Wednesday, January 20, 2010

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 80/-
ரூபாய்

'ன்றுப்புப்பாக்கொரானே யுண்டார்னு' என்ற குறுநாவல் 58 ஆண்டுகளுக்கு முன்பு பாஷீரால் எழுதப்பட்டது. வாழ்ந்து கெட்ட முஸ்லீம் குடும்பத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்லி இருக்கிறார். மூதாதையர்கள் யானை வளர்த்த பெருமையில் வாழும் தாய், கௌரவத்திற்காக வழக்காடி நிலபுலன்களை இழக்கும் தந்தை, மணமகன் யானையில் வருவானென்ற கனவில் வாழும் மகள் என முஸ்லீம் குடும்பப் பின்னணியில் அமைந்தக்கதை. பஷீரின் மொழியில் சொல்ல வேண்டுமெனில், "குஞ்ஞுபாத்தும்மா ஆனைக்கார மவனுக்க பொண்ணு மவ". அந்தப் பெருமையில் வளரும் அவளை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது.

பாத்தும்மா செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும் பாரம்பரிய முஸ்லீம் குடும்பங்களுக்கே உண்டான ஏராளமான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுகிறாள். ஆடவர்களின் கண்களில் படக்கூடாது, வகுடெடுத்து தலை பின்னக்கூடாது, பூ வைக்கக் கூடாது, குட்டிக் குப்பாயம் (பாடீசு, உள்ளாடைகள்) அணியக் கூடாது என்று ஏராளமான கட்டுப்பாடுகள். மீறினால் இப்ரீத்தும், ஜின்னும், சைத்தானும், மலக்குகளும் தலையில் உட்கார்ந்து கொண்டு வாழ்வை சீரழிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள். அவளும் இறைவனுக்கு எதிரான செயல்கள் செய்யாமல் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்கிறாள்.

அவளுடைய குடும்பம் எதிர்பாராத விதமாக வழக்கில் சொத்துக்களை இழந்து குடிசை வீட்டிற்கு இடம் பெயர்கிறார்கள். அங்குதான் சந்தோஷத்தையும், சுதந்திரத்தையும் முழுமையாக அனுபவிக்கிறாள். அல்லிக் குளத்தில் குளிக்கப் போகும்போது அடிபட்ட பறவையைக் காப்பாற்ற விழைந்து குழியில் விழுகிறாள். இக்கட்டான சூழ்நிலையில் 'நிஸார் அகமது' அவளுக்கு உதவி செய்ய வருகிறான். இருவருக்குமிடையில் அன்பு ஊற்றெடுக்கிறது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் தலைமுடியை வகுடெடுத் குட்டிக் குப்பாயம் அணிந்த ஆயிஷா அறிமுகமாகிறாள். அவளைக் கண்டு காபிரிச்சி (இறைவனுக்கு எதிரான செயல்களை செய்பவள்) என்று ஒதுங்குகிறாள். பழகிய பிறகுதான் தெரிகிறது அவள் நிஸாரின் சகோதரி என்று. ஆயிஷாவின் வீட்டிற்கு சென்றுவரும் அளவிற்கு நட்பு வளர்கிறது. அவர்களுடைய முற்போக்குத்தனம் இவளுக்கு பிடித்திருக்கிறது. நிஸாரையும் சேர்த்துத்தான். அவனை எப்படி அடைகிறாள் என்பதுதான் மீதிக் கதை. எளிமையான மொழியில் அலாதியான வாசிப்பனுபவம் தந்தப் படைப்பு. நல்ல மொழிபெயர்ப்பை வழங்கிய குளச்சல் மு. யூசுப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகன் வினோத்திடன் இந்தக் கதையில் ஆயிஷா பாடும் பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த நாவலை நான் படிக்கவில்லை.

ஹோ... ஹோ... ஹோ...
குத்தினி ஹாளிட்ட லித்தாப்போ
சந்ஜினி பாலிக்க லுட்டாப்பி
ஹாலித்த மாணிக்க லுட்டாப்பி
சங்கர பஷ்ண தூலீபீ
ஷிஞ்சினி ஷீலாத்த ஷித்தாலோ
ஃபானத்த லாக்கிடி ஜிம்பாலோ
ஹா... ஹா... ஹா...
ஹோ... ஹோ... ஹோ...

இது ஒரு ஹாஸ்யப் பாடல் மாமா. அர்த்தம் சொல்ல முடியாது, நீங்க மொழிபெயர்ப்பில் படிக்கிறது எல்லாம் ஒண்ணுமே இல்லை... அவரோட மலையாள மொழி நடை சங்கீதம் மாதிரி இருக்கும். நீங்க கேக்கக் கொடுத்து வைக்கலியே! என்றான்.

அதென்னமோ உண்மைதான். "கேட்காத சங்கீதம் கேட்ட சங்கீதத்தை விட இனிமையாக இருக்கும்" என்று மோகமுள் நாவலில் ராஜம் கதாப்பாத்திரம் பாபுவிடம் சொல்லுவான். அந்த வகையில் பஷீரின் மொழிபெயர்ப்பு ஒவ்வொன்றையும் வாசித்து முடித்ததும் கேட்க முடியாத சங்கீதத்தின் இனிமையை என்னால் அனுபவிக்க முடிகிறது. அந்தப் பரவசமே அவருடைய அடுத்தடுத்த நாவல்களை படிக்கத் தூண்டுகிறது.

7 comments:

Baski.. said...

கடைசி பத்தி அருமை....

Athisha said...

ஆவலை தூண்டிவிட்டீர்கள்

rvelkannan said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே...
பஷிரின் எழுத்து நடை என்னை மிகவும் கவர்ந்த ஒன்று.
உங்களின் புத்தக கண்காட்சியில் பார்க்கமுடியாமல் போனது சற்று வருத்தம் தான்.

அ.மு.செய்யது said...

எனக்கென்னமோ பஷீரின் எழுத்து நடை தோப்பில் முகமது மீரான் நடையை ஒத்ததாக இருக்கும் என்று நினைக்கிறேன்.( இன்னும் மூக்கு படிக்க் ஆரம்பிக்க வில்லை )

இந்த குட்டிக்குப்பாயம்,எக்கே மோவளே இதெல்லாம் மீரானும் யூஸ் பண்ணிருக்காரு.

உப்பப்பாட்ட ஒரு ஆனை உண்டு,பால்யகால சகி மிஸ் செய்தவை பட்டியலில் இருப்பது வருத்தமே.

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அழகான பகிர்வு.

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

@ பாஸ்கி, ஆதிஷா, அமிர்தவர்ஷினி அம்மா, பிரியமுடன் பிரபு

பின்னூட்டத்திற்கு நன்றி...

@ வேல்கண்ணன்

நீங்கள் மொபைலில் தொடர்பு கொண்டதில் மிக்க மகிழ்ச்சி... மாட்டாமையா போயிடுவீங்க... கண்டிப்பா நேரில் சந்திக்கலாம்.

@ அ.மு.செய்யது

/-- மிஸ் செய்தவை பட்டியலில் இருப்பது வருத்தமே. --/

அதுதான் சென்னைவாசி ஆகப் போறீங்களே. வாங்கிடலாம் கவலை வேண்டாம்.