Friday, April 23, 2010

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை

ஏப்ரல் 23 - ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். புத்தகத்தின் மீதான தீராதக் காதலால் இந்த தினத்தின் மீதும், சரஸ்வதி பூஜையின் மீதும் எப்பொழுதுமே எனக்கு ஒரு மயக்கம் உண்டு.

யோசித்துப் பார்க்கையில், நான் (அரசுப்) பள்ளி வாழ்க்கையை முடித்து வெளியில் வரும் வரை பாட புத்தகத்தைத் தவிர்த்த வேறு எதையும் படித்ததில்லை. பாடப் புத்தகத்தைக் கூட முழுவதும் படித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, ஆசிரியர்களோ என்னை புத்தக வாசிப்பிற்கு ஊக்கப்படுத்தியதும் இல்லை. கல்லூரி வந்ததும் தான் ஒரு சில இதழ்களையும், புத்தகங்களையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கைசெலவிற்காக என்னுடைய அண்ணன் தரும் பணத்தைப் பிடித்தம் செய்து சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அருகில் வேலை கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சொந்த நூலகத்திலுள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியவைதான்.
புத்தகம் வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதால் நான் எதிர்கொண்ட சங்கடமான சில கேள்விகள் தான் புத்தக தினத்தில் எனக்கு ஞாபகம் வரும்.

நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பொழுது "எதுக்குடா இப்படி வீண் செலவு செய்யற?... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா?!... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்?(இது என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு படித்தவர் கேட்டது. அப்பொழுது கூட புத்தகத்தை இரவலாகக் கேட்கவில்லை)." இது போன்ற கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய பதில் இதுவரை புன்னகையாகத் தான் இருக்கிறது.

மேலுள்ளவற்றில் "ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடப் போரடா?!..." இந்தக் கேள்விதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தக் கேள்வி. என்மேல் இருக்கும் அக்கறையினால் தான் இந்தக் கேள்வி எழுந்தது என்றாலும் பொதுவான புத்தகம் படிப்பவர்களின் மீதான அவர்களுடைய பிம்பம் என்னை நிலைகுலைய வைத்தது. இந்த மாதிரியான மன பிம்பங்கள் கொண்ட குறுகிய மனப்பான்மை புத்தக வாசிப்பை மட்டுப்படுத்துவது குறைவுதான் என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை (பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பது), கணினி, செல் ஃபோன் போன்ற அறிவியல் வளர்ச்சி, சேட்டிலைட் சானல்களின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான பெரிய காரணங்களாக எனக்குப் படுகிறது. வாசிப்பு என்பது ஒரு சிலரால் கேலியாகவும், ஒரு சிலரால் பயங்கரமாகவும், ஒரு சிலரால் வீண் வேலையாகவும் பார்க்கப்படுவதை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய பிறப்பிடம் கிராமம் என்பதால், படிக்காத முந்தையத் தலைமுறையினர் வளரும் தலைமுறையினரைப் படிக்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட சமந்தப்பட்ட புத்தகங்களுக்கு ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்கின்றனர். கேபிள் இணைப்பிற்காக மாதம் தோறும் குறைந்தது 100 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பொது அறிவையோ, சுய அறிவையோ பெருக்கிக் கொள்வதற்காக ஒரு பைசாவைக் கூட அவர்கள் செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை.

என் தெருவில் உள்ள ஒரு குழந்தையாவது
ராஜா-ராணி
க் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மாயாஜாலக் கதைகள், இராமாயண மகாபாரதத்திலுள்ள சிறுவர் கதைகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர்களின் கதை உலகம் காக்கா-நரிக் கதையோடும், பாட்டி வடை சுட்டக் கதையோடும் நின்று விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினாலும், குடும்பச் சிதறல்களினாலும் தாத்தா பாட்டி கதைகளும் குழந்தைகளைச் சென்று சேர்வதில்லை. சிறுவர்களுக்கு கதைகள் சொல்வதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அவர்களுடைய கவன சக்தி பெருகும். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கம் வரும். நிறைய சொற்கள் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதினால் நம் மீதான அன்பு வளரும். ஒரு வயதிற்கு மேல் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்கள் மறைமுகமாக அவர்களுக்குத் தெரியவரும். "புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும். பிள்ளைகளின் அடுத்தகட்ட பருவத்திற்கு தயார் செய்யும் வேலையை பெரியவர்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளில் முக்கியமான ஒன்று "புத்தகம்". எனவே அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வாசிக்க ஊக்கப் படுத்துங்கள். தமிழில் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு புத்தகங்கள் வெளிவருவது குறைவுதான். கிழக்கின் ப்ரோஜிடி குழு அதனை சிறப்பாகவும், தரமாகவும் செய்கிறார்கள்.

