Monday, August 17, 2009

ஒற்றன் - அசோகமித்திரன்

ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்

1973 - ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

டான் இதழில் வெளிவரும் அசோகமித்ரனின் மொழி பெயர்ப்பை படித்து அமெரிக்கத் தூதரகம் மூலமாக அந்த அழைப்பு அவருக்கு வந்திருந்தது.

நாவலின் ஒவ்வொரு அத்யாயமும் வேறுவேறு நபர்களால் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. ஒரு அத்யாயமானது மற்றொரு அத்யாயத்தை சார்ந்துள்ளது என்று கூற முடியாது. இது படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் என்றே நினைக்கிறேன். இதே வடிவில் தான் அ. முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்பு'ம் அமைந்திருக்கும். ஆனால் அவர் சிறு வயது முதல் தனக்கு நேர்ந்த பல விஷயங்களை அந்த நாவலில் சொல்லி இருப்பார். ஒற்றனில் அசோகமித்திரன் எழுத்தாளர்களுடனான தனது 7 மாத கால அனுபவத்தை ஒரே கதைக்களத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார்.

தாங்க முடியாத குளிரில் அவதிப்படுவது, கே-மார்ட் பல சரக்குக் கடையில் சலுகை விலையில் செருப்பு வாங்கி காலை புண்படுத்திக் கொள்வது, புதிதாக வாங்கிய கடிகாரத்தைத் தொலைத்தது, நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருந்து லாரியில் ஏறிப் போக வேண்டிய இடத்திற்குச் சென்றது, இலக்கியம் படிக்க வந்து காதலில் விழுந்த இலாரியா, அபே குபேக்னா, பிராவோ, கஜூகோ என்ற ஜப்பானிய எழுத்தாளர் என பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவை இழையோட இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார்.

அயோவா சிடி மாநாட்டிற்கு கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறியது முதல் திரும்பி வரும் வரையுள்ள பல மனிதர்களுடனான அனுபவங்களை வித்யாசமான முறையில் நாவலாக்கியுள்ளார். படித்துக் கொண்டே இருக்கும் போது பல இடங்களில் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கதை என்றோ - கதையின் நாயகன் என்றோ குறிப்பிட்டுச்சொல்லும் படி யாரும் நாவலில் இல்லை.தனது பயணத்தில் சந்திக்க நேர்ந்த பல நாட்டு மனிதர்களையும், அவர்களுடனான தனது அனுபவங்களையும் கொண்ட நகைச்சுவைத் தொகுப்பு போல் இந்த நாவலை நமக்கு அளித்துள்ளார்.

Details: Otran / Ashoka Mitran - Rs:100

Thursday, August 13, 2009

தக்கையின் மீது நான்கு கண்கள்

மூலக்கதை: சா.கந்தசாமி
திரைக்கதை: இயக்குநர் வஸந்த்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: Rs.30.00

சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.

என்னுடைய மருமகங்களுக்கு [நிஸ்து & முத்து] சினிமா ஆசை அதிகம். அவர்களுக்கு ஒரு நல்ல கதையையும், அதனுடைய குறும்படத்தையும் கொடுப்பதற்காக வேண்டி அலசிப்பார்த்ததில் இயக்குநர் வஸந்த் - தூர்தர்ஷனுக்காக இயக்கிய சா.கந்தசாமியின் பிரசித்தி பெற்ற சிறுகதையான "தக்கையின் மீது நான்கு கண்கள்" திரைக்கதைப் புத்தகம் மற்றும் குறும்படத்தைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

அதன்படி தேடு...தேடு... என்று தேடுபொறியில் தேடி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்களிடம் இருந்த கடைசி புத்தகம் அதுதான் என்று சொன்னார்கள். ஆனால் குறும்படத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிவர் வண்ணத்துப் பூச்சியாரிடம் [சூர்யா] தொடர்புகொண்டு கேட்டதில் Thamizhstudio.com -ல் கேட்டுப்பாருங்கள் என்று கூறினார்.

Thamizhstudio.com [அருண் & குணா] - இருவரும் கணினித் துறையில் இருந்தாலும் குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக இயக்குனர் வஸந்திடம் பேசி குறும்படத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். அதன்படியே வாங்கியும் கொடுத்தார்கள். அவர்களுடைய 11 வது குறும்பட ஆர்வலர்கள் சந்திப்பில் அதை ஒளிபரப்பபும் செய்தார்கள். எஸ் ரா அவருடைய இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்த 2008 விருப்பப் பட்டியலில் [S. Ra] இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை:

இந்தக் கதை மீன் பிடிப்பவரான தாத்தாவுக்கும் [மாணிக்கம்] அவரது தாயில்லாப் பிள்ளையான பேரனுக்குமான [ராமு] உறவை சித்தரிப்பது. கழிமுகங்களிலுள்ள நீர்பரப்புகளில் மீன் பிடிப்பதில் கிழவர் மேதை. அவருக்கு வெற்றிலை இடித்துத் தருவதிலிருந்து மீன்பிடிக்க உதவி செய்வது வரையுள்ள எல்லா வேலைகளுக்கும் பேரன் உற்ற துணையாக இருக்கிறான்.

தாத்தா தனக்குப் பிடித்த ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த இடம்தான் தனக்கு அதிர்ஷ்டமான இடம் என்று நினைப்பவர். பேரனோ அவருக்கு நேர்மாறான முரணான குணம் கொண்டவன். மீன் பிடிக்கும் இடங்களை மாற்றிக் கொண்டே இருப்பான்.

இடமாற்றம் செய்யும் பழக்கம் பேரனுக்குச் சாதகமாக அமைகிறது. தாத்தாவை விட நல்ல மீன்கள் அவனுக்குக் கிடைக்கிறது. அவனுடைய பாட்டியும் பேரன் பிடிக்கும் மீனுக்குத் தனி ருசி இருக்கிறதென்று பாராட்டுகிறாள்.

அதுமட்டுமில்லாமல் குலத்திற்கு இனப்பெருக்கம் செய்ய வரும் பெரிய [புதிய] மீன் முதியவருக்குச் சவாலாக அமைகிறது. அதனை எப்படியும் பிடித்து விடுவேன் என்று சவால் விடுகிறார். மீன் பிடிப்பதில் வல்லவரான அவரால் அந்த மீனைப் பிடிக்க முடியவில்லை. இதற்கு மாறாக பேரன் அந்த மீனைப் பிடித்துவிடுகிறான். பேரன் வளர்ந்து தன்னை மிஞ்சுவதைக் கண்டு தாத்தா எரிச்சலைடைகிறார். தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவில் நுண்ணிய விரிசல் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு பேரனிடம் செல்லும் போது அவன் விலகிச்செல்கிறான்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கேணி சந்திப்பில் அவசியம் வாசிக்க வேண்டிய நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையையும் பரிந்துரை செய்துள்ளார்.

கதையில் இல்லாத ஒரு விஷயத்தைக் குறும்படத்தில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது தாயத்து Sentiment. நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தாத்தாவாக முதல் மரியாதை வீராசாமியும் [அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..!..], பேரனாக புதுமுக குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், கேமரா என அனைத்தும் அருமை. சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் வசந்த் மற்றும் குழுவினர் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

2005-ம் ஆண்டின் மிகச் சிறந்த குறும்படமாக தேர்வுசெய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ள இந்தக் குறும்படம் உலகத் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைக்கதைப் புத்தகம் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதே புத்தகத்தில் மூலக்கதையுடன் - வெங்கட் சாமிநாதன், இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களின் குறும்படத்தைப் பற்றிய குறிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

குறும்படத்தைப் பார்க்க விரும்புவோர் தமிழ்ஸ்டூடியோ.காம் நிறுவனர்களான அருண் மற்றும் குணாவைத் தொடர்புகொண்டால் கிடைப்பது உறுதி. நன்றி...

Details: Thakaiyin Meethu Nangu Kangal - Screen Play & Tamil Short film (Documentary)

Friday, August 7, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 75 ரூபாய்

பொதுவாக தாயகத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அகதியாகவோ வெளிநாடு சென்று வாழ்பவர்கள் வெளியில் சொல்ல முடியாத சோகத்தையே வாழ்க்கையாக வாழ்கின்றனர். அதுவும் அகதியாக செல்பர்களின் உளவியல் போராட்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அ.முத்துலிங்கம் இந்த உளவியல் போராட்டங்களை ஜீரணித்து ஹாஷ்ய சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும் அளிப்பதில் வல்லவர்.

அவர் சுவைபட எழுதிய முக்கியமான 20 சிறுகதைகள் அடங்கியப் புத்தகம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' காலச்சுவடின் வெளியீடாக வந்துள்ளது. இந்தச் சிறுகதைகள் யாவும் காலச்சுவடு, உயிர்மை, இந்தியாடுடே, ஆனந்த விகடன், தீராநதி போன்ற முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. தனது சொந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து புனைவுகளாக அளித்துள்ளார்.

