Tuesday, January 5, 2010

புத்தகக் கண்காட்சி - 5 ஆம் நாள்

ஞாயிறு காலை கொஞ்சம் வேலை இருந்ததால் மதியம் 2 மணிக்கு கண்காட்சியில் நுழைந்தேன். ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. திரும்பிவிடலாமா..! என்று கூட நினைத்தேன். சரி வந்துவிட்டோம்... வேடிக்கையாவது பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று உள்ளே சென்றேன். எனது திருப்பாதங்களை உள்ளே வைத்ததும் கரண்ட் கட். எலக்ட்ரிஷன் என்னைக் கடந்து வேகமாக ஓடினார். அவரை நோக்கி என்னுடைய தலை திரும்பிய போது 'உன்னதம்' பதிப்பகம் கண்ணில் பட்டது.

இதழின் பொருப்பாசிரியரை கேணி நிகழ்ச்சியில் ஓரிரு முறை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த அரங்கில் என்னென்ன புத்தகங்கள் தான் இருக்கிறது? என்று பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன். சயாம் பர்மா மரண ரயில் பாதை (சீ.அருண்) மற்றும் அதைத் தழுவிய வரலாற்று நாவல் (ஆர்.சண்முகம்) 'உன்னதம்' பதிப்பகத்தில் வாங்கக் கிடைத்தது. மலேஷிய நண்பர்களிடம் சொல்லி இந்தப் புத்தகத்தை இந்தியாவிற்கு அனுப்பச் சொல்லியிருந்தேன். சென்னை வரை அஞ்சலில் வந்த இந்தப் புத்தகம் எனது கிராமத்திற்கு வராமல் மலேஷியாவிற்கே திரும்பச் சென்றுவிட்டடது. மிகுந்த வருத்தத்திலிருந்த எனக்கு ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தடைபட்ட மின்சாரம் வராததால் ஆங்காங்கு இருள் திட்டு இருந்து கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் வாசக நண்பர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் முத்து சாமியும், விஷ்ணு குமாரும் தென்பட்டார்கள். அவர்களுக்கு முதுகு சொரிந்துவிட்டு தமிழினி பதிப்பகத்திற்குச் சென்றேன். அங்கு பைத்தியக்காரன் (சிவராமன்) இருந்தார்.

"ஹாய் சிவராமன் (பைத்தியக்காரன்)... "என்று கத்தினேன். புத்தகத்தை தேர்வு செய்துட்டு வாங்க என்றார். நெறிக்கட்டு மற்றும் வெள்ளெருக்கு ஆகிய புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேலோட்டமாக சில புத்தகங்களையும் பார்த்தேன். அதில் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பும், ஆழி சூழ் உலகும் அடக்கம். கடைசியாக முதலில் தேர்வுசெய்த இரண்டு புத்தகங்களுடன் "உங்களுக்கு நானே ஃபோன் செய்யனும்னு இருந்தேன்.... இந்தாங்க இந்த ரெண்டு புத்தகத்துக்கும் பில் போடுங்க சிவராம்..." என்று கூறிக்கொண்டே அவரின் அருகில் சென்றேன்.

அதற்கு மேல் என்னை ஒரு வார்த்தைக் கூட பேசவிடவில்லை. உள்ள போய் என்னென்ன புத்தகங்கள் வேணுமோ அதையெல்லாம் எடுத்துக்கோங்க. ஒன்னும் பிரச்னை இல்லை என்றார். நான் தயங்கி நிற்பதைப் பார்த்ததும் அவரே துரு துருவென:

1. நாஞ்சில் நாடன் கதைகள்
2. சூடிய பூ சூடற்க (
நாஞ்சில் நாடன்)
3. இராசேந்திர சோழன் கதைகள்
4. அங்கே இப்போ என்ன நேரம்? (முத்துலிங்கம்)
5. ஆழி சூழ் உலகு (ஜோ டி குரூஸ்)
6. வெள்ளெருக்கு (கண்மணி குணசேகரன்)
7. நெறிக்கட்டு (அழகிய பெரியவன்)
8. பேய்க்கருப்பு (பாதசாரி)
9. அன்பின் வழியது உயிர் நிழல்
(பாதசாரி)

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் ஒரு துணிப்பையில் போட்டு என்னிடம் கொடுத்தார். அதற்கான பணம் ஏறக்குறைய 1400 ருபாய். இராசேந்திர சோழன் கதைகள் இருக்க சொல்லவே வாங்கிடுங்க பிறகு கிடைக்காது என்று நாஞ்சில் நாடன் அறிவுரை கூறினார். "எல்லாம் சரிங்க சார்... இவர பணம் வாங்கிக்க சொல்லுங்க" என்று கூறினேன்.

