Monday, July 20, 2009

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

இரும்பு குதிரைகள்: பாலகுமாரன்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 125 /- ரூபாய்

ஒரு வருடங்களுக்கு முன்பு "மாமா நீங்க இரும்பு குதிரைகள் நாவல் படிச்சி இருக்கீங்களா?" என்று மருமகன் முத்து என்னிடம் கேட்டான்.

இல்லையேடா, நல்லா இருக்குமா என்ன? என்று அவனிடம் கேட்டேன்.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகா எழுதி இருப்பாரு மாமா... ரொம்ப நல்ல இருக்கும்... இத்யாதி இத்யாதின்னு புகழ்ந்தான். ஆனால் கதையை சொல்லவில்லை... அதிலிருந்தே இந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தேன். சென்ற மாதம் புத்தகம் வாங்குவதற்கும், நிஸ்துல்யாவைப் பார்ப்பதற்கும் T.Nagar சென்ற போது New Book Lands -ல் 'இரும்பு குதிரைகள்' வாங்கக் கிடைத்தது.

லாரியைச் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான டிரைவர், க்ளீனர், லாரி முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களைச் சுற்றி தான் கதை நகர்கிறது. லாரி தொழிலின் தொழில் நுணுக்கங்களை அருமையாக பாலகுமாரன் இந்நாவலில் பயன்படுத்தி இருப்பார். பல வருட கூர்ந்த அவதானிப்பும், ஆராய்ச்சியும் இல்லாமல் இது போன்ற நுணுக்கங்கள் சாத்யமில்லை.

இந்த நாவலில் விஸ்வநாதன் தான் முக்கியக் கதாப்பாத்திரம். விஸ்வநாதனுக்கு சினிமா டைரக்டராக வேண்டுமென்பது ஆசை. ஆனால் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்கிறான். தான் செய்யும் வேளையில் இருந்துகொண்டே சினிமாக் கனவினை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் வேலையை உதறிவிட்டு கனவுத் தொழிற்சாலைக்குச் செல்ல முடியாத சூழல் அவனுடையது. அந்த சூழல் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மனதில் உற்சாகம் தோன்றும் நேரத்தில் குதிரைகளை மையமாக வைத்து கவிதைகள் எழுதுகிறான். அந்தக் கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம். நூலுக்கு உரை எழுதிய பாலகுமாரனின் நண்பர் திரு.மாலன் இதனை சிலாகித்து எழுதி இருப்பார். எனக்கு கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொள்வது சற்றே சிரமம் என்பதால் 'குதிரைக் கவிதைகள்' கடினமாக இருந்தது.

குடும்ப சூழல் காரணமாக தனது மாணவனும், இடைத்தரகனுமான வடிவேலின் கடையில் வேலை செய்யவரும் நாராயணசாமி (நாணு) அய்யர், தனது மகள் காயத்ரிக்கு காந்திலால் டிரான்ஸ்போட்டில் வேலை வாங்கித் தருகிறார்.

அதன் மூலம் விஸ்வநாதனுக்கு நாணு ஐயரின் நட்பு ஏற்படுகிறது. விஸ்வநாதன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் என்று தெரிந்தும் அவன் மூலமாக காயத்ரி குழந்தை பெற விருப்புகிறாள்.

"லிவிங் டுகெதர்" (living together) ஒழுக்கமான முறைதானா என்று கேள்வி எழுப்பும் நம் கலாச்சாரத்தில் காயத்ரியின் இந்த ஆசை நியாயமானதுதான் என்று தகப்பன் நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விபரீத ஆசைக்கு விஸ்வநாதன் மறுத்துவிடுகிறான். காயத்ரி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள்.

விஸ்வநாதனும் தாரணியும் அவனுடைய குதிரைக் கதைகளை புத்தகமாக வெளியிட யோசிக்கிறார்கள். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'இரும்பு குதிரைகள்' என்று வைக்கிறார்கள்.

விஸ்வநாதன், தாரிணி, நாணு அய்யர், காயத்ரி, வடிவேலு, ராவுத்தர், நடேச நாயக்கர், முதலியார், , காந்திலால், கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய் என்று ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பாலகுமாரன் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். கதைக் களமானது பெரியப்பாளையம், திருப்பதி சாலை, புத்தூர் செக் போஸ்ட், கொருக்குப் பேட்டை என எனது கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நடக்கிறது. அதனாலேயே இந்நாவலை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.

இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் அவருடைய நண்பர் சுப்ரமண்ய ராஜுவிற்கு சமர்பித்திருக்கிறார். ஏனெனில் அவர்தான் இந்த நாவலில் கதாநாயகன் என்று சொல்கிறார். திரு மாலன் அவர்கள் எழுதிய முன்னுரையும் அதை நிரூபிப்பது போல் உள்ளது.

Details: Irumbu Kuthiraigal, Visa Publications, Chennai.

பின் குறிப்பு:
இந்த நாவலின் உண்மை நாயகனான சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள் கிழக்கு பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. அதை வாங்க இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

திரு. பத்ரி அவர்களின் பதிவில் இந்த புத்தகத்தைப் பற்றிய தகவலைக் காண இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

18 comments:

நட்புடன் ஜமால் said...

இரும்பு குதிரை

பாலகுமாரனை தெரிந்தவருக்கு இது தெரியாமல் இருக்க இயலாது

நன்றிப்பா ...

அமுதா said...

இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் நானும் படித்தேன்.

/*பல வருட கூர்ந்த அவதானிப்பும், ஆராய்ச்சியும் இல்லாமல் இது போன்ற நுணுக்கங்கள் சாத்யமில்லை....*/
உண்மை.
அவரது சரித்திர நாவலான் உடையார் நாவல் படித்த மலைப்பு எனக்கு இன்னும் நீங்கவில்லை. அதில் கூட பல விஷயங்களை அவர் நுணுக்கமாகக் கூறி இருப்பார்.

Krishna Prabhu said...

நலம் தானே ஜமால்.

பாலகுமாரன் மீதான எனது முதல் வாசிப்பு இது...

நான் சிலகாலம் வரை கி.ரா, எஸ். ரா, ராமகிருஷ்ண மடம் வெளியிடும் புத்தகங்களை விட்டு வெளியே வரவில்லை. இப்பொழுதுதான் பரவலாக படிக்கிறேன். மகிழ்ச்சியாகவும் இருக்கிறேன்.

பகிர்வுக்கு நன்றி...

Krishna Prabhu said...

*உடையார்* குறித்துக் கொண்டேன் நிச்சயம் வாங்கிப் படிக்கிறேன் அமுதா...

வாசுகி said...

பாலகுமாரனின் 'என் கண்மணித் தாமரை' மட்டும் தான் நான் வாசித்திருக்கிறேன்.
அந்த புத்தகம் என்னை பெரிதாக கவரவில்லை.

அவரது ' மெர்க்குரிப் பூக்கள், உடையார் ' சிறந்த புத்தகம் என சொல்வார்கள்.
இரும்புக்குதிரை பற்றி தேவையான தகவல்கள் தந்துள்ளீர்கள்.
நன்றி

ஆதவா said...

நேரம் கிடைக்கும்போது வாங்கிப்..... (இப்படியே சொல்லிச் சொல்லி சலிப்பாகுது.)

விமர்சனம் எப்பவும்போல ஜோர்///

ஒருவேளை நான் புத்தகம் வாங்கிறப்போ கடைக்குப் போனா, உங்க தளத்தில் இருப்பதைத் தேர்ந்தெடுப்பேன்!!

அன்பின்
ஆதவா

வெங்கிராஜா said...

நல்லா எழுதியிருக்கீங்க. இவருடைய மெர்க்குரிப்பூக்கள் நாவலையும் ஒருமுறை வாசித்துப்பாருங்கள்! :)

Krishna Prabhu said...

@ வாசுகி

' மெர்க்குரிப் பூக்கள், உடையார் ' கண்டிப்பாக வாங்கிப் படிக்கிறேன்.

@ ஆதவா

'காணாமல் போனவன்' உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி. பின்னூட்டத்திற்கு நன்றி ஆதவா...

@ வெங்கிராஜா

பரிந்துரைக்கு நன்றி வெங்கி ராஜா...

அமிர்தவர்ஷினி அம்மா said...

இரும்பு குதிரைகளை இருமுறை வாசித்திருக்கிறேன்.

