Tuesday, June 9, 2009

Veetin moolaiyil oru samayalarai - Ambai

வீட்டின் மூலையில் ஒரு சமையலறை: அம்பை
விலை: 60 ரூபாய்
வெளியீடு: க்ரியா பதிப்பகம்

அம்பை என்கிற புனைப் பெயரைக் கொண்ட சி.எஸ்.லக்ஷ்மி 40 ஆண்டுகளுக்கும் மேலாக இலக்கியப் பங்காற்றி வருகிறார். SPARROW (Sound & Picture Archives for Research on women) என்ற சமூக அமைப்பின் செயல் இயக்குனராக (CEO) இருக்கிறார். 'இயல் விருது' போன்ற முக்கியமான பரிசுகளைப் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய 'வீட்டின் மூலையில் ஒரு சமையலறை' கதைத் தொகுப்பைப் படிக்கும் சந்தர்ப்பம் எனக்கு சமீபத்தில் கிடைத்தது.

அரசியலில் ஈடுபடும் பெண்களின் தர்மசங்கடம், படிக்கும் வயதில் உறவில் ஈடுபட்டு கருக்கலைப்பு செய்யும் பெண்ணின் வலி மற்றும் அவளே குழந்தை பெற்று சந்தோஷப்படும் தருணம், கணவனை இழந்த பிராமணப் பெண்களின் தலை முடியை மழித்தல், முன்காலத்தில் கணவனுடன் உடன்கட்டை ஏறிய பெண்களின் தகவல் என பெண்களின் பல சங்கடங்களை கதைக் கருவாக முன்வைக்கிறார்.

மேற்கூறிய சங்கடங்கள் இருந்தாலும் பெண்களின் ஆன்மாவில் உறைந்திருக்கும் விருந்தோம்பலை நேர்த்தியான முறையில் அழகு சேர கதையில் இயல்வாக சேர்த்துள்ளார்.

இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் யாவும் ‘சமையலறை’ என்னும் தளத்தையே அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஞாபக அடுக்குகளை சிறிது அலசி யோசித்துப் பார்க்கையில் என் பாட்டி, அம்மா போன்றவர்களின் வாழ்வு பெரும்பாலும் சமையலறையிலேயே கழிந்துள்ளது. அவர்களுடைய வாழ்வின் நோக்கமே விருந்தோம்பல் என்ற ஒன்றாக மட்டுமே இருந்திருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். ஓரளவிற்கு நடுத்தர மற்றும் பகுத்தறிவு கொண்ட சமூகத்திற்கே இதுதான் நிலை என்னும் போது விளிம்பு நிலை பெண்களின் வாழ்வியல் சரடு யோசிக்க வேண்டிய ஒன்றுதான்.

தற்போதுள்ள பெண்களின் வாழ்வியல் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது என்பதை ஆமோதித்தே ஆகவேண்டும். எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பது பெருமைக்குரிய விஷயமாக பெண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். பிறக்கப்போகும் தலைமுறையின் வாழ்வியல் ஆதாரம் அவர்கள் தான் என்பதை சிறிதேனும் அறிவார்களா என்று தெரியவில்லை.

அம்பையின் சில கற்பனைக் கதைகளும் இந்தத் தொகுப்பில் இருக்கிறது. அந்தக் கதைகளும் எதோ ஒரு விதத்தில் பெண்ணியம் சார்ந்தே இருக்கிறது.

அம்பையின் சமையலறையையும் பெண்ணியத்தையும் மையமாகக் கொண்டுள்ள இக்கதைகள் நமக்கு முந்தைய தலைமுறை பெண்களின் வாழ்வியல் நிலையைச் சுட்டிக்காட்டுகிறது. கதைகளில் வரும் ஒரு சில விவரிப்புகள் சுலபத்தில் புரிந்துகொள்ள இயலாததாகவே இருக்கிறது. இதுதான் முக்கியமான கதாப்பாத்திரம் என்று எந்த ஒரு நபரை நோக்கியும் கதையைக் கொண்டு செல்லாமல் காட்சிகளை நேக்கி நகர்ந்தவாறே இருக்கிறார். ஆழ்ந்த வாசிப்பால் மட்டுமே இவருடைய படைப்பின் மீதான கற்பனையையும் கருவையும் நம்மால் தொட இயலும்.

அம்பையின் 'காட்டில் ஒரு மான்' சிறு கதையைப் படிக்க திண்ணை தளத்திற்குச் செல்லவும். (Kaattil oru maan)

14 comments:

அகநாழிகை said...

