Monday, March 16, 2009

Thesandhri - S.Rama Krishnan

தேசாந்திரி: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 110)
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

அன்றாட வாழ்க்கையில் பயணங்கள் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. நாம் காணும் அனைத்துமே பயணம் செய்கிறது. பால் வெளியில் பூமி பயணம் செய்கிறது. பூமியில் சிறு ஜீவன்களான அமீபா, எறும்பு முதல் மிகப் பெரிய திமிங்கலம் வரை எல்லாமே பயணம் செய்கிறது.

ஓர் இலையிலிருந்து கீழே விழும் ஒரு துளி நீர் கூட தனது பாதையை வகுத்துக் கொண்டு, செல்லும் இடத்தை ஈரப்படுத்திச் செல்கிறது. சில நேரங்களில் விழுந்த இடத்திலேயே காணாமல் போகிறது. முடிவான கடலை அடைவது சில துளிகள் மட்டுமே.

ஒரு துளி மற்றொரு துளியுடன் ஒன்று சேர்ந்து ஆறாக, அருவியாக, ஏரியாக, குளமாக பல்வேறு நிலைகளில் தனது பயணத்தை தொடர்கிறது. ஒவ்வொரு நிலையிலும் பல மனிதர்களையும், நாகரீகங்களையும் கடந்து செல்கிறது. கடந்து செல்லும் துளிகள் தான் மனித வாழ்விற்கு ஆதாரம்.

மனிதனும் இந்த உலகில் ஒரு சொட்டுதான். அவனும் வாழ்க்கைச் சக்கரத்தில் சுழன்று பயணிக்கிறான். ஆனால் பயணிக்கும் எல்லோருமே தான் சார்ந்த இடத்திலுள்ள எல்லாவற்றையும் அவதானிப்பதில்லை. முன்பெல்லாம் ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு செல்வது என்பதே நேரம் எடுக்கக் கூடிய விஷயமாக இருந்தது. இருந்தாலும் வழியிளிள்ள மரங்களில் புளி, மா, ஈச்சை என பறித்துச் சாப்பிட்டுக்கொண்டே நண்பர்களுடன் செல்வது அலாதியான விஷயம். இன்று நெடுஞ்சாலைகளில் மைல் கல்லையும், திசைப் பலகைகளையும் தவிர வேறொன்றும் இல்லாத நிலை.

அசோகர் சாலைகளில் மரம் வளர்த்தார் என்பதே வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் வரும் புனைவுக் கதையாகிவிடும் போலிருக்கிறது. அதே நிலைதான் கல்வெட்டுகளுக்கும், அழிந்து வரும் நிலையிலுள்ள நூற்றாண்டு பழமையுள்ள சித்திரங்களுக்கும்.

இன்று வாய்ப்புகள் வளர்ந்துள்ள நிலையில் கண்டம் விட்டுக் கண்டம், நாடு விட்டு நாடு செல்வது கூட சுலபமாகிவிட்டது. என்ன தான் வாய்ப்புகளும், வசதிகளும் பெருகி இருந்தாலும் மனிதர்களுடைய விசாலம் சுருங்கி விட்டது. அதனால் தான் மனித வாழ்க்கைக்கு ஆதாரமான இயற்கை, கலாச்சாரம் மற்றும் வரலாற்று ஆதாரங்களை ஒன்றுமில்லாமல் செய்கிறோம். எல்லா பயணங்களும் மகிழ்சியானவையே நாம் குற்ற உணர்சிக்கு ஆளாகாதவரை.

அவசர உலகில் நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்ட, நம்மைச் சுற்றியுள்ள அழிந்து வரும் நிலையிலுள்ள சிறப்பான இடங்களை, தவறவிட்ட அரிய விஷயங்களை தனது தேசாந்திரி எனும் பயணக் கட்டுரையில் எஸ். ராமகிருஷ்ணன் பதிவு செய்துள்ளார். அனைத்து இடங்களுமே பயணம் செய்து பார்க்க வேண்டிய இடங்கள். படித்தாவது தெரிந்துகொள்வது நல்லது.

3 comments:

priyamudanprabu said...

ஏற்க்கனவே விகடனில் படித்துருக்கிறேன்
நல்ல பதிவு

J S Gnanasekar said...

எனது அபிமான தமிழ் புத்தகங்களில் ஒன்று. அர்ச்சனாபுரம், லோனாவாலா போன்ற ஊர்களுக்கு நான் செல்ல காரணமான புத்தகமும்கூட.

-ஞானசேகர்

Ramkumar Narasimhan said...

It is worth reading gives idea of new places which we did not give much importance.Travel is one of the ancient inherits we have acquired as because of it we have came from cave to concrete jungle.Irony in this journey we lost the contact with nature,any how to gain we have to loose it is natures law,humanity cannot escape from it.