என்னுடைய தோழிகளுக்கும், நண்பர்களின் தங்கைகளுக்கும், மனைவிகளுக்கும் "தயவு செய்து குழந்தைகளுக்கான கதைகளைப் படிங்க, உங்க குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்க" என்று எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். "போங்கண்ணா இதுங்களைக் கட்டி மேய்க்கவே முடியலை. அதான் டிவியிலயும், ஸ்கூல்-லயும் கத்துக்கராங்களே, அது போதாதா?" என்று பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
இன்று காலையில் கூட என்னுடைய நண்பர்களுக்கு "Today is the world book and copyright day. Buy anyone book written by your favorite author and discover the pleasure of reading. It’s my request. But don’t buy Vikatan, Kumudam, Kungumam, Rani magazines etc…. :-) Thanks & Love – Krishna Prabhu" என்று SMS அனுப்பியிருந்தேன். ஒரு சிலர் நல்ல SMS என்று பதில் அனுப்பியிருந்தார்கள். அதில் ஒளியவன் (சென்னை பல்கலையின் தமிழ் எழுத்துருவிற்கான ஆராய்ச்சி மாணவன்) அனுப்பியிருந்த பதில் சிரிப்பையும் வெறுமையையும் ஒருசேர வரவழைத்தது.

படித்தவன் பாடம் நடத்துவான்...
படிக்காதவன் பள்ளிக் கூடம் நடத்துவான்...!


இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.


Thursday, April 22, 2010

கவிதைப் பட்டறை - தஞ்சாவூர்



தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை
(TAMIL POETRY WORKSHOP)



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணைய தளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: உமா ஷக்தி (http://umashakthi.blogspot.com)

Wednesday, April 14, 2010

செல்லுலாயிட் சித்திரங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு சீன வரலாறு மற்றும் சீனத் தலைவர்களைப் பற்றி தமிழில் புத்தகங்கள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன். கிழக்கு, ஆழி மற்றும் NCBH பதிப்பகங்களில் சில புத்தகங்கள் கிடைத்தன. அப்படியே ஸ்பென்சர் பிளாசாவிலுள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்த வேறொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

லேண்ட்மார்க் (www.landmarkonthenet.com)- இணைய தளத்தின் ஆன்லைன் மார்க்கெட்டிங் குழுவில் நானும் ஒருவனாக இருப்பதால், அங்கு விற்கப்படும் பல வகையான புத்தகங்களில், எந்த இடத்தில் அதிக நபர்கள் கூடுகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மணி நேரம் செலவு செய்தேன். மதிய வேளையில் சென்றிருந்ததால் மிதமான கூட்டமே இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகம், பாட சமந்தப்பட்ட புத்தகம், புனைவு மற்றும் அபுனைவு என ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிட்டு தமிழ் புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.

'அர்த்தமுள்ள இந்துமதம்' கனமான ஒரே புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். பதிப்பகத்திற்கே
நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டு, மேலும் சில புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஓர் இளம் காதல் ஜோடி சென்றார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எங்கு செல்கிறார்கள் என்று பார்த்தேன். டிஸ்கௌண்டில் சில புத்தகங்களை அடுக்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அதன் அருகிலேயே காமசூத்ரா புத்தகங்கள் சிறியதும் பெரியதுமாக அடுக்கியிருந்தார்கள். அவற்றிலிருந்து ஒரு சிறிய புத்தகத்தை எடுத்த காதலன் அந்தப் பெண்ணிடம் காட்டிச் சிரித்தான். அவள் மிரட்சியுடன் அக்கம் பக்கம் பார்த்தாள். அப்படியே நான் அவர்களை கவனிப்பதையும் பார்த்துவிட்டாள். நான் கூச்சத்துடன் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். 'செல்லுலாயிட் சித்திரங்கள் ஆசிரியர் - தமிழ்மகன்' என்றிருந்தது. அடடே... நம்மாளோட புத்தகமான்னு எடுத்துக் கொண்டு cash counter-க்குச் சென்றேன். எனக்கு முன்னாள் அந்தப் பையன் ஆசையாக எடுத்த சிறிய புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())((

தளபதிக்கு ஆண் குழந்தை, தலைக்கு பெண் குழந்தை, சூப்பர் ஸ்டார் இமயமலை செல்கிறார், அவருக்கு இவருடன் காதல், இளம்புயல் ஹாலிவுட்டில் நுழைகிறது - இந்த விஷயங்கள் தலைப்புச் செய்திகளாக வராத நாளிதழோ, வார இதழோ, சாட்டிலைட் சேனல்களோ இன்று இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அதனால் தான் எறும்பு இனிப்புக் கட்டியைச் சுமந்து கொண்டு இங்குமங்கும் அலைவது போல ரசிகனும் அதீத ஆசையினால் நட்சத்திரங்களின் முகவரியைத் தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைகிறான். அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான்.

"ஒருத்தனை மொட்டை மாடியில நிக்க வச்சி சினிமா வெளிச்சம் போட்டு காட்டிடும் மாமா" என்று மருமகன் எப்பொழுதாவது சொல்லுவான்.
அந்த வெளிச்சத்தில் நனைந்தவர்களின் வாழ்க்கை விசித்திரம் நிறைந்தது. சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில் சீண்டுவாரில்லாமல் இருந்தவர்கள், திறமையும் அதிர்ஷ்டமும் இருந்து தனது பங்களிப்பின் மூலம் உச்சத்தை அடைந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கைப் பாதையே மாரிவிடுகிறது. சுதந்திரத்தையும், நிம்மதியையும் இழந்து நட்சத்திரங்கள் என்ற டை மொழியை அடைந்த பிறகு அவர்களின் ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுகிறது. முக்கியமாக அவர்களின் அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களின் ஆவல் அளவிட முடியாதது. என்னதான் ஆவல் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்காது. நிருபர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு அமையும். தமிழ்மகன் சினிமா நிருபராகவும், வண்ணத்திரை இதழின் எடிட்டராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளதால் சுவாரஸ்யமான அனுபவங்கள் அவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து உயிரோசையில் கட்டுரையாக எழுதி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

