தரையில் இறங்கும் விமானங்கள்: இந்துமதி
விலை: 45 ரூபாய்
ரெண்டு வாரம் முன்பு என் அக்கா ஜெயாவோட வீட்டுக்கு போயிருந்தேன். 2009 புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை அவள் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். அதில் கி.ராவோட பிஞ்சுகள் என்ற புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தேன். அவள் அந்த புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம்.
எங்கே ஜெயா பிஞ்சுகள் புத்தகத்த காணோம். யாருக்காவது கொடுத்து இருக்கையா என்ன? -ன்னு கேட்டேன். அப்படி எதுவுமே நான் வாங்கலயேடா... பொன்னியின் செல்வனும், கால் முளைத்த கதைகளும் தான் வாங்கினேன்னு சொன்னாள்.
அடடா ரொம்ப நாள் கழிச்சி கி. ராவோட எழுத்துக்களை படிக்கலாம்னா இப்படி ஆயிடுச்சேன்னு புலம்பும் போது இந்துமதியோட தரையில் இறங்கும் விமானங்கள் என்ற புத்தகம் கிடைத்தது.
இந்த புத்தகம் நீ வாங்கி இருக்கயா ஜெயா நான் எடுத்துட்டு போறேன்னு சொன்னேன். ஒ அதுவா? என் பிரண்டோடதுடான்னு சொன்னாள்.
என் அக்கா வீட்டிலிருந்து எங்க ஊருக்கு 2.30 மணி நேர பஸ் பயணம் என்பதால் Bus Travel -ல படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் முதற்பதிப்பு 1977 -ல் வந்திருக்கிறது. இன்றும் சந்தையில் கிடைக்கிறது.
ஏழை பிராமண குடும்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கல்லுரிப் படிப்பு முடித்து விரும்பிய வேலையை தேடுவதற்கும், தனக்கு கிடைத்த எதோ ஒரு வேலைக்கு செல்வதற்கும் இடைப் பட்ட காலத்தில் ஒருவன் சந்திக்கும் உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகளின் கோர்வை இந்த நாவல்.
பிகாம் படித்து முடித்த ஒருவன் தனது தந்தையின் சிபாரிசில் நேர்முகத் தேர்வுக்கான அறையில் காத்திருப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. படித்தது பிகாம் என்றாலும், அவனுடைய கனவுகள் இலக்கியத் தரமான ஒரு இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தவேண்டும் என்பது தான்.
இந்தப் புதினத்தில் Maximum 10 -லிருந்து 15 கதாப் பாத்திரங்கள் தான் வரும் ஆனால் ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் அதற்கே உரிய அழுத்தத்துடன் இந்துமதி கையாண்டுள்ளார். குறிப்பாக விச்சுவின் அண்ணியாக வரும் கதாப் பாத்திரத்தை அருமையாக கையாண்டுள்ளார்.
ஒரு பெண்ணிற்கும், அவளுடைய கணவனின் தம்பிக்கும் இடையிலான உறவை தாய்க்கும் மகனுக்குமான, தோழிக்கும் தோழனுக்குமான, படைப்பாளிக்கும் வாசகிக்குமான உறவாக மேலும் சொல்லுவதென்றால் விமர்சகருக்கான உறவாக பன்முகத்தன்மையில் சித்தரித்திருப்பது அருமை.
குடும்பப் பொருப்பைச் சுமக்கும் விச்சுவின் அண்ணன் மாற்றலாகி வட இந்தியா செல்வதால் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை விச்சுவிற்கு. எனவே தனது கனவுகளுடன் எந்தக் கவலையுமின்றி வானில் வட்டமிட்ட விச்சு தனது லட்சியங்களையும், கனவுகளையும் விட்டு விட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம்.
விச்சுவின் சூழ்நிலையையும், அவனுடைய உறவுகளையும் உறுத்தலில்லாத முறையில் இந்துமதி கொண்டு சென்றுள்ளார். உறவுகளை கொச்சையாகவே சித்தரிக்கும் மெகா சீரியல் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.
1 comment:
தரையில் இறங்கும் விமானங்கள்:
\\ஒரு பெண்ணிற்கும், அவளுடைய கணவனின் தம்பிக்கும் இடையிலான உறவை தாய்க்கும் மகனுக்குமான, தோழிக்கும் தோழனுக்குமான, படைப்பாளிக்கும் வாசகிக்குமான உறவாக மேலும் சொல்லுவதென்றால் விமர்சகருக்கான உறவாக பன்முகத்தன்மையில் சித்தரித்திருப்பது அருமை.//
தி.ஜாவின் சாயல் மிக கொண்ட நாவல் எனினும் ,அருமையான நாவல்.ஒரு குறிப்பிட்ட வளர் வயதில் ,மனம் செய்யும் மென்மையான பயணங்களும் ,பின் தரை தட்டுவதையும் சிறப்பாக சொல்லும் நாவல்.இந்து மதியின் மாஸ்டர் பீஸ்.
Post a Comment