"நீங்க வேற நிறைய புத்தகம் வாங்க வேண்டியது இருக்கும் கிருஷ்ண பிரபு. பிறகு பார்க்க சொல்ல கொடுங்க" என்று சிவராமன் கூறினார்.

"இல்லைங்க சிவராம். நான் இன்னைக்கு வேடிக்கை பார்க்க மட்டும் தான் வந்திருக்கேன். அதுவுமில்லாம என்னிடம் 'ஸ்மார்ட் கார்டு' ருக்கு. அதனால பிரச்சனை இல்லை. நீங்க மொதல்ல இந்த பணத்தைஎடுத்துக்கோங்க" என்றேன்.

"எதுவும் பேசாதீங்க... எடுத்துகிட்டு கிளம்புங்க..."

"ஐயோ சிவராம், நான் படைப்பாளியா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆகக் குறைவா வாசிச்சி படிப்பதை சீக்கிரமே மறந்துவிடும் சராசரி வாசகன் மட்டுமே. அதுவுமில்லாம இவ்வளவு பெரிய தொகையா வேற இருக்கு. தயவு செய்து பணம் வாங்கிக்கோங்க" என்றேன்.

வத்தல் காயப்போட்ட பெண்கள் காக்காவை விரட்டுவது போல சிவராமன் என்னை விரட்டினார். அந்தக் குறையை முத்துவுக்கு ஃபோன் செய்து கொட்டிக் கொண்டிருந்தேன். "மாமா... அன்பாதான கொடுக்கறாரு. அடுத்த முறை பார்க்கச் சொல்ல கொடுத்துடலாம்" என்றான். இல்லடா இவரு எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும் என்று சிவராமைப் பற்றி புறம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். சிவராமனுடன் நடந்த கலவரத்தில் தடைபட்டிருந்த மின்சாரம் எப்பொழுது வந்தது என்பது கூடத் தெரியவில்லை. பிரகாசமான புத்தக வீதியில் நடந்துகொண்டிருந்தேன்.

"கிருஷ்ண பிரபு" என்ற குரல் சன்னமாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் அதே குரல் கேட்டது. என்னை மையமாக வைத்து உலகத்தையே ஒரு சுற்றுச் சுற்றினேன். ஒரு மூலையில் ஞானியின் அரங்கு தென்பட்டது. அங்கிருந்து 'பிரபு' எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு மாதமும் கேணி சமந்தமான குறுஞ்செய்தியை எனது மொபைலுக்கு அனுப்புபவர். அரங்கினுள் சென்றுப் பார்த்தால் ஞானி எழுதிய ஒரு நாவலும் இல்லை. நாடகங்களும், ஒ பக்கங்களும் தான் இருந்தது. ஆகவே ஒரு புத்தகத்தையும் எடுக்க முடியாமல் வெளியில் வந்தேன்.

"இந்த முறை கேணிக்கு யார் வருகிறார்கள்... ஞானியின் இணையத் தளத்தில் அறிவிப்பு இன்னும் வரவில்லையே?" என்று கேட்டேன்.

இசைஞானி இளையராஜாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வர்ணிக்கும் ஒருவரின் பெயரைச் சொல்லி பெரும்பாலும் அவர்தான் வருவதாக இருக்கிறது என்று கூறினார்.

ஒ அவரா... அப்போ களைகட்டும் என்றவாறு கிழக்கு நோக்கிச் சென்றேன். முத்துவிற்காக அசோகமித்ரனின் 'கரைந்த நிழல்களும்', எனக்காக மாலனின் 'ஜனகனமன' நாவலும் எடுத்துக்கொண்டு பில் போடச் சென்றேன். வசந்த் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு முறை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிழக்கின் அலுவலகத்திற்குச் சென்று கிட்டத்தட்ட 1500 ரூபாய்க்கு பா.ராகவனின் நாவல்களும், வேறு சில முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்களும் வாங்கினேன்.

