Monday, March 1, 2010

வெட்டுப்புலி

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் :
தமிழ்மகன்
விலை : 220/- ரூபாய்

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 'வெட்டுப்புலி' நாவல் வெளியீட்டு விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன். அப்பொழுதே "நம்ம ஊரைச் சுற்றி நடக்கும் கதைதான்... வாசித்துப் பாருங்கள்" என்று தமிழ்மகன் என்னிடம் சொல்லி இருந்தார். புத்தக அட்டையைப் பார்த்த பொழுது என்னுடைய சிறுவயது விளையாட்டுகள் ஞாபகம் வந்தது.

கிராமங்களில் பனமட்டைகள், உடைந்த வளையல்கள், உபயோகமில்லாத சைக்கிள் டயர், கில்லி, கோலி, பம்பரம், சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகளின் முன் அட்டைகள் என பல விஷயங்களை சேகரித்து விளையாட்டுப் பொருளாக்குவோம். அப்படி விளையாடுவதற்காக தீப்பெட்டியின் விதவிதமான அட்டைகளை சிறுவயதில் சேகரித்த அனுபவம் உண்டு. கற்களை வைத்து உருட்டி விளையாடும் விளையாட்டிற்கு (சிசர்ஸ்) தீப்பெட்டிகளின் அட்டைகளும், சிகரெட் அட்டைகளும் தான் ஆதாரம். அதில் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்கு எத்தனிக்கும் ஒருவனின் படமும் இருக்கும். ஒருமுறையேனும் அந்த அட்டைப் பட வடிவமைப்பிற்கான காரணங்களை யோசித்ததில்லை. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தமிழ்மகன் அதற்கான தேடலைத் தன் புனைவின் மூலம் அணுகியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து விடுமுறையைக் கழிக்க தமிழ்ச்செலவன் சென்னைக்கு வருகிறான். Cheeta Match Box-ன் முன் அட்டையிலுள்ள சிறுத்தைப் புலியை வெட்டும் நபர் அவனுடைய தாத்தா சின்னா ரெட்டி தான் என்று பாட்டியின் கதை மூலம் தெரிந்து கொண்டதை உறுதிப்படுத்த நண்பர்களுடன் சொந்த ஊரான ஜகநாத புறத்திற்குப் பயணமாகிறான். அங்கிருந்து புழல், காரனோடை, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், பூந்தமல்லி, பொன்னேரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்று சின்னா ரெட்டியின் தகவலைச் சேகரிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள் என்றால் இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்து போனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு முரண்பட்ட தகவல்களுக்கு இடையில் உண்மையைத் தேடி அலைகிறார்கள்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, சின்னா ரெட்டியைத் தேடிச்சென்ற பயணம் ஆங்கிலேயர் ஆட்சி, ஜமிந்தார் ஆட்சி முறை, காங்கிரஸின் நிலைப்பாடு, நீதிக்கட்சி, சுதந்திர இந்தியா, திராவிடக் கழகங்களின் தோற்றம் (திக - திமுக - அதிமுக), சினிமா என்ற மாய ஊடகத்தின் வளர்ச்சி என்ற பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்கள் வரை நாவல் விரிவதால் ஈ வெ ரா, எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இளையராஜா, ரஜினி, கனிமொழி, அழகிரி வரை பல பிரபலங்கள் பாமரர்களின் சாதாரண உரையாடல்களில் வந்து செல்கிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்த பயணம் முப்பதுகளுக்குத் தாவி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமீப காலங்களுக்கு நகர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நாவல் பயணிப்பதால், அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கமும், மனோபாவங்களும் நுண்மையாக சித்தரிக்க வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால சமுதாய மாற்றத்தை நாவலில் கொண்டுவரும் பொழுது ஏகப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டியதிருக்கும். அதனைத் தமிழ்மகன் சிறப்பாக செய்திருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதற்கு அவர் திரட்டிய தகவல்கள் மெச்சப்பட வேண்டிய ஒன்று. ஏராளமான வரலாற்று மற்றும் பிரபலங்களின் தகவல்களை நாவலில் சொல்லியிருந்தாலும் எதுவுமே நாவலின் வேகத்தைக் குறைக்கவில்லை.

சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பொழுது ஏராளமான கிராமங்கள் மூழ்கியிருக்கிறது. வீட்டை இழந்த கிராம மக்களே அதற்கான கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். நாவலில் இதனைப் படிக்கும்பொழுது அதிர்ச்சியாக இருந்தது.

நாம் வாழும் வாழ்க்கை யதார்த்தமானது என்று நினைத்தாலும், அரசியல் மற்றும் சினிமாவின் தாக்கம் மூர்கமாக நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இவையிரண்டும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அந்த வகையில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சமுதாய மற்றும் மனித மாற்றத்தை பதிவு செய்துள்ள முக்கியமான படைப்பாக வெட்டுப் புலியை எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் எழுதியவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழும் அல்லது வாழ்ந்து மடிந்த யாரையும் தனது படைப்புகளில் முழுமையாகக் கொண்டு எழுதியதில்லை. தமிழ்மகன் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகள் சென்னைப் புறநகர் சார்ந்து வருமெனில் அது தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.

ஜனவரி மாத புத்தகம் பேசுது இதழில் ஜ.சிவகுமார் எழுதிய வெட்டுப்புலி விமர்சனம்

பதிவர் ஆதவன் எழுதிய வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு

6 comments:

CS. Mohan Kumar said...

பகிர்வுக்கு நன்றி பிரபு. நல்ல அறிமுகம்

தமிழ்மகன் said...

அன்புக்குரிய கிருஷ்ணா,
மிக நன்றாக எழுதியிருந்தீர்கள். தமிழ் ஸ்டூடியோ அருண், சுகுணா திவாகர், அதிஷா போன்ற வலைப் பூ நண்பர்கள் வேகமாக படித்துவிட்டு எழுதியிருந்தார்கள். அதிஷா பாதி படித்திருப்பதாகச் சொன்னார்.

ஒரு நூற்றாண்டின் சென்னையை விவரிப்பதற்கு மூன்று ஆண்டுகள் தரவுகள் திரட்டினேன்.தீப்பெட்டியின் சரித்திரமும் திராவிட இயக்க சரித்திரமும் பக்கத்துணையாக இருந்தன. எந்தத் தகவலும் துருத்திக் கொண்டு தெரியக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன். மிகுந்த ஆதாரங்களோடு நிறைய சம்பவங்கள் எழுதியிருந்தாலும் வாய் மொழி ஆவணங்கள் தரும் சுவையையும் சேர்த்திருக்கிறேன். பெரும் பாலும் அவை கதாபாத்திரங்களின் உரையாடல்களில் இடம் பெறுவதாகச் சொல்லியிருக்கிறேன்.
-தமிழ்மகன்

rvelkannan said...

பகிர்வுக்கு மிக்க நன்றி நண்பரே
முன்பே வாங்கிவிட்டேன். ஆனால் படிக்கவில்லை. உங்களின் பதிவின் வழியாக ஆர்வம் மிகுதிஆகிவிட்டது.
வெகு விரைவில் தொடங்கிவிடுவேன்.

Unknown said...

@ மோகன் குமார்
@ வேல்கண்ணன்

வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி...

Unknown said...

தமிழ்,

மூன்று ஆண்டுகள் நீங்கள் எடுத்துக் கொண்ட கால அவகாசத்திற்கும், உழைப்பிற்கும் நல்ல பலன் கிடைத்திருக்கிறது தமிழ். நாவல் சுவாரஸ்யமாக இருக்கிறது. இந்த நாவல் உங்களை பரவலாக நிறைய வாசகர்களிடம் கொண்டுசெல்லும்.

சமீபத்தில் உடல் நிலை சரியில்லாமல் இருந்ததால் நாவலை முடிக்க கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டது.

உங்களுடைய புத்தகங்கள் இன்னும் இரண்டு என்னிடம் இருக்கிறது. சிறிது அவகாசம்எடுத்து அவற்றையும் வாசிக்க ஆவலுடன் இருக்கிறேன்.

பின்னூட்டத்திற்கு நன்றி...

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி