Monday, April 13, 2009

1001 nights - S.S. Mariswami

அரபுக் கதைகள்: எஸ்.எஸ். மாரிசாமி (Rs: 400)
வெளியீடு: முல்லை நிலையம் (தி. நகர்)

தன்னுடைய அண்ணனான அரசர் ஷாரியரின் அழைப்பை ஏற்று ஷாஜமான் அவருடைய நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிறான். செல்வதற்கு முன் ஒரு முறை அரசியை பார்த்துச் செல்ல ஆசைப்பட்டு அரண்மனைக்குச் செல்கிறான். அங்கு அரசி அடிமையுடன் சல்லாபத்தில் இருக்கிறாள். அதைக்கண்ட ஷாஜமான் ஆத்திரப் பட்டு இருவரையும் வெட்டிக் கொன்றுவிடுகிறான். மிகுந்த மன வேதனையுடன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

பின் பிரதானிகளுடன் சேர்ந்து அண்ணனுடைய நாட்டிற்கு பயணமாகிறான். போகும் வழியெல்லாம் தன்னுடைய அரசி தனக்கு செய்த துரோகத்தை நினைத்து நினைத்து கஷ்டப்படுகிறான் ஷாஜமான். அண்ணனான ஷாரியர் தம்பியான ஷாஜமானுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறான். எதுவுமே தம்பியை சந்தோஷப்படுத்தவில்லை. மன வருத்தத்திற்கான காரணத்தை எவ்வளவு கேட்டும் தம்பி சொல்லவே இல்லை. எப்படி சொல்லுவான் அரசி துரோகமிழைத்தாலென? தனது மனைவி கள்ள உறவு வைத்திருந்தாலென?

தம்பியின் மன வருத்தத்தை திசை திருப்ப வேட்டைக்கு செல்ல ஏற்பாடு செய்தான்.வேட்டைக்குச் செல்லுவதென்றால் தம்பி விரும்புவானென அதற்கு ஏற்ப்பாடு செய்தான். தம்பி தான் வரவில்லையென மறுத்துவிடுகிறான். எனவே அண்ணன் மட்டும் வேட்டைக்கு செல்கிறான்.

அன்றிரவு அண்ணனுடைய மனைவியும் மசூத் என்ற அடிமையுடன் சல்லாபிக்கிறாள். இதைக் கண்ட ஷாஜமான் பெண்களே இப்படித்தான் போலும் என மனதைத் தேற்றிக்கொள்கிறான். மறுநாள் தம்பி முழுவதுமாக மாறியிருப்பதைக் கண்டு அண்ணனுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அண்ணன் வற்புறுத்தி தம்பியிடம் கேட்கிறான்.

வேண்டாமண்ணா நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என எவ்வளவு சொல்லியும் ஷாரியர் கேட்கவில்லை. எனவே ஷாஜமான் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அண்ணனிடம் சொல்லுகிறான். இருவரும் வாழ்க்கையை வெறுத்து, நாட்டை விட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

நீண்ட தூரம் பயணம் செய்து ஒரு கடல் பிரதேசத்தை அடைகிறார்கள். திடீரென கடல் பொங்குவது போல் தோன்றவே பெரிய மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொள்கிறார்கள்.

கடலிலிருந்து பூதம் பெட்டியுடன் வெளிப்படுகிறது. பெட்டியிலிருந்து அழகான ஒரு பெண்ணை வெளியில் எடுக்கிறது பூதம். பின் பெண்ணின் மடியில் தலை வைத்து தூங்குகிறது. இவர்களைப் பார்த்துவிட்ட பெண் மரத்தின் மேலுள்ள இருவரையும் தன்னுடன் உறவு கொள்ள அழைககிறாள்.

