Thursday, July 23, 2009

வைக்கம் முகமது பஷீர் - காலம் முழுதும் கலை

காலம் முழுதும் கலை: ஈ. எம். அஷ்ரப்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் (www.nhm.in)
தமிழில்: குறிஞ்சி வேலன்
விலை: 75-/ ரூபாய்

தமிழில் கி.ரா அளவிற்கு வேறொரு மொழியின் எழுத்தாளரை நேசிக்கிறேன் என்றால் அது 'வைக்கம் முகமது பஷீர்'தான். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக சமீபத்தில் அவருடைய 'மதிலுகள்' மற்றும் 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' ஆகிய தமிழாக்கங்களைப் படிக்க நேர்ந்தது. எத்தனை அருமையான படைப்புகள் அவருடையது.

21-ஜனவரி 1908 முதல் 5-ஜூலை 1994 வரை வாழ்ந்த அவருடைய வாழ்க்கை எந்த அளவிற்கு சுவாரஸ்யங்கள் நிரம்பியதோ அந்த அளவிற்குத் துன்பங்களும் நிறைந்தது. அந்த அனுபவங்களே அவரை தேசத்தின் மிகச்சிறந்த படைப்பாளியாக மிளிரச்செய்தது. அவருடைய படைப்புகளுக்கு காரணமான வாழ்க்கையை உற்று நோக்கும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். புத்தகத்தின் இறுதியில் அவருடைய 'மரணக் குறிப்பு' என்னும் கட்டுரை அபாரம்.

குறும்பு செய்யும் குழந்தையாக, சுதந்திர வேட்கைக் கொண்ட இளைஞராக, ஜெயில் கைதியாக, போலீசுக்கு அஞ்சி தலைமறைவாக இருக்கவேண்டி 9 வருடங்கள் தேசாந்திரியாக இந்தியாவிலுள்ள பல புகழ் பெற்ற இடங்களில் அலைந்துள்ளார், அந்த நேரங்களில் இந்துத் துறவியாக, முஸ்லீம் சூஃபியாக ஹோட்டல் சர்வராக, ஜோசியம் பார்ப்பவராக, மேஜீசியனாக, பிச்சைக்காரர்களின் தோழராக என்று தன்னுடைய நிஜ வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கியுள்ளார்.

எளிய மக்களின் வட்டார மொழியை இவருடைய படைப்புகளில் மிகுதியாகக் காண முடியும். ஒருமுறை பஷீரைப் பார்க்க வந்த அவருடைய சகோதரர் அவருடைய படைப்புகளில் பிழையை கண்டுபிடித்துச் சரிபடுத்துமாறு கேட்டிருக்கிறார்.

அதற்கு பஷீர்

"போடா உன் பொண்டாட்டிக்கு வரதச்சனையா
வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு
என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன்
எனக்கு தெரிஞ்ச எழுத்துக்களைக் கொண்டே
எழுதுவேண்டா நான். உன்னோட ஏட்டு
ஏலக்கனத்த நே வச்சுக்கடா" - என்று கூறினாராம்.

****************************************************

இவருடைய பல படைப்புகளிலிருந்து சில வரிகள்:

"வெளிச்சத்திற்கு எதற்கொரு வெளிச்சம்."

"பயணத்திற்கான நேரம் மிக மிக நெருங்கிவிட்டது. நீயும் நானும் என்ற யதார்த்தத் தன்மையிலிருந்து இறுதியில் நீ மட்டும் மிஞ்சப்போகிறாய். நீ மட்டும்...

இவ்வளவு காலமாகியும் நீ என்னை அளவற்ற வாஞ்சையோடு நேசித்தாய். என் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாய். என்னைப் பற்றி உனக்கு எப்பொழுதும் தெரியும். இன்னமும் உன் சவுகர்யம் போல் படிக்கக் கூடிய ஒரு சிறு கிரந்தம் அல்லவா நான்..."

"அவன் இறுதி யாத்திரைக்கு தயாராகிவிட்டான். எங்கே போகப் போகிறான்? இருளின் இந்த மகா சமுத்திரத்திற்கா? இல்லை வெளிச்சத்தின் புதிய உலகத்திற்கா? ஒன்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை. எந்த ஒரு பிடிப்பும் பிடிமானமும் இல்லை. ஒரே நொடியில் மாறக்கூடிய நினைவு மட்டுமே அவள். எல்லையில்லா இடத்தை நோக்கிய பயணம் தான் அந்த வாழ்க்கை..."

