Saturday, June 6, 2009

Yesuvin Thozhargal - Indra parthasarathy

ஏசுவின் தோழர்கள்: இந்திரா பார்த்தசாரதி விலை: 90 ரூபாய்
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

அரசியல் நெருக்கடி மிகுந்த காலத்தில் இந்திரா பார்த்தசாரதி போலந்தில் கல்லூரிப் பேராசிரியராக ஐந்தாண்டுகள் தங்கியிருக்க நேர்ந்தது. அப்போது போலந்து அரசியல் நிலவரங்களை ஆழ்ந்து கவனித்து எழுதப்பட்ட புனைவு நாவல் தான் 'ஏசுவின் தோழரகள்'. இது தினமணி கதிரில் தொடராக வெளிவந்தது பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

இதற்கு முன் நான் இந்திரா பார்த்தசாரதியை வாசித்ததில்லை. அவருடைய எழுத்து பெரும்பாலும் அரசியலை மையமாகக் கொண்டது என கேள்விப்பட்டிருக்கிறேன். அதுவே அவருடைய படைப்புகளிலிருந்து என்னை விலகி இருக்கச் செய்தது. ஆனால் அது ஒரு முட்டாள்தனம் என்பதை இந்நாவலை படித்து முடித்தவுடன் தான் தெரிந்து கொண்டேன்.

போலந்தின் இந்தியத் தூதரகத்துடன் தொடர்புள்ள மேல்மட்ட நபர்களைச் சுற்றியே கதை நகர்கிறது. கதை ப்ரொபசர் கதாப் பாத்திரத்திலிருந்து ஆரம்பமாகிறது. ஆனால் தூதரக அதிகாரியான நரேனையும், போலந்து பெண்ணை மணந்து கொண்டு வார்சாவில் குடியேறிய (திருமலை நரசிம்மாச்சாரி தாதாச்சாரி) டி.என்.டி-யின் மகள் ஆஷாவையும் சுற்றியே நாவல் பயணமாகிறது.

டி.என்.டி ஆச்சார்யமான பிராமணக் குடும்பத்தில் பிறந்திருந்தாலும் புரச்சிகரமாக வெளிநாட்டு பெண்ணை மணந்து கொள்கிறான். அவனுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. ஆஷா என்று பெயரிடுகிறார்கள். வெளி நாட்டுப் பெண்ணை மணந்ததால் அவனுடைய குடும்பத்துடனான உறவு அறுந்துவிடுகிறது. துருதிஷ்ட வசமாக அவனுடைய மனைவியை ஒரு காட்டுமிராண்டிக் கும்பல் இந்தியாவில் கற்பழிக்கிறார்கள். அதனால் அவளுக்கு மனச்சிதைவு உண்டாகிறது. எனவே இந்தியாவிலிருந்து போலந்து செல்கிறார்கள். சிறிது நாட்களில் அவனுடைய மனைவி இறந்து விடுகிறாள்.

ஆஷாவின் அம்மா டி.என்.டி-யிடம் தனது மகளை போலந்து கலாச்சாரத்தில் வளர்க்குமாறு கேட்டுக்கொள்கிறாள். ஆஷாவிற்கும் இந்தியாவின் மீது இனம் புரியாத வெறுப்பு. இந்தியாவிற்கு போகவே கூடாது என்று தீர்மானமாக இருக்கிறாள். இந்தியாவை எதிர்த்து சந்தர்பம் கிடைக்கும் போது தூதரக நண்பர்களுடன் காரசாரமாக விவாதம் செய்கிறாள்.

சந்தர்பத்தால் பல வருடங்களுக்குப் பிறகு ஆஷா தனது வேர்களைத் தேடி இந்தியாவிற்குப் பயணமாகிறாள். போகுமிடத்தில் எதிர்பாராத விதமாக ஒரு இந்தியத் தோழி கிடைக்கிறாள். தோழியின் மூலம் அவளுடைய உறவினர்களைக் கண்டு திரும்புகிறாள்.

