கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது: அ. முத்துலிங்கம் (Rs.85), வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
23-04-2009: உலக புத்தக தினம். ஆகவே ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தி மு க அரசு இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவித்து பந்த் அறிவித்திருந்தார்கள். ஆகவே எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. சித்திரை மாத வெப்பம் வெளியில் தலை காட்ட விடவில்லை.
சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் ஒரே குழப்பம். படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னுடைய அலமாரியில் 109 இருந்தது. கதையோ, கட்டுரையோ படிப்பதைக் காட்டிலும் பல ஆளுமைகளைப் பற்றிய புத்தகமாக படிக்கலாமென்று முடிவு செய்து அலமாரியைத் துழாவினேன்.
அது போன்ற புத்தகங்கள் என்னிடம் ஐந்து இருக்கின்றன. (ஜெயமோகன் எழுதிய இலக்கிய விமரிசன நூல்களைத் தவிர்த்து)
1). கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன் (விகடன் பிரசுரம்)
2). பின் கதைச் சுருக்கம் - பா. ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
3). கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - அ. முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
4). ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
5). எழுத்துலக ப்ரம்மாக்கள் - இரா. மணிகண்டன் (குமுதம்)
இதில் முதலிரண்டும் ஏற்கனவே படித்த புத்தகங்கள். கடைசி இரண்டும் ஒரே ஆசிரியருடைய கதை, சிறுகதைகள் மற்றும் ஆளுமைகள் மீதான விருப்பங்களும், பார்வைகளும் கொண்டது.
அ. முத்துலிங்கம் தொகுத்த "கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது" புத்தகம் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 20 பேர் தமக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றியும், புத்தகத்தை எழுதிய ஆசிரியரைப் பற்றியும் தங்களுடைய ஆழமான பார்வையை முன் வைக்கிறார்கள். இதை விட வேறென்ன வேண்டும். ஆகவே அந்தப் புத்தகத்தையே தேர்ந்தெடுத்தேன்.
கீழ்கண்ட எழுத்தாளர்கள் தான் இந்தப் புத்தகத்தில் தங்களை பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள்.
1). அம்பை, 2). அசோகாமித்திரன், 3). சாரு நிவேதிதா, 4). இந்திரா பார்த்தசாரதி, 5). இரா. முருகன், 6). ஜெயமோகன், 7). காஞ்சனா தாமோதரன், 8). பொ. கருணாகர மூர்த்தி, 9). பி. ஏ. கிருஷ்ணன், 10). மாலன், 11). மனுஷ்ய புத்திரன், 12). அ. முத்துலிங்கம், 13). நாஞ்சில் நாடன், 14). பாவண்ணன், 15). எஸ். ராம கிருஷ்ணன், 16). ஷோபா சக்தி, 17). சுஜாதா, 18). சுகுமாரன், 19). வாஸந்தி, 20). வெங்கட் சாமிநாதன்.
ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய பார்வையில் முக்கியமான படைப்புகளை முன் வைக்கிறார்கள்.
அவற்றில் சில:
சாரு நிவேதிதா: www.charuonline.com
மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், அவர்களுடைய படைப்புகளுக்கும் (ஹாலிவுட் சினிமா உட்பட) கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற படைப்புகளுக்குக் கொடுப்பதில்லை. இவர் சம கால அரபு இலக்கியம் பற்றி நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். இவர் பரிந்துரைக்கும் நூல்கள் கவனிக்கப்பட வேண்டியதும் கூட.
ஜெயமோகன்: www.jeyamohan.in
இயல்பான முறையில் எழுதப்படும் படைப்புகளையும் வாசகர்கள் படிக்க வேண்டுமென "மணல் கடிகை" எனும் நாவலைப் பரிந்துரைக்கிறார்.
பி. ஏ. கிருஷ்ணன்:
வடிவியலின் கதை என்னும் கணித புத்தகத்தை இவர் பரிந்துரைக்கிறார். புத்தகத்தின் பெயர் "யூக்லிட் விண்டோ" (Eucild's Window: The story of geometry from parallel line to hyperspace). இதை இவர் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.
பாவண்ணன்:
புதுமுக எழுத்தாளரான கால பைரவன் எழுதி வெளிவந்த "புலிப்பாணி சோதிடர்" என்ற சிறு கதைத் தொகுப்பை இவர் பரிந்துரைக்கிறார். விமரிசனத்தைப் படிக்கும் போது அவசியம் வாங்கி படிக்க வேண்டிய எழுத்தாளர் தான் என்று தோன்றியது.
எஸ். ராம கிருஷ்ணன்: www.sramakrishnan.com
மதுரையை சுற்றியுள்ள சமணக் குகைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையான "எண்பெருங்குன்றம்" என்ற நூலை எஸ்.ரா பரிந்துரைக்கிறார். இவருடைய பல புத்தகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கும், பொருட்களுக்கும் நாம் போதிய முக்கியத்துவத்தை தருவதில்லை என சுட்டிக் காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளிலிருந்து கற்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று. ஆய்வுக் கட்டுரைகளுக்கு தமிழுலகம் தர வேண்டிய முக்கியத்துவத்தை தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.
எஸ்.ரா எழுதிய சமணக் குகை பற்றிய கட்டுரை: கல்லில் ஊரும் காலம்
சுஜாதா:
"வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்ததாக ஒரே ஒரு புத்தகத்தை சொல்ல முடியவில்லை" என ஆரம்பிக்கும் இவர் சிறு வயது முதல் தன்னை பாதித்த எழுத்தாளர்கள், சிற்றிதழ்கள், மேற்கத்திய எழுத்தாளர்கள், புத்தகங்கள் என நிறையவே அறிமுகப்படுத்துகிறார்.