மகாராஜாவின் ரயில் வண்டி:
பதின்ம வயதிலுள்ள விடலைப் பையன் யாழ்ப்பாண பள்ளியில் சேர்வதர்க்காக சந்தர்ப்பம் காரணமாக தெரிந்தவர் வீட்டில் தாங்கும் போது சந்திக்க நேர்ந்த பெண்ணின் நினைவுகளை அசை போடுவதாக இந்தக் கதை இருக்கிறது. அருமையான சித்தரிப்புகளுடன் கூடிய கதை. இந்தக்கதை அ. முத்துலிங்கத்தின் சிறந்த கதையாக முக்கியமான எழுத்தாளர்களால் கொண்டாடப் படுகிறது.

எஸ். ராவின் சிறந்த 100 தமிழ்ச் சிறுகதைகளில் காண்க:
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=276&page=

நாளை:
அகதி முகாம்களில் வழங்கப்படும் சூப்பில்(Soup) உள்ள இறைச்சித் துண்டிற்காகவும் அடுத்த வேலை உணவிற்காகவும் அகதி முகாம்களைத் தேடி அலையும் சகோதர சிறுவர்களின் கதை.

தொடக்கம்:
வானத்தைத் தொட்டு நிற்கும் பன்னாட்டு தொழிற் பூங்காவின் - மேகம் உரசும் மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக ஒரு பறவை அலுவலகத்திற்குள் வருகிறது. தினமும் அந்த பாதை வழியாக வந்து வெளியில் செல்கிறது. ஒரு நாள் ஜன்னலை மூடி விடுகிறார்கள். மூடிய கண்ணாடி ஜன்னலில் அடிபட்டு பறவை இறந்துவிடுகிறது.

பறவையின் சுதந்திர வழி அடைக்கப்படுவதையும், அதனால் அதன் உயிர் பரிபோவதையும் பற்றிப் பேசும் கதை.

விருந்தாளி:
ஆப்ரிக்கக் கிராமம் ஒன்றில் நெடுஞ்சாலைப் பணிக்காக தனித்து விடப்பட்ட தமிழன் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக மற்றொரு தமிழன் விருந்தாளியாக வருகிறான். அந்த ஆனந்தத்தில் விருந்தாளிக்கு கொடுக்கும் விருந்தின் மூலம் அகதிகளின் வாழ்வைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

அம்மாவின் பாவாடை:
இந்தத் தலைப்பே கதையைப் படிக்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. இரண்டு பாவாடை வைத்திருப்பதை பெருமையாக நினைக்கும் அம்மாவின் ஒரு பாவாடையை மாடு மென்றுவிடுவதால் நிகழும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழ்ப் பெண்களில் வாழ்வியலைப் பேசும் கதை.

செங்கல்:
வட்ட வடிவில் வீடு கட்டுவதற்கு அதற்கேற்ற வகையிலான வட்ட செங்கல்லைத் தேடும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட புனைவு கதை.

கடன்:
முதுமையில் வெளி நாட்டில் இருக்கும் தனது மகனுடன் வாழும் முதியவரின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி பேசும் கதை. எப்படியாவது கிரீன் கார்டு வாங்கி மகனை விட்டுப் பிரிந்து நண்பருடன் இறுதி நாளை இஷ்டம் போல் கழிக்க எண்ணிய முதியவர் நேர தாமதத்தால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும் கதை.

பட்டம்:
காவாளி ஒருவனை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அதனால் தன்னுடைய கல்லூரிப் 'பட்டத்தை' வாங்க இயலாமல் போவது, பெண்ணின் தைரியமான அணுகு முறையால் ஊரைவிட்டு ஓடும் காவாளி ரவுடிப் 'பட்டத்தை' இழப்பதையும் பற்றிய கதை. நல்ல புனைவு.

ஐவேசு:
வழிகாட்டியின் தவறுதலால் செல்ல வேண்டிய பாதையைத் தவறவிட்டு இந்துகுஷ் மலையடிவாரத்தில் விளிம்புகள் உடைந்த குவளையில் ஆட்டுப் பால் அருந்தும் நிகழ்வை பற்றி பேசும் கதை.

ஐந்தாவது கதிரை:
கணவன் மனைவிக்குள் நடைபெரும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. தனது கணவனை குற்ற உணர்ச்சியில் நிறுத்த வேண்டி தனது மார்பகங்களுக்கு பச்சைக் குத்திக் கொள்ளும் பெண்ணையும், கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுகளைப் பற்றிய கதை.

மேலும் ஆயுள், மாற்று, கருப்பு அணில், எதிரி, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், கல்லறை, கொம்புளானா, ராகு காலம், ஸ்ட்ராபெரி ஜாம் போத்தலும் அபீசியன் பூனையும் போன்ற கதைகளும் அருமை.

எழுத்தாளர் ஜெய மோகனால் இணையம் மூலம் எடுக்கப்பட்ட 'அ. முத்து லிங்கத்தின்' பேட்டி இந்த பக்கங்களில் படிக்கக் கிடைக்கிறது. கீழே அழுத்திச் செல்லவும்.

அவருடைய வாழ்வியல் அனுபவம் யாருக்கும் சுலபத்தில் கிடைக்காது. இந்த செவ்வியைப் படிப்பதன் மூலம் அவருடைய கதைகளுக்கான மூலம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியவரும்...

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

Book Details: Maharajavin rail vandi / kalachuvadu / A. Muthulingam

Thursday, July 30, 2009

கோணங்கியின் சிறுகதைகள்

முத்துக்கள் பத்து: கோணங்கி சிறுகதைகள் விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

எழுத்தாளர் ஜெயமோகனுடைய வலைத்தளத்தை படித்துக்கொண்டு இருக்கும் பொழுது கோணங்கியுடனான அனுபவங்களை "கோணங்கி" என்னும் கட்டுரையில் சொல்லி இருந்தார். அதுமட்டுமில்லாமல் நாகார்ஜுனன் வலைதளத்தில் "கோணங்கி இந்தியா டுடேவுக்கு எழுதுவது..." என்னும் பதிவையும் படிக்க நேர்ந்தது.

ஒருபுறம் தனக்குப் பிடித்த படைப்பாளியை (ஜெ.மோ) தேடிச்சென்று கதைக்கும் குணம், மறுபுறம் அவருடைய சிறுகதையை ஆண்டு மலரில் வெளியிட அனுமதி கேட்டு இந்திய அளவில் பிரசித்திபெற்ற ஒரு பத்திரிகையின் எடிட்டர்(வாஸந்தி) அனுப்பிய கடிதத்திற்கு சீரும் குணம். முரண்பட்ட இரண்டு கரைகளுக்கு இடையில் ஓடும் சலனமில்லா ஜீவா நதியாக இவர் எனக்குத் தோன்றினார்.

எஸ். ராமகிருஷ்ணன் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த 'கதாவிலாசம்' கட்டுரையில் தான் கோணங்கியைப் பற்றி முதன் முதலில் படிக்க நேர்ந்தது. ஆனால் அவருடைய படைப்புகள் என்று எதையும் வாசிக்காமலே இருந்தேன். தமிழின் 24 முன்னணி எழுத்தாளர்களின் சிறந்த சிறுகதைகளை 'முத்துக்கள் பத்து' என்ற தொகுதியாக 'அம்ருதா பதிப்பகம்' வெளியிட்டுள்ளார்கள். கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் அனைத்து எழுத்தாளர்களின் தொகுப்புகளையும் (ஜெயகாந்தனைத் தவிர) வாங்க நேர்ந்தது. அதில் எழுத்தாளர் கோணங்கியினுடைய தொகுப்பும் அடக்கம்.

"ஈஸ்வரி அக்காளின் பாட்டு, உலர்ந்த காற்று, மதினிமார்கள் கதை, மாயாண்டிக் கொத்தனின் ரஸமட்டம், நகல், கழுதையாவாரிகள், ஆறு, மணல் முகமூடி, உப்புக் கத்தியில் மறையும் சிறுகதை, நத்தைக்கூடெனும் கேலக்ஸி" ஆகிய பத்து சிறுகதைகள் இந்தத் தொகுதியில் இடம் பெற்றுள்ளன.

முதல் ஏழு கதைகளும் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. கடைசி மூன்று கதைகளும் மீள் வாசிப்பில் தான் சாத்தியமாகும். விளிம்பு நிலை மனிதர்களுக்கு எதிர்பார்ப்பும் ஏமாற்றமும் தானே வாழ்க்கை. அவற்றில் உறவுகளின் இழப்பு அவர்களின் பிரதானக் கொந்தளிப்பு. அதனை முழுவதுமாக உள்வாங்கி இலக்கியமாக்கியுள்ளார்.

குழந்தைகளின் விசேஷ உலகையும், வெகுளித்தனமான அன்பையும் இவருடைய எல்லாக் கதைகளிலும் பரவலாகக் காண முடிகிறது. சில இடங்களில் வட்டார மொழிச் சொற்களைப் பேசி திணற வைக்கிறார். அந்த ஓசையே சில இடங்களில் படைப்பிற்கான அழகைக் கூட்டுகிறது.

இவருடைய சிறுகதைத் தொகுப்புகள் தி.நகரிலுள்ள 'எனி இந்தியன்' மற்றும் 'நியூ புக் லேண்ட்' ஆகிய கடைகளில் கிடைக்கிறது.

அவுட்லுக்கின் பொன்விழா ஆண்டு மலரில் வெளியிடப்பட்ட இந்தியாவின் சிறந்த ஆளுமைகளில் கோணங்கியும் ஒருவர். இவரைப் பற்றி எஸ். சண்முகம் எழிதிய கட்டுரைகளைப் படிக்க கீழே செல்லவும்.

தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 1
தமிழ்ப்புனைகதை மரபும் கோணங்கியும் - 2

Thursday, July 23, 2009

வைக்கம் முகமது பஷீர் - காலம் முழுதும் கலை

காலம் முழுதும் கலை: ஈ. எம். அஷ்ரப்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம் (www.nhm.in)
தமிழில்: குறிஞ்சி வேலன்
விலை: 75-/ ரூபாய்

தமிழில் கி.ரா அளவிற்கு வேறொரு மொழியின் எழுத்தாளரை நேசிக்கிறேன் என்றால் அது 'வைக்கம் முகமது பஷீர்'தான். காலச்சுவடு பதிப்பகத்தின் மூலமாக சமீபத்தில் அவருடைய 'மதிலுகள்' மற்றும் 'உலகப் புகழ்பெற்ற மூக்கு' ஆகிய தமிழாக்கங்களைப் படிக்க நேர்ந்தது. எத்தனை அருமையான படைப்புகள் அவருடையது.

21-ஜனவரி 1908 முதல் 5-ஜூலை 1994 வரை வாழ்ந்த அவருடைய வாழ்க்கை எந்த அளவிற்கு சுவாரஸ்யங்கள் நிரம்பியதோ அந்த அளவிற்குத் துன்பங்களும் நிறைந்தது. அந்த அனுபவங்களே அவரை தேசத்தின் மிகச்சிறந்த படைப்பாளியாக மிளிரச்செய்தது. அவருடைய படைப்புகளுக்கு காரணமான வாழ்க்கையை உற்று நோக்கும் வகையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த புத்தகம். புத்தகத்தின் இறுதியில் அவருடைய 'மரணக் குறிப்பு' என்னும் கட்டுரை அபாரம்.

குறும்பு செய்யும் குழந்தையாக, சுதந்திர வேட்கைக் கொண்ட இளைஞராக, ஜெயில் கைதியாக, போலீசுக்கு அஞ்சி தலைமறைவாக இருக்கவேண்டி 9 வருடங்கள் தேசாந்திரியாக இந்தியாவிலுள்ள பல புகழ் பெற்ற இடங்களில் அலைந்துள்ளார், அந்த நேரங்களில் இந்துத் துறவியாக, முஸ்லீம் சூஃபியாக ஹோட்டல் சர்வராக, ஜோசியம் பார்ப்பவராக, மேஜீசியனாக, பிச்சைக்காரர்களின் தோழராக என்று தன்னுடைய நிஜ வாழ்க்கையில் கிடைத்த அனுபவங்களை இலக்கியமாக்கியுள்ளார்.

எளிய மக்களின் வட்டார மொழியை இவருடைய படைப்புகளில் மிகுதியாகக் காண முடியும். ஒருமுறை பஷீரைப் பார்க்க வந்த அவருடைய சகோதரர் அவருடைய படைப்புகளில் பிழையை கண்டுபிடித்துச் சரிபடுத்துமாறு கேட்டிருக்கிறார்.

அதற்கு பஷீர்

"போடா உன் பொண்டாட்டிக்கு வரதச்சனையா
வந்ததாடா இந்த மலையாள மொழி? எனக்கு
என்ன இஷ்டமோ அதைத்தான் எழுதுவேன்
எனக்கு தெரிஞ்ச எழுத்துக்களைக் கொண்டே
எழுதுவேண்டா நான். உன்னோட ஏட்டு
ஏலக்கனத்த நே வச்சுக்கடா" - என்று கூறினாராம்.