வழமை போல உங்களது விமர்சனம் அருமை. மீண்டும் ஒருமுறை ஃப்ரீப் ரீட் செய்தது போல இருக்கிறது.

உங்களின் இந்த வலைப்பக்கம் ஆனந்தவிகடனில் வந்ததுக்கு வாழ்த்துக்கள்

சுப்ரமண்ய ராஜுவின் சிறுகதைகளின் பகிர்வுக்கு நன்றி க்ருஷ்ணா.

பிரசன்னா இராசன் said...

பாலகுமாரனின் ஒரே ஒரு மிகச் சிறந்த நாவல் இது. முதன் முதலில் வாசித்த போது ஏற்பட்ட அனுபவம், இரண்டாம் முறை வாசித்த போதும் தொடர்ந்தது. மிக நல்ல விமர்சனம். ஆனால் மற்றவர்கள் சொல்வது போல உடையார் எல்லாம் வாங்கிப் படிச்சுறாதீங்க. காசுக்கு பிடிச்ச கேடு.

Krishna Prabhu said...

@ அமிர்தவர்ஷினி அம்மா

வாங்க சாரதா, எப்பவும் போல உங்களுடைய பின்னூட்டம் மகிச்சியளிக்கிறது. வாழ்த்துக்களுக்கு நன்றி...

@ பிரசன்னா இராசன்

உங்களுடைய ஒளியுடையோன் பதிவில் சில பதிவுகளை படித்திருக்கிறேன். நன்றாக இருக்கிறது.

ஆலோசனைக்கு நன்றி பிரசன்னா...

வண்ணத்துபூச்சியார் said...

அருமையான பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.

சேரல் said...

பாலகுமாரன் நான் வாசித்ததில்லை. இனி முயற்சி செய்கிறேன். இந்தப் புதினத்தின் பெயர் மட்டும் கேள்விப்பட்டதுண்டு.

-ப்ரியமுடன்
சேரல்

நந்தா said...

கிருஷ்ண பிரபு,

பாலகுமாரனின் மாஸ்டர் பீஸ் என்று வகைப்படுத்தக்கூடிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. எது எப்படி இருந்தாலும் சுண்டி இழுக்கும் அந்த நடைக்காக அந்த மனிதனை வாய் வலிக்க பாராட்டியே ஆக வேண்டும். இவருடைய பிற்கால நூல்கள் வெறும் உபடேசங்களாகவும், ஆன்மீகம் சம்பந்தப்பட்டதாகவுமாய் மட்டுமே மாறிப் போனது நம் துரதிர்ஷ்டம்.

ஆச்சர்யமாயிருக்கிறது. இதுதான் நீங்கள் படிக்கும் முதல் பாலகுமாரனின் புத்தகம் என்பது. என்ன பாஸ் எப்படி இவரை இத்தனை நாளாய் விட்டு வைத்திருந்தீர்கள். தொடர்ச்சியாய் பாலகுமாரனது பல புத்தகங்களை நீங்கள் படித்து விட்டால் அவரை கொஞ்சம் நீங்கள் அனுமானம் செய்ய முடியும். பாலகுமாரனிற்கு கதை என்பது ஒரு கருவிதான். ஆனால் அதன் மூலம் பல விஷயங்களை நம் மனதிற்கு கடத்த விரும்புகின்றார் என்பதே உண்மை.

அடுத்த படியாய் நீங்கள் படிக்க வேண்டுமென்றால் அவரது மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவனிக்கவும், உடையார் ஆகிய மூன்றும் மிக மிக முக்கியமனவை. தயங்காமல் வாங்கலாம். (உடையார் ரேட்டு அதிகம் சார். பர்சு பத்திரம்). ஆனால் தவற விடக் கூடாதவை. இதைத் தவிர அவரது இன்னும் பல புத்தகங்கள் இருக்கின்றன. கரையோர முதலைகள், தாயுமானவன் என்று பல வரிசையில் நிற்கின்றன. வாய்ப்பு கிடைக்கும் போது படிக்கவும்.