அவர்கள் மறுக்கவே, பூதத்தை விட்டு கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாள். வேறு வழியில்லாத சகோதரர்கள் அவளுடன் உறவு கொள்கின்றனர். பின் பூதத்தை இது போல் பழி வாங்குவதற்கான காரணத்தை அவர்களுக்கு சொல்கிறாள். பூதம் எழுந்தவுடன் பெண்ணை மறுபடியும் பெட்டியில் வைத்து பூட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடுகிறது.

பின்னர்தான் சகோதரர்கள் உணர்கிறார்கள். நாம் நாட்டைவிட்டு வந்தது தவறு. அங்கேயே இருந்து அவர்களைப் பழுவாங்கி இருக்க வேண்டும் என நினைத்து மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு பயணமாகிறார்கள். பின் தனக்கு துரோகம் இழைத்த ராணியையும், அவளது அடிமைகள், தோழிகள் என அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கிறார்கள்.

அதிலிருந்து தினம் ஒரு பெண்ணை மணந்து, அவர்களுடைய ஒழுக்கத்தைக் காப்பாற்ற விடிகாலையில் மரண தண்டனை விதித்துவிடுகிறான் அண்ணன் ஷாரியர்.

பிரதானி தினம் ஒரு பெண்ணைத் தேடி அவருக்கு மணமுடிப்பான். மறுநாளே அவர்களுக்கு மரண தண்டனை. சில நாட்களில் அனைத்துக் கன்னிப் பெண்களும் இது போல் இறந்து விடவே மந்திரிக்கு பெண்ணே கிடைக்கவில்லை. மந்திரியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த அவருடைய மகள் ஷாஜரத் மன்னரை மணப்பதாகக் கூறுகிறாள். மந்திரி கதறி அழுகிறார். ஷாஜரத் பிடிவாதமாக தானே மணந்து கொள்வதாக கூறுகிறாள்.

பிரதானியும் வேறு வழியில்லாமல் தனது மகளை அரசருக்கு மணமுடிக்க சம்மதிக்கிறான்.அரசருக்கு மந்திரியின் இந்த செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஷாஜரத்தும் மகிழ்ந்தாள், ஆனால் மறுநாள் அவளுக்கு மரண தண்டனை. அதைக் கண்ட அவளது தங்கை துன்யாவும், மந்திரியும் (தந்தை) அழுகிறார்கள். ஷாஜரத் துன்யாவைத் தேற்றி "நீ மனது வைத்தால் இதிலிருந்து என்னைக் காப்பாற்ற முடியும்" என்கிறாள். தங்கை துன்யாவும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.

"அதன்படி மறுநாள் காலையில் சாவதற்கு முன் உன்னைப் பார்க்கவேண்டும் என்று அழைக்கிறேன். உன்னைக் கூப்பிட அரசவைக் காவலர்கள் வருவார்கள். தயங்காமல் அவர்களுடன் வா. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கதை சொல்லுமாறு கேட்க வேண்டும். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தூங்காமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். நீ தூங்கினாயோ நான் தொலைந்தேன் என்று சொல்லி முடித்தாள்" ஷாஜரத்.

அதன்படி துன்யாவை அழைத்துச்செல்ல ஆட்கள் வந்தார்கள். அக்கா சொல்லிய படியே துன்யாவும் நடந்துகொண்டாள். அன்றிரவு ஒரு கதை சொல்லி அரசருக்கும், தங்கைக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டாள். இன்னொரு கதை அதைவிட நன்றாக இருக்கும் என்றாள். அதற்குள் பொழுது விடிந்து விட்டது. கதை கேட்கும் ஆர்வத்தில் மன்னரும் மரண தண்டனையைத் தள்ளிப்போட்டார். எனவே ஷாஜரத் தப்பித்தாள்.