தனது கல்லூரி நாட்களில் அவருக்கு பிடித்த நாவலை வகுப்பிற்கு செல்லாமல் ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து படித்து முடித்ததாக கூறுகிறார். மேலும் தன்னுடைய மோதிரத்தை விற்று சில புத்தகங்களை வாங்கியதையும் நினைவு கூர்கிறார். ஆனால் எந்த குறிப்பிட்ட படைப்பையும் முன்னிறுத்தவில்லை.
இதர ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்த கவிதை, திரைக்கதை, நாடகம், நாவல் என பல புத்தகங்களையும் ஆளுமைகளையும் பற்றி பேசுகிறார்கள்.
பி.கு: உலக புத்தக தினத்தன்று, மாலையில் பத்ரியின் NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3) பதிவின் மூலம் திரு.மாலன் எழுதிய எண் ஜன்னலுக்கு வெளியே... புத்தகம் இலவசமாக வீடு தேடி வந்திருந்தது. சொல்ல முடியாத சந்தோஷத்துடன் தபாலில் வந்த புத்தகத்திற்கு என்னுடைய கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டேன். எப்படியோ புத்தக தினத்தன்று ஒரு புத்தகத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டேன்.
7 comments:
உங்கள் வாசிப்பை பார்த்து பிரம்மித்து போனேன் தலைவா தொடர்ந்து எழுதுங்கள் பிரபு
நன்றி சுரேஷ். ஊக்கத்திற்கு நன்றி.
ஜெயகாந்தன் அவர்களது கட்டுரை புத்தகத்தில் இல்லை.
இந்த புத்தகத்தின் முன்னுரையில் ஒரு எழுத்தாளர் புத்தகம் அச்சடித்து முடிக்கும் வரை கட்டுரை
எழுதித்தரவில்லை என குறிப்பிட்டிருந்தார். அது அவராக இருக்குமோ?
முத்துலிங்கத்தின் "அங்கே இப்ப என்ன நேரம்"
வாசித்திருக்கிறீர்களா?
புத்தகத்தை எடுத்தால் வைக்க மனம் வராது, அப்படி ஒரு நகைச்சுவையுடன் எழுதியுள்ளார்.
அவரது அனைத்து புத்தகங்களுமே ஒரு நகைச்சுவை உணர்வுடன் தான் எழுதப்பட்டிருக்கும்.
இயற்கை வளம், நீர் , விலங்குகளில் அக்கறை கொண்டவர் போல.
கதாவிலாசம் வாசித்தாலே முக்கிய 50 தமிழ் எழுத்தாளர்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
பின் கதைச் சுருக்கம், ஆழத்தை அறியும் பயணம் போன்றவையும் எழுத்தாளர்கள் பற்றிய புத்தகமா?
முத்துலிங்கம் அவர்களின் எழுத்து தீராநதி, காலச்சுவடு மூலனாக எனக்கு அறிமுகம். அவருடைய புத்தகம் என்று முதலில் கையிலேடுத்ததே அங்கே இப்போ என்ன நேரம்? தான். அருமையா எழுத்து நடை அவருடையது.
/-- ஒரு எழுத்தாளர் புத்தகம் அச்சடித்து முடிக்கும் வரை கட்டுரை
எழுதித்தரவில்லை என குறிப்பிட்டிருந்தார். --/
குறிப்பிட்டு சொல்லும் படி இருந்தால் அவரே சொல்லி இருப்பார். யூகம் எல்லாம் நமக்கான சமாதானம் தான்.
இதர புத்தகங்களும் எழுத்தாளர்களையும், படைப்புகளையும் பற்றியதுதான்.
ஆ.வி-யில் நடுவில் டாப் 10 என்று ஒரு பக்கம் வைத்திருந்தார்கள். அதில் சினிமாக்காரர்கள் 10 படங்களையும், இசைத்துறையினர் 10 பாடல்களையும், எழுத்தாளர்கள் 10 புத்தகங்களையும் குறிப்பிடுவர். அதில் சுஜாதாவும் எழுதியிருந்தது ஞாபகம். புதுமைப்பித்தன், பாரதி, ஜெஃப்ரி ஆர்ச்சர், திருக்குறள் எல்லாம் இருந்தது. பழைய விகடன் இதழ்களை இணையத்திலோ இல்லத்திலோ புரட்ட முடிபவர்கள் விரித்துரைக்கலாம்.
சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் ஒரே குழப்பம். படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னுடைய அலமாரியில் 109 இருந்தது
ப்ரமிச்சுபோய்ட்டேன்.
பெரிய படிப்பாளி......................
போல.
உங்களின் வாசிப்பனுபவத்தை பகிர்ந்து, இதைப்படிப்பவருக்கும் அந்த ஆர்வத்தை ஏற்படுத்துகிறீர்கள்.
டும் தப்பா நெனச்சிடாதீங்க... சில புத்தகங்கள தவற விட்டுட்டா மறுபடியும் தேடி வாங்குறது கஷ்டம். மற்ற படி ஒன்னும் இல்ல.
இன்னும் சொல்லனும்னா படிக்கும் நெறைய விஷயங்கள் மறந்துடுங்கறது தான் உண்மை.
Post a Comment