ஒன்றிற்கு இரண்டாக சம்பவங்களைத் திரிப்பதாலும், கிசுகிசு செய்திகளையும் பத்திரிகைகள் வெளியிடுவதால் நிருபர்களுக்கு எல்லா நேரங்களிலும் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தமிழ் மகனுக்கும் ஒன்றிரண்டு அனுபவங்கள் அப்படி நடந்திருந்தாலும், மற்ற அனுபவங்கள் மென்மையானதாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது. குறிப்பாக நடிகர் சூர்யா, அஜித், அரவிந்சாமி, ரஜினி, செல்வா, சிவாஜி, மணிரத்னம், ஷங்கர், AR ரகுமான் மற்றும் நடிகை வினோதினி, கௌதமி, ரோஜா, தேவிகா, மனோரமா, ஷகிலா போன்றவர்களுடனான அனுபவங்கள் பிரபலங்களின் மற்றுமொரு மென்மையாக முகத்தினைக் காட்டுவதாக இருக்கிறது.

ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் சக மனிதர்களின் மீதான நேச உணர்வுகளையும் காட்டும் அனுபவக் குறிப்புகள் இவை. நட்சத்திரங்கள் தங்களின் சுயத்தை இழந்துதான் திரையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக எளிமையாக, எந்தவித அலங்கார பூச்சுக்களும் இன்றி இயல்பாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பிரபலங்கள் என்ற மாயையைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும் தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார். ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடிய அருமையான அனுபவக் குறிப்பு.

ஒரு சில கட்டுரைகளை அவருடைய வலைத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது:


1.
அஜித், ஷங்கர், வினோதினி பற்றி
2.
சரத் குமார், சோனியா அகர்வால் பற்றி
3.
ரஜினி, மனோரமா, சிவசக்தி பாண்டியன் பற்றி
4.
எஸ் ஏ சந்திரசேகரன், சன் டி வி, ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவி பற்றி
5. எஸ்.எஸ்.ஆர், AR ரகுமான், சுஜாதா பற்றி
6. துள்ளுவதோ இளமை, இயக்குனர் சீமான் பற்றி
7. கஸ்தூரி, முரளி பற்றி

மேலும் படிக்க அவருடைய வலைத் தளத்தில் 'நினைவலைகள்' என்ற லேபுளுக்குச் செல்லவும்.
புத்தகம்: செல்லுலாயிட் சித்திரங்கள்
ஆசிரியர்: தமிழ்மகன்
பக்கங்கள்: 208
விலை: ரூ.100/-
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

Monday, March 8, 2010

பால்யகால சகி - பஷீர்

வெளியீடு: காலச்சுவடு
ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
விலை: 60/- ரூபாய்

காலைப் பனியின் மென்மை போலவும், அதிகாலை நேரத்தின் அமைதியான உதயத்தைப் போலவும் சில விஷயங்கள் மனதின் ஆழத்தில் குளத்திலிட்ட கல் போல தங்கிவிடும். முதல் நட்பும், முதல் காதலும் கூட அது போன்ற இதமான விஷயங்கள் தான். துருதிஷ்டம் என்னவெனில் இவையிரண்டும் நிறைய பேருக்கு கடைசி வரை நிலைப்பதில்லை. பாசிபடிந்த கல்லினை மீன்கள் சுரண்டுவது போல இழந்த உறவுகளையே மனித மனம் உரசித் திரிகிறது. 'போப்பூர் சுல்தான்' என்றழைக்கப்படும் பஷீரின் இளம்பருவத்து தோழியின் நினைவுகள் தான் பால்யகால சகி.

பஷீரின் ஆக்கங்கள் அனைத்துமே வாசகர்களால் கொண்டாடப்படும் படைப்புகள். அவருடைய புனைவுகள் அனைத்துமே எளிமையான வாசகர்களுக்கானது. புன்னகையுடன் அவருடைய மொழிக்குப் பின்னால் நம்மை அழைத்துச் செல்லக் கூடியது. அரை நூற்றாண்டுகளுக்கு மேலாகியும் வெவ்வேறு தலைமுறையினரால் அவளுடைய இளம்பருவத்துத் தோழி ரசிக்கப்படுகிறாள். அவள் சொல்ல வந்த விஷயத்தை யோசிக்காதவர்களே இருக்கமுடியாது.
மஜீத்,சுஹரா -
இருவரும் அடுத்தடுத்த வீட்டில் வசிக்கிறார்கள். மஜீதின் அப்பா பணக்கார மர வியாபாரி. நல்ல முறையில் தொழில் செய்து பணம் ஈட்டுபவர். சுகராவின் அப்பாவோ ஏழ்மையில் உழலும் பாக்கு வியாபாரி. முரண்பட்ட பொருளாதாரச் சூழ்நிலைகள் குழந்தைகளுக்கு ஏது?. அப்படியே வந்தாலும் விளையாட்டும் கேளிக்கைகளும் சண்டைகளும் அவர்களை ஒன்று சேர்க்கிறது அல்லவா? உலகம் அறியாத வெகுளிப் பெண்ணான சுராவை சீண்டி விளையாடும் சந்தர்ப்பம் மஜீத்திற்கு அமைகிறது.

