ஆடூர் கோபாலகிருஷ்ணன் - அக்பர் கக்கட்டில் விலை: 90
தமிழில்: குளச்சல் மு யூசப்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஹாலிவுட்டில் ஒரு சினிமா வெளிவந்தால் அதைப் பற்றி நிறையவே பேசுகிறோம். கதையிலிருந்து தொழில் நுட்பம் வரை ஒன்று விடாமல் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம். பல பதிவர்கள் பெருமையாகப் பதிவிடுகிறார்கள்.
'ஸ்லம் டாக் மில்லியனர்' - போன்ற வர்த்தக ரீதியான திரைப் படங்கள் கூட அதிகமாக பேசப்படும் போது நம்முடைய திரை சித்திர மேதைகளின் படங்கள் ஏன் பேசப் படுவதில்லை! ஆஸ்காரில் வெற்றி பெரும் திரைப்படங்களை உடனே பார்த்து மகிழ்ச்சியுறும் நாம் இந்தியக் கலைப் படங்களை ஏன் ரசிப்பதில்லை.
மற்றவர்களின் கலைப் படைப்பை ரசிப்பது தவறில்லை. ஆனால் நம்முடைய கலைவடிவத்தையும் ரசிக்க வேண்டும் தானே. அப்படி ரசிக்கப் பட வேண்டிய திரைசித்திர மேதைகளில் ஒருவர் தான் 'ஆடூர் கோபால கிருஷ்ணன்'. உலக அளவில் இந்திய சினிமாவிற்கு உரமிட்ட முக்கியமானவர்களில் ஒருவர்.
அவரைப் பற்றி அக்பர் கக்கட்டில் மலையாளத்தில் எழுதிய "வரூ, ஆடூரிலேக்கு போகாம்" என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம். இந்த நூலினை குளச்சல் மு யூசப் நல்ல முறையில் மொழி பெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து குறிப்பிடத்தக்க பல நல்ல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் 'உலகப் புகழ் பெற்ற மூக்கு, மீசான் கற்கள்' போன்ற மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கன.
சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 4 முறையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது 2 முறையும் பெற்ற ஆடூராரின் திரை சித்திர படைப்புகள் 'கான், வெனீஸ், பெர்லின்' போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.
திரைப்படத் துறையில் வாழ்நாள் பங்களிப்பு அளித்ததற்காக 2004 -ஆம் ஆண்டு தேசத்தின் மிக உயரிய சாதனை விருதான 'தாத்தா சாகேப் பால்கே' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'பத்மஸ்ரீ, பத்ம விபூஷன்' போன்ற தேசத்தின் உயர்ந்த விருதுகளும் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவருடைய படங்களின் மூலம் தேசிய விருதுகளையும் புகழையும் அடைந்தவர்கள் ஏராளம்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையிலிருக்கும் ஆடூரார் இதுவரை 10 முழுநீளத் திரைப் படங்களையும், 23 குறும்படம் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய 6 திரைக்கதை நூல்களும், 3 சினிமா பற்றிய மலையாள நூல்களும், 3 ஆங்கில நூல்களும் இது வரை வெளிவந்திருக்கின்றன.
இவருடைய முழுநீளப் படங்களின் பட்டியல் பின்வருமாறு:
1. சுயம்வரம் (1972)
2. கொடியேற்றம் (1977)
3. எலிபத்தாயம் (1981) 'Watch in youtube': 1
4. முகாமுகம் (1984) - நேர்முகம்
5. அனந்தரம் (1987) - அதன் பிறகு
6. மதிலுகள் (1989)
7. விதேயன் (1993) - அண்டி வாழ்பவன்: 1 2 3 4 5 6 7 8 9 10
8. கதா புருஷன் (1995) - கதாநாயகன்
9. நிழல் குத்து (2002)
10. நாலு பெண்ணுங்கள் (2004) 'Watch in youtube': 1 2 3 4 5 6 7 8 9
இந்த நூலானது ஆடூரின் படைப்புலகம், அந்தத் துறையில் சாதித்தது மற்றும் அவருடைய கலையுலக நண்பர்கள், அவருடைய சமூகப் பார்வை என பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. இது ஒரு நேர்முக வடிவில் இருப்பதால் அவருடைய ஆரம்ப கால சிக்கல்கள் பலவற்றையும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.
ஒரு முறை மதிலுகள் படம் எடுப்பதற்காக வைக்கம் முகமது பஷீரைக் காணச்சென்ற போது, திடீரென பஷீர் உள்ளே சென்று சிறிது பணம் எடுத்துக்கொண்டு வந்து அடூரிடம் கொடுத்தாராம். அதில் அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் என சிறிது பணமும் கொடுத்து அசீர்வதித்தாராம். மேலும் படம் நன்றாக வரும் கோபால் அதன் மூலம் நீங்கள் நிறைய பணமும், புகழும் அடைவீர்கள் என்று சொன்னாராம்.
அதுபோலவே மதிலுகள் நன்றாக ஓடி நிறைய லாபத்தைக் கொடுத்ததாம். அனைத்தும் பஷீரின் ஆசிர்வாதம் என்று அடூர் சொல்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் அடூரின் இளமைக் கால வாழ்க்கை முதல் தற்போதைய வளர்ச்சி வரை நிறைய விஷயங்களை சுவாரச்யங்களுடன் தெரிந்து கொள்ள முடிகிறது.
ஆடூரின் இணையத் தளம்: http://www.adoorgopalakrishnan.in
ஆடூரைப் பற்றி தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பினை காலச்சுவடு பதிப்பகம் நமக்கு அளித்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.
5 comments:
நல்ல பகிர்தல்.
(அமிர்தவர்ஷினி - என் மகளின் பெயர்)
வருகைக்கு நன்றி சாரதா.
ஆடூரைப் பற்றி முழுமையாக எழுதவில்லையோ என்ற குறை எனக்கு இருக்கிறது.
நான் கூட 'மழை' வலைப்பூவில் '32 கேள்விகள்' பதிவில் உங்களுடைய பெயர் “யசோதா” என்று சமீபத்தில் படிக்க நேர்ந்தது. நல்ல பெயர்தானே!
நன்றி கிருஷ்ணா.
அவசியம் வாங்க வேண்டும்.
உங்களுடைய பதிவுகளை படித்திருக்கிறேன் நண்பரே. நல்ல முயற்சி. 'ஆடூறார், பாஸ்கர், மிருலான் சென், சத்யா சித்தர், மாண்டோ...' என பல முக்கியமான ஆளுமைகள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எழுதுங்கள். 'நிழல்' என்ற பதிப்பகம் முக்கியமான இந்திய திரை சித்திர மேதைகளைப் பற்றி எழுதுகிறார்கள். முடிந்தால் வாங்கிப் படியுங்கள். சென்னை, கே.கே நகரில் அந்த பதிப்பகம் இருக்கிறது என்று நினைக்கிறேன்.
மன்னிக்கவும் 'சத்ய ஜித்ரே' என்று இருக்கவேண்டும். தவறாக 'சத்யா சித்தர்' என்று எழுதிவிட்டேன்.
Post a Comment