****************************************************

இவருடைய பல படைப்புகளிலிருந்து சில வரிகள்:

"வெளிச்சத்திற்கு எதற்கொரு வெளிச்சம்."

"பயணத்திற்கான நேரம் மிக மிக நெருங்கிவிட்டது. நீயும் நானும் என்ற யதார்த்தத் தன்மையிலிருந்து இறுதியில் நீ மட்டும் மிஞ்சப்போகிறாய். நீ மட்டும்...

இவ்வளவு காலமாகியும் நீ என்னை அளவற்ற வாஞ்சையோடு நேசித்தாய். என் எல்லாவற்றையும் சகித்துக்கொண்டாய். என்னைப் பற்றி உனக்கு எப்பொழுதும் தெரியும். இன்னமும் உன் சவுகர்யம் போல் படிக்கக் கூடிய ஒரு சிறு கிரந்தம் அல்லவா நான்..."

"அவன் இறுதி யாத்திரைக்கு தயாராகிவிட்டான். எங்கே போகப் போகிறான்? இருளின் இந்த மகா சமுத்திரத்திற்கா? இல்லை வெளிச்சத்தின் புதிய உலகத்திற்கா? ஒன்றையும் அறிந்துகொள்ள முடியவில்லை. எந்த ஒரு பிடிப்பும் பிடிமானமும் இல்லை. ஒரே நொடியில் மாறக்கூடிய நினைவு மட்டுமே அவள். எல்லையில்லா இடத்தை நோக்கிய பயணம் தான் அந்த வாழ்க்கை..."

****************************************************

இவருடைய படைப்புகள் யாவும் தமிழ் உட்பட இந்தியாவின் பல மொழிகளிலும், பிரெஞ்சு, செக், சீன மொழி, ஜப்பானிய மொழி, ஆங்கிலம் என பல உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

இவர் 'பால்யகால சகி'யை கையெழுத்துப் பிரதியில் 500 பக்கங்களுக்கு எழுதினாராம். பத்து ஆண்டுகள் கழித்து, அச்சுக்குப் போகும் முன் அதனை 75 பக்கங்களுக்கு குறைத்து அந்த நாவலை வெளியிட்டாராம். ஒவ்வொரு கதையையும், நாவலையும் இழைத்து இழைத்து படைத்திருக்கிறார். முழுநேர எழுத்தாளராக இருந்தும், தனது நாற்பது ஆண்டுகால வாழ்க்கையில் 14 நாவல்களும், 100 சிறுகதைகளும் மட்டுமே எழுதியிருக்கிறார். ஆனால் அனைத்துமே காலத்தால் வாடாத படைப்புகள்.

Book details: Kalam muzhuthum kalai, Kizhakku, Chennai

குளச்சல் மு யூசப் பஷீரின் முக்கியமான படைப்புகளை மொழிபெயர்த்துக் கொண்டு இருக்கிறார். எப்படியும் வரும் ஜனவரி இறுதியில் அவை காலச்சுவடில் கிடைக்கும் என்று நினைக்கிறேன்.

பின்குறிப்பு:

இந்த புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் பாவண்ணன் கட்டுரை.

பஷீரின் படைப்புகள் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் கட்டுரை.

Monday, July 20, 2009

இரும்பு குதிரைகள் - பாலகுமாரன்

இரும்பு குதிரைகள்: பாலகுமாரன்
வெளியீடு: விசா பப்ளிகேஷன்ஸ்
விலை: 125 /- ரூபாய்

ஒரு வருடங்களுக்கு முன்பு "மாமா நீங்க இரும்பு குதிரைகள் நாவல் படிச்சி இருக்கீங்களா?" என்று மருமகன் முத்து என்னிடம் கேட்டான்.

இல்லையேடா, நல்லா இருக்குமா என்ன? என்று அவனிடம் கேட்டேன்.

சின்ன சின்ன விஷயங்களைக் கூட அழகா எழுதி இருப்பாரு மாமா... ரொம்ப நல்ல இருக்கும்... இத்யாதி இத்யாதின்னு புகழ்ந்தான். ஆனால் கதையை சொல்லவில்லை... அதிலிருந்தே இந்தப் புத்தகத்தைத் தேடிக்கொண்டு இருந்தேன். சென்ற மாதம் புத்தகம் வாங்குவதற்கும், நிஸ்துல்யாவைப் பார்ப்பதற்கும் T.Nagar சென்ற போது New Book Lands -ல் 'இரும்பு குதிரைகள்' வாங்கக் கிடைத்தது.