"சார் பில் போட்டுடட்டுமா?" என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

"நிச்சயமா கண்ணா...
வாங்கதான எடுத்திருக்கேன்..."

"இல்லைங்க சார்...
பைசா அதிகமா இருக்கு... போன வாரம் இதே மாதிரி ஒருத்தர் அதிகமான புத்தகம் வாங்கினாரு. பில் போட்ட பிறகு டிஸ்கவ்ன்ட் கேட்டு சத்தம் போட்டாரு..." என்று இழுத்தார்.

"இதுக்கு முன்னாடி இங்க வந்து புத்தகம் வாங்கியிருக்கேன். நீங்க சொல்ல வரும் விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். பில் போட்டுடுங்க" என்றேன்.

அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி உங்க கையாலேயே 10% டிஸ்கவ்ன்ட் போடவச்சேன் பார்த்தீங்களா என்று கலாய்ந்துவிட்டு காலச்சுவடு நோக்கிச் சென்றேன்.

நீண்ட நாட்களாக முத்து என்னிடம் புதுமைப்பித்தன் சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பாக இரண்டு புத்தகங்கள் வாங்கியதால் சுந்தர ராமசாமி சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு இலவசமாகக் கிடைத்தது. புதுமைப்பித்தன் மருமகனுக்கு சுரா எனக்கு.

திருவல்லிக்கேணி காலச்சுவடு அலுவலகத்திற்கு நேரில் சென்று பல முறை புத்தகங்கள் வாங்கியதால் அங்கிருக்கும் ஓர் அக்கா எனக்குப் பழக்கம். அவர்களிடம் ஒரு முறை "நிறைய புத்தகங்கள் வாங்கினால் எங்கம்மா திட்டுவாங்க, ஆனா நீங்க கொடுக்குற கனமான கட்டைப் பையைப் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதில் சென்றுவிடும். நான் தப்பித்து விடுவேன்" என்று கூறியிருக்கிறேன். ஆகவே இப்பொழுதெல்லாம் குறைவான புத்தகம் வாங்கினாலும் "இந்தாங்க உங்க அம்மாகிட்ட திட்டு வாங்காதீங்கன்னு" ஒரு கட்டைப் பையை இலவசமா கொடுத்துடுவாங்க.

சிவராமன் கொடுத்த புத்தகங்கள் துணிப்பையில் தொங்கிக் கொண்டிருக்க, மீதிப் புத்தகங்களை காலச்சுவடின் கட்டைப் பையில் போட்டுக் கொண்டு விஷ்ணுவைப் பார்க்கச்சென்றேன். எழுத்தாளர் பா ராகவன் ஒரு குட்டிப் பாப்பாவுடன் வந்துகொண்டிருந்தார். ஒதுங்கி ஓரமாக நின்றோம். அதே மானரிசம்... விக்கு வினாயக்ராம் கடம் வாசிப்பது மாதிரி அவருடைய தலையை ஒரு தட்டுதட்டி என்னைப் பார்த்து கையை நீட்டினார்.

"நீங்க கும்மிடிப்பூண்டி தானே?" என்ற வார்த்தையை உச்சரிக்கப் போகிறார் என்று நினைத்தேன்.

"நீங்க கிருஷ்ண பிரபு தானே?, உங்களைப் பற்றி யாரோ பதிவுல எழுதி இருக்காங்களே" என்றார்.

என்ன சொல்றீங்க ராகவன்? என்ன பத்தி யாரு எழுதப் போறாங்க என்றேன்.

ஹா... லக்கிலுக் (அவருடைய செல்லப் பெயரை கூறினார்...)