அவர்களுடைய வீட்டிற்கருகில் ஒரு மாமரம் இருக்கிறது.
பழுத்த பழங்கள் மரத்திலிருந்து உதிரும் பொழுது சுராவை முந்திக்கொண்டு மஜீது எடுத்துக் கொள்கிறான். ஒவ்வொரு முறையும் அவளுக்கு ஏமாற்றம் தான் மிச்சம்.
மஜீதின் மீதான ஆரம்ப வெறுப்பிற்கு இதுவே காரணமாக அமைந்துவிடுகிறது. ஒரு கட்டத்தில் நகங்களை ஆயுதமாகக் கொண்டு அவனுடன் சண்டைக்குப் பாய்கிறாள். அவர்களுடைய சண்டை புன்னகையுடன் மீண்டும் மீண்டும் வாசிக்கத்தக்க உரையாடல்கள். பழம் தனக்குக் கிடைக்காத ஏமாற்றத்தால் சுரா கண் கலங்குகிறாள். அவளைத் தேற்றுவதற்காக மஜீது மரத்திலிருந்து பறித்த கனிகளை சுராவிற்குக் கொடுத்துவிடுகிறான். அதிலிருந்து மஜீதின் இளம்பருவத்து தோழியாகிறாள் சுஹரா. அவன் அரசனாக வாழும் கற்பனை உலகின் தங்க மாளிகையில் அவளே ராஜகுமாரியாகிறாள்.

அதன் பிறகு அவர்களுக்கிடையில் நடக்கும் உரையாடல் நம்மை பல்யத்திற்கே அழைத்துச் செல்கிறது. இஸ்லாமிய மார்கத்தில் ஆண்களுக்கு சுன்னத் கல்யாணமும் (circumcise), பெண்களுக்கு காது குத்து விழாவும் (Ear piercing function) முக்கியமானது. அதைப்பற்றி நாவலில் வரும் சுவாரஸ்யமான உரையாடல்...

உலகத்திலுள்ள எல்லா முஸ்லீம்களும் சுன்னத்து செய்கிறார்கள். செய்யாதவர்களே கிடையாது? இருந்தாலும்... இந்த சுன்னத்தை எப்படிச் செய்வார்கள்? மஜீத் சுராவிடம் கேட்டான்.

அவளுக்கும் எதுவும் தெரியவில்லை. "என்ன இருந்தாலும் வெட்டி ஒண்ணும் எடுக்க மாட்டாங்கோ" என்று ஆறுதல் மட்டும் தான் சொல்ல முடிந்தது.

கோலாகலமாக நடந்த சுன்னத் கல்யாணத்தில் இவன் மட்டும் வலியுடன் படுத்திருக்கிறான். அவன் படுத்திருந்த அறையின் ஜன்னலின் பின்புறத்தில் நின்று கொண்டு சுரா கேட்கிறாள்.

நீ பயந்தியா மஜிதே?

"நானா?..." நான் பயப்பட ஒண்ணுமே இல்லே...

அப்போது சுரா தனக்கு காது குத்தவிருக்கும் விஷயத்தைச் சொன்னாள்.

இது போன்ற வெகுளித்தனமான உரையாடல்களால் நாவல் இதமாக நகர்கிறது.

ஒருவருக்கொருவர் அனுசரணையாக இருப்பதால் அவர்களுடைய அன்பு நாளுக்கு நாள் வளர்கிறது. மஜீத் ஆரம்ப வகுப்பில் தேர்ச்சி அடைய சுரா பெரிதும் உதவுகிறாள். அவளின் அப்பா இறந்துவிடவும் மஜீத் மட்டும் மேற்படிப்பிற்காக நகரத்திற்குச் செல்கிறான். எந்த வகையிலும் உதவ முடியாத நிலையில் வார்த்தைகளால் மட்டுமே மஜீதால் அவளுக்கு ஆறுதல் சொல்ல முடிகிறது. ஒரு கட்டத்தில் அப்பாவுடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறுகிறான்.

நகரம் சென்று, பரதேசியாக சுற்றித் திரிந்து பல வருடங்கள் கழித்து சுராவை மணக்கும் ஆசையுடன் சொந்த கிராமத்திற்குத் திரும்புகிறான். வீட்டின் நிலைமை நினைத்ததற்கு மாறாக தலைகீழாக இருக்கிறது. அப்பாவின் சொத்து முழுவதும் கடனில் மூழ்கித் தவிக்கிறார்கள். வாழ்ந்து கொண்டிருந்த வீடு கூட அடமானத்தில் இருக்கிறது. எந்த நேரத்திலும் வீட்டை விட்டு வெளியேற வேண்டிய சூழல். சகோதரிகள் வளர்ந்து திருமண வயதில் இருக்கிறார்கள். அவர்களுக்கும் ஏதாவது நல்லது செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக சுராவுக்கு நகரத்திலுள்ள கசாப்புக் கடைக்காரனுடன் இரண்டாம் தாரமாக திருமணம் முடிந்து, அவனுடைய சித்திரவதையால் பல் உடைபட்டு, கன்னங்கள் ஒட்டி, மெலிந்து போய் ஊர் திரும்புகிறாள்.