இந்தியப் பயணம் அவளுடைய எண்ணங்களை மாற்றுகிறது. அவளுடைய இந்திய உறவுகளைப் பற்றி டி.என்.டி-யிடம் விவாதம் செய்ய துடிக்கிறாள். போலந்து திரும்பிய நேரம் ஆஷாவின் அப்பா மரணம் அடைகிறார். இது அவளை மிகவும் பாதிக்கிறது.

இறுதியில் நரேன், ஆஷா, ப்ரொபசர், தூதர், தூர்ஸ்க்கி என அனைவரும் அவரவருக்கு விதிக்கப்பட்ட வாழ்க்கையில் அவரவர் பயணம் செய்வது போல் நாவல் முடிகிறது.

துணைக் கதாப்பாத்திரங்கள் அனைத்தும் நேர்த்தியான முறையில் அமைந்திருந்தாலும் தூர்ஸ்கி கதாப்பாத்திரம் தான் சிறிது குழப்பத்தை ஏற்படுத்துகிறது. தூர்ஸ்கி இரட்டைக் கதாப்பாத்திரமா அல்லது ஒரே கதாப்பாத்திராமா என்பது குழப்பமாகவே இருக்கிறது.

மற்றபடி இது ஒரு விறுவிறுப்பான நாவல். சோர்வுதட்டாத முறையில் நாவலை கொண்டு சென்றுள்ளார். இந்நாவல் 'Comrades of Jesus' என்று ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

8 comments:

VIKNESHWARAN ADAKKALAM said...

உங்கள் விமர்சனம் படிக்க தூண்டும் விதத்தில் இருக்கிறது. எப்போதும் போல அதே புலம்பல் தான் இந்த மாதிரி புத்தகங்கள் இங்கு கிடைக்க சிரமம்...

Unknown said...

நன்றி விக்னேஷ், உண்மையிலேயே நல்ல புத்தகம் தான். உங்களுக்கு தெரிந்த நண்பர்கள் யாராவது சென்னை வருவதாக இருந்தால் தெரியப்படுத்துங்கள். சில நல்ல புத்தகங்களை வாங்கி அனுப்புகிறேன்.

அன்பேசிவம் said...

அப்பாடா இன்னைக்குதான் நான் படிச்ச புத்தகத்தை பற்றி எழுதியிருக்கிறீர்கள், நன்றி. குருதி புனல் படியுங்கள்.

Unknown said...

தேடிக்கொண்டுதான் இருக்கிறேன்... கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன் முரளி.

priyamudanprabu said...

நல்ல புத்தகம்
அருமையான விமர்சனம்
என் நன்பன் இந்தியா (பாண்டிசேரி) வந்துள்ளார் , எனக்காக 3 புத்தகங்கள் வாங்கி வர சொல்லியுள்ளேன் . புத்தகங்களை உங்கள் பதிவுகளில் இருந்துதான் தேர்தெடுத்தேன்

Unknown said...

உங்களை நீண்ட நாட்கள் கழித்து பதிவின் மூலமாக சந்தித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது பிரபு. வேலை பளு அதிகமோ! பதிவுகளை படித்து புத்தகங்களைத் தேர்ந்தெடுத்ததற்கு நன்றி கலந்த மகிழ்ச்சி.

அன்பேசிவம் said...

கிருஷ்ணா நான் வேணும்ன்னா அனுப்பி வைக்கட்டுமா? குருதிபுனல்

http://eniyoruvithiseivom.blogspot.com/2008/05/blog-post_23.html

குருதிபுனல் புத்தகம் பற்றிய என்னுடைய பதிவு, ஒரு வருடம் முன்னாள் எழுதியது.

Unknown said...

புத்தகத்தை அனுப்ப நினைத்ததற்கு நன்றி முரளி. நான் எப்படியும் வாங்கிவிடுவேன். சென்னையில் கிடைக்காத புத்தகங்கள் இல்லை. ஏதாவது புத்தகம் தேவையென்றால் உங்களிடம் கேட்கிறேன்.