லாரியைச் சார்ந்த தொழில் செய்யும் மனிதர்களான டிரைவர், க்ளீனர், லாரி முதலாளிகள், இடைத் தரகர்கள், கூலிகள், பாலியல் தொழிலாளர்கள் போன்றவர்களைச் சுற்றி தான் கதை நகர்கிறது. லாரி தொழிலின் தொழில் நுணுக்கங்களை அருமையாக பாலகுமாரன் இந்நாவலில் பயன்படுத்தி இருப்பார். பல வருட கூர்ந்த அவதானிப்பும், ஆராய்ச்சியும் இல்லாமல் இது போன்ற நுணுக்கங்கள் சாத்யமில்லை.

இந்த நாவலில் விஸ்வநாதன் தான் முக்கியக் கதாப்பாத்திரம். விஸ்வநாதனுக்கு சினிமா டைரக்டராக வேண்டுமென்பது ஆசை. ஆனால் ஒரு கம்பெனியில் குமாஸ்தாவாக வேலை செய்கிறான். தான் செய்யும் வேளையில் இருந்துகொண்டே சினிமாக் கனவினை வளர்த்துக் கொள்கிறான். ஆனால் வேலையை உதறிவிட்டு கனவுத் தொழிற்சாலைக்குச் செல்ல முடியாத சூழல் அவனுடையது. அந்த சூழல் அவனுக்குச் சலிப்பை ஏற்படுத்துகிறது.

மனதில் உற்சாகம் தோன்றும் நேரத்தில் குதிரைகளை மையமாக வைத்து கவிதைகள் எழுதுகிறான். அந்தக் கவிதைகள் இந்நாவலுக்கு மிக மிக அத்தியாவசியமான ஒரு அம்சம். நூலுக்கு உரை எழுதிய பாலகுமாரனின் நண்பர் திரு.மாலன் இதனை சிலாகித்து எழுதி இருப்பார். எனக்கு கவிதையை வாசித்து உள்வாங்கிக்கொள்வது சற்றே சிரமம் என்பதால் 'குதிரைக் கவிதைகள்' கடினமாக இருந்தது.

குடும்ப சூழல் காரணமாக தனது மாணவனும், இடைத்தரகனுமான வடிவேலின் கடையில் வேலை செய்யவரும் நாராயணசாமி (நாணு) அய்யர், தனது மகள் காயத்ரிக்கு காந்திலால் டிரான்ஸ்போட்டில் வேலை வாங்கித் தருகிறார்.

அதன் மூலம் விஸ்வநாதனுக்கு நாணு ஐயரின் நட்பு ஏற்படுகிறது. விஸ்வநாதன் கல்யாணமாகி இரண்டு குழந்தைகளுக்குத் தகப்பன் என்று தெரிந்தும் அவன் மூலமாக காயத்ரி குழந்தை பெற விருப்புகிறாள்.

"லிவிங் டுகெதர்" (living together) ஒழுக்கமான முறைதானா என்று கேள்வி எழுப்பும் நம் கலாச்சாரத்தில் காயத்ரியின் இந்த ஆசை நியாயமானதுதான் என்று தகப்பன் நாணு அய்யரும் ஒத்துக்கொள்கிறார். ஆனால் இந்த விபரீத ஆசைக்கு விஸ்வநாதன் மறுத்துவிடுகிறான். காயத்ரி அவனை விட்டுப் பிரிந்து செல்கிறாள்.

விஸ்வநாதனும் தாரணியும் அவனுடைய குதிரைக் கதைகளை புத்தகமாக வெளியிட யோசிக்கிறார்கள். அதற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசிக்கும் போது 'இரும்பு குதிரைகள்' என்று வைக்கிறார்கள்.

விஸ்வநாதன், தாரிணி, நாணு அய்யர், காயத்ரி, வடிவேலு, ராவுத்தர், நடேச நாயக்கர், முதலியார், , காந்திலால், கவுசல்யா, வசந்தா, செல்லதம்பி, கரீம்பாய் என்று ஒவ்வொரு கதாப்பாத்திரத்தையும் பாலகுமாரன் அழகாக காட்சிப்படுத்தி இருப்பார். கதைக் களமானது பெரியப்பாளையம், திருப்பதி சாலை, புத்தூர் செக் போஸ்ட், கொருக்குப் பேட்டை என எனது கிராமத்தைச் சுற்றியுள்ள இடங்களில் நடக்கிறது. அதனாலேயே இந்நாவலை என்னால் நெருக்கமாக உணர முடிந்தது.

