறுக்கத்துடன் வாழ்வது. பிடி தளர்ந்து மேல்பரப்பை அடைவது போல சிலரால் மட்டுமே சுதந்திரமாக வெளிவர முடிகிறது.

வீட்டை விட்டு வெளியேறி, ஆண் என்பதற்கு அடையாளமாக உள்ள உறுப்பை அறுத்தெறிந்துவிட்டு முழுப்பெண்ணாக மாறுகிறார்கள். சுதந்திரப் பறவைகளாக வாழ நினைக்கும் திருநங்கைகள் வாழும் இடம் எப்படிப்பட்டது? அவர்களுடைய உறவுமுறையாக யாரெல்லாம் அமைகிறார்கள்? அபாயகரமான அறுவைச் சிகிச்சையின் வழிமுறை என்ன? அவர்களுடைய கலாச்சாரம் என்ன? என்பது போன்ற நுண்ணிய சித்தரிப்புகளைக் கொண்டு தமிழில் வெளிவந்த நாவல்கள் இரண்டு. ஆனந்த விகடனில் சு சமுத்திரம் எழுதி தொடராக வெளிவந்த வாடாமல்லி மற்றும் நண்பர் பாலபாரதி எழுதி வெளிவந்த அவன்-அது=அவள். திருநங்கைகளின் யதார்த்த சிக்கல்களை அவர்களுடைய துயரங்களை ஆவணமாக்கிய விதத்தில் இரண்டுமே முக்கியமான நாவல்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயவரலாறும் இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான புனைவல்லாத முயற்சி.

வாடாமல்லியின் 'சுயம்பு' மேகலையாக மாறும்வரை பிரம்மிப்பு அகலாது. இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருக்கும். திடீர் பணக்காரி, இரண்டு போலீஸ் சண்டை, ஒரு புரட்சி, அரவாணிகள் எழுச்சி, அதைத் தொடர்ந்த போராட்டம் என்று மேகலையை தலைவியாக்கி முடித்திருப்பார். "யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?" என்று யோசிக்கும்படி இருக்கும். அவன்-அது=அவள் - கோபி, கோமதியாக மாறி எந்த புரட்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் அரவாணிகளின் யதார்த்தக் குறியீடாக நாவல் முழுவதும் வளர்ந்து வருவாள். கூவாகத்தில் வன்கலவி செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் கோபியை தனம் தத்தெடுப்பது முதல், மும்பைக்கு சென்று பிச்சை கேட்டு வாழ்வது, சேலாவாக தத்தெடுக்கப்பட்டு நிர்வாணம்(உறுப்பு நீக்கம்) செய்வது, பத்திரிகையாளரின் மீது காதல் ஏற்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதுவரை இலகுவான மொழியியில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் தன்மை வெளிப்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து வெளியில் வந்தவர்கள், குடும்பமாக வாழ ஆசைப்படுவதும், ஆண் துணைக்காக ஏங்குவதும், உண்மையான கணவன் அமைவது திருநங்கைகளுக்கு சாத்தியமில்லை என்பதையும் நுட்பமாக சொல்லியிருக்கிறார்.

அழுத்தமான சமூகப் பிரச்சனையின் துவக்க முயற்சி எனும் வகையில் நாவலில் சில குறைகள் இல்லாமல் இல்லை. பாலபாரதி முன்னுரையில் சொல்லியது போல, இந்தப் படைப்புகள் அரவாணிகள் குறித்த மரியாதையை இலக்கியச் சூழலிலும், சினிமா சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தினால் அதைவிட பெரிய சந்தோசம் படைப்பாளிகளான இவர்களுக்கு இருக்கப்போவதில்லை. மாறாக இலக்கியத்தின் உச்சப் படைப்பாக இவைகள் கொண்டாடப்படுவதால் பாலபாரதி போன்ற படைப்பாளிகள் உச்சிக் குளிரப் போவதில்லை. திருநங்கைகள் குறித்த சரியான அர்த்தத்தை தெரிந்தவர்களாக நாம் எப்போதும் இருந்ததில்லை. கூவாகத் திருவிழாவைக் கூட செக்ஸ் திருவிழாவாகத்தானே பார்க்கிறோம். மையத்தை உடைக்கும் விதமாக சந்தோஷ் சிவன் இயக்கி தேசிய விருது பெற்ற 'நவரசா' போன்ற திரைப்படம் அரவாணிகள் குறித்த யதார்த்தக் கருத்தை முன்வைக்கின்றன. என்றாலும் தேடித் பார்ப்பவர்கள் இருந்தால் தானே?