"ஒ கிரேட்... ஆனா ஒண்ணுங்க ராகவன்... உங்க கையாள என்னைப் பற்றி ஒரு நாள் எழுத வைப்பேன்" என்று சவால் விட்டேன். ஓவரா பேசிட்டோமோ என்று நினைக்கும் போது அவர் நட்புடன் சிரித்தார். அருகில் இவ்வளவு பேச்சையும் கேட்டுக் கொண்டு ஓர் அழகான குட்டிப் பெண் இருந்தாள். முத்துவும், விஷ்ணுவும் கூட அருகில் இருந்தார்கள். இந்த குழந்தை யாருங்க என்று கேட்டேன்.

"என் பொண்ணு தான்... அவள் பெயர் பாரதி..."

'பாரதி' என்ற பெயரைக் கேட்டவுடன் முத்துவும், விஷ்ணுவும் குழுவாக "ஓ" என்றார்கள். கவிஞர்களே இப்படிதான்.

"உங்களோட உரைநடை மாதிரியே குழந்தை ரொம்ப அழகா இருக்காளே!" என்று சொல்ல நினைத்தேன்.
தயக்கமாக இருந்ததால் சொல்லவில்லை. குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினேன். பாரதியும் பொறுப்பு மிக்க மகளாக பாராவின் விரல் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றாள்.

பேருந்தில் அடித்து பிடித்து புத்தகப் பைகளுடன் வீட்டிற்குச் சென்றேன்.

"டே இது என்னடா ஜோல்னா பை (சிவராமன் கொடுத்த துணிப்பை)... நல்லா இருக்குதே எனக்குக் கொடுத்துடேன்..." என்று என் அம்மா அவர்களுடைய காரியத்தில் கண்ணாக இருந்தார்கள். எங்க அம்மா எப்பவுமே இப்படிதான்.

10 comments:

Prabhu said...

அட, நானும் ஞாயிறு 2 ஐ ஒட்டித்தான் வந்தேன்.மிஸ் பண்ணிட்டேன். அப்போ ரவுண்ட் அடிக்கவே நேரம் போச்சு! புக் வாங்க முடியல. ஏதாவது suggestions? அடுத்து போகும் நண்பனிடம் சொல்லிவிட்டால் வாங்கிவருவான் எனக்கு.

அமுதா said...

இந்த முறை புத்தகம் தேர்வு செய்ய புத்தக விமர்சன வலைப்பூக்களில் வந்தது தான் உதவியாக இருந்தது. நன்றி. என்றாலும் திட்டமிடல் இன்றி பதிப்பகங்கள் பற்றி அறியாமல் சென்றதால் சில புத்தகங்களை தேடி வாங்க இயலவில்லை.

அன்பேசிவம் said...

கிருஷ்ணா என்னால வர முடியாது போல இருக்கு கிரிஷ்ணா, சோ நீதான் வாங்கி அனுப்பனும். :)


நைட் மெயில் பண்ரேன்

செ.சரவணக்குமார் said...

மிக அருமையான பகிர்வு கிருஷ்ணா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வாவ், கிருஷ்ணா.

அசத்தல் அனுபவம்.

சிவராமன் ம்ஹூம், எனக்கில்லை, எனக்கில்லை (திருவிளையாடல் தருமி ஞாபகப்படுத்திக்கொள்ளவும் ;))))

Baski.. said...

கிருஷ்ணா, உங்கள் எல்லா பதிவுகளையும் இன்று தான் படித்தேன்... பயனுள்ள பதிவுகள்.... தொடர்ந்து நல்ல புத்தகங்களை அறிமுகப்படுத்த வாழ்த்துக்கள்...

அன்புடன்,
பாஸ்கர்

Karthik said...

ஹாஹா ரொம்ப நல்லாருக்கு கிருஷ்ணா. என் அம்மா நான் வாங்கிருக்க புக்ஸ் பார்த்தா மயங்கிடுவாங்க. :)

பட்டாம்பூச்சிக் கதைகள் said...

வெல்க உங்கள் பயணம்..
இப்படிக்கு
நீங்கள் கடந்து சென்ற பாதை..

priyamudanprabu said...

எனது திருப்பாதங்களை உள்ளே வைத்ததும் கரண்ட் கட்.
////

ஹ ஹா

priyamudanprabu said...

அய்யா இத்தனையும் எப்ப படிச்சு முடிப்பீங்க
படிச்சுட்டு எழுதுங்க