இந்தப் புத்தகத்தை எழுத்தாளர் பாலகுமாரன் அவருடைய நண்பர் சுப்ரமண்ய ராஜுவிற்கு சமர்பித்திருக்கிறார். ஏனெனில் அவர்தான் இந்த நாவலில் கதாநாயகன் என்று சொல்கிறார். திரு மாலன் அவர்கள் எழுதிய முன்னுரையும் அதை நிரூபிப்பது போல் உள்ளது.

Details: Irumbu Kuthiraigal, Visa Publications, Chennai.

பின் குறிப்பு:
இந்த நாவலின் உண்மை நாயகனான சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள் கிழக்கு பதிப்பகத்தில் வாங்கக் கிடைக்கிறது. அதை வாங்க இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

திரு. பத்ரி அவர்களின் பதிவில் இந்த புத்தகத்தைப் பற்றிய தகவலைக் காண இங்கு செல்லவும்:

சுப்ரமணிய ராஜூவின் சிறு கதைகள்

Tuesday, July 14, 2009

Sindhanathi - La sa ramamirtham

சிந்தா நதி: லா ச ராமாமிருதம்
விலை: 80-/ ரூபாய்
வெளியீடு: வானதி பதிப்பகம்

லா சா ரா (லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம்) தனது இறுதி மூச்சு வரை துடிப்புடன் செயல்பட்ட மகத்தான எழுத்தாளர். தனது படைப்புகளில் தனியொரு பாணியைப் பின்பற்றி அவருக்கென ஒரு நிரந்தரமான இடத்தைத் தமிழிலக்கியத்தில் ஏற்படுத்திக் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களிலும் சிறந்து விளங்கியவர். இவருடைய எழுத்து ஆழ்ந்த கருத்துக்களையும், அழகிய விவரிப்புகளையும் கொண்டவை. இவருடைய கதைகள் ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல முக்கிய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தனது பதின்ம வயதின் இறுதிகளில் அவர் எழுதிய “தி எலிபென்ட்’ என்ற ஆங்கிலக் கதைதான் அவருடைய முதல் கதையாக பிரசுரம் ஆகியது. அதற்குப் பிறகு அவர் தமிழில் எழுதுவதையே விரும்பி ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் மாதமொருமுறை பிரசுரமாகும் 'தீராநதி'யின் தீவிர விசிறி நான். அந்த இதழில் லா ச ரா எழுதிய சொந்தர்ய லஹரியும், கி ரா எழுதிய கட்டுரைகளின் மீதும் மோகம் கொண்டு அலைந்திருக்கிறேன். அந்த ஈடுபாடே அவருடைய படைப்புகளைத் தேடி என்னை ஓடச்செய்தது.

லா ச ராவின் சிறுகதைகளில் சில திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது:
1. அம்முலு
2. கண்ணன்
3. நெற்றிக் கண்
4. வரிகள்

இவர் எழுதி 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆறு கட்டுரைத் தொகுப்புகளில் ஒன்றுதான் 'சிந்தா நதி'.

தினமணி கதிரில் தொடராக வந்த "சிந்தாநதி" கட்டுரைகளுக்கு 1989- ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மேலும் இலக்கிய சிந்தனை விருது, கலைமாமணி விருது உட்பட பல முக்கிய விருதுகளும் பெற்றிருக்கிறார்.

சிந்தாநதி கட்டுரைகள் யாவும் அவருடைய வாழ்வானுபவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மணிக்கொடி சகாக்களுடன் ஆரம்ப காலங்களில் கலந்துரையாடியது, தனது தந்தையிடம் பொய் சொல்லியது, அம்மாவின் அன்பு, வாசகர்களுடனான பிணைப்பு, ஆரம்ப காலங்களில் வேலையில்லாமல் அலைந்தது, சினிமா கம்பெனியில் வேலை செய்தது என அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரையாக்கியுள்ளார்.

இவருடைய எழுத்து சில இடங்களில் படிப்பதற்கு எனக்குக் கடினமாக இருந்ததுண்டு. முதல் பத்தியைப் படித்துவிட்டு அடுத்த பத்திக்குப் போகும் போது முதலில் படித்தது மறந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். அய்யோ! இன்னும் வாசிப்பதில் முதிர்ச்சி அடையவில்லையே என்ற எண்ணம் தோன்றும். சிந்தா நதியிலும் சில இடங்களில் அதுபோல் உணர்ந்தேன்.

ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும்.