அம்பையின் புத்தகத்தை இப்போதுதான் வாசிக்கிறீர்கள் என்பது ஆச்சர்யம்தான். சிறுகதையுலகில் முக்கியமான சிறுகதைத் தொகுதிகளில் ‘வீட்டின் மூலையில் ஒரு சமையலறை‘யும் ஒன்று. அம்பையின் எழுத்துக்களை வாசிக்கையில் நம்மையும் உள்ளாழ்ந்த ஒரு அனுபவம் தொற்றிக்கொள்ளும். இத்தொகுதியில் உள்ள ஒரு கதை ஒருபால் உறவு குறித்து எழுதப்பட்ட குறிப்பிடத்தகுந்த கதை.
பகிர்தலுக்கு நன்றி.

(சரி, ஏன் தலைப்பு ஆங்கிலத்தில்..?)

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

Unknown said...

நான் கிராமத்தில் வளர்ந்தவன். அதுமட்டுமில்லாமல் நடுத்தரக் குடும்பத்தில் இருந்து வந்தவன். என் ஊரில் குறிப்பிடத் தகுந்த நூலகமும் இல்லை. ஆகவே புத்தகத்தை வாங்குவதும் வாசிப்பதும் குதிரைக் கொம்பாக இருந்தது.

வேலைக்குப் போய் இந்த புத்தகங்களை எல்லாம் வாங்க வேண்டும் என்று ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். இப்பொழுது அது சாத்யமானதால் படித்துக்கொண்டு இருக்கிறேன். இந்த புத்தகம் பல மாதங்களுக்கு முன்பு நிரந்தரப் புத்தக கண்காட்சியில் வாங்கினேன் தற்பொழுதுதான் வாசிக்க நேர்ந்தது.

முன்பு நேரம் இருந்தது. புத்தகம் வாங்க பணம் இல்லை. இப்பொழுது பெரிய தொகைக்கு புத்தகம் வாங்க முடிகிறது. நேரத்திற்காக தவம் இருக்க வேண்டி இருக்கிறது.

உங்களுடைய வலைச்சர பதிவினை முழுவது படித்தேன் அகநாழிகை. அருமையாக இருந்தது.

/--சரி, ஏன் தலைப்பு ஆங்கிலத்தில்..?)--/

அங்கில தலைப்பு தேடுபொறிக்காக.

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

priyamudanprabu said...

////
/--சரி, ஏன் தலைப்பு ஆங்கிலத்தில்..?)--/

அங்கில தலைப்பு தேடுபொறிக்காக.
////


nice

வாசுகி said...

புத்தக அறிமுகம் வாசிக்க தூண்டுகிறது.
எனக்கும் பாடசாலை காலத்தில் புத்தகங்கள் படிக்க கிடைக்கவில்லை.
வாசிக்க வேண்டிய புத்தகம் என்று list போட்டு வைத்திருக்கிறேன்.

நிறைய புத்தகம் தெரிந்து வைத்திருப்பதால் உங்களிடம் ஒரு கேள்வி.
நாடுகளின் புராதன வரலாறு, நாகரீகம், இனம், சமயம் பற்றி அறிய, நல்ல புத்தகம்
ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள். குறிப்பாக சீன புராதன வரலாறு,செவ்விந்தியர் பற்றிய தகவல்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

பகிர்வுக்கு நன்றி.

(சரி, ஏன் தலைப்பு ஆங்கிலத்தில்..?)

இதுதான் எனக்கும் தோன்றியது.

உங்களின் பின்னூட்டம் நெகிழ்வு. உங்களின் வாசிப்பை போன்றுதான் எனதும். நேரம் இருக்குற நேரம் காசு இல்லை, காசு இருக்குற நேரம், நேரமில்லை.

Unknown said...

/-- நாடுகளின் புராதன வரலாறு, நாகரீகம், இனம், சமயம் பற்றி அறிய, நல்ல புத்தகம்
ஏதும் தெரிந்தால் சொல்லுங்கள். குறிப்பாக சீன புராதன வரலாறு,செவ்விந்தியர் பற்றிய தகவல். --/

இலங்கை பற்றிய புராதான வரலாறு கிழக்கு தளத்தில் 'மகாவம்சம்'-என்ற பெயரில் கிடைக்கிறது. இலங்கையைப் பற்றிய முக்கியமான நூல். சற்று படிப்பதற்கு கடினமாக இருந்தது எனக்கு.