பால்ய நண்பர்களான இருவரும் நீண்ட நாட்கள் கழித்து நேருக்கு நேர் சந்தித்து
க் கொள்கிறார்கள். வார்த்தைகளால் பூரணமான அன்பை பரிமாறிக் கொள்கிறார்கள்.

தங்கைகளின் திருமணத்திற்காகவும், இழந்த சொத்துக்களை மீட்பதற்காகவும் பணம் சேர்க்க
நகரத்திற்குச் செல்ல ஆயத்தமாகிறான் மஜீத். அனைவரிடமும் விடைபெற்று சுகராவிடம் செல்கிறான். அவள் ஏதோ சொல்லவந்து சொல்லாமலேயே இருந்துவிடுகிறாள்.

செல்லுமிடத்தில் சேல்ஸ்மேனாக வேலை கிடைத்து வீட்டிற்கு பணம் அனுப்புகிறான். எதிர்பாராத விதமாக accident-ல் ஒரு காலை இழந்து ஊனமாகிறான். அங்கஹீனத்துடன் சொந்த ஊருக்குச் செல்லத் தயங்குகிறான். ஆகவே ஹோட்டல் ஒன்றில் பாத்திரம் கழுவி வீட்டிற்குப் பணம் அனுப்புகிறான். எந்தவித நோக்கமும் இல்லாமல், கற்பனையில் சுராவிடம் பேசிக்கொண்டு நாட்களைக் கடத்துகிறான். எதிர்பாராத தருணத்தில், நெஞ்சு வலியால் சுகரா இறந்துவிட்டாள் என்ற செய்தி அவனுடைய அம்மாவிடமிருந்து வருகிறது.

கிராமத்தைவிட்டுக் கிளம்பும் போது "அவள் சொல்லவந்தது என்ன?" என்ற வினாவுடன் நாவல் முடிகிறது. இயல்பாகவே ஓர் ஆணுக்கு பெண்ணின் மீதும், பெண்ணுக்கு ஆணின் மீதும் ஏற்படும் அன்பு அற்புதனானது. வாழ்க்கையில் இணையாவிட்டாலும் அந்த அன்பு ஈடு இணையற்றது. உலகம் தெரியாத குழந்தை மனதில் ஏற்படும் அன்பு, காதலாக மாறி கைதவறிப் போகும் ஒருவனின் ரணமான நினைவுகள் தான் பல்யகாலசகி.
0
0 00 00 00 00

பஷீரைப் பற்றி காலச்சுவடில் வெளியான கவிஞர் சுகுமாரன் மற்றும் ஜெய மோகனின் கட்டுரைகள்:

பஷீர்: பூமியின் உரிமையாளர் - கவிஞர் சுகுமாரன்
பஷீர் : மொழியின் புன்னகை - ஜெய மோகன்


Monday, March 1, 2010

வெட்டுப்புலி

வெளியீடு : உயிர்மை பதிப்பகம்
ஆசிரியர் :
தமிழ்மகன்
விலை : 220/- ரூபாய்

2009-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற 'வெட்டுப்புலி' நாவல் வெளியீட்டு விழாவிற்கு நேரில் சென்றிருந்தேன். அப்பொழுதே "நம்ம ஊரைச் சுற்றி நடக்கும் கதைதான்... வாசித்துப் பாருங்கள்" என்று தமிழ்மகன் என்னிடம் சொல்லி இருந்தார். புத்தக அட்டையைப் பார்த்த பொழுது என்னுடைய சிறுவயது விளையாட்டுகள் ஞாபகம் வந்தது.

கிராமங்களில் பனமட்டைகள், உடைந்த வளையல்கள், உபயோகமில்லாத சைக்கிள் டயர், கில்லி, கோலி, பம்பரம், சிகரெட் அட்டைகள், தீப்பெட்டிகளின் முன் அட்டைகள் என பல விஷயங்களை சேகரித்து விளையாட்டுப் பொருளாக்குவோம். அப்படி விளையாடுவதற்காக தீப்பெட்டியின் விதவிதமான அட்டைகளை சிறுவயதில் சேகரித்த அனுபவம் உண்டு. கற்களை வைத்து உருட்டி விளையாடும் விளையாட்டிற்கு (சிசர்ஸ்) தீப்பெட்டிகளின் அட்டைகளும், சிகரெட் அட்டைகளும் தான் ஆதாரம். அதில் பாய்ந்து வரும் சிறுத்தைப்புலியை வெட்டுவதற்கு எத்தனிக்கும் ஒருவனின் படமும் இருக்கும். ஒருமுறையேனும் அந்த அட்டைப் பட வடிவமைப்பிற்கான காரணங்களை யோசித்ததில்லை. பத்திரிகையாளர் மற்றும் எழுத்தாளர் தமிழ்மகன் அதற்கான தேடலைத் தன் புனைவின் மூலம் அணுகியுள்ளார்.

