வெள்ளிக்கிழமை இரவு அடர்த்தியான தூறல் விழுந்துகொண்டிருந்தது. நாளை மதியம் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் எனக்கும், முரளி பத்மநாபனுக்கும், கார்த்திகை பாண்டியனுக்கும் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. மறந்துவிடாமல் இருக்க குறிப்பெடுத்துக் கொண்டேன். சிறப்பு என்னவெனில் என்னுடைய மருமகனும் புத்தகம் வாங்க வரப் போவதாகக் கூறியிருந்தான். அதனால் தான் தூறல் பொழிகிறதோ என்னவோ!
மதியம் 1 மணிக்கு உள்ளே சென்றேன். நேராக NCBH சென்றேன். 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த புத்தகத்திற்கான தமிழக அரசின் விருது எழுத்தாளர் தமிழ் மகனின் சிறுகதைத் தொகுப்பான 'எட்டாயிரம் தலைமுறை' நூலுக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் NCBH வெளியீடு என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்தவர்கள் நான் விசாரித்த நூலைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது என்றார்கள். பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தமிழ் மகனுக்கே ஃபோன் செய்து குறைபட்டுக் கொண்டேன்.
"சிரித்துக் கொண்டே உங்களுடைய முகவரியைக் கொடுங்கள் தபாலில் அனுப்பிவிடுகிறேன்" என்றார்.
"ஒரு புத்தகத்தை தேடி வாங்குவதுதான் எழுத்தாளருக்கு செய்யும் நல்ல மரியாதை என்பது என்னுடைய எண்ணம். ஆகவே அதைப் படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன்" என்றேன்.
அங்கிருந்து வம்சிக்கு சென்று வலைப் பூக்களின் தொகுப்பாக வந்த புத்தகங்களை நண்பர்களுக்காக வாங்கச் சென்றேன். புத்தகங்களுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுது என்னைத் தள்ளிக் கொண்டு தாடி வைத்த ஒரு பையன் ஓடினான். அங்கு கவிஞர் முத்துக்குமார் உட்கார்ந்து கொண்டிருந்தார். பாடப் புத்தகத்தின் எழுதாத பக்கத்தைக் கொடுத்து அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். என்னைக் கடந்து செல்லும் போது அவனை குரோதத்துடன் பார்த்தேன். ஆதர்ஷ கவியைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் பறந்து கொண்டிருந்தான். பாரதி சொல்லியது போல இன்னும் நன்றாக குரோதம் பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். :-)
காலச்சுவடிற்கு சென்று புத்தகங்களை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் நின்று பூச்சி காண்பித்தான் மருமகன். அவனுடைய அறைத் தோழனும் உடன் நின்று கொண்டிருந்தான்.
"வந்துட்டயா... உனக்கு பிடிச்சப் புத்தகங்கள் எல்லாம் எடுத்துக்கோ!" என்ற சலுகையை வழங்கினேன். முதன் முறையாக பெண் பார்க்கச் செல்லும் பொழுது வரும் சந்தோஷக் கூச்சத்தோடு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விருப்பத்திற்கே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளட்டும் என்று சுதந்திரமாக விட்டுவிட்டேன்.
'துணையெழுத்து' படித்ததிலிருந்து எஸ் ரா அவனுக்கு ஆதர்ஷம். 'பிஞ்சுகள்' படித்ததிலிருந்து கி ரா. 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' படித்ததிலிருந்து ஜெயாகந்தன். காலச்சுவடில் அவனுடைய ஆதர்ஷனங்கள் இல்லாததால் திணறிக் கொண்டிருந்தான்.
என்னருகில் நெருங்கிய ஒருவர் "உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே?" என்றார். அப்படியெல்லாம் இருக்காது நல்லா யோசிச்சிப் பாருங்க என்று பதில் கூறினேன். அவர் உயிரோசையில் கட்டுரைகள் எழுதுவதாகக் கூறினார். என்னுடைய மின்னஞ்சலைக் கொடுத்து எனக்கு அனுப்புங்கள் படிக்கிறேன் என்றேன். ஜி நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, என் பெயர் சிவப்பு போன்ற முக்கியமான 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உயிர்மைக்கு சென்றோம்.
உயிர்மையில் மருமகனுக்கு பிரச்சனையே இல்லை. அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறையவே இருந்தன. 'காளி நாடகம்' என்ற புத்தகத்தை அவனுக்காகத் தேடிக் கொண்டிருந்தேன். ஓரமாக நின்றிருந்த "ஒருவர் என்ன புத்தகம் வேண்டும்? நான் உதவி செய்யட்டுமா?" என்றார். அவர் பங்குக்கு தேடிவிட்டு மற்றொருவரை உதவிக்குக் கூப்பிட்டார். வந்தவரும் ஏமாற்றத்தை அளிக்கும் நேரத்தில் தனசேகர் வந்தார். உயிர்மையின் புத்தகங்கள் அவருக்கு அத்துப்படி என்பதால் உடனே எடுத்துக் கொடுத்தார். ஆரம்பத்தில் உதவி செய்ய வந்தவருக்கு நன்றி தெரிவிக்க நெருங்கிச் சென்றேன்.