மேலும் சீனாவைப் பற்றிய 'மக்கள்-மொழி-இனம்' சம்மந்தமாக NCBH பதிப்பகத்தில் ஒரு புத்தகம் நீண்ட நாட்களுக்கு முன்பு வாங்கினேன். ஆனால் இன்னும் படித்து முடிக்கவில்லை. ஆகவே அதனை பரிந்துரை செய்ய இயலாது. சிறிது அவகாசம் கொடுங்கள் படித்துவிட்டு பரிந்துரை செய்கிறேன்.

மேலும் வரலாறு சம்மந்தமாக வாங்குவதென்றால் சாமிநாத சர்மாவின் புத்தகம் கிடைக்கிறதா என்று பாருங்கள். நான் கூட தேடிக்கொண்டு இருக்கிறேன். கிடைத்தால் தெரியப்படுத்துகிறேன்.

http://nhm.in/shop/home.php?cat=27

வரலாறு சம்மந்தமாக கிழக்கில் நிறைய புத்தகங்கள் கிடைக்கிறது. அங்கு சென்று வரலாறு சம்மந்தமாக தேடுங்கள். உங்களுக்கு பிடித்தால் வங்கிக் கொள்ளலாம்.

பகிர்வுக்கு நன்றி வாசுகி...

Unknown said...

வணக்கம் அமிர்தவர்ஷினி... (இதுதானே உங்களின் பெயர்!).

உங்களுடைய வலைச்சரப் பதிவு 'விதை கவிதை'-யை நீண்ட நாட்களுக்கு முன்பு படித்த ஞாபகம். உங்களுடைய பால்ய நண்பர்களுடனான அனுபவத்தை அழகிய சிறுகதை போன்று எழுதி இருந்தீர்கள்.ரசித்துப் படித்தேன்.

மேலும் என்னையும் அங்கு அறிமுகப் படுத்தியிருந்தீர்கள். மிக்க நன்றி

பதிவில் இணைந்து பின்னூட்டம் அளித்ததற்கு நன்றி அமிர்தவர்ஷினி.

வாசுகி said...

மகாவம்சம் வாசித்துள்ளேன். கஸ்ரப்பட்டுத்தான்.

முதலில் வாசித்த நேதாஜி பற்றிய புத்தகம் பிடித்திருந்ததால்,
கிழக்கு பதிப்பக சில‌ புத்தகம் வாங்கினேன், பிடித்திருந்தது.
அயோத்தி, கி.மு கிபி, யப்பான், நேபாளம் பற்றிய மரியாதையாக வீட்டுக்கு போங்கள் மகாராஜாவே,
பகத்சிங்... போன்றவை.

"வந்தார்கள் வென்றார்கள்" விகடன் பதிப்பு மொகலாய வரலாறு அறிய உதவியது.

சாமிநாத சர்மா பற்றி இப்ப தான் கேள்விப்படுகிறேன்.
தகவல்களுக்கு நன்றி, நன்றி.

Unknown said...

ஐயோ அவர் 'சீன வரலாறு', 'முதல் உலகப் போர்' போன்ற பல வரலாற்று ஆதார நூல்களை எழுதியுள்ளார். நீங்கள் சென்னையில் வசிப்பவராக இருந்தால் சென்னை சாந்தி திரையரங்கம் அருகில் ஒரு சிறு (சாந்தி)புத்தக நிலையம் இருக்கிறது. அங்கு சென்று பாருங்கள் அவருடைய சில புத்தகங்கள் கிடைக்கலாம்.

மற்ற படி அவருடைய புத்தகங்களை நானும் தேடிக்கொண்டுதான் இருக்கிறேன். கிடைத்தால் தெரிவிக்கிறேன்.

முந்தைய தலைமுறை எழுத்தாளர். அவருடைய படைப்புகளின் மறு பதிப்பு வெளிவராதது துருதுஷ்டமே.

வாசுகி said...

சாமிநாத சர்மா பற்றி google இல் தேடி பார்த்தேன்.
நிறைய புத்தகங்கள் எழுதியுள்ளார்.
இது வரை நான் அவரை அறிந்திருக்கவில்லை என்பது கவலை தருகிறது.

அத்துடன் இந்தியா பற்றி எனக்கு போதிய அறிவு இல்லை என நினைக்கிறேன்.

Unknown said...

சாமிநாத சர்மா உன்னதமான எழுத்தாளர். அவர் எழுதிய ஹிட்லர் பற்றிய புத்தகம் மட்டுமே இதுவரை படித்தி இருக்கிறேன். மற்ற புத்தகங்கள் கண்டிப்பாக வாங்க வேண்டுமென்று இருக்கிறேன்.

பூகோள ரீதியாக இந்தியா பெரிய நாடு. பல மொழிகள் வேறு. இங்கு பத்திரிகை மற்றும் பதிப்பகங்கள் ஒருசார்பு கொண்டே செயல்படுகின்றன. ஆகவே சரியான தகவல் கிடைக்காமல் இருப்பது சகஜமே.

நந்தா said...

கிருஷ்ண பிரபு ஜெயாவின் மூலமாய் இங்கு வந்தடைந்தேன்.

அம்பையின் எழுத்துக்கள் உங்களையும் கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சியே. இவருடைய மற்ற இரு சிறுகதை தொகுப்புகளான சிறகுகள் முறியும் மற்றும் காட்டில் ஒரு மான் இரண்டும் கூட நன்றாகவே இருக்கும். வாய்ப்பிருந்தால் படித்துப் பாருங்கள். சம கால பெண்ணிய எழுத்தாளர்களில் குறிப்பிடத் தகுந்தவர்களில் ஒருவர்.

//தற்போதுள்ள பெண்களின் வாழ்வியல் முறையில் பெரிய மாற்றம் வந்துள்ளது என்பதை ஆமோதித்தே ஆகவேண்டும்.//

இதில் சற்றே மாற்றுக் கருத்தினைக் கொண்டிருக்கின்றேன்.தற்போதைய நகர்ப்புற அல்லது உயர்தட்டு பெண்களின் வாழ்வியல் முறையில் மட்டுமே மாற்றங்கள் வந்துள்ளதாய் நான் கருதுகின்றேன். இன்னமும் கிராமப்புறங்களிலும், சிறு நகரங்களிலும் வர்க்கபேதமில்லாது இந்த கதை தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கின்றது. விளிம்பு நிலை பெண்களைப் பற்றிய உங்களது கவலையும் நியாயமானதே. தலித் பெண்ணியம் என்ற ஒன்று உருவானதே அதன் விளைவாலேயே. அது இன்னமும் பல தளங்களைப் பேசிச் சென்றுக் கொண்டுதானிருக்கின்றது.

//எனக்கு சமையல் செய்ய தெரியாது என்பது பெருமைக்குரிய விஷயமாக பெண்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர். பிறக்கப்போகும் தலைமுறையின் வாழ்வியல் ஆதாரம் அவர்கள் தான் என்பதை சிறிதேனும் அறிவார்களா என்று தெரியவில்லை.//

பெண்களை அடக்கப் பயன் படுத்தப்படும் வெகு முக்கிய ஆயுதங்களில் இதுவும் ஒன்றுதான். இயல்பான ஆசாபாசங்களை உடைய பெண்களின் மீது சுமத்தப்படும் இத்தகைய சில புனித பிம்பங்களும், அது தொடர்பான சொல்லாடல்களும் காலத்திற்கும் அவர்களை ஒரு பீடத்தில் ஏற்றி வைத்து அவர்களுக்கென ஓர் எல்லையை வகுக்க வைக்கின்றது.

அதனாலேயே ரிசர்வ் வங்கி கவர்னராகவே ஒரு பெண் அமர்ந்தால் கூட "குழந்தைகள், சமையல், அலுவலகம் மூன்றையும் எப்படி மேனேஜ் செய்கிறீர்கள்?"என்பது போன்ற கேள்விகள் கேட்கப்படுகின்றது. அதே சமயத்தில் அதே ரிசர்வ் வங்கி கவர்னராக ஒரு ஆண் எப்போதாவது வாய்ப்பு கிடைத்தால் நான் என் வீட்டுக்காரிக்கு தோசை ஊற்றிக் கொடுப்பேன் என்பது போன்ற பதில்களுக்கு கூட "ச்சே இவருதான் எவ்ளோவ் நல்லவரு" என்பது போன்ற எண்ணங்கள் நமது மனதில் ஏற்படுகின்றது.

காலம் காலமாய் இன்ன வேலைகள் பெண்ணுடையது, இன்ன வேலைகள் ஆணுடையது என்று விதிக்கப்பட்டு வந்ததன் பாதிப்பு இது. மெல்ல மாறும். :)

உங்களுடைய மற்ற பதிவுகளையும் படித்தேன். இன்னொரு புத்தகப்பிரியரின் பதிவுகளை காண்கையில் இன்னமும் அதிக மகிழ்ச்சி ஏற்படுகின்றது.

Unknown said...

என் அக்காவின் மூலமாக உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. உங்களுடைய கருத்துக்களுக்கும் பகிர்விர்க்கும் நன்றி நந்தா...