மௌனப் புயல்: வாஸந்தி (Rs.45)
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
வாஸந்தி இந்திய அளவில் பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். கதை, கட்டுரை, நாவல் என விரிந்த தளத்தில் செயல்படுபவர். அவர் எழுதிய மௌனப்புயல் பெரிய வரவேற்பைப் பெற்ற நாவல்களில் ஒன்று.
இந்திரா காந்தி ஆட்சியில் நடந்த ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் மற்றும் நவம்பர் புரச்சியை மையமாகக் கொண்ட நாவல் இது. நாவலின் முக்கியாம்சமே இந்து-சீக்கிய கலவரம் தான். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தை அடுத்து பஞ்சாபில் நடந்த முக்கியமான கலவரம் இது. எனவே பிரச்சனையின் வீரியம் புரிந்து கதாப்பாத்திரங்களையும், சூழ்நிலையையும் ஆசிரியர் அருமையாகக் கையாண்டுள்ளார்.
வன்முறை என்பது வாழ்க்கை முறை ஆயுதம், அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கைக் கேற்ப பொற்கோவிலுக்குள் சிலர் ஆயுதத் துருப்புகளைப் பதுக்கி வைக்கின்றனர். இது தெரிந்து இந்திய அரசு பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்புகிறது. இதைப் பொறுக்க முடியாத சீக்கியர்கள் கிளர்ச்சியில் இறங்குகிறார்கள். இந்தக் கிளர்ச்சியை பத்திரிக்கைச் செய்தியாக்க விழைகிறாள் பகுதி நேர நிருபர் ரஞ்சனி.
ரஞ்சனி டெல்லியிலுள்ள ஒரு கல்லூரியின் மாணவி. அவளுடைய நெருங்கிய தோழி சீக்கியப் பெண் ரூபா. இந்து-சீக்கிய பிரச்சனை இவர்களுக்கிடையில் இடைவெளியை உருவாக்குகிறது. இடையில் கல்லூரி விரிவுரையாளர் மன்மோகன் சிங்கின் மீது காதலா? நட்பா? என்று சொல்ல முடியாத பதற்றமான உணர்வு வேறு ரஞ்சனிக்கு.
கலவரம் கரைந்து காணாமல் போகும் நேரத்தில் பிரதமரை, அவரது பாதுகாவலர்களில் ஒருவனான சீக்கியன் சுட்டுக் கொள்கிறான். அதன் பிரதிபலனாக மறுபடியும் கலவரம் வெடிக்கிறது. நிலைமை மிகவும் மோசமாகிறது. இந்தக்கலவரத்தில் ரூபாவின் காதலன் இறக்கிறான். ரூபாவின் காதலன் கலவரத்தில் பலியாவது அவர்களுடைய விரிசலை மேலும் பெரிதாக்குகிறது. மன்மோகனும் பஞ்சாபின் நிலைமையை நேரில் காண ரஞ்சனியிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அமிர்தசரசுக்கு சென்றுவிடுகிறான்.
ரஞ்சனி அவளது காதலனைத் தேடி அமிர்தசரஸ் செல்கிறாள். அவனை சந்தித்து தனது காதலை எடுத்துச் சொல்கிறாள். ஆனால் அவன் தனது லட்சியத்தைக் காரணம் காட்டி நிராகரிக்கிறான். அவளும் வீம்புடன் அவனுக்காக காத்திருப்பேன் என்று சொல்லி விடைபெறுகிறாள்.
பொதுவாக அரசியலை மையமாகக் கொண்ட நாவல்கள், தரமான நாவல்கள் தமிழில் வருவது அரிது. அந்த வகையில் இந்த நாவல் ஒரு குறிஞ்சிப் பூ. தி.நகர், பனகல் பார்க் அருகிலுள்ள வானதி பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.
குறிப்பு:
நமது புத்தகங்களுடனான உறவையும், அதைப் பற்றிய பதிவையும் பாராட்டி திரு.கவிதா அவர்களும், திரு. தீபா அவர்களும் பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள் பல. மேலும் தீபா அவர்கள் எமக்கு அளித்த பட்டாம் பூச்சி விருது மகிழ்ச்சியளிக்கிறது. ஆங்காங்கு உள்ள எழுத்துப் பிழையையும், வாக்கிய தொடர்ச்சியின்மையையும் ஒரு பொருட்டாக நினைக்காமல், ஆரம்ப நிலையிலுள்ள என் போன்ற வலைப் பதிவர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கம் வரவேற்கத்தக்கது.
மீண்டும் நன்றிகளுடன்,
கிருஷ்ணப் பிரபு.
2 comments:
:-) மகிழ்ச்சி.. ஆனால் என் பெயர் திவ்யா அல்ல, தீபா.
பிழையைத் திருத்திவிட்டேன்...
Post a Comment