அமெரிக்காவிலிருந்து விடுமுறையைக் கழிக்க தமிழ்ச்செலவன் சென்னைக்கு வருகிறான். Cheeta Match Box-ன் முன் அட்டையிலுள்ள சிறுத்தைப் புலியை வெட்டும் நபர் அவனுடைய தாத்தா சின்னா ரெட்டி தான் என்று பாட்டியின் கதை மூலம் தெரிந்து கொண்டதை உறுதிப்படுத்த நண்பர்களுடன் சொந்த ஊரான ஜகநாத புறத்திற்குப் பயணமாகிறான். அங்கிருந்து புழல், காரனோடை, செங்குன்றம், ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், சோழவரம், பூந்தமல்லி, பொன்னேரி, சென்னை என பல இடங்களுக்குச் சென்று சின்னா ரெட்டியின் தகவலைச் சேகரிக்கிறார்கள். ஒரு ஊரில் சின்னாரெட்டி சிறுத்தையை வென்ற கதை கூறுகிறார்கள் என்றால் இன்னொரு ஊரிலோ சிறுத்தையால் தாக்கப்பட்டு சின்னாரெட்டி இறந்து போனதாகக் கூறுகிறார்கள். இவ்வாறு முரண்பட்ட தகவல்களுக்கு இடையில் உண்மையைத் தேடி அலைகிறார்கள்.

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக, சின்னா ரெட்டியைத் தேடிச்சென்ற பயணம் ஆங்கிலேயர் ஆட்சி, ஜமிந்தார் ஆட்சி முறை, காங்கிரஸின் நிலைப்பாடு, நீதிக்கட்சி, சுதந்திர இந்தியா, திராவிடக் கழகங்களின் தோற்றம் (திக - திமுக - அதிமுக), சினிமா என்ற மாய ஊடகத்தின் வளர்ச்சி என்ற பல விஷயங்களைத் தொட்டுச் செல்கிறது. முப்பதுகளின் தொடக்கத்திலிருந்து இருபதாம் நூற்றாண்டின் முதல் பத்து வருடங்கள் வரை நாவல் விரிவதால் ஈ வெ ரா, எம் எஸ் சுப்புலட்சுமி முதல் இளையராஜா, ரஜினி, கனிமொழி, அழகிரி வரை பல பிரபலங்கள் பாமரர்களின் சாதாரண உரையாடல்களில் வந்து செல்கிறார்கள்.

20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமைந்த பயணம் முப்பதுகளுக்குத் தாவி அங்கிருந்து கொஞ்சம் கொஞ்சமாக சமீப காலங்களுக்கு நகர்கிறது. வெவ்வேறு காலக்கட்டங்களில் நாவல் பயணிப்பதால், அந்தந்த காலங்களுக்கு ஏற்ப மக்களின் பழக்க வழக்கமும், மனோபாவங்களும் நுண்மையாக சித்தரிக்க வேண்டிய அவசியம் படைப்பாளிக்கு இருக்கிறது. ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு கால சமுதாய மாற்றத்தை நாவலில் கொண்டுவரும் பொழுது ஏகப்பட்ட தகவல்களைத் திரட்ட வேண்டியதிருக்கும். அதனைத் தமிழ்மகன் சிறப்பாக செய்திருக்கிறார். சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையின் பழக்க வழக்கங்களை சித்தரிப்பதற்கு அவர் திரட்டிய தகவல்கள் மெச்சப்பட வேண்டிய ஒன்று. ஏராளமான வரலாற்று மற்றும் பிரபலங்களின் தகவல்களை நாவலில் சொல்லியிருந்தாலும் எதுவுமே நாவலின் வேகத்தைக் குறைக்கவில்லை.

சென்னைக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் புழல் மற்றும் பூண்டி நீர்த்தேக்கம் அமைக்கப்பட்ட பொழுது ஏராளமான கிராமங்கள் மூழ்கியிருக்கிறது. வீட்டை இழந்த கிராம மக்களே அதற்கான கட்டுமானப் பணிகளில் பங்கெடுத்திருக்கிறார்கள். நாவலில் இதனைப் படிக்கும்பொழுது அதிர்ச்சியாக இருந்தது.

நாம் வாழும் வாழ்க்கை யதார்த்தமானது என்று நினைத்தாலும், அரசியல் மற்றும் சினிமாவின் தாக்கம் மூர்கமாக நம்மைத் துரத்திக் கொண்டே இருக்கிறது. இவையிரண்டும் மனிதர்களிடம் ஏற்படுத்தும் தாக்கம் சமூகத்தை அடுத்தகட்டத்தை நோக்கி நகர்த்துகிறது. அந்த வகையில் சென்னையைச் சுற்றியுள்ள புறநகர்ப் பகுதிகளின் சமுதாய மற்றும் மனித மாற்றத்தை பதிவு செய்துள்ள முக்கியமான படைப்பாக வெட்டுப் புலியை எடுத்துக் கொள்ளலாம்.

சென்னை குறித்த தமிழ்ப் புனைகதைகள் எழுதியவர்கள் புறநகர்ப் பகுதிகளில் வாழும் அல்லது வாழ்ந்து மடிந்த யாரையும் தனது படைப்புகளில் முழுமையாகக் கொண்டு எழுதியதில்லை. தமிழ்மகன் அதை ஆரம்பித்து வைத்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து மேலும் பல படைப்புகள் சென்னைப் புறநகர் சார்ந்து வருமெனில் அது தமிழ் மகனுக்குக் கிடைத்த வெற்றி என்றுதான் சொல்லவேண்டும்.