****************************************************

இவருடைய படைப்புகள் யாவும் தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளிலும், பிரெஞ்சு, செக், சீன மொழி, ஜப்பானிய மொழி, ஆங்கிலம் என பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 'பால்யகால சகி'யை கையெழுத்துப் பிரதியில் 500 பக்கங்களுக்கு எழுதினாராம். பத்து ஆண்டுகள் கழித்து, அச்சுக்குப் போகும் முன் அதனை 75 பக்கங்களுக்கு குறைத்து அந்த நாவலை வெளியிட்டாராம். ஒவ்வொரு கதையையும், நாவலையும் இழைத்து இழைத்து படைத்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக இருந்தும், தனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கையில் 14 நாவல்களும், 100 சிறுகதைகளும் மட்டுமே எழுதியிருக்கிறார். ஆனால் அனைத்துமே காலத்தால் வாடாத படைப்புகள்.

Book details: Kalam muzhuthum kalai, Kizhakku, Chennai

குளச்சல் மு யூசப் பஷீரின் முக்கியமான படைப்புகளை மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறார். எப்படியும் வரும் ஜனவரி இறுதியில் அவை காலச்சுவடில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் கட்டுரை.

பஷீரின் படைப்புகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

10 comments:

priyamudanprabu said...

எப்படிங்க தேடி பி(ப)டிக்கிறீங்க

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் வாசிப்பனுவத்தை வியந்துகொண்டே இருக்கிறேன் க்ருஷ்ணா

பகிர்வுக்கு நன்றி.

Unknown said...

@ பிரியமுடன் பிரபு

எல்லாம் ஒரு தேடல் தான் பிரபு...

@ அமிர்தவர்ஷினி அம்மா

:-)

ஆ.ஞானசேகரன் said...

நல்ல வாசிப்பு அனுபவம்.. அதன் பின் நல்ல விமர்சனம்... வாழ்த்துகள் நண்பரே

அன்பேசிவம் said...

கிருஷ்ணா மதிலுகள் புத்தகம் வாங்கிவிட்டேன். மேலும் பஷீர், த்களி சுந்தரம் பிள்ளை, மற்றும் இன்ன பிற தலைசிறந்த மலையாள எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகளின் தொகுப்பை படித்துக்கொண்டிருக்கிறேன். படித்துவிட்டு வருகிறேன்.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

மிகவும் எளிய நடையில் எழுதும் ஆகச்சிறந்த எழுத்தாளர் பஷீர். மொழிபெயர்ப்புகளை விட மலையாளத்தில் வாசிக்கிற சுகம்.. சொல்லில் அடங்காது.சமீபத்தில் காலச்சுவடில் பஷீரின் உலக பிரசித்தி பெற்ற மூக்கு வெளியாகி இருந்தது. மூலத்தில் வாசிக்கிற சுகம் மொழிபெயர்ப்பில் இல்லை நண்பரே.

Unknown said...

நீங்கள் சொல்வது மிகச்சரி. எனக்கு மலையாளம் தெரியாதே ஷிஜூ...
அந்த வகையில் மொழி பெயர்ப்பு கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டமே. வினோத் கூட பஷீருக்காவது மலையாளம் படியுங்கள் மாமா என்று அடிக்கடி சொல்லுவான்.

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

நான் முதன் முதலாக மலையாளம் வாசிக்க கற்றுக்கொண்டதே பஷீரின் "எண்டே பால்யகால சகி " இல் இருந்து தான். நான் மலையாளம் கற்றுக்கொள்ளும் போது என்னை கேலிசெய்த அனைவருக்கும் இப்போது பொறாமையாக இருக்கிறதாம் காரணம் மொழியில் அவர்களை விட பன்மடங்கு தேறி இருப்பது தான். கன்னடம் தெலுங்கு இரண்டையும் கற்றுக்கொள்ள ஆவலாக இருக்கிறேன். வினோத் சொல்வதை கேளுங்கள் நண்பரே.

Unknown said...

ஊக்கத்திற்கு நன்றி ஷிஜூ...

கண்டிப்பாக மலையாளம் கற்றுக் கொள்கிறேன். இப்பொழுது நேரம் இல்லை. ஆகவே சிறிது காலம் கழித்து அதற்கான முயற்ச்சி எடுக்கிறேன்.

கானகம் said...

நல்ல பதிவு. நானும் பஷீர் அவர்களைப் பற்றி ஒரு பதிவிட்டிருக்கிறேன்.

http://jeyakumar-srinivasan.blogspot.com/2008/03/blog-post_20.html