அப்புறம் மிக முக்கியமாய் உங்களிடம் கோபிக்க வேண்டியதாய் இருக்கின்றது. உங்களது இந்த விமர்சனம் எனக்கு தொடர்ச்சியாய் பல நினைவலைகளை கிளப்பி விட்டு இருக்கின்றது. இந்த புத்தகம், இதை முதன் முதலில் படித்த போது என் வயது, அப்போது எனது கனவுகள், இப்போது நான் என்னவாய் இருக்கின்றேன் என்று ஒரு மிகப்பெரும் தொடர் நினைவுகள். இறுதியில் நான் சொன்ன புத்தகங்களை நீங்கள் படிக்கின்றீர்களோ இன்னும் ஒரு முறை மறுபடி படித்துப் பார்க்க வேண்டும் என்று முடிவெடுக்க வைத்திருக்கிறது. ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு போய் புத்தகத்தை விலைக்கு வாங்கிட்டேன்னா, அப்புறம் பில் வீடு தேடி வரும் பார்த்துக்கோங்க.

Krishna Prabhu said...

@ வண்ணத்துபூச்சியார்

வருகைக்கு நன்றி சூர்யா... நீண்ட நாள் முன்பு சில சுட்டிகளை அனுப்புகிறேன் என்று சொல்லி இருந்தீர்களே. முடிந்தால் அனுப்புங்கள்.

@ சேரல்

நானும் நீண்ட நாள் வாசிக்காமல் தான் இருந்தேன். நன்றாகத்தான் இருக்கிறது அவருடைய எழுத்து. உங்களுக்குப் பிடிக்கும் என்றே நினைக்கிறேன்.

@ நந்தா

நான் சமீப காலமாகத்தான் தீவிரமாக வாசிக்கிறேன் நந்தா. கிராமத்தில் வளர்ந்ததால் பரவலாக வாசிக்க இயலவில்லை. இனி பிரச்சனை இல்லை. வாசித்துவிடலாம்.

'மெர்க்குரிப் பூக்கள், பயணிகள் கவனிக்கவும், உடையார்' - கண்டிப்பாக வாங்கி விடுகிறேன்.

/--உடையார் ரேட்டு அதிகம் சார். பர்சு பத்திரம்--/ -
ஊதாரிங்களுக்கு அதப்பத்தி என்ன கவலை... :-)

/--முதன் முதலில் படித்த போது என் வயது, அப்போது எனது கனவுகள், இப்போது நான் என்னவாய் இருக்கின்றேன்...-/

நந்தா தவறாக நினைக்க வேண்டாம், நீங்கள் சினிமாவிலோ அல்லது எழுத்துத் துறையிலோ நுழைய வேண்டும் என்று நினைதிருன்தீர்களா?

/--புத்தகத்தை விலைக்கு வாங்கிட்டேன்னா, அப்புறம் பில் வீடு தேடி வரும் பார்த்துக்கோங்க...-/

கவலை இல்லை... கவலை இல்லை...

நந்தா said...

க்ருஷ்ண பிரபு என்பது பின்னூட்டத்திற்கான உங்களது பதிலையும், தொடர்ச்சியாய் நீங்கள் கேட்ட கேள்வியையும் இன்றுதான் பார்த்தேன். அதனால்தான் பதிலளிக்க முடியவில்லை.

ரொம்ப தீவிரம் இல்லைன்னாலும் ஸ்பெசல் எஃபெக்ட்ஸ் மூலம் அல்லது 3D அனிமேஷன் மூலம் சினிமாவில் நுழைந்து விடலாம் என்று ஒரு காலத்தில் ஆசை இருந்தது. அது ஒரு கனாக் காலம். :)

கார்த்திக்கேயனும் அறிவுத்தேடலும்.. said...

அருமையான பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.அருமையாக சொன்னீர்கள்
எவ்வளவு கூர்மையான நினைவுகள் ?,
மிகவும் பயனுள்ள தகவல்
நான் பாலகுமாரன் சுஜாதா ஜெயமோகன் ஆதவன் ஸ்டெல்லாப்ரூஸ்
இந்திரா பார்த்தசாரதி ,ஆதவன் இரா .முருகன் வாசித்ததுண்டு.
பாலகுமாரன் மட்டும் பரவாலாய் வாசித்ததுண்டு.
நீங்கள் சொன்ன கோணங்கி. அசோகமித்திரன். கண்டிப்பாக படிக்கிறேன்


மீண்டும் நன்றி

ramesh said...

balakumaranin books nets kidaikuma??
any one can give link for that

Ramesh