ஜனவரி மாத புத்தகம் பேசுது இதழில் ஜ.சிவகுமார் எழுதிய வெட்டுப்புலி விமர்சனம்

பதிவர் ஆதவன் எழுதிய வெட்டுப்புலி. - நூற்றாண்டுப் பதிவு

Saturday, January 30, 2010

காடு - ஜெயமோகன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
விலை : 260/- ரூபாய்
பக்கங்கள் : 474


காடு என்ற பச்சை போர்த்திய இருள் சூழ்ந்த நிலப்பரப்பு கதைகளின் மூலமாகத்தான் சிறுவயதில் அறிமுகமானது. நாகரிக சமுதாய வாழ்க்கையை போலவே கற்பனையாக காட்டிற்குள் வாழும் வாழ்க்கையும் தனித்துவம் நிறைந்ததே.

"ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, ஒரு பெரிய காடு..." என்று சொல்லும் பொழுதே காடுகளின் பிரம்மாண்டம் கற்பனையில் கண்முன் விரிந்துவிடுகிறது. காடு தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அதிசயத்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடுகிறது.
காலங்கள் கடந்தும், யுகங்கள் கடந்தும் அந்தக் கற்பனை உலகம் என்னை பல நபர்களுடன் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.

ராமன் வனவாசம் சென்றிருந்த பொழுது நானும் சக பயணியாக சென்றிருக்கிறேன், பாண்டவர்கள் தாகமெடுத்து காட்டில் அலைந்து திரிந்த நாட்களில் நானும் அலைந்திருக்கிறேன். முனிவர்கள் தவம் செய்த பொழுது அருகில் நின்று அவர்களின் ஓங்காரத்தைக் கேட்டிருக்கிறேன். காட்டின் சிறிய பகுதிதான் தோட்டம் என்றால் ஆதாமும், ஏவாளும் நிர்வாணமாகத் திரிந்ததை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்திருக்கிறேன். ஆப்பிளைத் தின்றுவிட்டு அவர்கள் அடைந்த வெட்கத்தைக் கண்டு சிரித்திருக்கிறேன். செக்கோவின் வேட்டைகாரனை படித்த பொழுது யேகோர் விலாஸிச்சை ஏக்கத்துடன் பார்த்த பெலகேயாவுடன் நானும் நின்றிருக்கிறேன். கீயிங்கே வனத்தில் கிறிஸ்மஸிற்கு முன்னிரவில் காடு பூத்து ஒளிர்வதை ஹான்ஸ் துறவியுடன் கண்கள் கூசக் கண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இந்த நாவலில் வரும் கிரிதரன் மூலம் காம வேட்கையில் சுழலும் ஒருவனது மனதை அவனுக்கு அன்னியமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். காட்டை படிமாமாக வைத்துக்கொண்டு காமத்தையும் காதலையும் விவரித்து நகரும் ஜெய மோகனின் இந்த நாவல் வித்யாசமான படைப்பு.

சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் (காண்டிராக்ட் வேலை) உருவாக்கத்தில் பங்கு பெற்ற கிரிதரன் என்ற வயோதிகன் நீண்ட நாட்கள் கழித்து தான் வேலை செய்த இடத்திற்குத் திரும்புகிறான். நெடுமங்காடு வனச்சாலை கேரளாவிற்குப் பிரியும் இந்த இடத்தில் தன்னுடைய பதின் பருவத்தில் நடந்த மனவோட்டங்களை நினைத்துப் பார்க்கும் கதை. தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மலையாளம் கலந்த மருவிய மொழி நிறைய இடங்களில் வருகிறது. மலையாளமும் தமிழும் கலந்த மொழிதான் கதையின் ஆதார மொழி. கால வரிசை கூட ஒழுங்கில் இல்லாமல் வாழ்வின் முன்னுக்குப் பின் களைந்து சென்று, காட்டு வாழ்வு, இளமைக்காலம், தற்போதைய யதார்த்த வாழ்வு என்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஜெய மோகனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்... "காடு என்பது, ஒவ்வொரு கணமும் புதியதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம்." காலையில், மாலையில், பகலில், இரவில், பனிப் பொழிவில், கன மழையில் என காடு அடையும் உருமாற்றம் விசித்ரம் நிறைந்தது. அதுபோலவே மனிதனின் காமமும், பெண் குறித்தான வேட்கையும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. காண்ட்ராக்ட் வேலைக்கு வரும் கிரிக்கு காட்டின் தனிமை ஏற்படுத்தும் காமவிழிப்பும், அதன் மூலம் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களும் தான் முழு நாவலாக விரிகிறது.

நாவலின் முன்னுரையில் தேவசகாயகுமார் எழுதிய முன்னுரை:

கனவும் குரூர யதார்த்தமும்

விமர்சனங்களைப் படிக்க:

1.
கரிசல் வலைப்பூவில்: காடு
2. அனாதையின் வலைப்பதிவுகள் :
காடு (4 வது பத்தியிலிருந்து படிக்க... )

Wednesday, January 27, 2010

மோகமுள் - தி. ஜானகிராமன்

வெளியீடு : ஐந்திணை பதிப்பகம்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 300/- ரூபாய்
பக்கங்கள் : 686


மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன். சென்ற மாதத்தின் ஒருநாள் வேறெதோ புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது வீணையை மீட்டும் விரல்களுடனான புத்தக அட்டையுடன் மோகமுள் கைகளில் அகப்பட்டது. இனிமேலும் நாட்களை கடத்துவது அழகில்லையென படிக்க ஆரம்பித்தேன். செம்மண் புழுதி பறக்கும் கும்பகோணம் சாலையிலிருந்து கதை ஆரம்பமாகிறது.