"எனக்குப் புத்தகங்களைப் பற்றித் தெரியாதுங்க... சும்மா நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய கவிதை புத்தகம் உயிர்மையில் வெளிவந்துள்ளது. வாசகர்கள் எந்தப் புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள் என்று பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறேன்" என்றார்.
என்னை அறிமுகம் செய்துகொண்டு "உங்கள் பெயர் என்ன?" என்றேன்.
வா மணிகண்டன். கவிதை எழுதுவதில் விருப்பம் என்று பாரதி, பசுவய்யா, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், சுகுமாரன், வைத்திலிங்கம், நகுலன், தேவதச்சன், மு. மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா என்று பல கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்காகவே அவருடைய புத்தகத்தை வாங்கினேன். இதுதான் நான் வாங்கிய முதல் கவிதைப் புத்தகம்.
உலக சினிமா, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, மறைவாய் சொன்ன கதை, ஒன்பது ரூபாய் நோட்டு ஆகியவற்றுடன் இன்னும் சில புத்தகங்களை மருமகன் எடுத்துக் கொண்டான். "மறைவாய் சொன்ன கதைகளையும் எடுத்துக்கிட்ட போல" என்று கேட்டேன். வெட்கப்பட்டு சிரித்தான். எனக்காக வாங்கிய சில புத்தகங்களுக்கும் அவனே பணம் செலுத்தினான். புறப்படும் போது சாரு நிவேதிதா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற பிறகு திரும்பிப் பார்த்தேன். கழுதை பொதி சுமப்பது போல மருமகனும், அவனுடைய நண்பனும் வந்து கொண்டிருந்தார்கள்.
அடலேறு வருவதற்கு நேரம் ஆனதால் மருமகனைக் கிளம்பச் சொன்னேன். அவன் புறப்பட்டதும் பா ராகவன் தென்பட்டார். ஓடிச்சென்று அவரின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு, "பா ரா அவர்களே! பா ரா அவர்களே!" என்று கூப்பிட்டேன். 'கிருஷ்ணப் பிரபு' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவர் முன்பு வரச்சொன்னார்.
அவர் பேசுவதற்கு முன்பு, "உங்களுடைய வகுப்பிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி... உங்களுடைய மின்னஞ்சல் வார்த்தைகள் என்றும் என்னுடைய ஞாபகத்தில் பொக்கிஷமாக இருக்கும்" என்றேன்.
"ஞாயிற்றுக் கிழமை வந்துடு... பாத்துக்கலாம்" என்றார். புத்தகக் கண்காட்சியின் இறுதி நாட்கள் என்பதால் அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கென்னவோ கே.பி.சுந்தராம்பாள் அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துப் பாடிய "சென்று வா மகனே... வென்று வா...." பாடல் அசரீரி போல் கேட்டுக் கொண்டேஇருந்தது. அடலேறு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டிருந்த பாடலைக் கெடுத்தான்.
அவனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். நிலா ரசிகனும் உடன் இருந்தார். அவர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மேலும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். அப்பொழுதுதான் எழுத்தாளர் எஸ் ரா காலையில் அனுப்பிருந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. அவரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு 'ஆண்டான் சேகவ்' மொழிபெயர்ப்புப் புத்தகம் தற்பொழுது எங்கு கிடைக்கும் என்று விசாரித்திருந்தேன். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் புத்தகம் கிடைக்கவில்லை. அதை அவருக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். அதற்கான பதிலில் 'மகாபுல்வெளி' நெடுங்கதை இருவாட்சி பதிப்பகத்தில் கிடைப்பதாகக் கூறியிருந்தார். சென்று பார்த்த பொழுது வாங்கக் கிடைத்தது. மருமகனுக்கும் சேர்த்து இரண்டு பிரதிகளாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.
அரங்கின் வெளியே ஏகப்பட்ட கூட்டம்.... வாகன நெரிசல். இனிமேல் இறுதி நாட்களில் கண்காட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். கூட்ட நெரிசலில் கிடைத்த சின்னச்சின்ன வெற்றிடங்களில் நுழைந்து முன்னேறிக் கொண்டிருந்தேன். மறுபடியும் அந்தப் பாடல் எனக்குக் கேட்டது " சென்று வா மகனே... வென்று வா...."
4 comments:
அருமையான பகிர்வு நண்பரே.
முதலில் பா.ரா, அப்புறம் எஸ்.ரா, யோவ் கிருஷ்ணா என்னை ரொம்ப வெருப்பேத்துறய்யா நீ........
// முரளி பத்மநாபனுக்கும், கார்த்திகை பாண்டியனுக்கும் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. //
இந்த வரியை படித்தவுடன் கார்த்திகை பாண்டியனும் சந்தோஷப்பட வாய்ப்பிருக்கிறது.
நல்ல பகிர்வுங்க. முதலிலேயே சொல்லிருந்தா நானும் ஒரு லிஸ்ட் குடுத்தனுப்பிருப்பேன்ல.
. சிறப்பு என்னவெனில் என்னுடைய மருமகனும் புத்தகம் வாங்க வரப் போவதாகக் கூறியிருந்தான். அதனால் தான் தூறல் பொழிகிறதோ என்னவோ!
////
என்னா வில்லதனம்??
நல்ல பகிர்வு
Post a Comment