ஒவ்வொரு நாளும் விடியும்போது ஒரு சஸ்பென்ஸோடு கதையை நிறுத்திவிடுகிறாள். “நாளைக்கு கதையின் முடிவைக் கேட்டுவிட்டு, இவளைக் கொல்வோம்” என்று நினைத்து அரசன் அவளைக் கொல்வதைத் தள்ளிப் போடுகிறான். ஆனால் அவள் அதே உத்தியைக் கையாண்டு தினமும் கதையை முடிக்காமல் இழுத்துக்கொண்டே ஆயிரத்தோரு இரவுகளைக் கடத்திவிடுகிறாள்.

அடுத்த கதை இதைவிட நன்றாக இருக்குமென சொல்லி ஒவ்வொரு கதையாக சொல்லி அரசன் பெண்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பது தவறு என ஆயிரத்தொரு இரவுகள் கதைகளை சொல்லி அவளது மரணத்தைத் தள்ளிப் போட்டு அரசனைத் திருத்துவாள். கடைசியில் மன்னர் திருந்தி அவளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.

சில உண்மையான பெயர்களையும், சில கற்பனை கதாப் பாத்திரங்களையும் கொண்ட புனைவுக் கதைகள் இது. பல கிளைக் கதைகளும் உள்ளது.

ஆயிரத்தொரு இரவுகள் அரேபியக் காவியங்களுள் மிகவும் முக்கியமானப் படைப்பு. பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து, பாரசீகம், இந்தியா போன்ற இடங்களைச் சுற்றியே கதைகள் சொல்லப்படுகிறது. "கொய்ரோ, டமாஸ்கஸ்" போன்ற இடங்கள் அப்பொழுதே முக்கிய வணிக இடங்களாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இதிலுள்ள கிளைக் கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற துணைக்கதைகள் திரைப்படமாகவும், சிந்திபாத் கதை நாளேடுகளில் வெளிவந்து சிறுவர் முதல் பெரியவர் வரை பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பு செய்யப்படும் போது மொழிக்கு ஏற்றாற்போலும், கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போலும் சில புதிய விஷயங்களை சேர்த்துள்ளதாகவும் ஒரு விவாதம் இருக்கிறது.

இக்கதைகள் பிரெஞ்சு மொழியில் "அந்தோனி காலண்ட்" என்பவரால் முதன் முதலில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும், தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.

இப்பொழுது தமிழில் பகுதி I & பகுதி II இரு பாகங்களாக (தி. நகர், பாரதி நகரிலுள்ள) முல்லை நிலையம் வெளியிட்டுள்ளார்கள். திரு. எஸ்.எஸ். மாரிசாமி மொழிபெயர்த்துள்ளார்.

புனைவுக் கதைகளை விரும்பிப் படிப்பவர்களுக்கு ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள இந்த அரபுக் கதைகள் புத்தகம் ஒரு புத்தக வேட்டைதான்.

3 comments:

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,

மிகச் சிறந்த புத்தகங்களைத் தேடிவாசிக்கும் உங்கள் ஆர்வமும், அது பற்றிய குறிப்பும் என்னை மிகவும் பிரமிக்கச் செய்கிறது. தொடருங்கள்.
உங்கள் பதிவுகளின் மூலம் நல்ல புத்தகங்களை அடையாளம் கண்டுகொள்ள முடியுமாக உள்ளது.
எனது ஆயிரத்தொரு இரவுகளுக்கு நேர்ந்ததை இங்கு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும்பொழுது பாருங்கள்.
http://rishanshareef.blogspot.com/2009/04/blog-post_2449.html

Unknown said...

வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி. கண்டிப்பாக என்னுடைய பதிவுகள் தொடரும்.

நேரம் கிடைக்கும் போது பதிவுகளைப் படித்து உங்களுடைய கருத்துகளைத் தெரியப் படுத்துங்கள்.

Unknown said...

எனக்கு என்ன குறை என்றால், எஸ்.ராவையும் ஜெய மோகனையும் படிப்பவர்கள் மற்ற சில அருமையான தமிழ் ஆளுமைகளை முத்துலிங்கம் உட்பட படிப்பதில்லை.