திருநங்கைகளான சக்தி பாஸ்கர், நர்த்தகி நடராஜன் ஆகியோரை ஸ்வீகாரம் எடுத்துள்ள நடிகை, பேச்சாளர், எழுத்தாளர் ரேவதி சங்கர் நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம். பிரம்மச்சரியத்தை பேசுபவர் கலவியில் ஈடுபடுவதையோ, யாராவது சாமியார் மாதிரி இமயமலை செல்வதையோ, அவர் எதில் பல் துலக்குகிறார்? அதை எங்கு கொப்பளிக்கிறார்? சாப்பிடுவது என்ன? கக்காவை எங்கே கழிக்கிறார்? எந்த பாறையின் இடுக்கில் தவம் செய்கிறார்? என்பதையும், அரைகுறை ஆடையுடன் பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சீமாட்டி பற்றியோ, விளையாட்டு வீரனின் சாகசத்தைப் பற்றியோ, செய்தியாக வெளியிட்டு முன்பக்கத்தை அலங்கரிக்கும் நாளேடுகளும், இதழ்களும், மீடியாக்களும் ரேவதி சங்கரனின் இது போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"ஒம்போது, பொட்டை, 50-50, உஸ்ஸு, அலி, கொக்கரக்கோ" - போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அடுத்தவர் மனதினைக் காயப்படுத்தும் எனில் அவற்றின் பயன்பாடு தேவையா? என்பதையும் யோசிக்கலாமே.

தொடர்புடைய பதிவுகள்:

1. பாலபாரதியைப் பற்றிய விவரங்கள்...
2. பாலபாரதியின் இணையத்தளம்...
3. அவன் – அது = அவள் :: பாஸ்டன் பாலா பக்கம்

வெளியீடு: தோழமை பதிப்பகம்,
முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,
செல்பேசி: 94443 02967,
விலை: ரூ. 120.

Wednesday, February 23, 2011

திருநங்கையின் வலி - வித்யா

சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.

அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.

கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.

உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?
"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."

நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...
"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."

உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?
"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."

இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.
"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."

ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?
"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."

Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.
"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."

அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...
"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."

அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?
"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."

அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...

"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"

அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?

"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"

அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.

திருநங்கை - பயணங்கள்

உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.

பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.

வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: லிவிங்ஸ்மைல் வித்யா.

தொடர்புடைய பதிவு:

நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்

‘நான் சரவணன் வித்யா’
ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா
விலை: 100 ரூபாய்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html

Friday, February 4, 2011

சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்

தஞ்சை வாழ் மக்களுக்கு கலையார்வம் அதிகம். கேபிள் சங்கர் மட்டும் விதிவிலக்கா என்ன? "சினிமாவின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

"அதற்கு என் தந்தைதான் காரணம், மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அளவில்லா சினிமா காதல் உள்ளவர். நடிகர், நாடகாசிரியர், ஒரு திரைப்படம் இயக்கி அது பாதியில் நின்றிருக்கிறது. அவரின் ஆர்வம்தான் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது" என்று சொல்லியிருந்தார்.

இவர் படித்தது Diplomo in Mechanical Engineering. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் என்.வி.நடராஜன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பின் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனமும், கடா எனும் படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு பெயரிடபடாத படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ப்ரான்ஸில் உள்ள 'டான்' எனும் தமிழ் சேனலுக்காக 'நிதர்சனம்' எனும் குறும்படமும், மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட 'மெளனமே...', அதற்கடுத்து எடுத்த ஆக்ஸிடெண்ட் எனும் குறும்படமும் இவருடைய குறிப்பிடத் தகுந்த படைப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சிறு வேடமேற்று நடித்தவர். 'உயிரே கலந்தது' - சென்னை ஏரியாவுக்கும், 'எங்கள் அண்ணா' - செங்கல்பட்டு ஏரியாவுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விநியோகஸ்தராக செயல்பட்டவர்.

வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, குறும்பட இயக்குனராக, நடிகராக ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் விநியோகஸ்தரான அவருடைய அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அவையனைத்தையும் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறார். வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது. பதிவுகளின் தொகுப்பு கிழக்கு வெளியீட்டின் மூலம் புத்தகமாகக் கிடைக்கிறது.