நாவலின் கதாநாயகன் பாபு கும்பகோணம் கல்லூரியில் BA படிக்கின்றான். கல்லூரியில் படிப்பதற்காக பாபனாசத்திலிருந்து கும்பகோணம் வந்து தனியாக அறை எடுத்துத் தங்குகிறான். அவனுடைய அப்பா வைத்தி கோவிலில் கதா காலட்சேபம் செய்கிறவர். அவருக்கு பாபுவை இசைக் கலைஞனாக்க வேண்டுமென்ற தீராத ஆசை. அப்பாவின் ஆசைக்காகவாவது இசைபயில வேண்டுமென நினைக்கிறான். கல்லூரித்தோழன் ராஜம் மூலமாக ரங்கன்னாவிடம் சேர்கிறான். ரங்கண்ணா இசையை தவமாக நினைத்து வாழ்பவர். ரங்கண்ணா வரும் இடங்களில் புத்தகத்தின் நடுவிலிருந்து நெடுமுடி வேணு எட்டிப் பார்ப்பது போல இருந்தது.

வைத்தியின் குடும்ப நண்பர் சுப்ரமணியின் இரண்டாம் மனைவி பார்வதி கும்பகோணத்தில் இருக்கிறார். அந்தப் பழக்கத்தில் பாபுவும் அவர்களுடைய வீட்டிற்கு நேரம் கிடைக்கும்போது சென்று வருகிறான். பார்வதியின் மகளான முதிர்கன்னி யமுனாவை அவனுக்கே தெரியாமல் விரும்ப ஆரம்பிக்கிறான். சுப்பிரமணி இறந்து போகவும் பார்வதியின் குடும்பம் வறுமையில் உழல்கிறது. ஒரு பக்கம் இசையையும் மறுபக்கம் யமுனாவையும் தீவிரமாகக் காதலிக்கிறான்.

யமுனா அவனுடைய காதலை ஏதேதோ காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். அவளின் மீதான பெருங்காமம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கழுத்தை இருக்குகிறது. ராஜம் கூட மேல் படிப்பிற்காக டெல்லி சென்றுவிடுகிறான். இடையில் ரங்கண்ணாவும் இறந்துவிடுகிறார். யமுனாவின் மறுப்பையும், ரங்கண்ணாவின் மரணத்தையும், ராஜத்தின் பிரிவையும் வாழ்க்கையின் பெரிய இழப்புகளாகக் கருதுகிறான். மாறுதல் வேண்டி வேலை தேடி சென்னைக்குச் செல்கிறான்.

சென்னையில் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் பாபுவுக்கு விளம்பர பிரிவில் வேலை கிடைக்கிறது. யமுனாவும் வறுமையின் காரணமாக தாயுடன் முரண்பட்டு பாபுவைத் தேடி சென்னைக்கு வந்துவிடுகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பாபுவும், யமுனாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். ரங்கண்ணாவின் மற்றொரு சீடரான பாலூர் ராமு பாபுவைத் தேடிவந்து நட்பு பாராட்டுகிறார். அவனுக்கு இருக்கும் இசை ஞானத்திற்கு கச்சேரி செய்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார். முழு நேர இசையை தேர்ந்தெடுப்பதற்கு முன் குரல் பயிற்சி செய்ய ஆசைப்படுகிறான். இசைதான் இனி வாழ்க்கையென கடைசிக் கட்டமாக குரலை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிரம் சென்றுவிடுகிறான்.

நாவலின் முக்கால் பாகம் தஞ்சாவூரையும், கும்பகோணத்தையும் சுற்றியே நகர்வதால் காவேரிக் கரையும் ஒரு கதாப்பாத்திரம் போல முக்கியப்பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் வெங்கட்ராமன் கூட ஒரு கதாப்பாத்திரமாக வந்து செல்கிறார்.

ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் காலம் கடந்தும் தீவிர வாசகர்களின் விருப்பப் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெரும் நாவல். நீங்கள் வாசித்தால் உங்களின் விருப்பப் பட்டியலிலும் சேர்த்துக்கொள்வீர்கள்.

1. கதாவிலாசத்தில் எஸ் ரா எழுதிய கட்டுரை: தி ஜானகிராமன்
2. கீற்று பக்கங்களில் தாஜ் எழுதிய கட்டுரை: அழிய நினைவுகள்
3. புத்தகம் வலைப்பூவில் ஞானசேகரின் பதிவு: மோகமுள்

இயக்குனர் ஞான ராஜசேகரால் இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகள் பல பெற்றிருந்தாலும் படமாக்கப்பட்ட விதத்தில் எழுந்த விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தினை கூகிள் வீடியோவில் காண கீழே சொடுக்கவும்.

மோகமுள் - திரைப்படத்தின் சில கட்சிகள்