Saturday, January 22, 2011

ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி

தமிழில்: குளச்சல் மு யூசுப்
காலச்சுவடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூபாய் 150/-

கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.

விளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.

1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.

விடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.


ஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

"உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா? 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா? எத்தனை பல்கலைக் கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்? 930 -க்கும் மேல்.

உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்."

புள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.

மூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.

ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.

தொடர்புடைய இதர பதிவுகள்:
1. பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்
2. ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா

13 comments:

எண்ணங்கள் 13189034291840215795 said...

நல்லதா சொல்வதற்கு ஒண்னுமே இல்லையாமா?..

பார்வைக்கோளாறாயிருக்கும்..

அனுபவத்தை எதிர்மறையாக மட்டுமே விமர்சித்து புத்தகம் போட்டு தொழில் செய்ய எண்ணுபவர் வேறென்ன சொல்ல முடியும்.?..

பாவம்...அவரும் பிழைக்கட்டும்..

Unknown said...

ஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார்.

புத்தகத்தை முழுவதும் படித்தால் உங்களுக்கு அந்த விவரங்கள் பற்றி தெரிய வரும்.

:-)

எண்ணங்கள் 13189034291840215795 said...

ஒரு சில பாதிரியார்களைப் பற்றியும், சமையல் செய்யும் சகோதரிகள் பற்றியும், பல கன்னியாஸ்திரிகள் பற்றியும் நல்ல விதமாக சொல்லியிருக்கிறார். //

அப்பாட .. நன்றிங்க.

Romeoboy said...

இந்த புத்தகத்தை பற்றி எந்த ஒரு விமர்சனமும் இதுவரை படித்து இல்லை. அதனால் காலச்சுவடில் பார்த்தும் வாங்க வேண்டுமா என்கிற எண்ணம் தோன்றியது. அதனால் வாங்காமல் தவிர்த்துவிட்டேன். உங்கள் விமர்சனம் படித்தபிறகு வாங்க வேண்டும் என்று நினைத்து உள்ளேன், எல்லாம் வல்ல ஜீசஸ் துணை இருப்பாராக.. ஆமென்

உதயம் said...

என் பதிவு உங்களுக்கு பயன்பட்டிருந்தால் எனக்கும் மகிழ்ச்சியே. தெரியப்படுத்தியதற்கு நன்றி பிரபு! வாழ்த்துக்கள்.

செ.சரவணக்குமார் said...

பகிர்வுக்கு நன்றி பிரபு.

Unknown said...

பின்னூட்டத்திற்கு நன்றி... நண்பர்களே...

Anonymous said...

கண்டிப்பா படிக்கணும் போல இருக்கு... விமர்சனத்துக்கு நன்றி....

Aranga said...

கிருஷ்ணா ,

கண்காட்சியில் வாங்கினேன் , மொழிபெயர்ப்பில் ஏதோ போதவில்லை என்று தோன்றியது , மற்றபடி அங்கொன்றும் இங்கொன்றுமாக கேட்டவை புத்தகம் முழுக்க .

Unknown said...

அரங்கசாமி, எனக்கு அதுபோன்ற குறை இருப்பதாகத் தெரியவில்லையே...

J.P Josephine Baba said...

துணிவாக போராட் ஏன் 35 வருடம் எடுத்து கொண்டார்.

Unknown said...

புத்தனுக்கு ஏன் உடனே ஞானம் கிடைக்கவில்லை. அததுக்கு ஒரு நேரம் வரணும் இல்லையா?

ஜெயந்த் கிருஷ்ணா said...

நீண்ட தேடலுக்கு பின் இப்போது தான் இந்த புத்தகம் கையில் கிடைத்திருக்கிறது.