சினிமா வியாபாரம் - அறிமுகம், 1, 2, 3, 4, 5

தெருக்கூத்து, தப்பாட்டம், காவடிச் சிந்து, நாட்டியம், பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவத்தை விடியவிடிய கண்விழித்துப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அப்படி இருக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் காட்சி ஊடகமான சினிமா முதலிடம் வகிப்பதில் ஆச்சர்யம் இல்லை. 200 கோடியில் தயாராகும் சினிமா முதல், 2 கோடியில் தயாராகும் சினிமா வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் வெளியாகிறது. இவற்றில் வந்த சுவடு தெரியாமல் பெட்டியில் பதுங்குபவை சில. வெள்ளி விழா, வைர விழா என்று பாராட்டைப் பெறுபவை ஒரு சில.

இளைய தளபதி என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் நடித்த "காவலன்" திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே. திரைப்படத்தை வெளியிட அரங்குகள் கிடைக்கவில்லை. கார்போரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. லீனா மணிமேகலையின் "செங்கடல்" தணிக்கை குழுவினரால் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி, கதை திருடுதல், பைனான்சியர் பிரச்சனை போன்ற பல சிக்கல்களையும் தாண்டி ஒரு படத்தின் வெற்றி , தோல்வி நல்ல கதையம்சத்தாலும், பார்வையாளனாலும் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை... அது தவறு என்பதை விளக்க போதுமான ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

***************************************************************

பின்னட்டை வாசகம்:

பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவி-க்கு வந்துவிடுகின்றன. எனில், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர் யார்?

விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப் போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்க்ஷனை குவிக்க வேண்டுமா என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

கோடி கோடியாப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது, வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சமன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ஒரு திரைப்படம் எப்படி எல்லாம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணனின் இந்தப் புத்தகம் திரைத் துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஓர் அத்யாவசியக் கையேடு.

முன்னட்டை வாசகம்:

தியேட்டரில் படத்தைத் திரையிடுவது, டிவி சேனலுக்கு விற்பது மட்டுமல்ல DVD/VCD உரிமை, ஆடியோ கேசட்/ CD உரிமை, இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமை, பிறமொழி மாற்று உரிமை, ரீமேக் உரிமை, பேருந்து / ரயில், விமான ஒளிபரப்பு உரிமை, மெர்சண்டைசிங் உரிமை, ரேடியோ ஒலிபரப்பு உரிமை என பல வழிகளிலும் தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கலாம். நான் நன்கு அறிந்த சினிமாவின் அறியாத வியாபாரப் பக்கங்கள்.

***************************************************************

"சினிமா என்பது மற்ற வியா​பா​ரம் மாதிரி கிடை​யாது.​ வித்​தி​யா​ச​மான வியா​பா​ரம்.​ வீடு கட்டி விற்​பது மாதிரி இல்லை.​ கோடி கோடி​யாய் சம்​பா​தித்து விட​லாம் என யாரும் இந்த துறைக்கு வந்து விடா​தீர்​கள்.​ கன​வு​க​ளு​டன் ​ வாருங்​கள்.​ இது கலை சார்ந்த வியா​பா​ரம்.​ சில வியா​பா​ரங்​க​ளில் மட்​டும்​தான் சந்​தோ​ஷம் கிடைக்​கும்" - இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் கமல்ஹாசன். இங்கு ஒரு சூஃபிக் கவிதையை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"பாதுகாப்பு வேண்டுமென்றால், கரையில் நில்
பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுள் செல்."
-சூஃபி கவிஞர் சா' அதி

சினிமா என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் விஷயம். சினிமாவின் ஏதேனும் ஒரு கூறு நம்மை நொடிக்கு நொடி சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனினும் அவற்றை வியாபாரம் செய்வது அச்சுறுத்தல் நிறைந்தது. அதனைத் தெரிந்து கொள்ள உதவும் கையேடு தான் இந்தப் புத்தகம்.

தொடர்புடைய பதிவுகள்:
1. திரைப்படத் தொழில் - தினேஷ்
2. சினிமா வியாபாரம் - பரிசல்காரன்
3. சினிமா வியாபாரம் - அகநாழிகை


சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-